Published:Updated:

5 ரூபாய் பாக்கெட் மணி... திகட்டாத நட்பு..! - சாஃப்ட்வேர் இளைஞரின் கல்லூரி கதை

Representational Image
Representational Image ( FireFX from Pixabay )

எனக்கு ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் பயண படி (Conveyance Allowance) கொடுப்பார் என்னுடைய அப்பா. அதில் நான்கு ரூபாய் பேருந்து கட்டணத்திற்கு ஒரு ரூபாய் என்னுடைய செலவிற்கும்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒவ்வொருவருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு பருவம் கல்லூரி பருவம். வாலிபராக முழு பரிணாமம் அடையும் காலகட்டம். வாழ்க்கையின் பலவிதமான நல்ல கெட்ட விஷயங்களின் அறிமுகம் கிடைக்கும் பருவம். வீட்டிற்கு தெரியாமல் திரைப்படம் பார்த்ததும் பின்பு அது பற்றி வீட்டிற்கு சொன்னதும் பின்பு அதுவே பழகி போனது. நல்லதோ கெட்டதோ வாழ்வில் முதல் முதலாக சுயமாக முடிவெடுத்து செய்த ஒரு விஷயம் வீட்டிற்கு தெரியாமல் திரைப்படம் பார்த்தது தான்.

Representational Image
Representational Image

எனக்கு ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் பயண படி (Conveyance Allowance) கொடுப்பார் என்னுடைய அப்பா. அதில் நான்கு ரூபாய் பேருந்து கட்டணத்திற்கு ஒரு ரூபாய் என்னுடைய செலவிற்கும். இதில் மாதம் முழுவதற்குமான தொகையை வாங்கி கொண்டு மாணவர்களுக்கான பேருந்து சலுகை கட்டண அட்டை (Bus Pass) வாங்கி கொள்வேன். அதன் மூலம் கிடைக்கும் மீத தொகையை என்னுடைய சேமிப்பாக வைத்து கொண்டு தேவைப்படும்போது செலவு செய்து கொள்வேன். இது போன்ற பல வாழ்க்கை படிப்பினைகளை கற்று கொடுத்தது என்னுடைய கல்லூரி காலம் என்றால் அது மிகையல்ல.

நான் கல்லூரியில் சேர்ந்ததே ஒரு மறக்க முடியாத அனுபவம். அதுவும் பனிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு பல கல்லூரிகளில் விண்ணப்பித்து முதலில் சேர்க்கை உறுதி செய்து கடிதம் அனுப்பிய, நான் படித்த தேசிய கல்லூரிக்கு உடனடியாக சென்று சேராமல் வேற நல்ல காலேஜ்ல அட்மிஷன் கார்டு வரும் என காத்திருந்து கடைசியில் வேறு கல்லூரியில் இடம் கிடைக்காமல் சிறிது பயத்துடன் எதுக்கும் நேஷனல் காலேஜ்ல போய் ஒரு வாட்டி கேட்டு பார்க்கலாம் என்று அப்பாவை அழைத்து கொண்டு ஒரு மூன்று மணி வாக்கில் கல்லூரி முதல்வர் அறைக்கு அருகில் காத்திருக்க அங்கிருந்த ஒரு பேராசிரியர் எங்களை போட்டு வறுத்தெடுத்தார்.

Representational Image
Representational Image

சேர்க்கை சீட்டு எங்களுக்கு வரவில்லை என்று பொய் சொல்லி (அதற்காக என்னுடைய அப்பா மிகவும் வருத்தப்பட்டார் என்பது வேறு விஷயம்) அந்த பேராசிரியர் பொய் சொல்லாதீங்க ... எங்கயாவது ஜோசப் காலேஜ், பிஷப் ஹீபர் னு நாய் மாதிரி அலைஞ்சுட்டு அங்கெல்லாம் கிடைக்கலேன்னு இங்க வந்துருக்கீங்க .... என்று உண்மையை சொல்ல பதறி பொய் இல்ல சார் என்று மழுப்பிக்கொண்டிருந்தது இன்றும் நினைவிருக்கிறது. ஆனால் அந்த பேராசிரியர் நாங்கள் சேர்க்கைக்கு வந்த தகவலை கடைசி வரை கால்லூரி முதல்வரிடம் சொல்லவே இல்லை.

எனக்கு ஐயோ இந்த காலேஜ்ல மட்டும் சீட் கெடைக்கலேனா ஒரு வருஷம் வேஸ்ட் ஆஹ் போயிருமேனு பயம் வயிற்றை பிசைந்தது. ஒருவழியாக வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமான அப்போதைய முதல்வர் திரு.தியாகராஜன் அவர்கள் எங்களை பார்த்து விட்டு என்னவென்று விசாரித்தார். நாங்கள் அட்மிஷன் விஷயமாக வந்திருப்பதை சொன்னோம். மார்க்கை கேட்டுவிட்டு எம் பி சி (MBC) கோட்டாவில் ஒரு இடம் மீதமிருந்தது.

துணை முதல்வர் திரு ஸ்ரீநிவாசன் (அதுதான் அவர் பெயர் என்று நினைக்கிறேன், அவர் அப்போது விலங்கியல் துறை தலைவராக இருந்தார்) அவர்களிடம் என்னுடைய கல்லூரி சேர்க்கையை உறுதி செய்து விட்டு சென்றார். பனிரெண்டாம் வகுப்பில் பௌதீகத்தில் அதிக மதிப்பெண் (?) வாங்கியதால் எனக்கு இளம் அறிவியல் பௌதீகம் (BSc Physics) பிரிவில் இடம் கிடைத்தது. மேலும் என்னுடைய பனிரெண்டாம் வகுப்பு ஆசிரியர் திரு சிவசங்கரன் மிக நன்றாக அந்த பாடத்தை சொல்லி தருவார். அதனாலேயே எனக்கு இயற்பியல் பாடத்தில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. மற்றபடி நான் இயற்பியல் பிரிவில் மிகுந்த ஆர்வத்துடன் எல்லாம் சேரவில்லை.

Representational Image
Representational Image

ஒருவழியாக கல்லூரியில் இடம் வாங்கி நிம்மதி பெருமூச்சு விட்டோம். வள்ளுவர் சொன்னதை போல

"பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த

நன்மை பயக்கு மெனின்"

என்ற குறளை நினைத்து கல்லூரியில் இடம் கிடைப்பதற்காகத்தானே பொய் சொன்னோம். ஒரு நல்ல காரியத்திற்கு பொய் சொல்வதில் குற்றமில்லை என்று வள்ளுவரை துணைக்கு அழைத்து கொண்டோம்.

சந்தோசமாக முதல் நாள் கல்லூரிக்கு சென்றால் அன்று காலை முழுவதும் அட்டவணை படி செய்முறை வகுப்பு . முதல் நாள் என்பதால் வருகை பதிவு மட்டும் செய்து விட்டு மதியம் இரண்டு மணிக்கு வகுப்பிற்கு வந்தால் போதும் என்று கூறிவிட்டார்கள். அந்த மூன்று வருட வாழ்க்கை என்பது இன்றும் நினைத்தால் மனதிற்கு மிக இனிமையாக இருக்கிறது.

" காலேஜ் லைஃப்ல "அரியர் வைக்காதவன் அரை மனிதன்"

என் வாழ்வில் நான் முதன்முறையாக ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாமல் போனது என்னுடைய இரண்டாவது செமெஸ்டரில் தான். "இயந்திரவியல் மற்றும் சார்பியல் (Mechanics and Relativity)" என்ற பாடத்தில் நான் முதன் முதலாக தேர்ச்சியடைய வில்லை. மிகுந்த வருத்தத்துடன் என் அண்ணாவிடம் இதை சொன்ன போது "பரவால்ல அடுத்த செமெஸ்டர்ல படிச்சு பாஸ் பன்னிரு..." காலேஜ் லைஃப்ல "அரியர் வைக்காதவன் அரை மனிதன்" னு ஒரு புதுமொழி இருக்கு என்று சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. பின்பு அடுத்த செமெஸ்டரில் நான் அரியர்ஸ் எழுதும்போது என்னுடைய சீனியர்கள் சிலரும் என்னுடன் அந்த பேப்பரை எழுதியதை பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

Representational Image
Representational Image

ஒரே நாளில் காலையில் அந்த செமெஸ்டருக்கான தேர்வும் மாலை அரியர்ஸ் தேர்வும் எழுத நேர்ந்தால் அதை ஒன் டே மேட்ச் (One day Match) என்று சொல்வார்கள். என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் நானும் சில ஒன் டே மேட்ச் களை ஆடியிருக்கிறேன் (ஹி.. ஹி ...).

நான் படித்தது பௌதீகமானாலும் (BSc Physics) முதல் இரண்டு வருடங்கள் எங்களுக்கு மொழி பாடமாக ஆங்கிலம் தமிழ் அனைத்து செமெஸ்டர்களிலும் உண்டு. எனக்கும் ஆங்கில பாடத்திற்கும் ரொம்ப தூரம். அதுவும் ஆங்கில இலக்கணம் எனக்கு கடைசி வரை புரிபடவேயில்லை. இரண்டு வருடத்திலும் நான்கு பேப்பர்களிலும் ஒருவழியாக ஐம்பது அறுபது மதிப்பெண் வாங்கி பாஸ் செய்து விட்டேன். எங்களுடைய ஆங்கில பேராசிரியர் சேவியர் பிச்சையா (Xavier Pichaiya) மிக அருமையாக ஆங்கிலம் சொல்லித்தருவார்.

ஆனால் அதே பேராசிரியர் ஒருமுறை காமராஜ் என்ற மாணவனிடம் எதோ கேள்வி கேட்டு அவன் விடை தெரியாமல் விழிக்க அவனை கேலி செய்யும் விதமாக அவர் எதோ சொல்ல, நண்பன் சவுந்திரராஜன் அவர் கேலி செய்ததை எதிர்த்து பேராசிரியரிடம் விவாதம் செய்தான். அந்த கணம் சக மாணவனுக்காக பேராசிரியரை எதிர்த்து வாதம் செய்த சவுந்தர்ராஜனை எனக்கு பிடித்து போனது. இது நடந்தது எங்கள் முதல் வருடம் வகுப்புகள் தொடங்கி ஒரு இரண்டு மாதத்திற்குள் நடந்தது. ஆனால் அதன் பின் அவனுடைய அமெரிக்கன் அக்ஸ்ன்ட் (American Accent) ஆங்கில உரையாடலை அவர் பலமுறை கேலி செய்ததுண்டு. அவனுடைய அந்த மொழியாற்றல் என்னை போன்றவர்களுக்கு வியப்பாக இருந்தது வேறு விஷயம்.

Representational Image
Representational Image

அவருடைய உச்சரிப்பும் அவர் பாடம் நடத்தும் முறையும் இன்று நினைத்து பார்க்கையில் மிக அற்புதமாய் சொல்லி கொடுத்திருக்கிறார். ஒரு முறை அவர் சொன்னார் " இன்று நான் சொல்லி கொடுக்கும்போது நீங்களெல்லாம் அதை அவ்வளவு சீரியஸா படிக்க மாட்டேங்கிறீங்க. ஆனால் ஒரு நாள் ரொம்ப வருத்த படுவீங்க.." என்றார். இதற்கு நேர்மாறாய் தமிழின் மீது எனக்கு அளவு கடந்த பற்று உண்டு. தமிழ் இலக்கணத்தின் சில விதிகள் மற்றும் சூத்திரங்கள் இன்றும் என் நினைவில் இருக்கிறது.

ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் முடியாததால் அவருடைய முன்னால் மாணவர் ஒருவர் அவரிடம் வந்து மீண்டும் அவரிடம் வகுப்பு எடுக்கும்படி கேட்டதாக கூறினார். உண்மையாகவே நான் அன்று அதை அவ்வளவு முனைப்புடன் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கு காரணம் ஆங்கில மொழியின் மீதான பயம். பிற்பாடு படித்து முடித்து வேலைக்காக அலைந்த போதுதான் குறைந்த பட்ச மொழியறிவு உதவி செய்யாது என்பது புரிந்து அதற்கான பயிற்சி செய்து ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தேன்.

Representational Image
Representational Image

சிறப்பாக ஆங்கிலம் படித்து நாம் என்ன ஆங்கில பேராசிரியாகவா ஆகப் போகிறோம் என்ற மிதப்பு இருந்தது உண்மை. ஆனால் காலம் என்னை ஆங்கிலத்தில் பக்கம் பக்கமாக எழுதவும் பேசும்படியான ஒரு வேலையில் என்னை அமர்த்தி அழகு பார்த்ததுதான் உச்ச பட்ச முரண் மற்றும் முதல் அதிசயம். பிற்பாடு ஆங்கிலம் என்பது ஒரு மொழியறிவு (Literal Knowledge) மட்டுமேயன்றி உங்களுடைய அறிவாற்றல் அல்ல என்பது புரிந்தபோது ஆங்கிலத்தின் மீதான பயம் விட்டுபோனது. இன்றும் என்னை விட இளம் வயதினருடன் பேச நேர்ந்தால் இதை அவர்களிடம் மிக அழுத்தமாக பதிவு செய்ய நான் தவறியதேயில்லை. என்னையே அதற்கு உதாரணமாக சொல்லுவது என்னை பற்றிய குறைபாடு என்பதாக நான் கருதவில்லை.

என்னுடைய ஐந்தாவது செமெஸ்டரில் இருந்த கணினி சம்பந்தமான ஒரு பேப்பரில் (Computer oriented numerical methods in BASIC and FORTRAN) நான் அரியர் வைத்து ஆறாவது செமெஸ்டரில் அதை மிக கஷ்ட பட்டு பாஸ் செய்த நான் கணிப்பொறி படித்து கணினி பொறியாளனாக (Software Engineer) ஆனது இரண்டாவது அதிசயம்.

ஆனால் இந்த பாடத்தை எடுத்த பேராசிரியர் எங்களுக்கு கரும்பலகையில் ஒரு படம் வரைந்து கூட கணினி எப்படி வேலை செய்யும் என்று விளக்கவேயில்லை. என்னுடைய நண்பர்கள் சிலர் அப்பொழுது தனியார் கணினி வகுப்பிற்கு சென்று Flow Chart, biggest of three numbers program என்று ஏதேதோ பேசிக்கொண்டிருப்பார்கள். அதை பார்த்து மலைத்து வியந்து இவர்களுக்கு எவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறது என்று நினைத்திருக்கிறேன்.

Quadratic Equation ப்ரோக்ராம் எழுத தெரியாமல் பெயில் ஆனதை இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது. நான் மட்டுமல்ல எங்கள் வகுப்பில் பலரும் அந்த பேப்பரை ஆறாவது செமெஸ்டரில் எழுதிய விஷயம் நான் அரியர்ஸ் எழுத சென்றபோதுதான் தெரிந்தது. "அப்பாடா...இது நமக்கு மட்டும் பிரச்சினை இல்ல போலயே..." என்று ஒரு சிறிய சந்தோசம் மனதிற்குள் எட்டி பார்த்தது.

Representational Image
Representational Image

எங்கள் வகுப்பில் ராஜ்குமார் என்று இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் சற்று குண்டாக இருப்பான். இன்னொருவன் ஒல்லியாக இருப்பான் (இப்பொழுது ஹிந்து தமிழ் நாளிதழில் எடிட்டராக இருக்கிறான்). அதனால் முதல் ராஜ்குமாரை குண்டு ராஜ்குமார் என்றும் எடிட்டர் ஆக இருப்பவனை ஒல்லி ராஜ் குமார் என்று அழைப்போம். ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வைத்து அழைப்போம். சுச்சா என்கிற சுரேஷ் பாபு, அம்பு என்கிற சுரேஷ் குமார் (மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர் Curtly Ambrose போல உயரமாக இருப்பான்) இன்றுவரை விடாமல் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறான்.

KB என்கிற KB கணேஷ், குல்ஸ் என்கிற குலசேகரன், சவுண்டு என்கிற சௌந்தர்ராஜன் (இவனை இன்றும் தேடிக்கொண்டிருக்கிறோம்) திருநா என்கிற திருநாவுக்கரசு சரவணகுமார், எ சரவணன், குமார், என்சு (NSU)என்கிற N சுரேஷ் குமார், தாஸ் என்கிற மோகன் தாஸ், ராஜா என்கிற ராஜா ராமன், சங்கரன் என்கிற ஷங்கர், சீனு என்கிற சீனுவாசன், பிரபா என்கிற பிரபாகரன், நம்பி என்கிற நம்பி சரவணன், JK என்கிற ஜெய்காந்த், BKV என்கிற BK வேங்கட சுப்பிரமணியன், நந்து என்கிற நான் போல நிறைய நண்பர்களுக்கு செல்ல பெயர்களோ அல்லது அவர்களுடைய பெயர்களின் ஒரு பகுதியையோ வைத்து கூப்பிடுவது உண்டு.

Representational Image
Representational Image

மதிய உணவுக்கு ரயில்வே கான்டீன் செல்வதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது எங்கள் வகுப்பில். உணவின் விலை மிக குறைவாக இருக்கும். ஒன்று அல்லது இரண்டு ரூபாய் கொடுத்தால் வயிறு நிரம்ப சாப்பிட முடியும். சுவையும் தரமும் சற்று முன் பின்னாக இருப்பினும் அது பற்றி அன்றைய காலகட்டத்தில் நாங்கள் அவ்வளவாக கவலை பட்டதில்லை. நானும் சில முறை அந்த நண்பர்களுடன் சென்று அந்த ரயில்வே கான்டீன் உணவை சாப்பிட்டிருக்கிறேன்.

மதிய உணவுக்கு பின் கல்லூரியில் எங்கள் வகுப்பறை கட்டிடத்திற்கு முன்பு புல்வெளியில், மரத்தடி நிழலில் அமர்ந்து அரை மணி நேரம் அரட்டை அடிப்போம். சிரிப்பும் கும்மாளமாகவும் இருக்கும்.

எதிர்காலம் பற்றிய எந்த பயமுமின்றி ஆறாவது செமஸ்டர் வரும்வரை சந்தோசத்துடன் பொழுதை கழித்தோம். எங்கள் கல்லூரி வருடாந்திர விளையாட்டு போட்டிகளில் இறுதி வருடம் படிக்கையில் இயற்பியல் துறை சார்பில் எங்கள் வகுப்பு அணியும் கல்லூரியின் பல்கலைக்கழக அணிக்கும் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் விளையாடினோம். அந்த இறுதி போட்டியில் சங்கரன் பிடித்த ஒரு கேட்ச் (almost blinder) கணேஷ் செய்த ஒரு ரன் அவுட் சீனுவாசன் மற்றும் அம்ப்ரூஸின் ஓப்பனிங் ஸ்பெல் என அட்டகாசமாக பல்கலைக்கழக அணியின் பேட்டிங் ஐ ஒரு காய் பார்த்து விட்டு ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு எங்களுடைய பேட்டிங் ஆரம்பமானது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை பட, சரவணகுமார் அடித்த பந்து பவுண்டரியாக மாற ஒரு ரன்னில் கல்லூரி சாம்பியன் பட்ட வாய்ப்பை தவறவிட்டோம்.

இருபத்தி ஆறு வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ஜூம் செயலி மூலம் ஒரு இணைய வழி சந்தித்து என்னுடைய வகுப்பு தோழர்களுடன் உரையாடிய பொது கூட நான் மேலே குறிப்பிட்ட பல சம்பவங்களை சற்றும் பிசிறின்றி அனைவரும் நினைவு கூர்ந்து சிலாகித்து மகிழ்ந்தனர்.

இங்கு நான் குறிப்பிட்டது மிக குறைவான சம்பவங்கள் மட்டுமே. அசைபோட இன்னும்பல மகிழ்வான தருணங்களும் நிகழ்வுகளும் இருக்கின்றன. முடிந்தால் வேறொரு தருணத்தில் அதை பற்றி பேசுவோம்.


அன்புடன்,

ஆனந்தகுமார் முத்துசாமி.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு