Published:Updated:

ஆடம்பரப் பிரியர்தான் ஆனா..! - மகன் பகிரும் அப்பாவின் பக்கங்கள் #MyVikatan

அப்பா மாநில அரசாங்க ஊழியர். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சன்மானத்துடன் விடுமுறை கிடைக்கும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் நான் என் அப்பாவை ஒரு ஆடம்பரப் பிரியர் மற்றும் பண விஷயத்தில் ஒரு 'ஊதாரி' என்றுதான் நினைத்திருந்தேன். அவர் ஆட்டோகாரருக்கு பணம் கொடுக்கையில் மீதி சில்லறையை ஆட்டோகாரர் தேடும்போது "ம் ம், இருக்கட்டும்" என்று ஒரு பெரிய மனிதர்போல சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார். "அப்பா, ஏற்கெனவே பேரம் பேசலை. இதுல கேட்டதுக்கு மேல டிப்ஸ் வேற குடுக்கிறியே. எதுக்குப்பா?" என்று நான் கேட்க" அவனுக்கு பெரிய குடும்பம் இருக்கும்டா" என்று தெரிந்ததுபோல் சொல்லிவிட்டு நடப்பார்.

Representational Image
Representational Image
Pixabay

"நம்மலே போண்டி. இதுல எதுக்குப்பா தானம். உன்னை எல்லாரும் ஏமாத்தறாங்கப்பா" என்று முனகிக்கொண்டு நான் பின்னால் நடப்பேன். "நீங்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல பேரம் பேச மாட்டிங்க. ஆட்டோ டிரைவர்தான் அகப்படுவான்." பகல் கொள்ளையர் என்று பலரும் கருதும் ஆட்டோக்காரர்களுக்கு பயணத்துக்கு மேல் பணம் போட்டுக் கொடுப்பது அப்பாவின் மனித நேயத்தைக் காட்டினாலும் அது ஒரு அசட்டுத்தனமானது என்றே நான் கருதினேன். நான் என் சொந்த பணத்தைக் கையாளும்போது சில ஃபைவ் ஸ்டார் தர கடைகளில் மொய் எழுதி நொந்தபின்தான் அவரது வாதத்தின் உண்மை விளங்கியது. என்றாலும் இன்னமும் டிப்ஸுக்கு கை வருவதில்லை.

அப்பா மாநில அரசாங்க ஊழியர். 2 வருடங்களுக்கு ஒரு முறை சன்மானத்துடன் விடுமுறை கிடைக்கும் (Leave Travel Concession). சன்மானம் குன்றத்தூர் கோயில் சென்று வந்தாலே சரி ஆகிவிடும் என்பதால் அதில் இரண்டை சேமித்து நான்கு வருடங்களுக்கு ஒரு முறை 'தடபுடலாக' மாநில எல்லை தாண்டி ஒரு பயணம் செல்வோம்.

Representational Image
Representational Image
Pixabay

அரசாங்கம் தரும் பணம் தவிர ஒரு கணிசமான தொகை கையில் இருந்து போய்விடும். மிருதங்கம் கற்றுக்கொள்ளவும், மேசைப் பந்து மட்டை வாங்கவும் பணம் கேட்டால் 'இல்லை', 'இல்லை' என 'இல்லை' பாட்டு பாடும் அப்பா இப்படி ஊர்சுற்றிப் பார்க்க என்றால் 'தாம் தூம்' என்று கிளம்பிவிடுகிறாரே என்று நான் மூஞ்சியைத் தூக்கிக்கொண்டுதான் முழு சுற்றுலாவிலும் திரிவேன் பற்றாகுறைக்கு எங்கள் குடும்ப மரபணுக்களிலேயே உள்ள மறதியினால் ஒவ்வொரு முறையும் ஏதாவது கணிச மதிப்புள்ள பொருள் ஒன்றை மறந்துவிட்டு வருவார். மூகாம்பிகையில் மூக்கு கண்ணாடி, பாலக்காட்டில் கைக்கடிகாரம் என்று அப்பாவின் காணாமல்போன காணிக்கைகளைப் பட்டியல் போடலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான் கோவையில் கல்லூரிக்குச் சென்று வந்தபோது இருந்த வீடு 8-க்கு 12 அடிகள் மற்றும் 5 அடியில் ஓட்டுக்கூரை என்று ஒரு குடிசை ரேஞ்சுக்கு இருக்கும். என்ஜினீயரிங் டிராயிங் வரைய மடக்கும் மேசை ஒன்றை நீட்டினால் யாரும் வீட்டுக்குள் வர முடியாது. ஒரு நாள் வீட்டுக்கு வந்த ஒரு நண்பன், "என்னடா, நீ சேற்றில் மலர்ந்த செந்தாமரையா?" என்று கிண்டலடித்ததோடு நிற்காமல் ஒரு விசிட்டிங் கார்டை கையில் அழுத்தினான். "அழகேந்திரா எங்கள் குடும்ப நண்பர். அவர் நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு உதவி செய்வார் . இது அவர் விலாசம். நீ கட்டாயம் ஒரு முறை சென்று வா. என் அப்பா பெயரைச் சொல்" என்றான்.

Representational Image
Representational Image
Pixabay

வீட்டில் வாய் தவறி இதைச் சொல்லிவிட்டேன். உடனே அம்மா "சரியான சமயத்தில் இந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பா உன் கல்லூரி கட்டணத்துக்கு கடன் வாங்க வேண்டும் என்று யோசிக்கிறார். உனக்கு ஏதாவது கிடைத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்" என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள். கெஞ்சல் பொறுக்காமல் நான் சனிக்கிழமை காலை கிளம்பி சைக்கிளை 'மிதி! மிதி!' என்று 15 கிலோமீட்டர் தூரம் மிதித்து அவர் வீடு சென்றடைந்தேன். வீட்டில் காவல்கார கூர்க்கா என் வியர்த்த கோலத்தைக் கண்டு "க்யா சாஹியே?" என்று அதட்டினான். நான் அட்டை காண்பித்து அழகேந்திராவைப் பார்க்க வேண்டும் என்றேன். முதலாளி தூங்கிக்கொண்டு இருக்கிறார், அப்புறம் வா என்று அவன் விரட்ட ஆரம்பித்தபோது எதேச்சையாக அழகேந்திரனே வெளியில் தென்பட்டார். "என்னப்பா வேணும்" என்றவருக்கு பெரிய அறிமுகம் செய்துகொண்டேன்.

`அப்பா பக்கோடா..!' - ஒரு WFH நாளில் பெய்த மழையின் நினைவுகள் #MyVikatan

அவர் முகம் மலர்ந்து "உள்ளே வாப்பா" என்றார். பின் உள்ளே மறைந்துவிட்டார். நான் தயங்கியபடி வாயில் கதவை இரு முறை தட்டி உள்ளே நுழைந்தேன். அவர் சோபாவில் உக்கார்த்திருந்தார். கையில் ஒரு துப்பாக்கி! ஒரு கண்ணை இறுக்கியபடி என்னைப் பார்த்து குறி வைத்தபடி இருந்தார். எனக்கு தூக்கி வாரிபோட்டது. என்னடா பெரிய வம்பு இது என்று வியர்த்துப்போக திரும்பி ஓடப் பார்த்தபோது அவர் "ரொம்ப சாரி தம்பி.''

Representational Image
Representational Image
pixabay

நான் ஆறு லைசென்ஸ் வச்சுருக்கேன். இப்ப எலெக்ஷன். அதனால ரெண்டு வாரம் போலீஸ் ஸ்டேஷன்ல சரண்டர் செய்யணும். கிளம்பிட்டே இருந்தேன். நீங்க வந்துட்டீங்க" என்றார். நின்ற மூச்சு மீண்டும் வந்தது! அவர் பையனைக் கூப்பிட்டு அறிமுகம் செய்தார் . "தம்பி நல்லா படிக்குமாம்" என்றார். நன்றாகப் பேசிக்கொண்டு இருந்தவர் நான் கிளம்பும்போது 2,500 ரூபாய் அளித்தார். ஏறக்குறைய அப்பாவின் இரண்டு மாத சம்பளம். "அடிச்சதுடா யோகம்" என்று மனதுக்குள் ஒரு குதிபோட்டேன். வெளியே வந்ததும் அது ஏதோ 2 லட்சம் போலவும், எல்லோரும் என்னிடமிருந்து பறிக்க வருவதுபோல் தோன்றியதாலும் சரியான மிதி போட்டு 15 கிலோமீட்டரை அரை மணியில் கடந்ததாக ஞாபகம்.

வீட்டில் வந்து பணத்தை நீட்டினால் அம்மா அகமகிழ்ந்து தழுவினாள். அப்பா ஒரு நிமிடம்கூட தாமதிக்காமல் "ஒரு தடவை 'ரிச்சி ரிச்' போய் ஐஸ் கிரீம் சாப்பிடலாமா?" என்றார். 'ரிச்சி ரிச்' பெயருக்கு தகுந்த விலை அதிகமான ஐஸ் கிரீம் கடை. "அப்பா, நான் எவ்வளவு கேவலப்பட்டு இதை வாங்கினேன் தெரியுமா? துப்பாக்கி நீட்டினார்ப்பா" என்றேன். "ஏதோ உங்க அப்பாவுக்கு ஒரு அல்ப ஆசை. போனால்தான் என்ன?" என்றாள் அம்மா.

அன்று மாலை அவசரத்துக்கு மட்டுமே பிடிக்கும் ஆட்டோவைப் பிடித்து ஐஸ் கிரீம் தேடிச் சென்றோம். "இங்க பார் லைட் எல்லாம் கண் கூசாமல் தரையில் விழும்படி இருக்கிறது. பாட்டு எவ்வளவு மெல்லிசாகக் கேட்கிறது. ஸ்பூன் சின்னதாக இருக்கும், மெதுவாக ருசித்துச் சாப்பிட" என்றெல்லாம் சிலாகித்தவாறு மிகவும் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார் அப்பா. நான் இவர் எப்போதுதான் விளையாட்டுத்தனத்தை விடுவார் என்று யோசித்தபடி, விலைதான் யானை விலை, ருசி என்னவோ பூனைஅளவுகூட இல்லை என்று அழிச்சாட்டியம் செய்தேன்.

Representational Image
Representational Image
Pixabay

இந்த வகை சின்னச் சின்ன சந்தோஷங்களை ரத்துசெய்து அப்பா சிக்கனமாக இருந்திருந்தால் ஒரு வேலை கொஞ்சம் குறைவாகக் கடன்வாங்கி இருந்திருக்கலாம். ஆனால், அழகேந்திரனைப் போல ஒரு அரிய மனிதரின் அறிமுகம், 'ரிச்சி ரிச்' ஐஸ்க்ரீம், ஸ்ரீஹரிகோட்டாவில், இஸ்ரோவில் விஞ்ஞானியான சித்தப்பா வீட்டுக்குப் பின்புறம் நின்றுகொண்டு சகல இல்லத்தரசிகள் மற்றும் குழந்தைகளின் சுவாரஸ்யமான, அஞ்ஞான கமென்டுகளுடன் கண்ட SLV3 ஏவுகணை வீச்சம், சரவண பெலகோலாவில் வாயை மட்டுமே மூடிய ஆயிரம் சாமியார்களுக்கு நடுவில் நின்று 60 அடி உயர கோமதீஸ்வரர் என்கிற பாகுபலியைத் தரிசனம் செய்தது போன்ற வாழ்க்கையில் மறக்கவே முடியாத பலப்பல நினைவுப் பொக்கிஷங்களை இழந்திருப்பேன்! தேங்க்யூ பா...

- சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி , சான் ஹோஸே , அமெரிக்கா

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு