Published:Updated:

`அழுகையை அடக்கமுடியவில்லை!'- அப்பாவுக்கு மகனின் கடிதம் #MyVikatan

Representational Image
Representational Image

எழுத கற்றுக்கொடுத்த உங்களிடம் என் எழுத்து வித்தை எடுபடாது நான் அறிவேன்.

சமீப காலங்களாய்

உங்களை சந்திப்பதே

சந்தேகம் ஆகிவிட்ட இந்நேரத்தில்

உங்கள் மகனின் மடல்.

எழுத கற்றுக்கொடுத்த உங்களிடம்

என் எழுத்து வித்தை

எடுபடாது நான் அறிவேன்.

ஆயினும் இக்கடிதம் உங்களுக்காக...

Representational Image
Representational Image

அழுக்கும் ஆல்கஹாலுமாய்

அள்ளியெனை முத்தமிட்ட

நாட்கள் மறக்கவில்லை அப்பா.

உறங்கும் எனை எழுப்பி – நீங்கள்

ஊட்டிவிட்ட பால்கோவா மணம்

மறக்குமா அப்பா?

உங்கள் கோபத்தின் சூட்டிலேயே

எனை அடைகாத்தீர்கள்.

எரிமலை வாசலிலே

கோலமிட்டவன் போல

எந்நேரமும் பயத்திலேயே

படுத்துக்கொண்டேன்.

எடுத்த மதிப்பெண்களை உங்களிடம்

கொடுத்துவிட்டு நடுங்குகின்ற

கரங்களோடு நின்றது மறக்குமா அப்பா?

பண்டிகை நாட்களில்

பணமில்லாமல் கையறுநிலையாய்

கலங்கி நின்றது அறிவேன் அப்பா.

Representational Image
Representational Image

வயது ஏறஏற

வாசலிலே உங்கள் செருப்பைக்

கண்டால் வீதி தாண்டி ஓடிப்போவது

என் வழக்கம் அப்பா.

அடிக்கடி என் முதுகில்

உங்கள் கைத்தடம் பதிந்ததால்

வீண்வழியில் ஓர்நாளும்

விழுந்ததில்லை அப்பா.

அன்றொருநாள்

அம்மாவை அடிக்க ஓங்கிய

கரத்தை பிடித்தபடி முறைத்துப்

பார்த்தேன்.

நம் உறவின் விரிசல்

அங்கே ஆரம்பம்.

மீசை தாடி வளர்ந்த நேரங்களில்

கையும் புகையுமாய் மாட்டிக்கொண்டேன்.

கண்டும் காணாமல் நீங்கள் நடந்து போனது

சித்திரமாய் இன்னும் எனக்குள்ளே.

மணமாகி குடும்பவாழ்வின்

சிலுவைகளை சுமக்க துவங்கும்போது

உன்னருமை புரிகிறது அப்பா.

Representational Image
Representational Image

`சாப்பாடு மொத அவனுக்கு வை'

அம்மாவிடம் சொல்லிவிட்டு

வெளியே நீங்கள் போனபோது

அழுகையை அடக்கமுடியவில்லை அப்பா.

நரையேறிய தலையோடு

தடுமாறும் நடையோடு

நீங்கள் நடந்துபோவதை கண்டபோது

பாழும் நெஞ்சம் பதறுவது அறிவீர்களா அப்பா?

அலுவலக அழுத்தத்தில்

வீட்டில் சப்தமிட்டு கத்தி கடிந்தபோது

விடுப்பா விடுப்பா சரியாய்டும்

என தோள்தட்டி அமைதிப்படுத்திய

அனுபவ ஆண்டவனே

Representational Image
Representational Image
Credits : Unsplash

மன்னிப்பு கேட்பதென்று

முடிவெடுத்து தைரியமில்லாமல்

தள்ளிப்போகும் மகனை மன்னிப்பீராக.

உங்களுக்குத் தெரியாததா?

விதை ஒருபோதும் விருட்சத்தை

தண்டிப்பதில்லை.

-சூர்ய பாரதி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு