Published:Updated:

135 வருடங்களுக்குப் பிறகு தன் வேர்களைத் தேடி கரூர் வந்த தென்னாப்பிரிக்க தமிழச்சி!

`நான் சிறுபிள்ளையாக இருந்ததிலிருந்தே, என் தாய், அவரது தாத்தா கரூரைச் சேர்ந்தவர் என்ற தகவலை சொல்லிச் சொல்லி வளர்த்தார். இப்போது, என் தாய்க்கு அவர் தாத்தாவின் பூர்வீக சொந்தங்களைப் பார்க்கும் ஆசை வந்திருக்கிறது.’

வெண்டி, கணவரோடு...
வெண்டி, கணவரோடு...

135 ஆண்டுகளுக்கு, முன்பு கரூரைவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கு சென்றவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள், கரூரில் உள்ள தங்களது பூர்வீக சொந்தங்களைத் தேடிவந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாச்சிமுத்து
நாச்சிமுத்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நகர கவுன்சிலர் ஒருவர் மூலமாக, தங்களது பூர்வீக சொந்தங்களைத் தேடி அலைந்த அந்தத் தம்பதி பற்றி, கரூர்வாசிகள் ஆச்சர்யமாக பேசிக்கொள்கிறார்கள்.

தாயைத் தேடி டென்மார்க் டு தஞ்சாவூர்...  சினிமாவை மிஞ்சும் 39 வருட பாசப்போராட்டம்!

1884 - ம் ஆண்டு, கரூரில் நாச்சிமுத்து என்பவர் வாழ்ந்துவந்தார். நாச்சிமுத்து நன்றாக சமைப்பாராம். அவரது நளபாகத் திறமையில் மனதைப் பறிகொடுத்த ஆங்கிலேயர்கள், தென்னாப்பிரிக்காவுக்கு நாச்சிமுத்துவை சமையல் வேலை செய்வதற்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் திறம்பட சமையல் செய்யும் வேலையைப் பார்த்துவந்திருக்கிறார். தன் பெயரையும் நாச்சிமுத்து மார்ட்டின் என்று மாற்றிக்கொண்டார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரோஷிமா என்ற பெண்ணையும் திருமணம் செய்துகொண்டு, அங்கேயே செட்டிலாகியிருக்கிறார். அந்தத் தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் பிறந்திருக்கிறார்கள். என்னதான் கரூரைவிட்டு நாச்சிமுத்து தென்னாப்பிரிக்கா சென்று செட்டிலாகிவிட்டாலும், அவரது மனதில் இருந்து, அவரது பூர்வீகமான கரூர் நகரம் நீங்கவேயில்லை.

வெண்டி, கணவரோடு...
வெண்டி, கணவரோடு...

அதனால், தனது ஐந்து குழந்தைகளுக்கும் கரூரைப் பற்றி சொல்லிக்கொடுத்து வளர்த்துவந்துள்ளார். இந்நிலையில் நாச்சிமுத்து, வயோதிகம் காரணமாகக் கடந்த 1951-ம் ஆண்டு காலமானார். அதன்பிறகு, இவரது மூத்த மகனான பிரடரிக் என்பவர், தனது மகள் மெர்சில் ஜார்ஜுக்கு, தனது தந்தையின் பூர்வீகமான கரூரைப் பற்றி சொல்லி வளர்த்திருக்கிறார். மெர்சில் ஜார்ஜுக்கு இப்போது வயது 89 ஆகிறது. இவரும் தனது மகள் வெண்டிக்கு, நாச்சிமுத்துவின் பூர்வீகமான கரூரைப் பற்றி சொல்லியே வளர்த்துவந்திருக்கிறார். வெண்டி, தனது கணவர் டெஸ்மான்ட் ரெட்டியோடு ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் வசித்துவருகிறார்.

பூர்வீக சொந்தங்களைக் கண்டுபிடித்தபின், என் அம்மாவும் கரூர் வருவதாகச் சொன்னார். எனக்கும் எங்க பூர்வீக சொந்தங்களைப் பார்க்கும் ஆவல் வந்திருக்கிறது. எங்களிடம் கொள்ளுதாத்தாவின் போட்டோவைத் தவிர, வேறெந்த ஆதாரமும் இல்லை.

இந்நிலையில், மெர்சில் ஜார்ஜுக்குத் தனது தாத்தா நாச்சிமுத்துவின் பூர்வீகச் சொந்தபந்தங்களைப் பார்க்கும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தனது மகள் வெண்டியையும், மருமகன் டெஸ்மான்ட் ரெட்டியையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதற்காக, இருவரும் நேற்று கரூர் வருகை தந்தனர். தங்கள் கைவசம் நாச்சிமுத்துவின் போட்டோ மட்டும் இருக்க, அதைக்கொண்டு கரூர் கலெக்டர் அலுவலகம் மூலம் தங்களது பூர்வீக சொந்தங்கள் பற்றி தகவல் சேகரிக்க உதவியை நாடினர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அவர்களின் முயற்சியைப் பாராட்டியதோடு, துணை தாசில்தார் மோகன்ராஜிடம், அவர்களுக்கு உதவும்படி உத்தரவிட்டார். அதற்குள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நகர கவுன்சிலர் ஸ்டீபன் பாபுவும் அவர்களுக்கு உதவுவதற்கு முன்வந்தார்.

வெண்டி, கணவரோடு...
வெண்டி, கணவரோடு...

கரூரில் எந்தப் பகுதி என்று தெரியாததால், 1940- களில் பிறந்த முதியவர்கள் பலரைச் சந்தித்து, நாச்சிமுத்து குறித்து விசாரித்தார். அதோடு, நாச்சிமுத்து கரூரில் வசித்தபோது வயலின் வாசிப்பதில் ஆர்வமுடையவராக இருந்ததால், கரூரில் உள்ள நாரதகான சபாவில் நாச்சிமுத்துவைப் பற்றிய தகவல்கள் இருக்கிறதா என்று விசாரித்தனர். ஆனால், சரியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. முதல்கட்ட பயணத்தை முடித்துக்கொண்டு, வெண்டியும் அவரது கணவரும் ஆஸ்திரேலியா பறந்துள்ளனர். ஸ்டீபன்பாபு எப்படியாவது நாச்சிமுத்துவின் உறவினர்களைக் கண்டுபிடித்துவிடுவது என்ற தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா கிளம்புவதற்கு முன்பு நம்மிடம் பேசிய வெண்டி, "இப்போது என் தாய்க்கு, தன் தாத்தாவின் பூர்வீக சொந்தங்களைப் பார்க்கும் ஆசை வந்திருக்கிறது. எனக்கும் என் கொள்ளுத்தாத்தாவின் உறவுகளைக் காணவேண்டும் என்கிற ஆசை வந்தது. அதனால், என்னையும் எனது கணவரையும் கரூருக்கு அனுப்பிவைத்தார், என் தாய். பூர்வீக சொந்தங்களைக் கண்டுபிடித்தபின், தானும் கரூர் வருவதாகச் சொன்னார்.

வெண்டி, கணவரோடு...
வெண்டி, கணவரோடு...

எங்களிடம், கொள்ளுதாத்தாவின் போட்டோவைத் தவிர, வேறெந்த ஆதாரமும் இல்லை. அதனால், ஸ்டீபன் பாபு மூலமாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் திடீர் வேலை இருப்பதால், அங்கு செல்ல இருக்கிறோம். மறுபடியும் வந்து, எங்கள் சொந்தங்களைக் கண்டுபிடித்தே தீருவோம்" என்றார்.

நம்மிடம் பேசிய ஸ்டீபன் பாபு, "பக்கத்துல இருக்கிற சொந்தங்களையே விரோதிகளாக பாவிப்பவர்கள்தான் அதிகம். ஆனா, 135 வருஷம் கழிச்சு சொந்தங்களைத் தேடி வந்த வெண்டியின் செயல் எனக்கு ஆச்சர்மா இருந்துச்சு. அதனால், அவர்களுக்கு உதவ நினைச்சிருக்கேன். முதல்கட்டமா, 1942 வரை பிறந்தவர்களைச் சந்தித்து, நாச்சிமுத்து போட்டோவைக் காட்டி விசாரிச்சோம். யாருக்கும் அவரைப் பற்றி தெரியவில்லை.

ஸ்டீபன் பாபு
ஸ்டீபன் பாபு

1942-க்கு முன் பிறந்தவங்க யாராச்சும் இருக்காங்களான்னு விசாரிச்சுக்கிட்டு இருக்கோம். எப்படியும் நாச்சிமுத்துவின் சொந்தங்களைக் கண்டுபிடிச்சு, அவரது வழித்தோன்றல்களுக்கு தெரிவிப்போம்" என்றார்.