அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தின் (Times Square) விளம்பரப் பலகையில் இளையராஜா தோன்றியிருக்கிறார். தமிழ் இசையமைப்பாளர் ஒருவர் இத்தகைய சிறப்பைப் பெறுவது இதுவே முதல்முறை என்று சொல்லப்படும் நிலையில், ‘டைம்ஸ் ஸ்கொயர் சிறப்பு பெற்றது’ என்று இளையராஜாவின் ரசிகர்கள் இந்த நிகழ்வைக் கொண்டாடித் திளைக்கின்றனர்.

“திகைத்துப் போய் உட்கார்ந்துவிட்டேன்... 24 மணிநேரத்துக்கும் மேல் எனக்குத் தூக்கம் வரவில்லை,” பிரமிப்பு விலகாமல் பேசுகிறார், விளம்பரத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் சிவஞானவதி கேஎஸ்கே.
‘அன்னக்கிளி’ தொடங்கி ‘சைக்கோ’ திரைப்படம் வரை இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களின் தொகுப்பு Raaja Rules! என்ற பெயரில் Spotify தளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இளையராஜா இடம்பெற்ற இதற்கான முன்னோட்டக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலான கவனம் பெற்றிருந்தன.
இந்தப் பின்னணியில்தான், உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தின் விளம்பரப் பலகைகள் ஒன்றில், நவம்பர் 19 அன்று Raaja Rules! விளம்பரம் இடம்பெற்றிருக்கிறது. இதன் காணொளிகளும், புகைப்படங்களும் உடனடியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.
‘டைம்ஸ் ஸ்கொயர் பெருமை பெற்றது’, ‘Times square தனது பிறவிப்பயனை அடைந்தது’, ‘Times Square... today became Tunes Square’ என்று உணர்ச்சிக் கொந்தளிப்பில் பலவாறாக தங்கள் மகிழ்ச்சியைச் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தத் தொடங்கினர். இளையராஜாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளம் பக்கத்திலும் இந்தப் புகைப்படங்கள் பகிரப்பட்டன.
ரசிகர்களே சந்தோஷத்தில் திகைத்து நிற்கும்போது, Raaja Rules!-க்காக இந்தப் புகைப்படத்தை புகைப்படக் கலைஞரின் மனநிலை எப்படி இருந்திருக்கும்... புகைப்படக் கலைஞர் சிவஞானவதியிடம் பேசினேன்.
“Raaja Rules!-ன் இயக்குநர் ஸ்ருதி நந்தகோபாலுக்கும் எனக்கும் ரொம்ப வருஷ அறிமுகம் உண்டு. வேறொரு விஷயமா அவங்கள சந்திச்சப்போ இந்தப் ப்ராஜெக்ட் பத்தி சொன்னாங்க. இதில் பங்கெடுக்க விருப்பமான்னு கேட்டாங்க. மறுக்கக் கூடிய வாய்ப்பா இது... என்னோட வொர்க்ஸ் அனுப்பி வச்சேன்... அவங்க டீம் பார்த்துட்டு ஓகே பண்ணினாங்க. நான் இந்தப் ப்ராஜெக்ட் உள்ள வந்தேன்.
‘இது ஃபோட்டோ ஷூட் கிடையாது. ப்ரோமோ காணொளிக்கான ஷூட். அது லைவ் ஆடியோ ரெகார்ட்டிங்றனால, ஷூட் போய்ட்டு இருக்கும்போது படங்கள் எடுக்க முடியாது. அதனால், எப்ப இடைவெளி கிடைச்சதோ, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கணும்’ன்னு எனக்குச் சொல்லப்பட்டது.

ஷூட்ல இருந்த 3 மணிநேரமும் நம்பமுடியாத வகைல இருந்தது. நான் அதுக்கு முன்னாடி ராஜா சார நேர்ல பார்த்ததில்லங்கிறது இன்னும் கூடுதல் எக்ஸைட்மெண்ட் கொடுத்தது. ஷாட் இடைவேளைகள்ல, ராஜா சார் பேச்சுக்கு இடைல இயல்பா சுத்திப் பார்க்கும்போது, என்னுடைய கேமராவையும் அவர் பார்வை சந்திக்கும். அந்த நொடிக்காக என்னுடைய கேமரா வெய்ட் பண்ணிட்டு இருக்கும். அவ்ளோ அழகா சிரிப்பார்.... கூல்ஸ்பம்ப்ஸ் மொமன்ட் அது. இது நிஜம்தானா, நாம உண்மையிலேயே ராஜா சார ஃபோட்டோ எடுத்துட்டு இருக்கோமான்ங்கிற திகைப்புலையும், பிரமிப்புலையுமே 3 மணிநேரம் கடந்திருக்கு. ஷூட் முடிச்சிட்டு ஃபோட்டோஸ் எல்லாம் பார்க்கும்போது எனக்குத் தாங்க முடியாத சந்தோஷம்.
நான் தான் ராஜா சார படம் எடுத்தேன்னு நிறைய பேருக்குத் தெரியாது. ‘என்ன சொல்ற... ராஜா சார பாத்தியா... அவர ஃபோட்டோ எடுத்தியா?’ன்னு ஆச்சரியமும் சந்தோஷமுமா கேட்டுட்டே இருந்தாங்க. வீட்டுல முதன்முறையா ஃபோட்டோஸ் காண்பிச்சப்பக் கூட, இன்டர்நெட்ல இருந்து எடுத்துக் காமிக்கிறேன்னு நினைச்சாங்க. அப்புறம் தான் ஸ்பாடிஃபைனா என்ன, எப்படி இந்த ப்ராஜெக்ட் உள்ள வந்தேன்னு அவங்களுக்குச் சொல்லிப் புரிய வச்சேன் - என்னைப் போலவே யாராலயும் நம்பவே முடியல!” சந்தோஷத்தில் தடதடவென வந்து விழுகின்ற வார்த்தைகள்.

“டைம்ஸ் ஸ்கொயரில் இளையராஜா படம்... எதிர்பார்த்தீர்களா?”
“சத்தியமா இல்லை... ரொம்ப அதிகபட்சமா சோஷியல் மீடியால படங்கள் வைரலாகலாம்னு நினைச்சிருந்தேன். நான் இன்னும் ஷூட் கொடுத்த எக்ஸைட்மெண்ட்ல இருந்தே வெளிய வந்திருக்கல. மறுநாள் வேறொரு ஷுட்டுக்கு ரெடி பண்ணிட்டு தூங்கப் போறப்ப, நைட் 12 மணி வாக்குல ஃப்ரெண்டிடம் இருந்து ஒரு மெசெஜ்: ‘so proud of you both'ன்னு ஸ்ருதியையும், என்னையும் பாராட்டி அனுப்பிருந்தாங்க. திறந்துப் பார்த்தா டைம்ஸ் ஸ்கொயர்ல ராஜா சார் படம்... அதுவும் நான் எடுத்தது. உறைஞ்சு போய் உட்கார்ந்துட்டேன். தூக்கம் காணாமல் போயிருச்சு... அதுக்கு அப்பறம் 24 மணிநேரத்துக்கும் மேல எனக்குத் தூக்கமே வரல. கொஞ்ச நேரம் கழிச்சு தூங்கிட்டு இருந்த ஃப்ரெண்ட்ட எழுப்பி, ‘இந்த மாதிரி வந்திருக்கு... எனக்கு என்ன பண்ணனும்னு தெரியல’ன்னு சொல்லி ஒரே அழுகை.
அடுத்த நாள் ஆன பிறகும், அதை சோஷியல் மீடியாவுல ஷேர் பண்ற அளவுக்குக்கூட நிதானத்துக்கு வரல... அதிதீவிர கற்பனையிலும் நான் நினைச்சுப் பார்க்காத ஒன்னு எனக்கு நடந்திருக்குன்றது என்னால நம்பவே முடியல. நியூ யார்க்ல டைம்ஸ் ஸ்கொயர் எங்க இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. விக்கிரமசிங்கபுரத்துல இருந்து வந்த ஒரு பொண்ணு, அவளோட ஒர்க் இவ்ளோ தூரம் போயிருக்குன்னு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.

இன்னும் அது ஏற்படுத்திய தாக்கத்துல இருந்து வெளிய வரல... அது வாழ்க்கை முழுக்க இருக்கும்ன்னு நினைக்கிறேன்!” கண்கள் மிளிரச் சிரிக்கிறார் சிவஞானவதி!