Published:Updated:

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் புதிய கொரோனா சிகிச்சை மையம்!

எஸ்ஆர்எம் மருத்துவமனை
எஸ்ஆர்எம் மருத்துவமனை

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு 200 படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு மருத்துவ மையம் திறப்பு.

கொரோனா தொற்று (COVID 19) அறிகுறி உள்ளவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதியுடன் தனி சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணை துணைவேந்தர் பேராசிரியர் லெப்டினன்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் 100 படுக்கை ஆங்கில முறை (அலோபதி) சிகிச்சைக்காகவும், 100 படுக்கை சித்தா, ஆயர்வேதம், ஹோமியோபதி போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் செய்தி வெளியீட்டில் கூறியுள்ளதாவது:

எஸ்ஆர்எம் மருத்துவமனை
எஸ்ஆர்எம் மருத்துவமனை

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மூலம் இயங்கி வரும் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (SRM Medical College Hospital and Research Center) நாள்தோறும் 150 முதல்170 பேர் காய்ச்சல் மற்றும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் 30 பேர் வரை அட்மிட் செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் மூலம் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர், இணைவேந்தர் டாக்டர் பி.சத்தியநாராயணன் ஏற்பாட்டில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எம் பிளாக் பகுதியில் புதியதாக 200 படுக்கை வசதியுடன் தனி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் 100 படுக்கை வசதி ஆங்கில வழி மருத்துவ சிகிச்சை அளிக்கவும்,100 படுக்கை வசதி சித்தா, ஆயர்வேதம், ஹோமியோபதி ஆகிய இந்திய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி சென்னை தி.நகர் அரிமா சங்கத்தின் அறக்கட்டளை மூலமாக கே.கே.நகரில் நடத்தப்பட்டு வரும் ஆயுர்வேத மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் இந்த சித்தா, ஆயர்வேதம், ஹோமியோபதி சிகிச்சை மையம் இயங்கும். இந்தச் சிறப்பு மையங்கள் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் வசதியுடன் செயல்படும். இங்கு நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையுடன் மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஆர்எம் மருத்துவமனை
எஸ்ஆர்எம் மருத்துவமனை

இதன் தொடக்க விழா மே 21, காலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்த மையங்களை எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இணை துணைவேந்தர் பேராசிரியர் லெப்டினன்ட் கர்னல் டாக்டர் ஏ.ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பதிவாளர் (பொறுப்பு) முனைவர் எஸ்.பொன்னுசாமி, எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ஏ.சுந்தரம், எஸ்ஆர்எம் பல் மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் விவேக் ஆகியோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு