Published:Updated:

`நேசம்கொட்டிய இருபது ரூபாய் பிரியாணி!' - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

பாயின் கையில் வழக்கமாயிருக்கும் கட்டைப்பைக்குப் பதிலாக சில பாலித்தீன் பைகள்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பூத்தூவலாய் மழைச்சாரல் தூரத்தில் கேட்கும் இளையராஜாவின் இசையமைப்பில் மனதை வருடும் பாடல் மங்களாய் வெளிச்சம் மனதிற்கு மகிழ்ச்சி தந்திருக்க வேண்டிய சூழல் .... ஆனால் கையில் இருக்கும் பையிலிருந்து வரும் பொறித்த மீனின் வாசமும் அரைமணி நேரமாய் பிரியாணிகடை அப்துல்லா பாய்க்காகக் காத்திருப்பதின் அலுப்பும் சாப்பிட்டு விட்டு போடும் குட்டித்தூக்கம் கெடுவதும் அதுவும் இந்த கிளைமேட்டில்.... ரசிக்க முடியாமல் போயிருந்தது ...

Representational Image
Representational Image

கைக்கடிகாரத்தைப் பார்த்தேன், மதியம் மணி இரண்டாகியிருந்தது

"ஒண்ணு ஒண்ணறைக்கெல்லாம் வந்துருவாப்டி.. இன்னிக்கு என்னாச்சு ஆளையே காணோம்.. நம்ம கம்பெனிகூட லீவு வுட்றும் பாய் விடமாட்டாரு.... "

என்னைப் போலொருவர் வாய்விட்டுச் சொல்லிவிட்டார். அங்கிருந்த பத்துப் பதினைந்து பேரும் மௌனமாய் வழிமொழிந்தோம்.. இந்தச் சுற்றுவட்டாரத்தில் பாயின் பிரியாணியும் சிரித்த முகமும் அவ்வளவு ஃபேமஸ் என்பதால் மட்டுமல்ல எங்களது கம்பெனியின் அக்கம்பக்கம் வேறு சாப்பாடே கிடைக்காது. அதுவும் அவர் தரும் இருபது ரூபாய் பிரியாணியில் எப்போதாவது ஜாக்பாட்டாய் இறைச்சித் துண்டுகளும் இருக்கும்.... எங்களுடைய சம்பளத்தில் அது மட்டும்தான் முடியும்.

தூரத்தில் அவர் வருவதாய்பட்டது சற்றே நிம்மதி வந்து சேர்ந்தது. பாயின் கையில் வழக்கமாயிருக்கும் கட்டைப்பைக்குப் பதிலாக சில பாலித்தீன் பைகள். அப்பாடா பிரியாணி இருக்கு....

``என்னா பாய் லேட் பண்ணிட்டீங்க பயந்தே போய்ட்டோம்....’’

``அட என்னப்பா பண்ண... கொஞ்சம் வேலையா போய்ட்டு வரேன் அதான்பா ...’’ என்றவாறே இருபதுகளை வாங்கிக் கொண்டு அந்தப் பிரியாணி பொட்டலங்களைத் தந்தார். வழக்கத்தைவிட மணமும் அளவும் குறைவாய்ப்பட்டது. அன்றைய கடைசி ஆள் நான்தான். எல்லோரும் சென்றுவிடவே சோர்வாயிருந்தவரிடம்,

``என்ன பாய் ஆச்சு முகமே சரியில்லையே’’ என்றேன்...

Representational Image
Representational Image
Shreyak Singh / Unsplash

யாராவது கேட்க மாட்டார்களா என்றிருந்தவர் போல் கண்ணீரோடு சொல்ல ஆரம்பித்தார்...

``வீட்டம்மா நேத்து நைட்டு திடீர்னு மயங்கி விழுந்திருச்சு. நூத்தியெட்டுக்கு போனபோட்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போனேன், அங்க மாரடைப்புனு சொல்லிட்டாங்க அப்புறம் இப்பதான் கண்ண தொறந்துச்சு. பதறிப்போயி மணி ஆச்சே... அய்யோ நம்ம பிள்ளைகள்ளாம் பாவம் காத்திக்கிட்டிருக்குமே... நாமளும் செய்யலயே... போங்க போயி அன்வர் கடையிலயாவது வாங்கிக்கிட்டுப் போங்கன்னு விரட்டிருச்சு...

அவன் பார்சல் கட்ட லேட் பண்ணிட்டான்பா.. அவன விரட்டி வாங்கிட்டு வரதுக்கு லேட்டாயிருச்சு. பசிச்சுறுச்சாயா... மன்னிச்சுக்கப்பா நாளைக்கெல்லாம் சரியா வந்துடறேன்.. சரிப்பா நான் கிளம்பறேன். அவளுக்கும் சாப்பாடு வாங்கணும் இந்த மருந்தும் வாங்கணும்..’’

என்று தன் சட்டைப்பையைத் தடவியவாறே .. கிளம்பி நடக்க ஆரம்பித்தவரிடம் எதேச்சையாக

``அன்வர் கடையில பிரியாணி எத்தனை ரூபா’’ என்றவனிடம்.. திரும்பிக்கூட பார்க்காமல்,

``அறுபதுப்பா..’’ என்றவாறே விரைந்தார்!

- சுக்கிரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு