Published:Updated:

`கைப்பிடி இல்லாத வாளி!' - தூய்மைப் பணியாளரின் கண்ணீர்க் கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

செய்த வேலைக்கு 100 ரூபாயாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்த அவனை ஹோட்டல் அதிபர் இப்படிச் சொன்னது கலங்க வைத்தது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கைப்பிடி இல்லாத அந்த வாளியை, தன் இரு கைகளைக் கொண்டு, கீழே சிந்தாதவாறு, அடிமீது அடி வைத்து மெல்ல நடந்து சென்றான் மணி.

புது வாளி ஒன்று வாங்கித் தரச் சொல்லி ஒரு வாரகாலம் ஆகிவிட்டது. ஆனால், கருப்பையா அதைக் காதில் போட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.

'டேய். நல்லா சுத்தம் பண்ணு. ஒரு வாரத்து சரக்கு' என்றார் அந்த ஹோட்டல் அதிபர்.

'சரிங்க ஐயா' எனச் சொல்லியவாறே வாளியை நிரப்ப ஆயத்தமானான் மணி.

கொசுக்களும் ஈக்களும் மொய்த்துக்கொண்டிருக்கும் அந்த சாக்கடைக்குள் வாளியை விட்டு முக்கி எடுத்தான். நிரம்பி வெளியே சிந்தும் நீரைப் பக்குவப்படுத்தி வாளிக்குள் அடைத்து பின்பு அப்புறப்படுத்தினான்.

மூக்கை கையால் அழுத்தியபடியே வேகமாக வந்த ஹோட்டல் அதிபர், 'என்னடா ஆச்சா? என்றார்.

'இல்லைங்க ஐயா. இன்னும் ஆறு வாளியாச்சும் ஆகுமுங்க' என்றான் மணி.

'டேய். இதை அள்ளிப்போட உனக்கு இம்புட்டு நேரமா? சாப்பிட வரவங்க வர்ற நேரம்டா இது. சீக்கிரமா அள்ளு' என்றார் ஹோட்டல் அதிபர்.

Representational Image
Representational Image

மணி பதற்றத்துடன் அள்ள ஆரம்பித்தான். மேல்சட்டை முழுவதிலும் சாக்கடை நீர் அப்பிக்கொண்டது.

ஒருவழியாகக் கழிவுகள் அனைத்தையும் அள்ளிமுடித்த அவன், ஹோட்டலின் பின்புறம் சென்று கை கால்களை அலம்பினான்.

'ஐயா. வேலை முடிஞ்சதுங்க...'

'கிட்ட வந்து பேசாத. அப்படியே நில்லு. அந்த டப்பாவுல கொஞ்சம் கஞ்சி இருக்கு. எடுத்துட்டு போ'

செய்த வேலைக்கு 100 ரூபாயாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்த அவனை ஹோட்டல் அதிபர் இப்படிச் சொன்னது கலங்க வைத்தது. மறுத்துப் பேசினால் அந்தக் கஞ்சியும் கிடைக்காது என்று அவனுக்குத் தெரியும். வீட்டில் பசியுடன் காத்திருக்கும் தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இந்தக் கஞ்சிதான் இன்று இரவு உணவு. அதை எடுத்துக்கொண்டு அமைதியாக அங்கிருந்து புறப்பட்டான் மணி.

மணியின் வீடு ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் மயானத்தின் அருகில் இருந்தது. தென்னங்கீற்றைக் கொண்டு பின்னப்பட்ட சிறு குடிசை. வெட்டியான் வேலை செய்தும், சாக்கடை அள்ளியும் குடும்பத்தை நடத்தி வருபவன்.

இவனைப் போலவே அங்கு குடிசைகள் கட்டி, சாக்கடை அள்ளும் தொழிலை செய்து வந்தனர் சிலர்.

அவர்களுள் ஒருவன்தான் கருப்பையா. இன்று எந்த வீட்டுக்கு யார் போக வேண்டும் என்பதை கருப்பையாதான் முடிவு செய்ய வேண்டும். இந்தத் தலைமைப் பொறுப்பு அவனிடம் எப்படி வந்தது என யாருக்கும் தெரியாது.

சில நேரங்களில் கருப்பையா மட்டுமே தொடர்ந்து இரண்டு மூன்று நாள்கள் சாக்கடை அள்ளப் போவதும் உண்டு. ஊர் மக்கள் நிறைய பேர் அவனுக்குப் பரிச்சயம் என்பதால், அவனைத்தான் எல்லோரும் வேலைக்கு அழைப்பார்கள். மணி போன்ற குடிகாரர்கள் அல்லாத உழைப்பாளிகளுக்கு அந்த வேலையைக் கொடுத்து சில நேரம் புண்ணியமும் சேர்த்துக் கொள்வான்.

சாக்கடை அள்ளத் தேவையான துடைப்பம் வாளி போன்றவற்றை கருப்பையாதான் பிறருக்குக் கொடுத்து உதவுவான். எப்போதாவது அதிசயமாகக் கையுறை, முகக்கவசங்கள் கிடைக்கும்.

``இப்படி சட்டையெல்லாம் அழுக்கு பண்ணிட்டு வந்து நிக்கறயே. புது வாளி இன்னும் தரலையா?'' என்றாள் மணியின் மனைவி சுப்பு.

இல்லை என்று சொல்லும்விதமாகத் தலையசைத்தான் மணி.

``பெரியவன் தூங்கிட்டானா?''

``ஆமா.''

``இதுல கஞ்சி கொஞ்சம் இருக்கு. அவன எழுப்பி குடு.''

``வேணாம். அவன் தூங்கட்டும். சின்னவனுக்கே இது சரியா போயிடும்.''

``ம்...''

சின்னவனுக்கு அந்தக் கஞ்சியைக் கொடுத்துவிட்டு மணியும் சுப்புவும் வெறும் வயிற்றோடு உறங்கினர்.

Representational Image
Representational Image

மறுநாள் காலை 8 மணிக்கு முகம் முழுக்க சிரிப்புடன் கையில் முறம், துடைப்பம், வாளி என மணியைப் பார்க்க வந்தான் கருப்பையா.

``டேய் மணி. இன்னைக்கு உன் குடும்பம் மூணு வேளை நல்லா சாப்பிடப் போகுது.''

வேப்பங்குச்சியால் பல்லைக் கீறிக்கொண்டிருந்த மணி, இதைக் கேட்டதும் புருவங்களை உயர்த்தி, 'எப்படி அண்ணே?' என்றான் ஆச்சர்யமாக.

``நம்ம வக்கீலு கோபால் சார் இருக்காருல. அவரு வூட்டுல சாக்கட அள்ளணுமாம். அப்படியே வீடு பூரா சுத்தம் பண்ண சொல்லியிருக்காரு. 500 ரூபா கூலி பேசியிருக்கேன். ஆளுக்கு பாதி பங்கு போட்டுக்கலாம் வா'' என்றான் கருப்பையா.

மணி, ஒரே நாளில் 200 ரூபாயைக் கையில் பார்த்து பல வருடங்கள் ஆகியிருந்தன.

``ஆனா என் வாளியில கைப்பிடி இல்லயேண்ணே?'' என்றான் மணி.

``இன்னைக்கு மட்டும் சாமாளிச்சுக்கலாம். அதான் `500 ரூபா வருதுல. புதுசாவே வாங்கிடலாம் வாடா'' என்றான் கருப்பையா.

பானையில் இருந்த தண்ணீரை மடக் மடக் எனக் குடித்துவிட்டு கைப்பிடி இல்லாத அந்த வாளியை எடுத்துக்கொண்டான் மணி. இருவரும் வேகமாகக் கோபால் சார் வீட்டை நோக்கி நடந்தனர்.

'ஐயா வணக்கமுங்க' எனச் சொல்லியபடியே கும்பிட்டனர் இருவரும்.

``ம்... இருக்கட்டும். எனக்கு வேல சுத்தமா இருக்கனும்டா. நான் மதியம் வந்து பாப்பேன். எனக்கு திருப்தியா இருந்தாதான் கிடைக்கும்'' எனச் சொல்லிவிட்டு தேங்கி நின்ற சாக்கடைத் தொட்டியைக் காண்பித்தார் கோபால்.

வட்ட வடிவ சிமென்ட் கல்லைக் கொண்டு மூடப்பட்டிருக்கும் தொட்டியைத் தாண்டி சாக்கடை நீர் வழிந்துகொண்டிருந்தது. இருவரும் அந்தக் கல்லைத் தூக்க முயற்சி செய்தனர்.

``டேய் மணி. கீழ்ப் பக்கமா கைய வச்சு நல்லா முட்டு குடு.''

``சரிண்ணே. நீ உம் பக்கம் நல்லா கல்ல பிடிச்சு இழு.''

மனித கழிவுகள் கலந்திருந்த அந்தத் தொட்டி, 20 அடிக்கும் குறையாமல் இருந்தது. அதன் அடியில் ஏதோ ஒன்று சிக்கியிருப்பது அவர்களுக்குத் தெரிந்தது.

``கீழ ஏதோ ஒன்னு அடைச்சுட்டு இருக்குடா மணி. அத சரி பண்ணா தான் தண்ணி வழியுறது அடங்கும்'' என்றான் கருப்பையா.

``நான் இறங்கி பார்க்கவாண்ணே?''

``இல்ல. முதல்ல வாளிய வச்சு தண்ணிய கொஞ்சம் இறக்கிடுவோம். அப்புறம் இறங்கலாம்.''

இருவரும் மாறி மாறி கழிவு நீரை வாளியில் நிரப்பி வெளியே ஊற்றினர்.

Representational Image
Representational Image

``ஏண்ணே இந்தப் பணக்காரங்க என்னதாண்ணே சாப்பிடுவாங்க?'' - நீரை இறைத்தபடியே தனக்குத் தோன்றிய சந்தேகத்தைக் கேட்டான் மணி.

``நம்ம திங்கிறத தான் அவங்களும் தின்பாங்கடா. என்ன நம்ம அரிசிய பொங்கி மட்டும் திங்கறோம். அவங்க அதையே அரைச்சு விதவிதமா சுட்டுத் திங்கிறாங்க. அவ்வளவு தான்.''

``அவ்வளோதான் அவங்களுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசமாண்ணே.''

``அவ்வளவு தான்டா.''

``எப்படி சாப்பிட்டாலும் வெளிய வரது என்னமோ ஒண்ணுதாண்ணே'' என்றான் மணி சிரித்தபடி.

``ஹி ஹி... என்னடா டைமிங் காமெடியா? சரி, கீழ இப்ப இறங்க முடியுமா பாரு'' என்றான் கருப்பையா.

உரக்க சிரித்தபடியே மணி தொட்டிக்குள் இறங்கினான். இடுப்பு வரையில் கழிவு நீர் அவனைச் சூழ்ந்து இருந்தது.

``டேய் மணி... கால் வச்சு அப்படியே நாலா பக்கமும் கிளறிவிடுடா.''

இடது காலை மேலே ஊன்றியபடி, வலது காலால் நான்கு இடுக்குகளிலும் கிளறிவிட்டான் மணி.

``அண்ணே. எனக்கு கொஞ்சம் மயக்கம் வர மாதிரி இருக்குண்ணே.''

``என்னடா சொல்ற. அப்போ நீ மேல ஏறி வா. நான் பாத்துக்கறேன்.''

மணி மேலே ஏற முற்பட்டபோது, கண் இமைக்கும் நேரத்தில் தொட்டிக்குள் சரிந்து விழுந்தான். கழிவு நீருக்குள் அவன் முகம் புதைந்தது. மூச்சுவிட ஒருமுறை மட்டும் எழும்பி முடியாமல் மறுபடியும் மூழ்கினான்.

அதிர்ச்சி அடைந்த கருப்பையா, 'மணி மணி...' என் உரக்க கத்தினான்.

அக்கம் பக்கம் திரும்பிப் பார்த்து உதவிக்காகக் கத்தினான். எந்தப் பயனுமில்லை.

மணியின் ஒரு கை மட்டும் மேலே தெரிந்தது. ஆனால், எந்த அசைவும் இல்லை.

அவனைக் காப்பாற்ற தானும் தொட்டிக்குள் குதித்தான் கருப்பையா. அடுத்த 2 நிமிடங்களில் இருவரின் உடல்களும் நீரில் மிதந்தன.

Representational Image
Representational Image

சில மணிநேரத்திற்குப் பிறகே அங்கு கூட்டம் கூடியது. விஷயத்தைக் கேள்விப்பட்ட சுப்பு, அலறி அடித்துக்கொண்டு கோபால் வீட்டிற்கு ஓடி வந்தாள். மணியின் சவத்தை வைத்துக் கொண்டு அவள் கதறியதை அங்கிருந்தவர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

அடுத்த நாள் பத்திரிகையில், 'தூய்மைப் பணியில் ஈடுபட்ட இருவர் விஷ வாயு தாக்கி பலி' என்ற செய்தி மட்டும் வந்திருந்தது.

ஒரு வாரத்திற்குப் பிறகு கைப்பிடி இல்லாத அதே வாளியை எடுத்துக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டான் மணியின் பிள்ளை பெரியவன்.

வாளியில் கைப்பிடி இல்லாமல் இருந்தால் சரி, ஆனால், இங்கு சிலரின் வாழ்க்கையே கைப்பிடி இல்லாமல்தானே இன்னும் இருக்கிறது.

- மருத்துவர் சரத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு