Published:Updated:

இ-பாஸ் பத்திக் கேட்டா இப்படியா பதில் சொல்வீங்க..? - துணிக்கடை ஊழியரின் தவிப்பு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இன்னும் இரண்டு நாள்களில் மீண்டும் சென்னை திரும்பி கடைக்குச் சென்று பணியைத் தொடராவிட்டால், அடுத்த மாதமும் சம்பளம் வராது. திறந்த நாள் முதல் கடையில் விற்பனை எதுவும் நடக்கவில்லை...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

லாக்டெளனால் என் நண்பருக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழலை இங்கு பகிர விரும்புகிறேன்.

லாக் டெளன் தொடங்கி இரண்டு மாத காலம்கூட கண் இமைக்கும் நொடியில் சென்றுவிட்டது. ஆனால், அதன் பிறகு ஏனோ பெரும் தலைவலியாகக் கடந்தது அவருக்கு.

34 வயது நடுத்தர குடும்பத் தலைவர் அவர். சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஆண்கள் ஆடையகத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு அறிவித்தபோது, சரியான நேரத்தில் விடுமுறை கிடைத்ததை எண்ணி இரவோடு இரவாக இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான கரூர் வந்தடைந்தார்.

Representational Image
Representational Image
Vikatan Team

மனைவி கர்ப்பமாக இருந்ததாலும், அவர் உடனிருக்க தேதி குறிப்பிடாத விடுமுறை கிடைத்ததாலும் ,வேறு எதுவும் யோசிக்க இருப்பதாகத் தெரியவில்லை அவருக்கு. இந்த இரு மாதங்களில், அழகான பெண் குழந்தையோடு வீட்டிற்குள்ளேயே நாள்கள் ஒவ்வொன்றும் மிக அழகாகவும் புதுமையாகவும் நகர்ந்தன. ஆனால், நேற்றிலிருந்து அனைத்தும் மாறிவிட்டன.

இரண்டு மாதங்களாகக் கடை திறக்கவில்லை. பணப்புழக்கம் குறைவு. ஆகையால் இரண்டு மாத சம்பளம் இல்லை என்று மேலிடம் உறுதியாகக் கூறிவிட்டது. இதுவரை ஏதோ கையில் இருந்ததை வைத்து மருத்துவமனை செலவுகளை சரி செய்தாகிவிட்டது. இதற்கு மேல் பணத்தேவை நெருக்கும். அந்த நிலையை தவிர்த்தே ஆக வேண்டும்.

இரண்டு மாதமாக சென்னையில் ஆள் இல்லாத வீட்டிற்கும் கட்டாயத்தின் பேரில் வாடகையும் கொடுத்தாகிவிட்டது. அடுத்த மாதம் அரை சம்பளமாவது நிச்சயமாக வாங்கிவிட வேண்டும். இல்லை எனில் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். இன்னும் இரண்டு நாள்களில் மீண்டும் சென்னை திரும்பி கடைக்குச் சென்று பணியைத் தொடராவிட்டால், அடுத்த மாதமும் சம்பளம் வராது. திறந்த நாள் முதல் கடையில் விற்பனை எதுவும் நடக்கவில்லை.

Representational Image
Representational Image
Vikatan team

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உயர்ந்தாலும் நடப்பு வாழ்க்கை பழையபடி தொடங்கிவிட்டது. ஒருவேளை, இதற்கு மேலும் இவர் சென்னை திரும்பாமல்விட்டால், இந்த மாதமும் சம்பளம் கிடைக்காது. அவரது மேலிடமோ, சென்னையில் இருப்பவர்களை வைத்தே சமாளித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் பேசுகிறது. இரண்டு நாள்களாக அரசு இணையதளத்தில் இ-பாஸ் பெறுவதற்கு தீவிரமாக முயன்று வருகிறார். விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒருவழியாக அவசர உதவி எண்களைத் தேடி எடுத்து உதவிக்கு முயற்சி செய்தார். தனது நிலைமையை விளக்கி இ-பாஸ் விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதற்கான காரணம் கேட்டார்.

கரூரில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. கார் அல்லது வேனில் மட்டுமே செல்ல வேண்டும் என்று பதில் வந்திருக்கிறது. என்னிடம் கார் இல்லையே, வேறு என்ன வழி என்று கேட்டால், வாடகை காரில் செல்லுங்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலைமையில் சென்னைக்குச் செல்ல கார் வாடகை கொடுக்கும் பணத்தில், சொந்த காரே வாங்கிவிடலாம். இப்போது எனது நிலை அந்த அளவுக்கு இல்லை என்றார், இவர் கடுகடுப்புடன். அப்படி என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகுங்கள் என்று இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த அரசாங்கத்தையும் அதன் ஆக்கபூர்வமான பணியையும் நொந்து கொள்வதா... இல்லை சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இந்தப் பிறப்பை நொந்துகொள்வதா என்று தெரியவில்லை அவருக்கு.

Representational Image
Representational Image
Pixabay

எது எப்படி இருந்தாலும் தனக்கு வேலை ஆக வேண்டுமே. ஆகையால் கொஞ்சம் நிதானித்துக்கொண்டு மீண்டும் ஒரு அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டார். நிலையை விளக்கினார். மீண்டும் அதே பதில் அங்கிருந்து வந்தது. இருசக்கர வாகனத்துக்கு அனுமதி இல்லை. கார் போன்ற ஏதாவது வாகனத்தில் செல்ல வேண்டும். "இதுக்காக சொந்தக்கார் எல்லாம் என்னால் வாங்க முடியாது" என்றார் எரிச்சலுடன் இவர். "அமெரிக்கா போகணும்னா சொந்தமா பிளைட் வாங்கித்தான் போவீங்களா" என ஏளனமாக பதில் வந்தது உதவி எண்ணில் இருந்து.

இதுவரை அடக்கி வைத்திருந்த அனைத்தையும் கொட்டத் தொடங்கினார் அவர்,

"ஏங்க... நாங்க இங்க எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம். சோத்துக்கு வழி இல்ல. நாளைக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நாடு எங்க போகுதுனு தெரியல. நீங்க எல்லாம் சேவை செய்யும் வேலையில் இருந்துக்கிட்டு இப்படிதான் பேசுவீங்களா..? என்ன பண்றதுன்னு தெரியாமதான உங்களுக்கு போன் பண்றேன். உங்க அறிவாளி தனத்த எங்க கிட்டதான் காட்டுவீங்களா. அலவ்டு இல்லன்னா அப்புறம் எதுக்கு இ-பாஸ் அப்பிளிகேஷன் ஆப்ஷன் -ல டூவீலர் கொடுத்து இருக்கிறீங்க" என்று பொரிந்து தள்ளினார். "டூவீலருக்கு இ-பாஸ் அப்ளை பண்ண முடியாது சார்" என்ற ஒற்றை பதில் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது.

Representational Image
Representational Image
Pixabay

"லோக்கல் போலீஸ் கிட்ட போயி விவரம் கேட்டுட்டு வந்துதான் நான் அப்ளை பண்ணிட்டு இருக்கேன். அவங்கதான் டூவீலர் இ-பாஸ் அப்ளை பண்ணிட்டு போங்க ன்னு சொன்னாங்க. ரெண்டு நாளா அப்ளை பண்றேன். ஆனா ரிஜக்ட் ஆயிட்டே இருக்கு. ரெஃபரன்ஸ் நம்பர் தர்றேன். முதல்ல செக் பண்ணி பாருங்க" என்றார் நண்பர்.

தகவல்களைக் கேட்டுவிட்டு சில நிமிடங்களுக்குப் பின் பதிலளித்தார் உதவியாளர், "சார் 150 கிலோ மீட்டருக்கு மேல டூவீலரில் போக முடியாது."

இனி என்ன செய்வார், "இத நீங்க முதல்லையே சொல்லி இருக்கணும். ஒண்ணு டூவீலர்ல நான் சென்னை போயே ஆகணும். வாடகை காருக்கு எனக்கு வசதி இல்லை. இல்ல வேலைய விட்டுட்டு வீட்ல சோத்துக்கு கஷ்டப்படணும். இதுதான் என் நிலைமை இப்போ" என்று புலம்பினார் அவர்.

Representational Image
Representational Image
Vikatan Team

"எங்க நிலைமையை நீங்களும் புரிஞ்சுக்கோங்க. ஒரு நாளைக்கு 100 பேர் போன் பண்றாங்க. எல்லார்கிட்டயும் பொறுமையா பேச முடியாது. நீங்க நினைக்கிற மாதிரி நாங்க கவர்மென்ட் ஸ்டாப்ஸ் இல்ல. உங்க கிட்ட பேசுற இந்த நேரத்துல 20 கால் வெயிட்டிங் இருக்கு" என்றார் உதவியாளர்.

"நீங்க யாரா இருந்தாலும் சரி. என்ன பொறுப்பு உங்களுக்கு இருக்குன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க. எதுவும் தெரியாம உதவிக்கு உங்களுக்கு போன் பண்றாங்க. அவங்க கிட்ட உங்க அறிவாளி தனத்த காட்டி உங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது. உங்க நேரத்தை வீணடிச்சதுக்கு மன்னிச்சுக்கோங்க. என்னோட பிரச்னை நான் பார்த்துக்கிறேன். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி" என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார் அவர்.

யாரைச் சொல்லி என்ன பயன். இதை விட மோசமான நிலையில் எத்தனையோ மக்கள் உள்ளனர். அன்றாட பிழைப்புக்கு இப்படி ஒரு சோதனை வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்தக் கொடுமைகளுக்கு கொரோனா வந்து சாவதே மேல் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, அருகே பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு மாத பிஞ்சின் கைகள் காற்றில் படம் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார் நண்பர்.

Representational Image
Representational Image
Pixabay

அங்கும் இங்கும் அலையும் அவள் கண்களுக்கு எங்கு என்ன தெரிகிறது என்று தெரியவில்லை. ஆனால், அவளது ரோஜாப்பூ இதழ்கள் மட்டும் புன்னகைத்துக் கொண்டிருந்தன. என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். எப்படியாவது நாளை சென்னை சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் மகளை கொஞ்சத் தொடங்கிய நண்பரின் ஆதங்கத்துக்கு சாட்சியாக பெருமூச்சு மட்டுமே மிஞ்சியது. மகளது எதிர்காலம் மட்டும் கண் முன்னே ஒரு பெரிய கேள்விக்குறியாக விரிய. இன்னும் விடை தேடிக் கொண்டிருக்கிறார்.

- ஹேமா ரமேஷ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு