Published:Updated:

என் ஞாபக மறதியும் கறார் மாமனாரும்! - வாசகர் பகிர்வு #MyVikatan

எனது பைக் மழை வந்தால் மட்டுமே வெகு சுத்தமாகும். காரும் அப்படியேதான். இரண்டும் சர்வீஸ்க்குப் போனால் மட்டுமே சேவிங் செய்த முகங்கள்போல பளிச் என ஓரிரு நாள்கள் சிரிக்கும்! ஆனால்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

லாக்டெளன் 4.0 நடந்துகொண்டிருக்கிறது.

`எப்பவாச்சும் ரிமோட் கையில் கிடைச்சா அஞ்சு நிமிஷத்தில கடகடன்னு `10 சேனல்கள் பார்த்துடணும்’ என்ற மன நிலையில் ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்தேன்.

பல நாள்கள் முடங்கிக்கிடந்ததால் மூளை மங்கிப் போய்விட்டது.

ஆனாலும்,

What's on your mind?

என்ற ஃபேஸ்புக் கேள்விக்கு ஏதாவது பதில் அளிக்கலாம் என எழுத ஆரம்பித்தேன்.

அதற்குள்ளாகவே "உங்க மனசில என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?

இன்னும் கார் எடுக்காம?" என்ற தேவகானம் காதில் புகுந்த வேகத்தில் ஃபேஸ்புக் பதிவொன்று வளராமல் வாடிப்போனது.

ஷோபாவிலிருந்து எழுந்து நேராக கார் அருகில் போனேன்.

உடனே கார் எடுக்கும் சூழல் எப்போதும் இருந்ததில்லை!

கார் மீது பொருத்தப்பட்ட அல்லது போர்த்தப்பட்ட முக்காடுகளைக் களைய வேண்டும். காற்றில் பறக்கக் கூடாது என ஆங்காங்கே பல முடிச்சுகள் போடப்பட்டிருக்கும்.

ஒரே இழுப்பில் வர வேண்டும் என எப்போதும் இழுப்பேன்.

Representational Image
Representational Image

எல்லாம் மாமனாரின் நுணக்கமான பாதுகாப்பு உணர்வு! இதை மனைவி சொல்லிச் சொல்லி சிலாகிப்பதுதான் ஒரே இழுப்புக்குக் காரணம். ஆனாலும், உடனே கவர் கையோடு வராது. பல்வேறு மர்ம முடிச்சுகள் இருக்கும். அவற்றைக் கண்டுபிடித்து அவிழ்ப்பது அவசரத்துக்கு ஆகாத காரியம். நான் சிரமப்படுவதைக்கண்டு அவரே அவிழ்த்துவிடுவார். அந்த நொடிகள் விவரிக்க முடியாத அவஸ்தையானவை.

மாமா காரை பாதுகாப்பதுபோல அப்பா தனது சைக்கிளை பாதுகாத்த முறை ஞாபகம் வந்தது. அவர் மின்வாரியத்தில் பணி புரிந்தார். சைக்கிள்தான் அவரின் ஆசுவாச வாகனம். நானும் அண்ணனும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் முறை வைத்து சைக்கிளைத் துடைக்க வேண்டும். தூசி கண்ணில் பட்டால் தலையில் குட்டு விழும். அந்தக் குட்டு மனதில் இன்னும் வலிக்கிறது.

வாரத்தில் ஒரு நாள் தேங்காய் எண்ணெய்விட்டு துடைக்க வேண்டும். அந்த ஆயில் டப்பா வித்தியாசமாக இருக்கும். சில சமயம் ஆயில் வராது. சில சமயம் `பொழிச்சு’ எனக் கொட்டிவிடும். அப்பாவிடம் இரண்டு விஷயங்களுக்குதான் குட்டு விழும். இந்த சைக்கிள் துடைப்பது. இன்னொன்று வாய்ப்பாடு ஒப்புவிப்பது.

தினமும் 16-ம் வாய்ப்பாடு சொல்ல வேண்டும். நான் எப்படியாவது தட்டுத்தடுமாறிச் சொல்லிவிடுவேன். ஆனால், அண்ணன் 10-ம் வாய்ப்பாட்டுக்கு மேல் நகர மாட்டான். அவனுக்கு அடி விழும்போது என்னால் சிரிப்பு தாங்க முடியாது. கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்தால் அவனுக்கு அடி விழும்போது எந்தக் காரணமும் இல்லாமல் எனக்கும் சேர்ந்தே அடி விழும். இதைத்தான் பிள்ளைகளை சரிசமமாக வளர்ப்பதாக இன்றளவும் அப்பா நினைக்கிறார்.

நான் பைக்கையும் காரையும் மட்டுமல்ல எதையும் சரிசமமாக வைத்துக்கொண்டதில்லை!

Representational Image
Representational Image

எனது பைக் மழை வந்தால் மட்டுமே வெகு சுத்தமாகும். காரும் அப்படியேதான். இரண்டும் சர்வீஸ்க்குப் போனால் மட்டுமே சேவிங் செய்த முகங்கள்போல பளிச் என ஓரிரு நாள்கள் சிரிக்கும்! ஆனால், காருக்குக் கொஞ்சம் கவனிப்பு அதிகம்.

கவரை எப்படியோ இழுத்து எடுத்துவிட்டேன். கார் கவரை மடித்து வைக்கும் கஷ்டத்துக்குத்தான் கார் கவரை நான் போடுவதே இல்லை. அதை மடிப்பது ஒரு கலை. ஒரே ஆள் அதை லாவகமாக மடிக்க அசாத்திய பொறுமை வேண்டும்.

நெருங்கிய உறவினரின் திருமண வரவேற்பு விழா என்பதால் கொரனாவைத் தாண்டிய மேக்கப். மென்மையான சிவப்பு கலர் காட்டன் சர்ட்! அதை எடுப்பாகக்காட்ட ஒரு பிஸ்கட் கலரில் பேன்ட்! கார் சாவியைத் தொங்கவிடும் ஆப்சனோடு கறுப்பு நிற பில்ட்! மனைவியின் புடவைக்கு ஏற்ப மேட்ச்! வாட்சும் கூட…

இந்த மேக்கப் வகையறாக்கள் கலையாதவாறு காருக்குள் செல்வதில் சின்ன சிக்கல்! கார் இடது பக்கம் சுவரையொட்டி நிறுத்தப்பட்டு இருப்பதால் வலது பக்க கதவைத்திறந்து முன் இருக்கையின் மீது அங்குலம் அங்குலமாகத் தவழ்ந்து புகுந்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையெல்லாம் தாண்டி காரை ரிவர்ஸில்தான் வெளியே எடுக்க வேண்டும். நானாக எடுத்தால் தானாக வெளியேறும். ஆனால், மாமனார் காருக்கு வெளியே நின்றுகொண்டு ரைட், லெப்ட் சொல்ல ஆரம்பிப்பார். இங்கு மட்டுமல்ல, அவரோடு எங்கு சென்றாலும் அதைச் செவ்வனே செய்வார்! அப்போது அவர் மூளை இடதுபக்கமும், எனது மூளை வலது பக்கமும் மட்டுமே வேலை செய்யும்!

இப்படி வேறோருவர் ரைட், லெப்ட் சொல்வது லாரிக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்குமேயொழிய ஒரு போதும் காருக்கு ஒத்து வராத சமாசாரம்! ஒன்று கார் மோதல் அல்லது சொல்பவரோடு மோதல் நிகழும்!

இந்த காரின் பின்பகுதியில் மிக முக்கிய ஒடுக்கமே, மைத்துனி ரிவர்ஸ் சொல்லும்போது வந்த நடுக்கமே!

இப்போதும் மாமனாரின் வழிகாட்டிலில் கார் வெளியேறியது!

Representational Image
Representational Image

போகும் வழியில்… ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என மனைவி சொன்னவுடன் எந்த பிரச்னையும் இல்லாதவாறு காரை ஐஸ்க்ரீம் கடையைத்தாண்டி 100 மீட்டர் தள்ளி நிறுத்தினேன்.

ஜஸ்க்ரீம் கடையில் மனைவியின் கல்லூரி தோழி ஒருவர் இருந்தார்.

நான்தான் முதலில் கண்டுப்பிடித்து சிரித்தேன். ஆனால், சட்டெனப் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை! இருவரும் பேசிக்கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

குடும்ப அங்கத்தினரின் அனைவரின் பெயரையும் நினைவுகளில் உட்புகுத்தும் ஒருவரின் பெயர் ஞாபகம் வராதது எரிச்சலாக இருந்தது.

’எனது பெயர் ஞாபகம் இருக்கா எனக் கேட்டுவிட்டால் என்ன செய்ய?’

அதனால், எதுவும் பேசாமல் அமைதியாகப் பெயரை நினைவுக்குக் கொண்டு வர முயற்சி செய்தேன்.

நேற்றும் இப்படிதான்…

வேறு வழியில்லாமல் பல நாள்களுக்குப்பின் வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய கட்டாயம்.

மருந்து வாங்க வேண்டியிருந்தது...

மருந்துக்கடையில் கூட்டம்.

எனது வாய்ப்புக்காகக் காத்திருந்தேன்.

எனக்கு முன் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

மாஸ்க் இல்லை! அவர் சிறிய சிவப்புத்துண்டால் முகத்தைக் கட்டியிருந்தார்.

Representational Image
Representational Image

கொஞ்சம் சமூக இடைவெளி இருந்தது.

அவரை எங்கயோ பார்த்த ஞாபகம்!

அவர் மருந்து வாங்க வேண்டிய தருணம்!

வாங்கிய பின்... அவரிடம் சற்று பணம் பற்றாக்குறை போல...

``தம்பி... இருக்கிற காசுக்கு மாத்திரை கொடுங்க...”

கடைக்கார பையன் ஓனரிடம் விஷயத்தைச் சொல்ல...

”ஐயா! திரும்ப வரும்போது மிச்ச காசு கொடுங்கள்... என ஓனர் சொல்லிவிட்டார்!”

``சரிங்க... தம்பி!” என மாத்திரைகளை எண்ணிக்கொண்டு கிளம்பினார்.

அவர் கிளம்பிப் போனப்பின்னும் ஞாபகம் வரவே இல்லை...

இப்போது ஐஸ்க்ரீம் சாப்பிடும்போதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.

அவர் நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது ஐஸ் விற்பனை செய்தவர்.

யார் ஐஸ் கேட்டாலும் ஐஸ் கொடுத்துவிடுவார். பின்னர் காசு கொடுத்தால் போதும்! எப்படியாவது ஐஸ் பெட்டி காலியாகிவிடும்.

எங்க வகுப்பில் ஏறக்குறைய 30 மாணவர்கள் இருப்போம். மொத்தமாக ஐஸ் வாங்குவோம். அந்த வகையில் நல்ல பழக்கமாகி இருந்தார்.

நான் டிகிரி முடித்து எனது வேலைவாய்ப்பு அட்டையைப் புதுப்பிக்க நண்பனோடு ஊட்டிக்குப் போயிருந்தேன்.

ஊட்டிப் பேருந்து நிலையிலிருந்து எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்க்கு நடந்துதான் செல்ல வேண்டும்.

ஊட்டி செரிங்கிராஸ் பகுதியைத் தாண்டும்போது "டேய்... தம்பி" என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.

அதே ஐஸ் காரர்! அதே கணீரென்ற குரல்...

``இந்தா ஐஸ் சாப்பிடு...”

என கப் ஐஸ் இரண்டு பேருக்குக் கொடுத்து அனுப்பினார். காசு கொடுத்தும் வாங்கவில்லை!

Representational Image
Representational Image

இப்படித்தான் போன மாதம் ஒரு நாள் பேக்கரியில் ஒருவர் என்னை அடையாளம் கண்டு உரிமையோடு பேசினார்.

எனக்கு ஞாபகம் வரவில்லை!

'நீங்க 25 வருடத்துக்கு முன் நான் பூஜை செய்த கோயில் பக்கத்தில் குடியிருந்திங்க... தம்பி' என்றார்.

வாரவாரம் தவறாமல் எனக்கு பிரசாத பொங்கல் வைத்திருந்து கொடுக்கும் கோயில் பூசாரி!

இப்படியாக நமக்குதான் எல்லாம் மறந்துபோகிறது. இப்படியான ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் ஞாபகம் வராதது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது.

`நல்ல மனது உடையவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம்’ எனச் சொல்வார்கள்.

அதுவும் சரிதான்.

கடைசி ஐஸ்க்ரீம் கரையும் வரை பேசி தோழிகள் விடைபெற்றார்கள். எனக்குதான் தோழியின் பெயருக்கான விடை கிடைக்கவே இல்லை.

காரில் புறப்பட்டவுடன் ``அவங்க பெயர் என்ன?” எனக் கேட்டேன்.

``அட… அடிக்கடி போன் செய்வாளே… வத்சலா!”

பெயரை உச்சரித்துப் பார்த்தேன்! வாய்க்குள் நுழையவே இல்லை. வாய்க்குள் நுழையாத விஷயங்கள் மனசுக்குள் நுழைவதே இல்லை.

கார் பெல்ட் போடுங்க! உங்களுக்கு எல்லாம் மறந்துடும்! என்ற வார்த்தைகளில் சூடு இருந்தது.

கொரோனோ பயம் என்பதால் கூட்டம் இல்லை. கார் சரியான இடத்தில் திருமதியின் உதவியுடன் பார்க்கிங் செய்யப்பட்டது.

Representational Image
Representational Image

கார் கண்ணாடியும் எனது கண் கண்ணாடியும் சமவேகத்தில் உயர்த்தப்பட்டன. இரண்டுமே கறுப்பு கூலிங் கிளாஸ்.

தலைகேசம் பணிய வைக்கப்பட்டது.

முக கவசம் அணியப்பட்டது.

வெளியேற முற்பட்டேன்.

அப்போதுதான் உணர்ந்தேன்.

அவசரத்தில் வெறுங்காலில் வந்திருப்பதை.

மெ... து...வா...க திரும்பிப் பார்த்தேன்.

திருமதி கோபத்தில் முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

- சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு