Published:Updated:

`ஜப்பானியர்களைவிட ஜெர்மானியர்கள் எப்படி வலுவா இருக்காங்க?’ - அஜினோமோட்டோவின் கதை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

1907-ம் ஆண்டு சோதனையைத் தன் ஆய்வகத்தில் தொடங்கிய இக்கேடா, வீட்டில் ஒருநாள் மனைவி வாங்கி வந்த கெல்ப் உணவுப்பொருளை கவனித்தார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``ருசி என்பதே, நாக்கைப் பழக்கப்படுத்துகிற ஒரு காரியம்தான்.''

- கி.ராஜநாராயணன்

ஒரு ஊர்ல கணவன், மனைவி இருந்தாங்க. மனைவி சாப்பாட்டை ஒருநாளும் கணவன் பாராட்டியே சொல்லமாட்டாரு. ஒரு நாள் மனைவி அழுதுட்டே இதைக் கேட்டபோது, கணவனுக்குத் தன் தவறு தெரிந்தது.

அடுத்த நாள் சாப்பிட்டவுடன், `ரசம் நல்லா இருந்தது'னு கணவன் சொல்ல, மனைவி மீண்டும் அழ ஆரம்பிச்சாங்க.`இது சாம்பார்'னு சொன்னாங்க. மறுநாள், இதை சரிசெய்யும் விதமா, சாம்பாரை ஏகத்துக்கும் பாராட்டினாரு கணவன். இப்போதும் கட்டுப்படுத்த முடியாம அழுதாங்க மனைவி. விசாரித்ததில், அது பக்கத்துப் வீட்டுப் பெண்ணின் சாம்பார்னு சொன்னாங்க.

Representational Image
Representational Image
Pixabay

இது வேடிக்கைக்காகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் ஒவ்வொரு வீட்டிலும் ஆண் சாப்பிடும்போது பெண், `உப்பெல்லாம் சரியாக இருக்கிறதா?' எனக் கேட்டால், `சமையல் நல்லாயிருக்கா?' என்பதாக அர்த்தம்.

உணவை ருசித்துவிட்டு 'நன்றாகயிருக்கிறது' என்று ஒரு வார்த்தை பாராட்டுவதில்லை பலரும். ஆனால், சுவை குறைவாய் இருந்தால் கோபம் தலைக்கேறிவிடுகிறது சிலருக்கு.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு கைப்பக்குவம் இருக்கும். இன்றைக்கு, கைப்பக்குவம் அனைத்தையும் காணாமல் ஆக்கிவிட்டது அஜினோமோட்டோ.

சுவையூட்டியெனக் குறிப்பிடப்படும் இப்பொருளைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்ற ஜூலை 25-ம் தேதியை, 'சுவையூட்டி தினம்' என்கிறார்கள் (The Umami Seasoning Day).

#அஜினோமோட்டோ

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் கிகுனே இக்கேடா உணவின் சுவை பற்றி ஆராய்ந்தார். சில பொருள்களில் பொதுவான சுவைகள் காணப்பட்டாலும் இனிப்பு, புளிப்பு, கசப்பு மற்றும் உப்பு போன்ற நான்கு நன்கு அறியப்பட்ட சுவைகளை தாண்டி ஐந்தாவதாக பொதுவான ஒரு சுவை உள்ளதை ஆராய்ந்தார்.

Representational Image
Representational Image
Pixabay

1907-ம் ஆண்டு சோதனையைத் தன் ஆய்வகத்தில் தொடங்கிய இக்கேடா, வீட்டில் ஒருநாள் மனைவி வாங்கி வந்த கெல்ப் உணவுப்பொருளைக் கவனித்தார். அதைச் சுவைத்தபோது, ஜெர்மனியில் தான் சுவைத்த தக்காளி, அஸ்பாரகஸ், இறைச்சி மற்றும் சீஸ் ஆகியவற்றில் கண்டுபிடிக்கப்பட்ட அதே தனித்துவமான சுவை இருந்தது. எனவே, ஜப்பானிய உணவுப் பொருளான கெல்ப் எனப்படும் ஒரு வகை கடற்பாசி உணவில் குளுட்டமிக் அமிலம் இருப்பதைக் கண்டறிந்து அதைப் பிரித்தெடுத்தார்.

மயிலாடுதுறை: சத்தான உணவு; ஆரோக்கிய பானம்! - பேரூராட்சியின்`குக் ஃப்ரம் ஆபீஸ்' அசத்தல்

100 கிராம் உலர்ந்த கெல்பில் குளுட்டமிக் அமிலத்தின் அயனி வடிவமான குளுட்டமேட் (Glutamate) ஒரு கிராம் உள்ளதைக் கண்டறிந்தார். இது இனிப்பு, புளிப்பு, கசப்பு, உப்பு ஆகிய நான்கு சுவைகளில் மாறுபட்டது. இதற்கு `உமாமி (Umami)' எனப் பெயரிட்டார். இது ஆங்கிலத்தில் 'சுவையான சுவை' என்று அழைக்கப்படுகிறது.

சபுரோசுகே சுசுகி என்பவர் இக்கேடாவின் காப்புரிமையுடன் 'உமாமி' சுவையூட்டலை AJI-NO-MOTO எனச் சந்தைப்படுத்தி 1917-ல் தொழிற்சாலையை நிறுவினார்.

Dr. Kikunae Ikeda and Saburosuke Suzuki
Dr. Kikunae Ikeda and Saburosuke Suzuki

#கண்டுபிடித்த கதை

கிகுனே இக்கேடா டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் வேதியியலைப் படித்து முடித்த பின், ஜெர்மனியின் லீப்ஜிக் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். அங்கு ஜப்பானியர்களைவிட ஜெர்மானியர்கள் உயரமாகவும் வலுவாகவும் இருந்ததை அறிந்தார்.

ஜப்பானிய மருத்துவர் ஹெய்சு மியாகேவின் 'நல்ல சுவை செரிமானத்தைத் தூண்டுகிறது' எனும் வரி அடிக்கடி இக்கேடாவை தூண்டிக்கொண்டே இருந்தது.

தனது புதிய கண்டுபிடிப்பான குளுட்டமேட் மற்றும் சோடியம் கொண்ட ஓர் உப்பு, மோனோசோடியம் குளுட்டமேட், நல்ல பண்புகளையும் வலுவான 'உமாமி' சுவையையும் கொண்டிருப்பதை பேராசிரியர் இக்கேடா கண்டறிந்தார்.

குளுட்டமிக் அமிலத்தை சாதாரண உப்பு மற்றும் தண்ணீரில் கலப்பதன் மூலம் மோனோசோடியம் குளுட்டமேட்டை இக்கேடா உருவாக்கினார். அது தண்ணீரில் எளிதில் கரையும்படி இருப்பதையும், ஈரப்பதத்தை உறிஞ்சவோ திடப்படுத்தவோ இல்லை என்பதையும் கண்டறிந்தார். இது சிறந்த சுவையூட்டலாக மாறியது.

Representational Image
Representational Image
Pixabay

மோனோசோடியம் குளுட்டமேட், சுருக்கமாக எம்.எஸ்.ஜி எனப்பட்டது. சொந்த வாசனையோ அல்லது குறிப்பிட்ட அமைப்போ இல்லை என்பதால், இது பலவிதமான உணவுகளில் பயன்படுத்தப்பட்டது. அவ்வுணவுகளின் அசல் சுவையை அதிகரித்தது.

#பரவல்

அறிமுகமானதிலிருந்து தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் காரணமாக அதிக முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட உணவுப் பொருள் அஜினோமோட்டோதான். 1930-களின் இடையிலிருந்து 1941 வரை, ஜப்பானைத் தவிர வேறு எந்த நாட்டையும்விட அமெரிக்கா அதிக அஜினோமோட்டோவை உட்கொண்டது. சீன உணவுகளின் சுவைக்கு 'உமாமி' சுவையே காரணம்.

Representational Image
Representational Image
Pixabay

முதலில் நன்றாக இருந்தாலும் குளுட்டமேட் என்பது ஒருமுறை உண்டால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சுவையூக்கி. ஆகும். இதோடு மோனோ சோடியம் (Monosodium) கலந்து வியாபாரத்தை அதிகப்படுத்தினர். அமெரிக்காவே அங்கீகரித்ததால் மற்ற நாடுகளும் இதைப் பயன்படுத்துகின்றனர். இன்று பல்வேறு நாடுகளிலும் உணவுப் பொருள்களில் அஜினோமோட்டோ சேர்க்கப்படுவதைக் காண முடிகிறது

#அஜினோமோட்டோ விளைவுகள்

* சமீபத்தில் ஒரு துரித உணவுப் பொருளுக்குத் தடை விதித்ததற்குக் காரணம், அரசு அனுமதித்த அளவைவிட 17 மடங்கு எம்.எஸ்.ஜி பயன்படுத்தியதே.

* இந்தச் சுவையூட்டியால், மூளையில் 'ஹைப்போதாலமஸ்' என்ற பகுதி அதிகம் பசியைத் தூண்டுகிறது. எனவே, உணவை அடிக்கடி உண்பதால் எடை அதிகரிக்கிறது.

* நரம்பு மண்டலத்தை அதிகம் தூண்டுவதால் பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.

Representational Image
Representational Image
Pixabay

* இதில் சேர்க்கப்பட்டுள்ள வேதிப்பொருள்கள் திடீரென்று அதீத இன்சுலின் மற்றும் அட்ரினலைத் தூண்டுவதால் உடலின் சமநிலை குறைகிறது.

* சுவை மொட்டுக்களை மரத்துப்போகச் செய்யும் அஜினோமோட்டோ, பிற சுவைகளை அறியாதபடி மூளையைக் குழப்புகிறது.

* சிப்ஸ், பிஸ்கட், பானிபூரி, நூடுல்ஸ், இன்ஸ்டன்ட் சூப், மசாலா அயிட்டங்கள், ரெடிமேடு சப்பாத்தி, பரோட்டா, சமோசா, பப்ஸ், சாஸ் வகைகள் எல்லாவற்றிலும் கலக்கப்பட்டிருக்கிறது.

#சுவை

''சுவையின் உண்மையான மூலஸ்தானம் நாக்கு அல்ல; மனமே" என்பார் காந்தி.

இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களிலேயே நமக்குத் தேவையான சத்துகள் கிடைக்கின்றன. உதாரணமாக, நூறு கிராம் தக்காளியில் சுமார் 203 மில்லி கிராம் குளுட்டமின்கள் உள்ளன. இது மூளை நரம்புகளின் செயல்பாட்டுக்குத் தேவையான 'காமா அமினோ பியூட்டைரிக்' அமில உற்பத்திக்கு உதவுகின்றன.

Representational Image
Representational Image
Pixabay

ஆகவே, செயற்கை உணவு வகைகளின் சுவையை நாடாமல் இயற்கையாய் கிடைக்கும் உணவிலே ஆரோக்கியத்தை நாடுவோம்.

`உணவுக்கு ருசி சேர்ப்பது உப்போ, காரமோ இல்லை, அது சமைப்பவர் மனதில்தான் இருக்கிறது' என்பார் எஸ்.ரா.

அதீத சுவைக்கு நாக்கைப் பயன்படுத்துவதைவிட, அதை ஆரோக்கியத்துக்குப் பழக்க வேண்டும்.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு