Published:Updated:

`கடவுள நேர்ல பார்த்தவங்க யாரு?' வர்ணிக்கத் தவறிய வண்ணங்கள்! - குறுங்கதை #MyVikatan

Representational Image
Representational Image ( pexels )

காலையில் பார்த்த பெண்மணிபோல் இவரும் ஒருவர் என்று அறிந்தேன். `சொல்லுங்கம்மா? என்ன ஆச்சு குணசேகரனுக்கு?' என்று கேட்டேன்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மணி காலை 8 இருக்கும். என் பள்ளிக்குச் செல்லத் தயார் நிலையில் இருந்தேன். அவரைக் கண்டேன். சிறு கிழிசல்கள், கூடையில் மட்டுமல்ல. கூடைக்குள் இருப்பது மதிய உணவாக இருக்கும் என்பது என் கணிப்பு. தலைக்குப் பூ இல்லை, உடம்பில் இருந்த ஒரே ஓர் ஆபரணம் அந்த மெட்டிதான். மஞ்சள் தாலி, உச்சி நெற்றியில் சிவப்புப் பொட்டு. வேகமாய் நடந்து சென்றவர் திடீர் பிரேக் போட்டதுபோல் நின்றார்.

எதிரே இருந்த சர்ச்சை பார்த்து, இன்னும் 10 நாள்களே கேரன்டிக்கு உண்டான செருப்பை அவிழ்த்துவிட்டு, இரு கை எடுத்து அந்த மாதாவை தொழுதார். நிச்சயம் அது மூன்று வேளை பசிப்பிணி தீர்த்து, பிள்ளை படிக்க உதவ, கணவன் குடிக்காமல் இருக்க ஏங்கி வேண்டியதை என் மனம் தோராயமாக அறியும். சமூகத்தில் இப்படிப்பட்ட பெண்களின் அலங்காரம் இதுதான்.

Representational Image
Representational Image

பணம் படைத்தவர்களுக்குத்தான் தன் மதம், தன் கடவுள் என்ற மமதை எல்லாம். பணம் இல்லாதவருக்கு உதவ முன் வர இருப்பவர் எல்லோரும் கடவுள்தான் என்பதை அந்த சர்ச் வாசலில் நான் புரிந்துகொண்டேன்.

பின் மீண்டும் நடை எடுத்தார். விறுவிறு நடை. அந்த மெலிந்த தேகத்தில், ஒட்டடை படிந்து சுத்தம் செய்யப்படாத வீடுபோல், அவர் வெள்ளை நிறத்தில் ஏதோ புதியதொரு வண்ணம் சேர்ப்பு தெரிந்தது. புரிந்தது வறுமைக்கும் ஒரு வண்ணம் உண்டென. அவர் பிரார்த்தனை பலிக்க நானும் `பிதா சுதன் பரிசுத்த ஆவி' என்று வண்டியில் சென்றபடி வேண்டிச் சென்றேன். அந்தப் பெண் என்னைக் கடந்து சென்றார். அதே வேகத்துடன், நடை பயணமாக. நான் அங்கு ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்த வந்தேன்.

தாகம் தணித்து மீண்டும் என் வண்டியை எடுத்தேன். அவர் நேரே பட்டாசு தொழிற்சாலைக்குள் நுழைவதைக் கண்டேன். ஒவ்வொரு முறை தீபாவளி வரும்போதும் ஏதோ ஒரு கடையில் விபத்து ஏற்படுமே என்ற செய்தி என்னில் வந்து சென்றது. எனினும் என்ன செய்ய முடியும் என்று அதே சிந்தனையில் சென்றேன். பின் நான் என் பள்ளிக்குச் சென்றேன்.

வழக்கம்போல் மாணவர்கள், `வணக்கம் ஐயா' என்று வாழ்த்தி காலை பிரார்த்தனைக் கூடம் சென்றனர். அது அரசுப் பள்ளி என்பதால், மாணவர்களுக்குப் புரிந்த மொழியில் கற்பிக்கும் தமிழ் ஆசானான என் மீது அவர்களுக்கு ஒரு பாசம் இருப்பதை நான் அவ்வப்போது அறிவேன்.

என் வகுப்பு 5, 6 மற்றும் 7 என்பதால் மாணவர்கள் சொல்வதைக் கொஞ்சம் கவனத்துடன் கேட்பார்கள். எட்டாம் வகுப்புக்கு மேல் சொல்வதைக் கேட்பார்கள் என்று நான் பெரும்பாலான மாணவர்களிடம் எதிர்பார்க்க மாட்டேன். அது மாணவர்களின் தவறாய் நான் கருதுவதில்லை, சமூகம் சார்ந்த பிரச்னை. எந்தப் பிள்ளையும் மண்ணில் பிறக்கையில் நல்ல பிள்ளைகளே என்ற கவிஞரின் வார்த்தை எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்னில். வழக்கம்போல் வருகைப்பதிவு எடுத்து முடித்தேன். 10 நாள் பள்ளிக்கு வராத குணசேகரன் பெற்றோரை என்னை வந்து பார்க்கச் சொல்லி அவன் நண்பனிடம் சொல்லி இருந்தேன். ராமாயணம் கதை பாதி முடிந்த நிலையில், மீதி பாதி நடத்திக் கொண்டிருந்தேன். சீதையின் அருந்துயர்களை எடுத்துரைத்தேன்.

குணசேகரனின் தாய், பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் ஏதோ வேலை இடத்தில் இருந்து அனுமதி கேட்டு பாதியில் வந்தவர்போல் இருந்தார். ஏதோ பட்டாசு மருந்து வாசம் அவர் மீது வீசுவதை நான் அறிவேன்.

தீப்பெட்டி உற்பத்தி
தீப்பெட்டி உற்பத்தி

காலையில் பார்த்த பெண்மணிபோல் இவரும் ஒருவர் என்று அறிந்தேன். `சொல்லுங்கம்மா? என்ன ஆச்சு குணசேகரனுக்கு?' என்று கேட்டேன். `அவன் பத்து நாளுக்கு முன் மயங்கி விழுந்ததால அரசு ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம்' என்றார் அந்த அம்மா. உடனே நான் அனுதாபத்துடன், `அப்படியா, அவன் உடம்பைப் பார்த்துக்கோங்க' என்று சமாதானப் படுத்தினேன்.

``உங்க பரிதாபமும் அனுதாபமும் எனக்கு ஏதும் செய்யாது சார். உங்க பொறுப்பு பெரிய பொறுப்பு சார், நீங்க நெனச்சா நாங்க அரசியல் தலைவர்களை நாடி குடியை ஒழிக்க கெஞ்ச வேண்டியதில்ல.

இவன் அப்பன் குடிக்காம காசு சேமிச்சு இருந்தா, நான் இந்தப் பட்டாசு ஆலைக்குப் போகணும்னு அவசியமில்லை. நீங்க பெரியவங்க, நல்லத அறிவுறுத்துங்க. நேர்வழியைக் காட்டி விடுங்க, எழுத்துப் படிப்பு மட்டும் படிப்பில்லேயே சாமி? நல்லத போதிச்சுவிடுங்க, அதுங்க சாதிச்சிடுங்க. அஞ்சுல வளையாதது, ஐம்பதுல வளையாது! அவன் உடம்பு நல்லா ஆனதும் அனுப்பி வைக்கிறேன்'' என்று சொல்லிப் புறப்பட்டார்.

காலையில் பார்த்த அந்தப் பெண்மணி சர்ச்சில் பிரார்த்தனை செய்தது என் நினைவுக்கு வந்தது.

``கடவுள நேர்ல பார்த்தவங்க யாரு? சூழலுக்கு தகுந்தவாறு நாம உதவினாலோ, அடுத்தவனை தூக்கிவிட்டாலோ நாமதான் கடவுள் இல்ல? சரி ராமாயணம் இன்னொரு நாள் எடுத்துக்கலாம், இன்னைக்கு `கள்ளுண்ணாமை' படிக்கலாம்'' எனத் திருக்குறளில் இருந்து மாணவர்களுக்கு முதல் சுழி போட்டேன்.

- செங்கதிர்தாசன்.த

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு