Published:Updated:

`இது கடனில்லை, உதவி!'‍- 3 பிள்ளைகளுடன் தவித்த பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த 3 பேர் #MyVikatan

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில்தான் கணவனும் மனைவியும் சேர்ந்து ஒரு வருடமாக அயர்னிங் கடை நடத்தி வந்திருக்கிறார்கள்.

 உமா
உமா

ஒருவருக்கு கஷ்டங்களும் சோதனைகளும் மல்லுக்கு நிற்கும்போது அதைக் கலங்காமல் எதிர்கொள்ள சில நல்ல உள்ளங்கள் துணைக்கு தோள்கொடுக்கும்போது அந்த துயரங்களும் கண்ணீரும் ஒரு பொருட்டே இல்லை. அப்படித்தான் சில நல்ல உள்ளங்களின் உதவியால் கஷ்டத்தை எதிர்கொண்டு களத்தில் மகிழ்ச்சியாய் நிற்கிறார் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் அயர்னிங் கடை நடத்திவரும் உமா.

முப்பது வயதான உமாவுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள். கணவர் சுரேஷ் திருப்பூரில் கூலிவேலை செய்துவருகிறார். 2 மகன்கள், ஒரு மகள். மூத்த மகனும் மகளும் அரசுப் பள்ளியில் படித்துவருகிறார்கள். மூன்றாவது குழந்தைக்கு இப்போதுதான் இரண்டரை வயது.

Representational Image
Representational Image

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில்தான் கணவனும் மனைவியும் சேர்ந்து ஒரு வருடமாக அயர்னிங் கடை நடத்தி வந்திருக்கிறார்கள். சுரேஷின் தம்பிக்கு திடீர் உடல் நலக்குறைவு. ஏராளமான மருத்துவச் செலவுகள். இதனால் தம்பியின் மருத்துவ செலவுக்காக நிறைய கடன் வாங்கி இருக்கிறார் சுரேஷ். இதனால் வட்டிக் கடன் சுமை அதிகரித்திருக்கிறது. இந்த அயர்னிங் கடையின் வருமானம் போதிய அளவுக்கு இல்லை. கடன் சுமை வேறு. இதனால் அயர்னிங் கடையை தன் மனைவி உமாவிடம் ஒப்படைத்துவிட்டு குடும்பத்தின் கூடுதல் வருமானத்துக்காக திருப்பூருக்கு பிழைப்பு தேடிச் சென்றிருக்கிறார் சுரேஷ்.

அவர் திருப்பூர் சென்ற ஒரு வாரத்திலேயே இவர்கள் உறவினர்களிடம் வாங்கி வைத்திருந்த சலவைப் பெட்டியை வந்து வாங்கிச் சென்றுவிட்டனர். இதனால் உமாவின் தினசரி வருமானத்துக்கு வழி இல்லாமல் மூன்று பிள்ளைகளுடன் சாப்பாட்டுக்கே மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார். கணவர் வாங்கிய கடனே பல்லாயிரக் கணக்கில் இருப்பதால் எவரும் புதிதாய்க் கடன் கொடுக்கவும் தயாரில்லை. பல இடங்களில் கடன் கேட்டும் கிடைத்தபாடில்லை. என்ன செய்வது எனத் தெரியாமல் கண்ணீருடன் அலைந்து திரிந்திருக்கிறார் உமா. கணவரும் வேலைக்குச் சென்று பத்து நாள்கள்கூட ஆகாத நிலையில், அவருக்கும் சம்பளத்துக்கு வழி இல்லை. இந்த நிலையில்தான் தனது கடைக்கு வாடிக்கையாளராக வந்து செல்லும் புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் கீதா டீச்சரை சந்தித்து இருக்கிறார் உமா.

அடுத்து நடந்ததை அப்படியே விவரிக்கிறார் உமா..

`` கீதா அக்காவை எனக்கு ஒரு வருஷமா தெரியும். அவங்க டிரெஸ் எல்லாம் நாங்கதான் அயர்னிங் செஞ்சுக் கொடுப்போம். என்னோட கஷ்டத்தைச் சொல்லி கீதா அக்காகிட்டே உதவி கேட்டேன். வீட்டுக்காரு எங்கே போயிட்டாருனு கேட்டாங்க. கடன் கட்டமுடியாமல் திருப்பூருக்கு வேலைக்குப் போயிட்டாரு. இங்கே நான், ஆறாம் கிளாஸ் படிக்கிற என் மூத்த மகன், நாலாம் கிளாஸ் படிக்கிற மக மூணு பேரும் இருக்கோம். கடைசிப் பையன் அம்மா வீட்டிலே இருக்கான். நாங்க சொந்தக்காரங்ககிட்டே வாங்கி வைச்சிருந்த அயர்ன் பாக்ஸை அவங்களே திரும்ப வந்து வாங்கிட்டு போயிட்டாங்க. இப்போ பெட்டி இல்லாம கடை போட முடியலைக்கா. சாப்பாட்டுக்கே வழி இல்லை. பெட்டி வாங்க கடன் கொடுங்கக்கா. நான் வாரா வாரம் வட்டியோட சேர்த்து தந்திடுறேங்க்கா... அப்படினு கீதா அக்காகிட்டே சொன்னேன். அவங்களும் சரி கவலைப்படாதே பார்ப்போம்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

கீதா
கீதா

அப்படி சொல்லிட்டுப் போன நாலைஞ்சு நாளிலேயே கீதா அக்கா கொடுக்கச் சொன்னாங்கனு சொல்லி ஒரு புது சலவைப் பெட்டியை ரெண்டு பேரு கொடுத்திட்டுப் போனாங்க. எனக்கு தலை கால் புரியலை. ஒரே சந்தோஷம் வாழ்க்கையிலே இனி கஷ்டம் இல்லைனு முடிவுக்கு வந்தேன். கீதா அக்கா போன் நம்பர்கூட அப்போ எனக்குத் தெரியாது. அவங்க வீட்டுக்குப் போய் நன்றி சொல்லலாம்னு போனேன். அவங்க ஊருக்குப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. அந்தப் பெட்டி கிடைச்சதும் எம் புள்ளைகளை எப்படியும் காப்பாத்திடலாம்னு நம்பிக்கை வந்திடுச்சு. ஆனா அந்தக் கீதா அக்காவைத்தான் உடனே நேரில பார்த்து நன்றிகூட சொல்ல முடியலை.

ஒரு வாரம் கழிச்சு கீதா அக்கா என்னோட கடைப் பக்கம் வந்தாங்க. அக்கா ரொம்ப நன்றிக்கா.. இந்த உதவியை மறக்கவே மாட்டேன். மொத்தம் இது எவ்வளவுக்கா? நான் வாராவாரம் உங்களுக்கு இந்தக் கடனைத் திருப்பித் தந்திடுறேன்னு சொல்லிட்டு அழுதுட்டேன். அதுக்கு அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா. இது நான் மட்டுமில்லை. என்னோட நண்பர்கள் விஸ்வநாதன், மலையப்பன் எல்லோரும் சேர்ந்து உனக்கு செஞ்ச உதவி. இது கடன் இல்லை. இதை நீ எப்பவும் திருப்பித் தர வேண்டாம். இதை வைச்சு உன்னையும் உன் பிள்ளைகளையும் நல்லா பார்த்துக்கோனு சொல்லிட்டுப் போனாங்க.

பேரா.சா.விஸ்வநாதன்
பேரா.சா.விஸ்வநாதன்

இப்போ ஒரு நாளைக்கு எனக்கு தினசரி முன்னூறு ரூபாய் வருமானம் கிடைக்குது. வீட்டு வாடகை, வண்டி வாடகை, சாப்பாடு மத்த செலவுகள் எல்லாம் இப்போ எனக்கு எதுவும் சிரமமா இல்லை. இனி எப்படியும் நானும் என் பிள்ளைகளும் கஷ்டம் இல்லாம வாழ்ந்திடுவோம். அந்த நம்பிக்கையை இந்த புது சலவைப் பெட்டி கொடுத்திருக்கு. கீதா அக்காவும் அந்த முகம் தெரியாத இன்னும் இரண்டு பேர்களும் சேர்ந்து எனக்கு செஞ்ச உதவியை வாழ்க்கையில மறக்கவே மாட்டேன். நெருங்கிய சொந்தக்காரங்ககூட உதவி செய்ய முன்வராதபோது யாருண்ணே தெரியாத அவங்க செஞ்ச உதவிக்கு நானும் எம் பிள்ளைகளும் எப்படி நன்றி சொல்றதுனே தெரியலை... அவங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்...” என கண்ணீர் ததும்ப நெகிழ்ச்சியுடன் நன்றி கூறுகிறார் உமா.

உமாவுக்கு இந்த உதவி கிடைப்பதற்குக் காரணமான கீதா டீச்சர் இதுபற்றி பேசவே மறுத்துவிட்டார். இருந்தும் இதுபற்றி தொடர்ந்து கேட்டதற்கு, `` நாம் சந்திக்கும் சக மனுஷங்க கஷ்டப்படும்போது நம்மால் முடிஞ்ச சில உதவிகள்தான் இது. மத்தபடி இது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. உமாவோட நிலைமையை என்னுடைய நண்பர்களான ஓய்வு பெற்ற பேராசிரியர் சா.விஸ்வநாதன், விதைக்’கலாம்’ அமைப்பின் பொறுப்பாளரும் அரசுப் பள்ளி ஆசிரியருமான மலையப்பன் ஆகியோர்கிட்ட சொன்னேன். உடனே விஸ்வநாதன் சார் 2,000 ரூபாய், மலையப்பன் 1,000 ரூபாய், நான் ஆயிரத்து எழுநூறு ரூபாய் போட்டு மொத்தம் 4700 ரூபாய்க்கு இந்த சலவைப் பெட்டியை வாங்கிக் கொடுத்தோம்.

மலையப்பன்
மலையப்பன்

தயவுசெஞ்சு இது பெரிய உதவி எல்லாம் இல்லை. துயரப்படும் சக மனிதர்களுக்கு சக மனிதர்கள் உதவி செய்யலைன்னா எப்படி? அந்த அடிப்படையில் நீட்டப்பட்ட ஒரு சின்ன உதவிக்கரம் மட்டுமே இது. உமாவும் அவங்க பிள்ளைகளும் வாழ்க்கையை கஷ்டம் இல்லாம வாழணும். அதுபோதும். அதுக்குத்தான் இந்த சின்ன சலவைப் பெட்டி ” என மகிழ்ச்சியுடன் சொல்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியரும் கவிஞருமான மு.கீதா.

சிலர் செய்யும் சின்ன சின்ன உதவிகளால்தான் இன்னும் இந்த பூமி பூத்துக் குலுங்கிக்கொண்டே இருக்கிறது.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/