Published:Updated:

`பிரேமா டீச்சரை பார்த்தப்போ’ - 25 ஆண்டுகளுக்கு பிறகு ரீயூனியன், வாவ் திட்டமிடல், பகிரும் தோழிகள்!

முன்னாள் மாணவியர் சந்திப்பு

``பிரேமா டீச்சர்தான் எங்கள் அனைவருக்கும் ஃபேவரைட். அவருக்கு தற்போது 76 வயது; அவருடைய வீட்டில் சென்று சந்தித்தோம். அவருக்கும் பல மடங்கு சந்தோஷம். நிறைய கதைகள் பேசினோம். எங்களுடைய மறு இணைப்பு விழா பற்றி டீச்சர் உடனடியாக ஒரு கவிதையை எழுதிக் கையில் கொடுத்தபோது...’’

`பிரேமா டீச்சரை பார்த்தப்போ’ - 25 ஆண்டுகளுக்கு பிறகு ரீயூனியன், வாவ் திட்டமிடல், பகிரும் தோழிகள்!

``பிரேமா டீச்சர்தான் எங்கள் அனைவருக்கும் ஃபேவரைட். அவருக்கு தற்போது 76 வயது; அவருடைய வீட்டில் சென்று சந்தித்தோம். அவருக்கும் பல மடங்கு சந்தோஷம். நிறைய கதைகள் பேசினோம். எங்களுடைய மறு இணைப்பு விழா பற்றி டீச்சர் உடனடியாக ஒரு கவிதையை எழுதிக் கையில் கொடுத்தபோது...’’

Published:Updated:
முன்னாள் மாணவியர் சந்திப்பு

வாழ்க்கையின் பசுமையான, இனிமையான காலம், பள்ளிக்காலம். சுதந்திரப் பறவைகளாக, ஆடிப்பாடித் திரிந்த மாணவர் பருவத்தை யாராலும் எப்போதும் மறக்க முடியாது. ஆனால், பொதுவாக பலரால் தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி கால நட்புகளைத் தொடர முடிவதில்லை. குறிப்பாக பெண்களால். குடும்பம், வேலை என மையம் கொள்ளும் அவர்களின் வாழ்வில் நட்புக்காக நேரம் ஒதுக்க முடிவதில்லை. ஆனால் `96’ திரைப்படம் வெளியான பின்பு, பழைய நண்பர்களை சந்தித்து நட்பை புதுப்பித்துக்கொள்ளும் ரியூனியன், கெட்டுகெதர் போன்ற நிகழ்வுகள் அதிகம் நடப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில், சமீபத்தில் மதுரையில் நடந்த ஒரு ரியூனியன்‌, வித்தியாசமான முறையில் நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக கெட்டுகெதர் விழாக்களில் பல வருடங்களுக்கு முன்பு ஒன்றாக படித்த நண்பர்கள் ஒன்றாக கூடி தங்களுடைய வாழ்வில் நடந்தவை மற்றும் தங்களுடைய கடந்த கால நினைவுகள் எனப் பகிர்ந்து கொள்வர். ஆனால் இத்துடன் மட்டும் நிறுத்திவிடாமல், தங்கள் சந்திப்பில் இந்த சமூகத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என சேர்த்து யோசித்து செய்தது, இவர்களின் ஹைலைட்.

முன்னாள் மாணவிகள் சந்திப்பு
முன்னாள் மாணவிகள் சந்திப்பு

மதுரை பி.கே.என் பள்ளியில், 1997-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவிகள் 37 பேர், கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஒன்றாக சந்தித்து இந்த ரீயூனியனை கொண்டாடியுள்ளனர். மதுரையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இவ்விழாவில், ஊதா நிறத்தில் ஒரே மாதிரியான புடவைகளை அணிந்து சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்த முன்னாள் மாணவிகளில் ஒருவரான ஜெயலக்ஷ்மி, உற்சாகமாக பேசத்தொடங்கினார்.

``எங்களுடைய சீனியர்கள், சில வருடங்களுக்கு முன்பு ரீயூனியன் செய்திருந்தனர். அதை பார்த்ததுமே நாங்களும் இதுமாதிரி செய்ய வேண்டும் என ஆசைப்பட்டோம். அதற்காகத் திட்டமிடத் தொடங்கி தற்போது வெற்றியும் பெற்றுவிட்டோம். இதை தோழியரின் சந்திப்பு என்ற அளவில் விடாமல் இன்னும் ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைத்தோம். இந்த வருடம் நாங்கள் படித்து முடித்து 25-ம் ஆண்டு என்பதால் அதையும் கொண்டாட நினைத்தோம். இதை ஒரு முப்பெரும் விழாவாகக் கொண்டாடலாம் எனத் தோன்றியது.

ஆசிரியர் பிரேமாவுடன் முன்னாள் மாணவிகள்
ஆசிரியர் பிரேமாவுடன் முன்னாள் மாணவிகள்

இந்த விழாவின் முதல் கட்டமாக எங்கள் பள்ளியில் 40 ஆண்டுக்காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற பிரேமா என்னும் ஆசிரியரை, மாணவிகள் ஒரு குழுவாகச் சென்று சந்தித்து ஆசி பெற்றோம். அதன் பிறகு, நாம் மட்டும் மகிழ்வாக இருந்தால் போதுமா, பிறரையும் மகிழ்வித்து பார்க்கலாம் என திருமங்கலம் ஆஸ்டின்பட்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்திற்குச் சென்றோம்.

விழாவின் தொடக்கத்தில், ஒருவருக்கொருவர் தங்களுடைய தற்போதைய வாழ்வு பற்றி பகிர்ந்த பின்னர், கேக் கட்டிங், ஆட்டம் பாட்டம் என ஒவ்வொரு தோழியின் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம் நிறைந்திருந்தது. பல வருடங்கள் கழித்து தோழிகளைச் சந்தித்ததால், மீண்டும் பள்ளிக்குச் சென்றுவிட்ட குதூகலத்துடன் இருந்தோம் அனைவரும்’’ என்றவர், தங்கள் ஆசிரியையை சந்தித்த அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

``எங்கள் பள்ளியில் பணியாற்றிய பிரேமா டீச்சர்தான், எங்கள் அனைவருக்கும் ஃபேவரைட். அவருக்கு தற்போது 76 வயது. அவரை அவருடைய வீட்டில் சென்று சந்தித்தோம். எங்கள் அனைவரையும் பார்த்ததில் டீச்சருக்கும் ரொம்ப சந்தோஷம். நிறைய கதைகளைப் பேசினோம். எங்களுடைய மறு இணைப்பு விழா பற்றி டீச்சர் உடனடியாக ஒரு கவிதையை எழுதி கையில் கொடுத்தார். அனைவரும் நெகிழ்ந்துபோனோம். அவரை சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்" எனக் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் முன்னாள் மாணவிகள்
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் முன்னாள் மாணவிகள்

இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தது எப்படி என புஷ்பலதா பகிர்ந்தார். ``இப்படி ஒரு விழா நடத்த வேண்டும் என நினைத்ததுமே எங்களுடன் படித்தவர்களில் யார் யாருடைய தொலைபேசி எண், முகவரி தெரியும் என சேகரிக்க ஆரம்பித்தோம். நிறைய பேர் திருமணம் ஆகி சென்று விட்டதால் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. தொலைபேசி எண் இல்லாதவர்களுக்காக அவர்கள் பெற்றோர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களின் விவரங்களைக் கேட்டோம். இந்த ஏற்பாடுகள் ஆறு மாத காலமாகவே நடந்து வந்தன. ஒவ்வொருவராகத் தேடித் தேடி வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைத்தோம்‌. இப்படி ஒரு ரீயூனியன் செய்வதற்கு அனைவருக்கும் ஏற்றது போல் ஒரு நாளாக, விடுமுறை நாட்களைத் தேர்வு செய்தோம்‌.

இந்த அக்டோபர் 1-ம் தேதியில் மற்றொரு சிறப்பும் உண்டு. இது உலக முதியோர் தினம். நம்முடைய மூத்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மரியாதை தரும் நோக்கோடு இது இருக்கும் என எண்ணினோம்.

அனைவரையும் ஒருங்கிணைப்பது, விழா ஏற்பாடுகளை செய்வது, ஒரே மாதிரி சேலை எடுப்பது என நிறைய வேலைகள் இருந்தன, பல சிரமங்களும் இருந்தன. எங்களுக்குள்ளேயே சிறிய குழுக்களாகப் பிரித்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்தோம்‌. எங்கள் தோழிகள் ஸ்ரீ மற்றும் மகா, அனைவரையும் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றினர்.

இன்னும்‌ பல தோழிகள் தங்களால் முடிந்த அளவு பல உதவிகளைச் செய்தனர். இந்த விழா பல சிரமங்களைத் தாண்டி சிறப்பாக நடந்தது மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. மீண்டும் பிரியும் தருணம்... 12-ம் வகுப்புத் தேர்வின் கடைசி நாளை மீண்டும் சுமந்தது போன்ற கனம்.

எங்கள் தோழிகள் சிலர் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களால் வர முடியவில்லை. அவர்களையும் இணைத்து இன்னொரு விழா இதேபோல் கொண்டாட வேண்டும் என எண்ணம் உள்ளது" என்றார் ஆர்வத்துடன்.

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் முன்னாள் மாணவிகள்
மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் முன்னாள் மாணவிகள்

இந்த முன்னாள்‌ மாணவிகள் தங்கள் பள்ளியின் பெருமைகளையும் கடந்த கால நினைவுகளையும் பகிரத் தவறவில்லை. ``எங்கள் பள்ளி திருமங்கலத்தில் மிகவும் பிரபலமான பள்ளி. படிப்பு என்று மட்டுமல்லாமல் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நேரம் தவறாமை, ஒழுக்கம் இதை எல்லாம் கற்றது அங்குதான். பல தனித்திறமைகளையும் வளர்த்து விட எங்கள் பள்ளி தவறவில்லை. அங்கு படித்த மாணவிகள் பலர் நல்ல நிலையில் உள்ளோம். மருத்துவம், கல்வி, காவல்துறை என எங்களுடன் படித்தவர்கள் இன்று பல துறைகளில் உள்ளனர். எங்கள் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் கவனிக்காமல் கொஞ்சம் படிக்கப் சிரமப்படுபவர்கள், ஓரளவு படிப்பவர்கள் என அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியாக கவனம் கொடுத்து படிக்க வைப்பர். இப்படி எங்களை சிறந்தவர்களாக உருவாக்கியதற்கு எங்கள் பள்ளிக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்" என ஒருசேரக் கூறினர்.

‘’பொதுவாக, கெட்-டுகெதர், ரீயூனியன் என பெண்கள் போடும் திட்டங்கள் கைகூடுவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கும். ஆனால், அனைத்தையும் தாண்டி அதை சாத்தியப்படுத்தலாம் என்பதை நாங்கள் நிகழ்த்திப் பார்த்தபோது... கிடைத்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சக பெண்களுக்கும், இது சாத்தியமே என்ற நம்பிக்கையை நாங்கள் அழுத்தமாகக் கொடுக்க விரும்புகிறோம்’’ என்று ஆசையும் ஆர்வமும் கொடுத்து முடித்தார்கள் தோழிகள்.