Published:Updated:

மீன் கடைன்னா ஈ மொய்க்கனுமா என்ன? - டிஜிட்டல் மீனவரின் வெற்றிக் கதை

மீனவர் கிங்ஸ்டன்
மீனவர் கிங்ஸ்டன்

கடற்கரையில் ஐஸ் பெட்டியில் மீன்களை அடுக்குவது முதல் கடையில் ரத்தம் சொட்ட சொட்ட மீன்களை வெட்டி அழகாய் பீஸ் போடும்வரை அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தினார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

யூ டியூப், பேஸ்புக், வாட்ஸப்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கும் வெறும் வெட்டிப் பொழுதுபோக்கு தளம். சிலருக்கு ஜாதி வீராப்பு பேசும் சமர் களம். மற்றும் பலருக்கு வெத்து அரசியல் பேசும் மொக்கை தளம். வேறு சிலருக்கோ சினிமா ரசி்க பூமி . இப்படி ஒவ்வொருவருக்கும் ஒருவித போதைக்கான இடம். ஆனால் வெகுசிலர் மட்டும் சமூக ஊடகங்களை மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பிற்கான மேடையாகப் பயன்படுத்தி பயனடைந்து வருகிறார்கள். பிழைக்கத் தெரிந்தவர்கள் அவர்கள்..!

அந்த வரிசையில் சமீபமாய் ஒரு பெரிய கார்ப்பரேட் ஸ்டைல் மீன் வியாபாரியாக உருவெடுத்திருப்பவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த மூக்கையூர் 'உங்கள் மீனவன்' கிங்ஸ்டன் . அவருக்கும், அவருடைய குழுவினருக்கும் முதலில் என் பாராட்டுகளும்.. வாழ்த்துகளும்...!

மீனவர் கிங்ஸ்டன்
மீனவர் கிங்ஸ்டன்

எளிய மீனவ குடும்பத்தில் பிறந்த அவர் ஆரம்பத்தில் கடலில் மீன் பிடிப்பதை வீடியோவாக்கி அது பற்றிய கூடுதல் தகவல்களை தன்னுடைய சொந்த வட்டார வழக்கில் 'அது வந்துக்கிட்டு...போய்க்கிட்டு.' என்று மண் மணம் மாறாப் பாணியில் யூ டியூப்பில் பேசி பதிவிட்டு வந்தார்.

கேமரா ஆங்கிள், பாடி லாங்க்வேஜ், வீடியோ எடிட்டிங் என எந்த காட்சி ஊடகத் தொழில் நிபுணத்துவமும் அறியாதவர். அவர் பெரிதாய் படித்திருக்கவும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் பார்வையாளர்களின் ருசித் துடிப்பு அறிந்த இளைஞர். அந்த வித்தைதான் அவரின் கெத்து.

கடல் ஒரு பெரிய திரில். அந்த சமுத்திரத்தையே தனது வாழ்க்கைத் தளமாக்கி ஒவ்வொரு நாளும் மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, சாதனைகளை, வேதனைகளை, லாபங்களை, நஷ்டங்களை, அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை மிக எளிய தமிழில் பேசி எல்லோருக்கும் நெருக்கமானார் இவர்.

நடுக்கடலில் குதித்து சக மீனவர்களை காப்பாற்றுவது, நள்ளிரவில் பெருங்காற்றில் மீனவர்கள் தத்தளிப்பது, மீன்களை வெகு லாவகமாக டன் கணக்கில் அள்ளுவது… வெறும் வலையுடன் திரும்புவது இப்படி கடல்சார் மனிதர்களின் வாழ்வியலை படங்களுடன் காட்சிக்கு வைப்பவர்.

மீனவர் கிங்ஸ்டன்
மீனவர் கிங்ஸ்டன்

மீன்களின் பெயர், தரம், சுவை, விலை இப்படி வெளி உலகம் அறியாத பல மீன் உலக விஷயங்களை எல்லாம் வெளிச்சத்துக்கு கொண்டு வருபவர் இந்த சோசியல் மீடியாக்காரர். இதற்காகவே... "வணக்கம்.. நான் உங்கள் மீனவன் " என்று உற்சாகக் குரலுடன் தொடங்கும் இவர் வீடியோ பதிவுகளை பார்த்து ரசிக்க பெரும் கூட்டம் கூடியது. யூ டியூப் மூலம் வருமானமும் கிட்டியது. பேஸ்புக்கிலும் ஏராளமான பாலோயர்ஸ்.

அப்படியே மெதுமெதுவாய் தான் பிடித்த தரமான மீன்களை எப்படி ருசியாய் சமைத்து சாப்பிடுவது என்பதையும் மனைவி, குழந்தைகள், நண்பர்களுடன் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் எச்சில் ஊற வைத்தார்.

தான் பிடித்த மீன்களை வாடிக்கையாளர்களிடம் நேரடியாக சந்தைப்படுத்த திட்டமிட்டார். அதற்காக முதன் முதலில் திருப்பூரில் உருவானதுதான் அவருடைய மீன் வியாபாரக் கடை. நடுக்கடலில் மீன் பிடிக்கும்போதே நாளை திருப்பூரில் இந்த மீன் எங்கள் கடையில் கிடைக்கும் என வீடியோ போட்டுவிடுவார்.

கடற்கரையில் ஐஸ் பெட்டியில் மீன்களை அடுக்குவது முதல் கடையில் ரத்தம் சொட்ட சொட்ட மீன்களை வெட்டி அழகாய் பீஸ் போடும்வரை அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தினார். அதுபற்றி அவர் பாணியில் விளக்கமும் கொடுத்தார். கடையை கார்ப்பரேட் ஸ்டைலில் வடிவமைத்தார். கடையின் சைன் போர்டில் உள்ள எழுத்து, ஸ்டைல், நிறம், ஐஸ் பாக்ஸ், கண்ணாடி கதவு, சுத்தம், ஆரோக்கியம், விளம்பர போஸ்டர்கள் என எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தியை உருவாக்கினார். எல்லோரையும் கவனிக்க வைத்தார். மீன் வர்த்தக உலகம் இவரைப் பற்றி பேசத் தொடங்கியது.

மீனவர் கிங்ஸ்டன்
மீனவர் கிங்ஸ்டன்

அனைத்துப் பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை கொடுத்து. ஈ மொய்க்கும் மீன் கடை என்பதை மாற்றி மணக்கும் மால் ரேஞ்சுக்கு வடிவமைத்தார். மேல்தட்டும், நடுத்தட்டும், அடித்தட்டும் 'உங்கள் மீனவன்' கடையில் கியூவில் நிற்கத் தொடங்கியது.

சோசியல் மீடியாவில் பிரபலமான தனது முகத்தையே தனது நிறுவனத்தின் லோகோ ஆக்கினார். இதற்கெல்லாம் ஒரே காரணம் யூ ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை சரியான முறையில் பயன்படுத்தி மார்க்கெட்டிங் செய்வதுதான்...!

அதாவது இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்டைல். ஒரு புதுவித வர்த்தக உத்தி. அவர்களின் இந்த பாணியிலான மார்க்கெட்டிங் மீனுக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பயன்படுத்தலாம். சமத்துள்ளவர்கள் சக்கைபோடு போடலாம். அதற்கான சாட்சிதான் - ‘உங்கள் மீனவன்’ . அதேபோல் சரியான திட்டமிடல், நண்பர்களின் கூட்டு முயற்சி, கடின உழைப்பு இவை எல்லாம்தான் 'உங்கள் மீனவனின்' வெற்றிக்கான வித்து.

‘உங்கள் மீனவன்’-ஐ கார்ப்பரேட் கணக்கில் சிலரை அச்சத்துடனும் கவனிக்க வைத்துள்ளது. பல நகரங்களில் ‘உங்கள் மீனவன்’ கடைகள் தொடங்கப்படுவதால் சிறு மீன் வியாபாரிகளின் வர்த்தகமும் பாதிப்புக்கு உள்ளாகுமோ என்ற பதைபதைப்பும் பல கமெண்ட்ஸ்களில் காணக் கிடைக்கிறது. மேலும் இந்த வர்த்தகத்தில் பெரும் பணக்கார முதலைகள் பதுங்கி இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மீனவர் கிங்ஸ்டன்
மீனவர் கிங்ஸ்டன்

“ அண்ணா.. அந்தந்த ஊர் மீனவர்களையும் வாழ வையுங்கள் .உங்களால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு அடையும். சில பெரிய சூப்பர் மார்க்கெட்களால் இந்த மாதிரி தொடர் கம்பேனிகளினால் மற்ற வணிகர்கள் பாதிப்பு அடைகின்றன கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்..” என்ற குரல்களையும் கமெண்ட்ஸ் பகுதியில் கேட்க முடிகிறது. அதில் நியாயங்களும் இல்லாமல் இல்லை.

எத்தனை பெரு நிறுவனங்களின் ப்ரெஷ் மார்க்கெட்டுகள் முளைத்தாலும் கீரைக்கார அம்மாக்களின் எளிய குரல்கள் தெருக்களில் ஓங்கி ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்..!

நம்மைப்போன்ற நடுத்தர,எளிய வாடிக்கையாளர்களுக்குத் தேவை நியாயமான விலையில் தரமான, சுவையான மீன்கள்..! அதுவே எல்லோரின் எதிர்பார்ப்பும்கூட..! அதனை ‘உங்கள் மீனவன் ‘ நிறைவேற்றும் என நம்புவோம்..!

அதேவேளை ‘உங்கள் மீனவனின்’ வெற்றி, ஜெயிக்க நினைக்கும் இன்றைய டிஜிட்டல் யுக இளைஞர்களுக்கு இன்றியமையாத பாடம்..! கற்போம்..! கடை விரிப்போம்..!

-பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு