Published:Updated:

`அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் மோதல்!' - ராபர்ட் கிரீன் சொல்லும் தந்திரங்கள் #MyVikatan

Representational Image
Representational Image

உங்கள் நேர்மையைக் கெடுப்பதோ, தப்பான வழிகாட்டலைக் கொடுப்பதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அன்று. ராபர்ட் கிரீன் சொல்லியிருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவுரைகளின் சாராம்சத்தை வாசகர்களுக்கு விளக்குவது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அலுவலகமோ, வீடோ, உறவோ, நட்போ... ஒருவரின் மீது நம்மால் செலுத்தக்கூடிய அதிகாரமே உணர்வுரீதியான பலத்தை நமக்குக் கொடுக்கும் என்பதில் எவருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அத்தகைய அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் மோதலில்தான், உறவுகள் மற்றும் நட்புக்களிடையே மோதல், அபிப்ராய பேதங்கள் ஏற்பட்டு இடியாப்பச் சிக்கலில் கொண்டு நம்மை தள்ளிவிடும்.

ஆனால், இத்தகைய சிக்கல்கள் எதுவும் இன்றி, கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்று சொல்வதுபோல, நாம் யோசித்துச் செயலாக்கம் செய்யும் நடவடிக்கைகள் மூலம் நட்பு மற்றும் உறவுகளின் மனங்களில் அதிகாரத்துடன் சிம்மாசனம் போட்டு ராஜாபோல அமரலாம்.

Representational Image
Representational Image
Pixabay

ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் கிரீன், தன் `அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவுரைகள் 48’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களைப் பற்றி இங்கு காண்போம்.

சாத்தான் ஓதும் வேதத்துக்கு ஒப்பாகவே, தன்னுடைய இந்த 48 அறிவுரைகளைக் கருதினார் ராபர்ட் கிரீன். ஏனெனில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பாதை என்பது துரோகங்களால் வடிவமைக்கப்பட்டது என்று மிக உறுதியாக அவர் நம்பியதால், நேர்மையாக நடப்பது மட்டுமே வெற்றிக்கனியைப் பறிக்க உதவும் மந்திர சூத்திரம் என்று அவர் ஒருபோதும் போதிக்க விரும்பவில்லை.

எனவே, இந்தக் கட்டுரையைப் படிக்கும் நேயர்களின் நேர்மையைக் கெடுப்பதோ, அவர்களுக்குத் தப்பான வழிகாட்டலைக் கொடுப்பதோ இந்தக் கட்டுரையின் நோக்கம் அன்று. எழுத்தாளர் ராபர்ட் கிரீன் சொல்லி இருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான 48 அறிவுரைகளின் சாராம்சத்தை வாசகர்களுக்கு விளக்குவது மட்டுமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இனி எழுத்தாளர் ராபர்ட் கிரீனின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான 48 அறிவுரைகளைப் பற்றி பார்க்கலாம்.

(முதல் பாகம் : அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிவுரைகள் - எழுத்தாளர் ராபர்ட் க்ரீன் சொல்ல வருவது என்ன? #MyVikatan)

Representational Image
Representational Image
Pixabay

மற்றவர்களின் காரியம் உங்களின் பங்களிப்பு இன்றி நடத்தல் கூடாது

மற்றவர்களை எப்போதும் உங்கள் உதவியைத் தேடி வரும் நிலையிலேயே வைத்திருங்கள். நீங்கள் இல்லாமல் ஒரு முக்கியக் காரியம் நடக்காது என்கிற நிலையை உருவாக்கி வையுங்கள். மற்றவர்களுடனான அதிகாரத்துக்கான போட்டியில் உங்களை ஒரு வலுவான இடத்துக்கு அது நகர்த்தும்.

சமயோசிதமான நேர்மை

ஒருபுறம் அதிகாரத்துக்கான போட்டியில் உங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக்கொண்டு, அதே நேரத்தில் அந்த நேர்மை முகமூடியை மாட்டியவாறே, கொஞ்சமும் சத்தமே இல்லாமல் உங்கள் சக போட்டியாளர்களின் வலுவைக் குறைக்கும் அத்தனை வேலைகளையும் செய்யுங்கள். நேர்மையை சமயோசிதமாக, உங்களின் அதிகாரப் போட்டிக்கான யுத்தத்தில் தகுந்த அளவு, தேவைக்கு ஏற்ப, சமையலில் பயன்படுத்தும் உப்பைப்போல பயன்படுத்துங்கள்.

நட்பும் உளவும்

நட்பாகப் பழகிக்கொண்டே அடுத்தவர்களின் பலவீனங்களை அறியும் உளவு வேலையை சத்தமில்லாமல் செய்யப் பழகுங்கள். வெளியில் சிரித்தவாறே இருக்கும் உங்கள் முகமூடியின், மறுபுறத்தை யாரும் அறியாமல் தொடரட்டும் உங்கள் கள்ளத்தனம். நவீன அரசியலில் நடப்பதும் இதுவே. அரசியலில் நண்பர்களையும், உடன் இருப்பவர்களையும் நம்பக்கூடாது என்பது அடிப்படை சித்தாந்தம் என்பது அனைத்து பண்பட்ட அரசியல்வாதிகளும் அறிந்த உலக உண்மை.

Representational Image
Representational Image
Pixabay

தேவையில்லாமல் இல்லா இடங்களிலும் ஆஜராக வேண்டாம்

நீங்கள் தேவை இல்லாமல் எல்லா இடங்களிலும், எல்லோரும் உங்களை எளிதில் அணுகும் அளவுக்கு இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு உங்கள் தேவை அதிகம் இருக்கும் வரையில்தான் உங்களின் முக்கியத்துவம் அனைவராலும் நன்கு உணரப்படும் . அதிகாரத்திற்கான போட்டியில் நீங்கள் உங்களை வலுவாக்கிக்கொள்ள மற்றவர்கள் உங்களைத் தேடி வரும்படி கெத்தாக நடந்து கொள்ளுங்கள்.

என்னை அறிந்தால்

உங்களைப் பற்றிய முழுமையான புரிந்துணர்வு உங்கள் அலுவலகத்தில் யாருக்கும் இருக்கக்கூடாது. உங்களை முழுமையாக அறிந்தால், அது உங்களை அதிகாரப் போட்டியில் வீழ்த்தும் ஆயுதங்களை வடிவமைக்க உங்கள் எதிரிகளுக்கு நீங்களே நல்ல சந்தர்ப்பம் கொடுத்ததுபோல ஆகிவிடும் . அதனால், அலுவலகத்தில் உங்களைப் பற்றி ஒருவரும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத, புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்ம யோகியாக வலம் வருவது உங்களின் அதிகாரப் போட்டியில் உங்கள் எதிரிகளைக் குழப்பும், பலவீனப்படுத்தும்.

Representational Image
Representational Image
Pixabay

தனித்திரு விழித்திரு என்பது வேலைக்காகாது

அதிகாரப் போட்டியில் வெல்ல உங்களைச் சுற்றி உள்ள மற்றவர்களின் உதவி உங்களுக்கு நிச்சயம் தேவை. அதனால் எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கட்டும். அது 'தானா சேர்ந்த கூட்டமாக' இருக்கட்டும். தனிமரம் தோப்பாகாது என்ற பழமொழியும் இதையேதான் சுட்டிக் காட்டுகிறது.

உங்கள் இலக்கில் கவனமிருக்கட்டும்

அதிகாரத்துக்கான போட்டியில் நீங்கள் தவறான நபர்களிடம் மோதக்கூடாது என்பதில் கருத்தாக இருங்கள். அது தேவையே இல்லாமல் ஒரு புதிய எதிரியை, நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிடும். வெற்றிக்கான பாதையில் முன்னேறிச் செல்ல உங்களுக்கு உங்களைச் சுற்றி இருக்கும் அனைவரின் உதவியும் தேவை என்பதை நீங்கள் கவனத்தில் வைக்க வேண்டும். தவறாக நீங்கள் எடுத்து வைக்கும் ஓர் அடிகூட அதிகாரத்துக்கான போட்டியில் உங்களைத் தலைகுப்புற கவிழ்த்துவிடும் என்பதை நினைவில் வையுங்கள்.

தன்னைக் கட்டுப்படுத்தும் வாக்குக் கொடேல்

எந்த ஒரு விஷயத்திலும், எவரிடமும், `நான் உங்கள் பக்கம் நிற்பேன்' என்று எந்த ஒரு வாக்கையும் கண்டிப்பாகக் கொடுக்கக் கூடாது. சமய சந்தர்பங்களுக்கு ஏற்ப ஒரு பச்சோந்தியைப்போல நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதே அதிகாரப் போட்டியில் உங்களை முன்னேறிச் செல்லவைக்கும்.

Representational Image
Representational Image
Pixabay

சரணாகதியே சமயோசிதம்

எதிரி உங்களைவிட மிக வலுவாக இருப்பதை நீங்கள் உணரும்போது தற்காலிகமாக நீங்கள் உங்கள் எதிரியிடம் சரண்டர் ஆவது சமயோசிதம். உங்கள் எதிரிக்கு உங்களைப் போரில் அடித்து வீழ்த்திய பெருமையைக் கொடுப்பதைவிட, நீங்கள் உங்கள் தன்மானத்தை கொஞ்சம் தியாகம் செய்துவிட்டு தற்காலிகமாக சரண்டர் ஆவதில் தப்பே இல்லை. புலி பதுங்குவது பாய்வதற்கே என்பதை மனதில் கொள்ளுங்கள்.

அதிகார மையங்களும் கவனக் குவிப்பும்

அதிகாரத்துக்கான போட்டியில் உங்களை முன்னேறிச் செல்ல வைக்கும் வல்லமை படைத்த அதிகார மையங்களான செல்வாக்கு மிக்க நபர்களை கண்டறியுங்கள். அவர்களை உங்கள் நட்பு வட்டத்திற்குள் கொண்டு வாருங்கள். இப்படிப்பட்ட அதிகார மையங்களை உங்கள் முன்னேற்றத்திற்கு எப்படி முழுமையாகப் பயன்படுத்துவது என்பதில் உங்கள் முழு கவனத்தையும் வையுங்கள்.

Representational Image
Representational Image
Pixabay

அதிகார மையத்துடனான நெருக்கம்

அதிகார வர்க்கத்தினருடனான உங்கள் தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ளுங்கள். அதிகாரத்துக்கான போட்டியில் உங்கள் கரங்களை வலுப்படுத்திக்கொள்ள அதிகார வர்க்கத்தின் ஆதரவு உங்களுக்கு மிகவும் அவசியம்.

தேவைக்கேற்ற வேஷம்

அதிகாரத்துக்கான போட்டியில் முன்னேறிச் செல்ல சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளவேண்டியது மிக அவசியம். 'எப்போதும் ஒரே மாதிரி நேர்மையாவே இருப்பேன், நேர்மையாகவே பேசுவேன்' என்று நீங்கள் விரதம் பூண்டிருந்தால், அதிகாரத்துக்கான போட்டியில் நீங்கள் முன்னேறிச் செல்ல வாய்ப்பே இல்லை என்பதை கவனத்தில் வையுங்கள்.

- விமலாதித்தன், Chief Information Security Officer, Bank Of Sharjah

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு