Published:Updated:

உங்களை இந்தப் பாடல் தொந்தரவு செய்ததா? - குற்ற உணர்ச்சியும் தமிழ் சினிமாவும் #MyVikatan

"அய்யோ என்ன சொல்றீங்க? இந்தத் தப்புக்கு நான்தான் காரணமா?" என்று வருந்தியிருக்கிறார்கள் நம் நாயகர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

நாயகர்கள் குற்றஉணர்வால் வாடிய காட்சிகளைத் தமிழ் சினிமா நிறைய காட்டியுள்ளது. "அய்யோ என்ன சொல்றீங்க? இந்த தப்புக்கு நான்தான் காரணமா" என்று வருந்தியிருக்கிறார்கள் நம் நாயகர்கள்.

"தவறான தீர்ப்பு சொல்லிவிட்டோமே" என்று உயிரைவிட்ட 'நாட்டாமை' சரத்குமார், ஒருவரின் இறப்புக்கு காரணமாகிவிட்டோமே என்று வருந்தி பணம் திருடுவதை விட்டுவிட்டு ஆத்மாக்களுக்கு உதவிய 'மாஸ்' சூர்யா, நான் அடிச்சதாலதான உன் அப்பா இறந்தார் என்று வருந்திய 'யாரடி நீ மோகினி' நயன்தாரா, 'கெத்து' என்கிற பெயரில் பல உயிர்களின் மரணத்துக்கு காரணமாகிவிட்டோமே என்று வருந்தி தன் அப்பாவையே சிறைபிடித்த 'ஜில்லா' விஜய், பொய்ப்பழி சுமத்தியதால் இறந்துபோன இளைஞனின் வீட்டுக்குத் தத்துப்பிள்ளையாக மாறிய 'தவசி' விஜய்காந்த் போன்று பிரபலங்கள் இந்தக் குற்ற உணர்வு காட்சியில் நடித்துள்ளனர்.

யாரடி நீ மோகினி
யாரடி நீ மோகினி

தனுஷின் 'ராஞ்சனா' படத்தில் தன்னுடைய காதலியின் காதலனின் இறப்புக்குக் காரணமாக இருப்பார் தனுஷ். பிறகு அந்தக் கொலைக்கு தான் காரணம் என்று அவரே தவற்றை உணர்ந்து இறந்துபோன இளைஞனின் வீட்டுக்குத் தேடிச் செல்வார். பிறகு, கடற்கறையில் சோகமாக அமரந்திருக்கும்போது முன்பின் அறிமுகமில்லாத ஒரு தாத்தா வந்து, "என்ன கொலை செஞ்சிட்டியா, உன் பாவத்த கழிக்க வந்தியா!" என்று கேட்டதும் தனுஷுக்கு படபடப்பு அதிகமாகிடும்.

அதேபோல விஜய் ஆண்டனி நடித்த 'நான்' படத்தை எடுத்துக்கொள்வோம். அந்தப் படத்தில் இயற்கையாக நடந்த விபத்தால் மரணித்த சலீம் என்பவரின் சர்டிஃபிகேட்டை எடுத்து வாழ்க்கையைத் தொடங்கும் சலீம், கோபத்தில் தான் அடித்துக் கொன்ற நண்பனின் அம்மா அப்பாவை ஏமாற்றுகிறான். ஆனால், அவன் மனசாட்சி உறுத்துகிறது. தப்பெல்லாம் தப்பில்லை என்று பாடிய சலீம், நிஜ சலீமின் அப்பா வீட்டுக்குச் சென்று படுக்கையில் விழுந்து கிடக்கும் அப்பாவுக்கு ஆய் கழுவிவிடுகிறார்.

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

சிறுவயதில் ஜெயிலில் வாழ்ந்துவிட்டதால் மீண்டும் ஜெயிலுக்குப்போக விரும்பாமல் சலீம் வீட்டுக்குச் சென்று வாழ்க்கை பிச்சை எடுப்பார். இயக்குநர் சேரனின் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்தில் ஹீரோவின் கல்லூரி நண்பன் பிறந்தநாள் பார்ட்டியில் பைக் ஓட்டிச் சென்று விபத்தாகி மரணிக்கிறான். மூளை நோயையும் பொறுத்துக்கொண்டு ஓடி ஓடி உழைத்த பணத்தில் பாதியைத் தன் பிறந்தநாள் பார்ட்டியின்போது இறந்துபோன நண்பனின் வீட்டுக்குச் சென்று அவனின் அம்மாவிடம் தருகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல 'சுப்ரமணியபுரம்' படத்தில் பணத்துக்காக ஆசைப்பட்டு நண்பர்கனின் மரணத்துக்கு காரணமாக இருக்கும் கஞ்சா கருப்பு உயிர்விடும் தருணத்தில் தான்செய்த தவறுக்காக வருந்தி கண்ணீர் சிந்துகிறான்.

ப்ரித்விராஜ், ஷக்தி, பிரியாமணி நடித்த 'நினைத்தாலே இனிக்கும்' என்ற நட்பு படத்தில் நண்பனின் மரணத்துக்கு தான்தான் காரணம் என்று வருந்தி அழுவார் ப்ரித்விராஜ். அதே ப்ரித்விராஜ் 'காவியத் தலைவன்' க்ளைமாக்ஸில் தன் தம்பியின் மரணத்துக்கு காரணமாகிவிட்டோமே என்று வருந்தி தம்பியின் ஆஸ்தியுடன் ஆற்றுக்குள் மூழ்கிக் காணாமல் போகிறார்.

தான் அலட்சியமாக இருந்ததால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமையால் உயிரை இழந்திருக்கிறாள் என்ற செய்தி கேட்டு தானும் குற்றவாளிதான் என்று தூக்கு மேடையில் ஏறுவார் 'அயோக்யா' விஷால்.

பிரண்ட்ஸ் படத்தில் தன் நண்பனின் தம்பி சாவுக்கு காரணமாகிவிட்டோமே என்று வருந்தி அழுவார் விஜய்.

பிரண்ட்ஸ் படத்தில் விஜய்
பிரண்ட்ஸ் படத்தில் விஜய்

'குற்ற உணர்வு' என்பதை மிக வலிமையாகக் காட்டிய இயக்குநர் என்றால் கண்டிப்பாக இயக்குநர் மிஷ்கினை சொல்லியே ஆக வேண்டும். அவருடைய ஆரம்பகால படங்களில் இருந்தே குற்ற உணர்வு குறித்த காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக 'பிசாசு', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படங்கள் குற்ற உணர்வின் உச்சம் என்றே சொல்லலாம். 'பிசாசு' படத்தில் "உங்க மகள் சாவுக்கு நான்தான் காரணம்!" என்று ஹீரோ வருந்தி அழ, நாயகியின் அப்பாவோ, "இல்லடா குழந்தை" என்று அவனை கட்டிப்பிடித்து தேற்றுகிறார். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் உங்க மகனின் சாவுக்கு நான்தான் காரணம் என்று அந்த மகனின் குடும்பத்திடம் ஓநாய் வருந்தி அழ, அந்த ஆட்டுக்குட்டி குடும்பம் ஓநாயை மன்னித்து மகனாக ஏற்றுக்கொள்ளும்.

இத்தனை படங்களைப் போலவே இயக்குனர் ராமின் 'தரமணி' படத்திலும் குற்றஉணர்வு குறித்த காட்சிகள் இருக்கின்றன. அதுமட்டுமன்றி குற்ற உணர்வுக்கு என்று தனிப்பாடலே வைத்துள்ளார் இயக்குநர் ராம்.

ஒருவன் முகத்தை மறைக்கும் அளவுக்குத் தாடி வளர்த்திருக்கிறான் என்றால் அந்தத் தாடிக்குப் பின் ஏமாற்றம், தோல்வி, வறுமை இருப்பதுபோல குற்ற உணர்வும் இருக்கும் என்று சொன்ன படம். அந்தப் படத்தில் நாயகன் தன் காதலிக்கு கொடுப்பதற்காக ரயில் பயணி ஒருவரிடம் இருந்து பணம் எடுத்து வருகிறான்.

தரமணி
தரமணி

அடுத்தநாள் செய்திதாளில் அந்த முதியவர் மாரடைப்பால் மரணம் என்று செய்தி வருகிறது. அதைப் பார்த்த நாயகன் அந்த முதியவரின் மரணத்துக்கு நான்தான் காரணம் என வருந்தி பணத்தை எடுத்துக்கொண்டு அந்த முதியவர் வீட்டுக்குச் சென்று உண்மையை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். அப்போது ஒலிக்கிறது நா.முத்துக்குமார் எழுதிய பாவங்களைச் சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் என்ற பாடல். அதிலும் குறிப்பாக,

"நஞ்சினைப்போல

நெஞ்சுக்குள் இருக்கும்

குற்றம் கொல்கிறதே

என் தொண்டைக்குழியில்

உறுத்தும் முள்

ஏதோ சொல்கிறதே" என்ற வரிகள் நம்மை ஏதோ செய்துவிடுகிறது.

இந்தப் பாடலைக் கேட்கும்போது பலருக்கும் அழுகை வந்திருக்கும். மனதின் அடி ஆழத்தில் குமைந்துகொண்டிருந்த நினைவுகள் வெளிப்பட்டிருக்கும். கேட்காதவர்கள் இப்போதே உங்கள் ஹெட்செட்டை எடுங்கள், தனிமையில் அமர்ந்து அந்தப் பாடலை கேளுங்கள். ஒருவேளை உங்கள் மனம் சில செயல்களை நீங்கள் தவறாக செய்திருக்கிறீர்கள் எனத் தெரிந்தால், முடிந்தால் உரியவரிடம் மன்னிப்புக் கேளுங்கள். மன்னிப்பு கேட்பது மனிதம் சார்ந்தது. மனிதம் மிகப்பெரியது.

- ராசு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு