Published:Updated:

எல்லாமுண்டு நம்மிடத்தில்! - கொரோனாவும் பழந்தமிழர்கள் விட்டுச் சென்ற பாடமும் #MyVikatan

Representational Image
Representational Image

நமது பண்பாடும், நாகரிகமும், பழக்க வழக்கங்களும் உலகுக்கு வழிகாட்டியாக நிற்பதில் நமக்குப் பெருமைதான்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

`கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி’ என்ற பெருமை நம் தமிழ்ச் சமூகத்துக்கு உண்டு. இவ்வார்த்தைகளைச் சற்று ஆழமாகச் சிந்தித்தால்தான், நம் மூப்பின் தன்மையை முழுதாக உணர இயலும். இயற்கையின் சீற்றத்தால் மலைகள் உடைந்து, பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கற்களாகி விட்டன. அந்தக் கற்கள், காற்று, மழை காரணமாக ஒன்றோடு ஒன்று உராய்ந்து மண் ஆக உருவெடுக்க வேண்டும். அப்படிக் கற்கள் மண்ணாக உருவெடுக்கும் முன்னரே தோன்றிவிட்டதாம் தமிழர்களின் வாழ்க்கை என்று சொல்கிறார்கள். அன்றிலிருந்து இன்று வரை உலகுக்கு வழி காட்டியாகத் தமிழ்ச் சமுதாயம் இயங்கி வருவதை உலகே அறியும்.

Representational Image
Representational Image

கீழடி ஆய்வுகளும் இதை உணர்த்தும். கொரோனா என்ற கொடிய அரக்கனின் பிடியில் ஆரஞ்சுப் பழமாக அகில உலகமே பிழியப்பட்டு வரும் இவ்வேளையிலும், நமது பண்பாடும், நாகரிகமும், பழக்க வழக்கங்களும் உலகுக்கு வழிகாட்டியாக நிற்பதில் நமக்குப் பெருமைதான். தனித்திரு. விழித்திரு. பசித்திரு என்பது நமது தாரக மந்திரமே. அதைத்தான் உலகப்பந்து முழுமையும் இன்று ஒன்றாகக் கடைப்பிடிக்கின்றன. கடைப்பிடிப்பவை வாழ்கின்றன. உதாசீனப்படுத்துபவை பெரும் உயிரிழப்பைச் சந்திக்கின்றன.

பழந்தமிழர்கள், உள் முற்றம் வைத்த ஒய்யார வீடுகளில் வாழ்ந்தார்கள். வெளியில் சென்று வந்ததும், உள் முற்ற அண்டாவிலிருக்கும் நீரைச் சொம்பால் எடுத்துக் கால், கைகளைக் கழுவி விட்டே உள்ளே சென்றார்கள். கந்தலானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி என்ற கொள்கைகளைப் பின்பற்றினார்கள். அவைதான் மனித வாழ்வுக்கு எப்பொழுதும் வேண்டியவை என்பதை இந்தக் கொரோனா இப்போது உலகிற்கே மெய்ப்பித்திருக்கிறது.

Representational Image
Representational Image
Photo by novi raj on Unsplash

உணவே மருந்து என வாழ்ந்த காரணத்தால்தான், இப்பொழுது சிலர் மருந்தையே உணவாகக் கொள்ளும் நிலையிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தார்கள். கடுகும், மிளகும், கார இஞ்சியும், முருங்கையும், கறிவேப்பிலையும் இன்ன பிறவும் இனிதான வாழ்வின் அடையாளங்கள் என்பதை அப்போதே அறிந்திருந்தார்கள். அதனால்தான் கொரோனாவால் கூட, ஒட்டுமொத்தமாக நம் மக்களை ஒன்றும் செய்ய இயலவில்லை.

வாழ்க்கையில், இன்பமும், துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல என்பதையும் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள். அடுக்கடுக்காய்த் துன்பம் வந்தாலும் அதையும் எதிர்த்து நிற்க வேண்டுமென்று போதித்தார்கள். மனிதர்களுக்குத் துன்பம் எப்படியெல்லாம் சேர்ந்து வந்து, சீரழிக்கும் வாழ்வை என்பதைத் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள்.

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ அகத்தடியாள்

மெய் நோக அடிமை சாக மாவீரம் போகுதென்று

விதை கொண்டோட வழியிலே கடன்காரன்

மறித்துக் கொள்ள சாவோலை

கொண்டொருவன் எதிரே செல்ல தள்ளவொண்ணா

விருந்து வர சர்ப்பம் தீண்ட கோவேந்தர்

உழுதுண்ட கடமை கேட்க குருக்களோ

தக்கணைகள் கொடு என்றாரே.

(ஆ-பசு;அகத்தடியாள்- வீட்டுத் தலைவி;மாவீரம்-மழை )

Representational Image
Representational Image

மழை பெய்யும் நேரம் பார்த்து வீட்டுப்பசு கன்று ஈன, வீட்டையொட்டி உள்ள மாட்டுக் கொட்டிலில் வீட்டுச் சுவர், மழையில் கரைந்து இடிந்து விழ, தெய்வாதீனமாகக் கன்றும் மாடும் தப்பிக்க, கன்றை அருகிருந்து கவனிக்க வேண்டிய வீட்டுத் தலைவி உடல் நலம் குன்றிப் படுத்திருக்க, எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டிய வீட்டு வேலைக்காரப் பெண்ணோ, திடீரென்று எதிர்பாராத விதமாக உயிரிழந்து விடுகிறாள். மழை பெய்யும் இந்த நேரத்தில் உரிய முறையில் விதைத்தால்தான், பலனை எதிர்பார்க்கலாம் என்ற நிலையில் வீட்டுத் தலைவர் விதையை எடுத்துக்கொண்டு வயலை நோக்கி ஓட, வழியில் அவரைக் கண்ட, கடன் கொடுத்தவரோ, `என் கடனைப் பைசல் செய்துவிட்டு விதையைத் தெளி அல்லது விதையை என்னிடம் கொடு’ என்று கூறி வழியை மறித்துக்கொள்கிறார். அந்த நேரம் பார்த்து, பக்கத்து ஊரிலுள்ள நெருங்கிய உறவினர் இறந்து விட்டதாகச் செய்தி வருகிறது.

இவையெல்லாம் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், பல நாள்களாக வருந்தியழைத்த விருந்தினர் இவர் வீட்டுக்கு வர, மாட்டைக் கவனிக்கலாம் என்று மாட்டுக்கொட்டிலுக்கு ஓடினால், உள்ளேயிருந்து வெளிக் கிளம்பிய பாம்பை, மாடு சீறித் துரத்த, கோபத்தில் அது இவரைக் கடிக்கிறது. இந்த இக்கட்டில், அரசவை ஆட்களோ நிலவரி கேட்டு வந்து நிற்க, உள்ளூர் கோயிலின் குருக்களோ, மண்டகப்படிக்கான செலவுக்கான பணம் கேட்டு வந்து நிற்கிறார். பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும். என்பதற்கிணங்க பத்துக்கும் மேற்பட்ட இன்னல்கள் ஒன்றாகக் கைகோத்து வந்து தாக்கினாலும், மன உறுதியுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெறும் வல்லமை வேண்டும் என்பதை நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லி வைத்தார்கள். அதன் பிரதிபலிப்பே மேற்கண்ட பாடல்.

Representational Image
Representational Image
Photo by Lina Trochez on Unsplash

இந்தக் கொடிய கொரோனாவையும் நம்மால் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். என்பதற்கான நம்பிக்கையைப் பாடல் மூலமாக அன்றைக்கே சொல்லி வைத்துவிட்டார்கள், உலக நிலைமையறிந்த நம் முன்னோர். முண்டாசுக் கவிஞனின் முத்தான பாடலையும் நாம் இங்கு நினைவுகூர்ந்தாக வேண்டும்.

அச்சமில்லை... அச்சமில்லை… அச்சமென்ப தில்லையே.

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்ப தில்லையே.

இந்தப் பாடலை நாம் ஆழ்ந்து பார்த்தால்தான் இதன் முழுப் பொருளும் விளங்கும். இப்பொழுதெல்லாம் விண்ணிலிருந்து சற்று பெரிய கற்கள் விழுந்தாலே, நமது விஞ்ஞானிகள் நம்மைப் பயமுறுத்தி எச்சரிக்கின்றனர். சில மரங்கள் காற்றில் விழுந்தாலே நாம் பதறிப் பரிதவித்துப் போய் விடுகிறோம். ஆனால், பாரதியாரின் துணிச்சலைப் பாருங்கள். நமது தலைக்கு மேலே உள்ள வானம் முழுதாக இடிந்து பூமியை நோக்கிப் பூதாகாரமாக வந்தாலுங்கூட பயமில்லை என்கிறார்.

பாரதியின் வழித் தோன்றல்களாகிய நாம் கேவலம், கண்ணுக்குத் தெரியாத இந்தக் கொரோனாவிடமா பயந்து தோற்போம்.. நீங்கள் கேட்கலாம். பயந்துதானே வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறோமென்று. புலி பதுங்குவது பாய்வதற்கே என்பதையே இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

அஞ்சுவது அஞ்சுவதல்லவோ அறிவுடையார் செயல். இதைக் கூறிய வள்ளுவர்தான், காலமறிந்து செயல்பட வேண்டுமென்றும் கூறுகிறார். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. நேரங்காலம் சரியில்லாதபோது, சரியான மீனுக்காக ஒற்றைக் காலைத் தூக்கித் தவம் இருக்கும் கொக்கைப் போல, நாமும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். காலம் கை கூடி வரும்போது, அந்தக் கொக்கானது எப்படித் தப்பாமல் மீனைக் கொத்திக் கவ்வுகிறதோ, அதைப்போல நாமும் குறி தவறாமல் செயல்பட வேண்டும். இப்பொழுது நாம் ஒடுங்கியிருக்க வேண்டிய காலம். ஒடுங்கியே இருப்போம். காலங் கனிந்ததும், ஒன்றாய்ச் சேர்ந்து உழைத்து உயரலாம். இன்னும் நம் வாழ்க்கை செம்மையுற எத்தனையோ சொல்லப்பட்டிருந்தாலும், ஒன்றைக் கூறி நிறைவு செய்வோம்.

Representational Image
Representational Image
Photo by cheng feng on Unsplash

சங்கு வெண்டாமரைக்குத் தந்தை தாய் இரவி தண்ணீர் ஆங்கதைக் கொய்துவிட்டால் அழுகச் செய்தே கொல்லுமந்த நீர் துங்கமன் கரையில் போட்டால் சூரியன் காய்ந்து கொல்வான் தங்களின் நிலைமை கெட்டோர் இப்படித் தயங்குவரே.

தண்ணீர்த் தடாகத்தில் வளர்ந்திருக்கும் தாமரைக்குத் தந்தை, மேலிருக்கும் சூரியன்; தாயோ, உடனிருக்கும் தண்ணீர்தான். நீரிலிருக்கும் தாமரையைத் தண்டுடன் பிடுங்கி, தாயான தண்ணீருடனே வைத்திருந்தாலும், அத்தாய் அதைக் காப்பாற்றாமல் அழுக விட்டு விடும். சரி. தாய்தான் காப்பாற்றவில்லை. வானத்திலிருந்து கொண்டு உலகையே காத்திடும் தந்தை பார்த்துக்கொள்ளட்டு மென்று அத் தாமரைத் தண்டைத் தூக்கிக் கரையில் போட்டு, சூரியனிடம் காட்டினால், தந்தை சூரியன் அதை வாடி வதங்க வைத்து விடுகிறான். இது போல்தான் மனித வாழ்வும்.

தங்களின் நிலைமையிலிருந்து கீழிறங்கியவர்களை எந்தச் சக்தியாலும் காப்பாற்ற முடியாது. உன் வாழ்க்கை உன் கையில். என்ற நாலடியாரின் கருத்தும், Nobody can give you Wiser advice than yourself என்ற ஆங்கிலப் பழமொழியும் ஈண்டு நினைவுகூரத் தக்கவை. வாழ்க்கை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெளிந்த நீரோடை. பலருக்கு அது பயங்கர அலைகளும், பெருங்காற்றும், உயிர்க்கொல்லும் திமிங்கிலங்களும் நிறைந்த கொந்தளிக்கும் கடல். அவையனைத்தையும் கடந்து கரை ஏறுபவனே உண்மையான மனிதன். நாமும் உண்மையான மனிதர்களாக இருப்போம். உறுதியுடன் எதிர்ப்போம் இந்த உருக்காட்டாத கொரோனாவை.

-ரெ.ஆத்மநாதன்(விஜய்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு