Published:Updated:

நாசாவின் சிக்கலுக்குத் தீர்வுதந்த தமிழ் இளைஞர்கள்! #MyVikatan

நாசாவில் சுப்பு மெய்யப்பன்
நாசாவில் சுப்பு மெய்யப்பன்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், தனது குடும்பத்துடன் வசித்துவரும் சுப்பு மெய்யப்பன், தன்னுடைய சொந்த ஊருக்கு தற்போது வருகைதந்துள்ளார்.

உலகத்தையே விழிகள் விரியவைக்கும் அமைப்பு அமெரிக்காவின் நாசா. அந்த நாசாவின் ஜி.பி.எஸ் சிக்கலுக்குத் தீர்வுதந்து அசத்தியிருக்கிறார்கள், நம் தமிழ்நாட்டு இளைஞர்கள். அத்துடன், 29 வகையான புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவில் ‘பேடன்ட் ரைட்ஸ்’ எனும் காப்புரிமை பெற்று ஆச்சர்யமடையச் செய்துள்ளார் சுப்பு மெய்யப்பன். அக்குழுவில் முக்கியமானவரான இவர், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியை பூர்வீகமாகக்கொண்டவர்.

நாசாவின் சிக்கலுக்குத் தீர்வுதந்த தமிழ் இளைஞர்கள்! #MyVikatan

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், தனது குடும்பத்துடன் வசித்துவரும் சுப்பு மெய்யப்பன், தன்னுடைய சொந்த ஊருக்கு தற்போது வருகைதந்துள்ளார். அவருடைய குழுவினரால் நாசாவின் சிக்கலுக்குத் தீர்வுதந்தது பற்றியும், 29 புதிய தொழில்நுட்பக் காப்புரிமைகள் பதிவு பற்றியும் கேள்விப்பட்டு, அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். அப்போது, ஆச்சர்யம் மிகுந்த, சவால்மிக்க பல தொழில்நுட்பத் தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“எங்களுடைய பூர்வீகம் புதுக்கோட்டை பக்கத்துல இருக்கிற பூலாங்குறிச்சி. அப்பா மெய்யப்பன், ரைஸ்மில்லில் வேலை செய்துவந்தார். தொழில் நிமித்தமாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு குடிபெயர்ந்துவிட்டோம். நான், பள்ளிப் படிப்பை கடலூர், திருச்சியிலும் பொறியியல் படிப்பை சிதம்பரத்திலும் மேற்கொண்டேன். பி.இ எலெக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங் படிப்பில் கோல்டு மெடல் வாங்கியிருக்கிறேன். என்னுடைய பேராசிரியர்களின் வழிகாட்டலுடன், படிக்கும்போதே இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளேன்.

என்னுடைய ஆய்வுப் பணிகளின் ஆர்வமறிந்து, என்னை அமெரிக்காவில் முதுநிலை பொறியியல் (எம்.எஸ்.) படிப்பதற்காகப் பேராசிரியர்கள் விண்ணப்பிக்கச் சொன்னார்கள். தேர்வும் எழுதினேன். ஃபுல் ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவின் டென்னஸீ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. படித்து முடித்தவுடன் அமெரிக்காவிலேயே வேலையும் கிடைத்தது. அந்தப் பணியும் ஆராய்ச்சி சார்ந்தே இருந்தது. இதனால், வேலையில் சேர்ந்த முதல் வருடத்திலேயே நான் மேற்கொண்ட ஆய்வுக்கான காப்புரிமையைப் பதிவு செய்வதற்கான பணியும் தொடங்கியது.

சுப்பு மெய்யப்பன் மனைவி & குழந்தைகள்
சுப்பு மெய்யப்பன் மனைவி & குழந்தைகள்

இந்த வேலையில் இருக்கும்போதே, கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டார்ன்போர்டு பல்கலைக்கழகத்தில் இன்னொரு எம்.எஸ் படிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இது, உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம். உலக அளவில், இந்தப் பல்கலைக்கழகம் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நோபல் பரிசு பெற்றவர்கள் பலரும் இங்கு வந்து பாடம் நடத்துவார்கள். இங்குதான் என்னுடைய ஆராய்ச்சியின் பார்வை மிகப்பரந்த அளவுக்குச் சென்றது. அங்கு பணிபுரியும்போது, ஆய்வுச் சிந்தனை மிக்க நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வுகள், இப்படிப் புதுமையான விஷயங்கள் பற்றிதான் நாங்கள் எப்போதும் விவாதித்துக்கொண்டிருப்போம். அப்படித்தான், எனக்குள் இருந்த ஆய்வுச் சிந்தனைகளைப் பரந்த தளத்துக்கு விரிவுபடுத்திக்கொள்ள முடிந்தது.

ஆய்வுக்காகப் பல மணி நேரம் உறக்கம் தவிர்த்து, கடுமையாக உழைத்திருக்கிறேன். அதனால்தான், இதுவரை புதுவகையான 29 தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமையைப் பதிவுசெய்ய முடிந்தது. ஒரு பேடன்ட் ரைட்ஸ் பெறுவதற்கு, குறைந்தது மூன்றாண்டுகள் கடுமையான உழைப்பைச் செலவிட வேண்டும். எல்லா ஆய்வுகளையும் உடனே பதிவுசெய்து, அதற்கான காப்புரிமையை பெற்றுவிட முடியாது. ஒரு காப்புரிமையைப் பதிவு செய்யும்போதே 25 ஆயிரம் அமெரிக்க டாலரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். நம்முடைய புதிய கண்டுபிடிப்பு ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், நாம் செலுத்தும் கட்டணம் திரும்பக் கிடைக்காது. எனவே, விண்ணப்பிக்கும்போதே அது தேர்வாகுமா என்பதைப் பல ஆய்வுகள் செய்துதான் முடிவுக்கு வரமுடியும். இப்படித்தான் என்னுடைய 29 புதிய கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை கிடைத்துள்ளது.

இந்த 29 வகை கண்டுபிடிப்புகளில் மிகமுக்கியமானது, தற்போது நாசா பயன்படுத்தும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துக்கு சிக்கல்கள் ஏற்படும்போது, அவற்றைத் தவிர்ப்பதற்கான தொழில்நுட்பத்தை நான் சார்ந்த குழுவினர்தான் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறோம். இந்தக் குழுவில் நான், சென்னையைச் சேர்ந்த அருண் ரகுபதி, வேலூரைச் சேர்ந்த கணேஷ் பட்டாபிராமன் ஆகிய மூன்று தமிழர்களின் தலைமையில்தான் இந்த ஆய்வு நடைபெற்றது. இதற்காக, ‘நெக்ஸ்ட்னாவ்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, கிட்டத்தட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலரை வென்ச்சர் கேப்பிட்டல் மூலம் திரட்டினோம். இந்தப் பணிக்கு, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

 சுப்பு மெய்யப்பன், அருண் ரகுபதி, கணேஷ் பட்டாபிராமன்
சுப்பு மெய்யப்பன், அருண் ரகுபதி, கணேஷ் பட்டாபிராமன்

அமெரிக்கா, 24 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி ஜி.பி.எஸ் வசதிகளைப் பெற்றுவருகிறது. ஜி.பி.எஸ் வசதி இல்லாமல் இன்று உலகமே இயங்க முடியாது. அந்த அளவுக்கு அனைத்து வகை தொழில்நுட்பங்களையும் ஜி.பி.எஸ் மூலம்தான் நாம் பெற்றுவருகிறோம். குறிப்பாக, அமெரிக்கா தனது ராணுவத்தை உலகம் முழுவதும் முகாமிட வைத்துள்ளது. அங்குள்ள தனது படைவீரர்களைக் கண்காணிப்பது, எதிரி நாடுகளில் நோட்டமிடுவது, தகவல் தொடர்பு சாதனங்களுக்கு சிக்னல்கள் வழங்குவது, ரூட் மேப், இப்படி ஏராளமான வேலைகள் இன்று ஜி.பி.எஸ் உதவியால்தான் நடைபெறுகிறது.

இந்த ஜி.பி.எஸ்களை சுமந்திருக்கும் விண்கலன்களை ஏவுகணைகள் மூலம் எதிரி நாடுகள் விண்ணிலேயே தாக்கி அழிக்கலாம். அப்படி ஒரு அழிவு ஏற்பட்டால், உலகமே ஸ்தம்பித்துப்போகும். ஜி.பி.எஸ் உதவியுடன் பல்வேறு குற்ற நிகழ்வுகளையும், ஆபத்தான காரியங்களையும்கூட செய்ய முடியும். அதைத் தவிர்ப்பதற்கான புதிய தொழிநுட்பத்தைத்தான் நாங்கள் கண்டுபிடித்தோம். இந்த ஆய்வுப் பணிக்காக ஆறு மாதம் நாசாவிலேயே தங்கி இருந்தோம். இந்த தொழில்நுட்பத்தைத்தான் நாசா தற்போது பயன்படுத்துகிறது. இதுபோல், மொத்தம் 29 வகையான தொழில்நுட்பம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கும் நான் காப்புரிமை பெற்றுள்ளேன்.

தற்போது நானும், அமெரிக்காவில் உள்ள தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் ராஜாங்கம் என்பவரும் 5-ஜி தொடர்பான புதுவகை கண்டுபிடிப்புக்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். இதற்காக, ‘ஈஸிசைட்’ என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி யிருக்கிறோம். 5-ஜி தொடர்பான இந்த ஆய்வின் மூலம் டிரைவர்கள் இல்லாமலேயே கார்களை இயக்க முடியும். கார் டிரைவர்களுக்கு அமெரிக்காவில் மிகக்கூடுதலான சம்பளம். எனவே, கார்கள் தானாகவே இயங்கும் வகையில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தை வடிவமைக்க இருக்கிறோம். வாடகைக் கார்களில் பயணிகளைத் தானாகவே ஏற்றி இறக்கிவிடும். கட்டணமும் வசூலித்துக்கொள்ளும். ஒரு கார், மற்றொரு காருடன் உரையாடிக்கொள்ளும். இதற்கு எங்களுடைய இந்த 5- ஜி தொழில்நுட்பம்தான் பெரும் உதவிகரமாக அமையும்.

'வெற்றிவேல் பவுண்டஷேன்' குழுவினர்
'வெற்றிவேல் பவுண்டஷேன்' குழுவினர்

அதேபோல், உலகத்தின் எந்த மூலையில் அமர்ந்துகொண்டும் அறுவைசிகிச்சை நிபுணர்கள் ரோபோக்களுக்கு கட்டளையிட்டு அறுவைசிகிச்சைகளைச் செய்ய முடியும். அவ்வாறு செய்யும்போது, தகவல் பரிமாற்றத்தின் நேரம் மிகமிகத் துல்லியமாக இருக்க வேண்டும். ஒரு மைக்ரான் விநாடிகூட தாமதம் இருக்கக்கூடாது. எனவே, அதைச் சரிசெய்யும் வகையில் எங்களின் புதிய கண்டுபிடிப்பு அமைய இருக்கிறது. அதாவது, வாழ்க்கையின் அத்தியாவசியப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் வகையில் எங்களின் புதிய கண்டுபிடிப்புகள் தொடரும்” என்று பிரமிக்கவைத்தார், சுப்பு மெய்யப்பன்.

-பழ.அசோக்குமார்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு