Published:Updated:

``அமெரிக்காவில் ஆதரவற்றவர்கள் நடந்துக்கிற விதம் ஆச்சர்யமா இருக்கும்!" - களச்சூழல் பகிரும் தமிழர்

நாதன் கணேஷன்
நாதன் கணேஷன்

``அமெரிக்காவிலும் யாசகம் கேட்பதுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கு. அதையும் மீறி, இந்தியாவைப்போல அமெரிக்காவுலயும் ஏராளமானோர் யாசகம் கேட்கிறாங்க." 

``பெரிய நிறுவன ஊழியர் ஒருவருக்கு, கார் விபத்தில் பலத்த காயம். ஒரு மாதம் சிகிச்சையில் இருந்தார். அதனால, வேலை போயிடுச்சு. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவரால் குடும்பத்தை நடத்த முடியலை. மனைவி மற்றும் குழந்தைகளை மனைவியின் பெற்றோர் வீட்டில் தற்காலிகமா விட்டுட்டு வேலை தேடினார். ஒரு வருஷமாகியும் வேலை கிடைக்கலை. இதனால், மனைவி அவரை விவாகரத்து செய்துட்டாங்க. மன அழுத்தம் அதிகமாகி, அவர் இறுதியாக ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ந்தார். அமெரிக்காவில் அவரைப்போல நிறைய பேர் ஆதரவற்றவங்களாகவும் யாசகர்களாகவும் இருக்காங்க.

குடும்பத்தினருடன் நாதன் கணேஷன்
குடும்பத்தினருடன் நாதன் கணேஷன்

'அமெரிக்கா வளர்ந்த நாடு. அங்க கூட யாசகர்களும் ஆதரவற்றவர்களும் இருக்காங்களா?'னு மற்ற நாட்டினர் ஆச்சர்யமா கேட்பாங்க. சொல்ல வருத்தமாக இருந்தாலும், `ஆமாம்! இருக்காங்க'ன்னு சொல்றதுதான் நிதர்சன உண்மை. அவங்கள்ல பலரும் படிச்சவங்க; நல்ல நிலையில் இருந்தவங்க என்பதுதான் வருத்தமான உண்மை. பலதார திருமணம் செய்து விவாகரத்து செலவுகள் அதிகமானது, குடும்பச் சிக்கல்கள், தவறான பழக்க வழக்கங்கள், வேலை இழப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பலரும் ஆதரவற்ற நிலை மற்றும் யாசகம் கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுறாங்க. இதில், வேலை இழப்புதான் அமெரிக்க மக்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குது.

அமெரிக்காவில் ஒரு நிறுவன ஊழியருக்கு வேலை போயிடுச்சுன்னா, மீண்டும் வேலை கிடைக்கிறது ரொம்பவே சிரமம். அந்தச் சூழல், 40 வயதில் ஏற்பட்டால் குடும்பத்தை மேற்கொண்டு நடத்துவது ரொம்பவே சிரமமாகிடும். அப்போதைய மன அழுத்த உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அந்த வேதனையை நானும் ஒருமுறை அனுபவிச்சேன். அப்போதுதான் ஆதரவற்ற மக்களுக்கு உதவும் எண்ணம் வந்துச்சு" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார், நாதன் கணேஷன். இவர், தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர், அமெரிக்காவில் வசிக்கிறார். 

நாதன் கணேஷன்
நாதன் கணேஷன்

அங்குள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் வசிக்கும் மக்களுக்கு, நண்பர்கள் குழுவுடன் சென்று விடுமுறை நாள்களில் உணவு சமைத்து பரிமாறுகிறார். யாசகர்களின் சுகாதார ஆரோக்கியத்துக்காக நடமாடும் மொபைல் கேரவன் ஒன்றையும் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது, இந்த நண்பர்கள் குழு.

``சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்கள்ல படிச்சேன். 2000-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்துல வேலை கிடைக்க, குடும்பத்துடன் இங்க குடியேறினேன். இந்த நிலையில, 2012-ம் ஆண்டு எனக்கு வேலை போயிடுச்சு. புது வேலை தேடிப் பல மாதங்களா அலைஞ்சேன். மனதளவில் கவலையுடன் இருந்த காலகட்டம் அது. 

நாதன் கணேஷன்
நாதன் கணேஷன்

அதனால, ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் ஆதவற்ற மக்கள் வசிக்கும் காப்பகங்களுக்குச் சென்றேன். அதில் வசிக்கிற மக்களுக்குச் சிறப்பான உணவுகள் கிடைக்காது. அதனால, வாரத்துல ஓரிரு நாளாவது அவங்களுக்கு நல்ல உணவைக் கொடுக்கலாம்னு நினைச்சேன். எனக்கு மீண்டும் வேலை கிடைச்சதும், என் குடும்பத்தினருடன் காப்பகத்துக்குச் சென்று என்னால் முடிந்த உணவுகளைப் பரிமாறினேன். இந்தப் பணி வாரம்தோறும் தொடர்ந்துச்சு. இந்தச் சேவையில் என் நண்பர்கள் பலரும் அடுத்தடுத்து இணைந்தாங்க.

திடீர்னு ஒருவாரம் என்னால ஆதரவற்றோர் இல்லத்துக்குப் போக முடியலை. `நாம போகலைனா, இந்த வாரம் அந்த மக்களுக்கு யார் சாப்பாடு போடுவாங்க?'னு என் பையன் கேட்டான். அந்தக் கேள்வி என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. இனி யார் போனாலும் போகாட்டியும், அந்த மக்களுக்குத் தொடர்ந்து வார இறுதி நாள்களில் நல்ல உணவு கிடைக்கணும்னு முடிவெடுத்தேன். கூட்டு முயற்சியுடன், `கம்யூனிட்டி சேவா (Community Seva)’ என்ற நண்பர்கள் குழுவை உருவாக்கினோம். இதில், ஐ.டி ஊழியர்கள், பிசினஸ் செய்வோர், டாக்டர்னு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்காங்க. 

தனது குழுவினருடன் நாதன் கணேஷன்
தனது குழுவினருடன் நாதன் கணேஷன்

எங்கள்ல பலரும் நேரச் சூழலுக்கு ஏற்ப விடுமுறை தினங்களில் தவறாமல் ஆஜராகிடுவோம். சமைப்பதற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கொண்டுபோய், காப்பகத்துல உணவு சமைப்போம். பிறகு, அங்கு வசிக்கும் மக்களுக்கு அன்புடன் உணவு பரிமாறுவோம்" என்று உற்சாகமாகக் கூறுகிறார், நாதன் கணேஷன். இந்த நண்பர்கள் குழுவினர், இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு பரிமாறியிருக்கிறார்கள்.

``மொபைல் வேன் வெச்சிருக்கோம். அதில், குளிர்ந்த, சூடான நீர் இரண்டும் வரும். யாசகர்கள் குளிக்கலாம். தங்கள் உடைகளை துவைச்சுக்கலாம். பிறகு, அவங்களுக்கு உடனே சாப்பாடு கொடுப்போம். டூத் பேஸ்ட், பிரஷ், ஷாம்பூ, வாசனைத் திரவியம், டவல் உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய சுகாதாரத்துக்கான பெட்டகம் ஒன்றையும் கொடுப்போம். நண்பர்கள் மற்றும் உதவும் உள்ளம் கொண்டவர்கள் மூலம் குழுவாக இணைந்து இந்தப் பணிகளைச் செய்துவருகிறோம். நிதி திரட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்துறோம்" என்பவர் அமெரிக்காவிலுள்ள யாசகர்களின் நிலை குறித்துப் பேசினார்.

மொபைல் வேன்
மொபைல் வேன்

``நான் வசிக்கும் கலிபோர்னியாவில்தான் ஆப்பிள் உள்ளிட்ட பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவில் இருக்கு. இது செழிப்பான வர்த்தக நகரமும்கூட. இங்குகூட ஆதரவற்றவர்களும் யாசகர்களுக்கும் அதிகளவில் இருக்காங்க. அந்த மக்கள், `ஏதாவது தானம் செய்யுங்க'ன்னு மக்களைத் தொந்தரவு செய்ய மாட்டாங்க. `நான் ஆதரவற்ற நிலையில் இருக்கிறேன். எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்'னு எழுதப்பட்ட பதாகைகளை கையில் வைத்தபடி சாலையில் நிற்பாங்க. அதைப் பார்த்து யாராவது உதவுவாங்க. அமெரிக்காவிலும் யாசகம் கேட்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கு. அதையும் மீறி, இந்தியாவைப்போல அமெரிக்காவுலயும் ஏராளமானோர் யாசகம் கேட்கிறாங்க.

அவங்க இரவில், பொது இடத்தில் தூங்குவாங்க. போலீஸார் துரத்திவிட்டா, வேறு இடத்துக்குப் போவாங்க. இத்தகைய யாசகர்கள் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய சிலர் காப்பகங்களை நடத்துறாங்க. இவற்றில், தற்காலிக வாழ்வாதாரத்துக்காக ஒருவர் மூணு மாதங்கள் வரைதான் தங்க முடியும். அதற்குள் நல்ல வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்துக்கணும். பிறகு வேலை கிடைச்சாலும், கிடைக்காட்டியும் வெளியேறிடணும். ஒருவேளை அவங்கள்ல யாருக்காச்சும் வேலை கிடைக்கலைனா, வேறு காப்பகத்துல மூணு மாதங்கள் தங்குவாங்க. இப்படியே நிலையற்ற தன்மையில்தான் பலரின் வாழ்க்கை கழிகிறது. 

நாதன் கணேஷன்
நாதன் கணேஷன்

ஆதரவற்ற நிலையில் பலரும் இருந்து வருகின்றனர். அந்த மக்களுக்காகக் காப்பகம் ஆரம்பிக்கணும். அதில் தங்கும் ஆதரவற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கணும்னு ஆசைப்படுறோம். அதற்கான முயற்சிகளைக் குழுவாக இணைந்து செயல்படுத்தத் திட்டமிட்டிருக்கோம். முதல் கட்டமாக நாலு பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறோம்" என்கிறார் நாதன், புன்னகையுடன்.

வாட்ஸ்அப் vs டெலிகிராம்: மோதும் மெசேஞ்சர்கள்... என்ன நடக்கிறது?
அடுத்த கட்டுரைக்கு