Published:Updated:

கற்றது கிராமத்தில்; அசத்துவது ஜெர்மனியில்!- ஃபேன்சி நகை தயாரிப்பில் கலக்கும் தமிழ்ப் பெண் #MyVikatan

கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இன்று ஜெர்மனியில் சொந்தத் தொழிலில் சாதித்துவருகிறார் என்றால், அதற்கு அவரின் கணவரின் சப்போர்ட்டும் மிக முக்கியக் காரணம்.

மகேஸ்வரி பிரெஷ்னேவ்
மகேஸ்வரி பிரெஷ்னேவ்

"வீட்டுக்கு அலங்காரம் மனையாள்" என்று சொல்வார்கள். அந்த அழகே அலங்காரப் பொருள்களைத் தயாரித்து குடும்ப வருவாயைப் பெருக்கினால் எப்படி இருக்கும். ஆம்! ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் வசிக்கும் மகேஸ்வரி பிரெஷ்னேவ், களிமண், குவிலிங் பேப்பர், பட்டு நூல் எனப் பலவிதமான பொருள்களால் செயின், காதணிகள், வளையல்கள் என ஃபேன்சி நகைகள் செய்து அசத்திவருகிறார். ரெசின் ஜுவல்லரி தயாரிப்பிலும் இவர் மிகவும் பிரபலம். முதுகலையில் பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் மனதுக்குப் பிடித்தமான வேலையைத்தான் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இதில் ஈடுபட்டுவருகிறார். அதுமட்டுமல்ல, துணிகளிலும் தன் கற்பனைவளத்தால் எண்ணிலடங்கா டிசைன்கள் செய்து பெண்களுக்கான உடைகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இன்று ஜெர்மனியில் சொந்தத் தொழிலில் சாதித்துவருகிறார் என்றால், அதற்கு அவரின் கணவரின் சப்போர்ட்டும் மிக முக்கியக் காரணம். அழகுப் பொருள்கள் தயாரித்தல் மூலம் குடும்பத்தை நிர்வகித்தல், இதனிடையே தையல் வேலை என்று மிகவும் பிசியாக இருந்தவரை சந்தித்து, அவரின் இந்தப் பயணம் குறித்து உரையாடினோம்.

``தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை என்ற அழகான கிராமம்தான் என் சொந்த ஊர். அப்பாவும் அம்மாவும் விவசாயம் செய்றாங்க. அதைப் பெருமையாய்ச் சொல்வதில் எனக்கும் என் இரண்டு அண்ணன்மார்களுக்கும் அத்தனை சந்தோஷம்! சின்ன வயசிலேயே அம்மாவிடம், வயலிலிருந்துவரும்போது களிமண் கொண்டுவரச் சொல்வேன். அதில் பிள்ளையார் செய்து பார்த்தேன். அப்படியே அதில் ஆர்வம் அதிகமாகி, பல வடிவங்களில் பானை வகைகள் செய்தேன். அந்த ஆர்வத்தின் அடுத்த கட்டம்தான் இன்றைய ஃபேன்சி நகைகள். கடந்த அக்டோபரில், மதுரையைச் சேர்ந்த பிரெஷ்னேவ் ஜீவானந்தத்துடன் திருமணம் முடிந்து, அவருடன் ஜெர்மனி வந்தேன். கணவர், பிராங்பேர்ட் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஆட்டோமொபைல் துறையில் பொறியாளராகப் பணிபுரிகிறார்.

ஃபேன்சி நகைகள்
ஃபேன்சி நகைகள்

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த பழைய நியூஸ் பேப்பரில் பழக்கூடை ஒன்றைச் செய்து பார்த்தேன். எனக்கே அது ரொம்பப் பிடித்திருந்தது. வீட்டில் தேவையற்றுக் கிடக்கும் பொருள்களிலிருந்து புதுசா என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டே இருப்பேன். வயர் கூடை, பாசிமணிகளில் கைப்பை என்று நிறைய செய்திருக்கிறேன். M.E படிச்சிட்டு நல்ல கம்பெனியில் வேலைக்குப் போகாம இப்படி களிமண்ணை உருட்டிக்கிட்டு இருக்கிறியேனு சொன்னவங்க, மூக்கு மேல விரலை வைக்கிற மாதிரி ஜெர்மனியில் என் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்திவருகிறேன். அதற்கு என் பெற்றோர்தான் முதல் காரணம். திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு வந்தவுடன், அத்தையும் மாமாவும் என் திறமையை உணர்ந்து என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். எதைச் செய்தாலும் நேர்மையும் நேர்த்தியும் மிகவும் முக்கியம் என்று சொல்வார்கள். ஜெர்மனி வந்துவிட்டாலும் இன்றும் என் வாழ்வில் அதை நான் கடைபிடித்துவருகிறேன். இப்போது பட்டு நூல், FIMO களிமண், வண்ணக் கற்கள் இவைகளைக்கொண்டு செயின், கம்மல், கை செயின், வளையல் மற்றும் நெக்லஸ் என்று நிறைய வெரைட்டியாய் ஃபேன்சி நகைகள் செய்துகொண்டிருக்கிறேன்.

ஜெர்மனி வந்தவுடன் கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி இருந்தது. என் கணவர், ``உனக்குத்தான் கைவினைப் பொருள்கள் தயாரிக்கிறதுல ஆர்வம் இருக்கே... அதைச் செய்கிறாயா?’’ என்று கேட்டவர், கையோடு மூலப்பொருள்களையும் வாங்கிவந்து தந்தார். அதுதான் அவர் எனக்குத் தந்த முதல் பரிசு. அப்புறமென்ன, உடனே களத்துல இறங்கிட்டேன். இந்த ஒரு வருஷத்துல 3 முறை கண்காட்சியில் என் தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தியிருக்கிறேன். சாதிப்பதற்கு கனவுகளும் கனவுகளுக்கு உறுதுணையாக அன்பான கணவரும் அமைந்துவிட்டால் எல்லா பெண்களுமே சாதனைப் பெண்கள்தான். அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்.

ஃபேன்சி நகைகள்
ஃபேன்சி நகைகள்

ஜெர்மனியில், தொடக்கத்தில் எங்கே போய் மூலப் பொருள்கள் வாங்குவது என்று தெரியவில்லை. நானும் என் கணவரும் நிறைய கடைகள் ஏறி இறங்கினோம். கூகுளிலும் தேடினோம். அப்படித்தான் சில கடைகளைக் கண்டுபிடித்தோம். FIMO களிமண், பாசிமணிகள், பலவண்ணக் கற்கள் போன்றவற்றை மாதம் ஒருமுறை போய் வாங்குவேன். தையல் வேலைக்குத் தேவையான பொருள்களை அவ்வப்போது சென்று வாங்குவேன். கடையில் வித்தியாசமாக ஏதேனும் கண்ணில் பட்டால், உடனே அதை வாங்கி, புதுசா ஏதாவது செய்துவிடுவேன். ஜெர்மனியில் கிடைக்காத பொருள்களை அத்தையிடம் போனில் சொல்வேன். புகைப்படம் இருந்தால் அனுப்பிவைப்பேன். மாமா அந்தப் படத்தைக் கொண்டுபோய் காட்டி, எப்படியாவது வாங்கி எனக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த வகையில் அவர் எனக்கு இன்னொரு அப்பா.

ஃபேன்சி நகைகள்
ஃபேன்சி நகைகள்

ஜெர்மானியர்கள், நான் தயாரிக்கும் நகைகளை நிறைய வாங்குவார்கள். அவர்கள் ஏதாவது டிசைன் சொன்னால், அதைச் செய்தும் கொடுக்கிறேன். பொதுவாக, என்னை மாதிரி கிராமத்தில் வளர்ந்த பெண்களுக்கு எக்ஸ்போஷர் குறைவுதான். அதை நினைத்துத் துவண்டுவிடாமல், பாரதியின் புதுமைப் பெண்ணாய் சவால்களைத் தைரியமாய் எதிர்கொண்டால் வெற்றி உங்கள் காலடியில். எதையுமே 'முயன்று பார்ப்போம்' என்று கையில் எடுங்கள்! வெற்றித் தேவதை உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அந்த வெற்றித் தேவதை உங்கள் வீட்டில் எப்போதும் குடியிருக்கட்டும் என்று வாழ்த்தி விடை பெற்றோம்.

-ஜேசு ஞானராஜ்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்... ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம் உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/