Published:Updated:

`Tik Tok போனா என்ன... சிங்காரி இருக்கே!?’ - ஜி.பி.முத்து, சூர்யா என்ன சொல்கிறார்கள்?

ஜி.பி.முத்து, சூர்யா
ஜி.பி.முத்து, சூர்யா

தமிழ்நாட்டில் டிக்டாக்கில் பிரபலான ஜி.பி.முத்து, சூர்யா இருவரிடமும் டிக்டாக் தடை குறித்துப் பேசினோம்.

சீனா - இந்திய எல்லைப் பிரச்னை கடந்த சில வாரங்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், பொது மக்கள் அனைவரும் இந்திய அரசின் எதிர்வினைக்காகக் காத்திருந்தனர். இதற்கிடையில் சீனப் பொருட்களை பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும் எனப் பலரும் குரல் எழுப்பினர். ஆனால், அப்படிப் பொருட்களைத் தடைசெய்வதால் இழப்பு இந்தியாவுக்குதான் எனப் பொருளாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இச்சூழலில் இந்திய அரசு 59 சீன ஆப்களை நேற்று தடைசெய்தது. அதில் டிக்டாக், ஷேர் இட் போன்ற ஆப்களும் இருந்தன. டிக்டாக் தடைசெய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்நிலையில் தமிழ்நாட்டில் டிக்டாக்கில் பிரபலான ஜி.பி.முத்து, சூர்யா இருவரிடமும் டிக்டாக் தடை குறித்துப் பேசினோம்.

டிக் டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - அடுத்து என்ன நடக்கும்?

ஜி.பி.முத்து

"என் பேரு பேச்சிமுத்து. ஆனா ஜி.பி.முத்து என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். இதுவரைக்கும் டிக்டாக்ல ஏழு ஐடி பயன்படுத்திருக்கேன். பழைய ஐ.டி-யில் 11,550 வீடியோ போட்டிருந்தேன். அந்த ஐடியைத் தடை செஞ்சுட்டாங்க. இப்ப இருக்குற ஐடில 20,000 வீடியோ போட்ருக்கேன். ஒரு நாளைக்கு 60-70 வீடியோக்கள் எடுப்பேன். இந்த வீடியோ எடுக்க எனக்கு ஒரு மணி நேரம் போதும். சும்மா இருக்கும்போது வீடியோ எடுத்து வச்சுப்பேன்‌. பிறகு அதை டிக் டாக்ல பதிவேற்றிருவேன்‌. நான் பதிவிடுற வீடியோவ கலாய்ச்சு பேப்பர்ல எழுதி டிக் டாக்ல ஒருத்தன் போடுவான். என்ன திட்டுற வீடியோவ நிறைய பேர் பார்ப்பாங்க. அதுக்காகவே நிறைய பேரு என்ன திட்டுற மாதிரியான வீடியோ போடுவாங்க.

ஜி.பி.முத்து
ஜி.பி.முத்து

இதெல்லாம் பெருசா கண்டுக்க மாட்டேன். ஜாலியா எடுத்துக்குவேன். நான் இந்த அளவுக்கு டிக்டாக்ல பிரபலமா இருக்கேன்னா அதுக்கு காரணம் என் ரசிகர்கள்தாம். எங்கயாவது வெளியில போனாலே நிறைய பேரு என்கூட வந்து போட்டோ எடுக்குறாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, இன்னைக்கு காலையிலதான் டிக்டாக் தடை செய்யப்பட்டதா என் நண்பர்கள் சொன்னாங்க. உண்மையில ரொம்ப ரொம்ப வருத்தமான செய்தி. இதனால காலையில சாப்பிடகூட செய்யல. இதுவரைக்கும் நாலு சோகமான வீடியோ போட்ருக்கேன். 'சிங்காரி'னு ஒரு ஆப் (Singari App) இருக்கு... அது டிக்டாக் மாதிரிதான். அதைத்தான் இனி நான் பயன்படுத்த போறேன். வீட்டுல டிக்டாக் பண்றதால அடிக்கடி சண்டை வருது... இருந்தாலும் டிக்டாக் பண்றத நான் விட மாட்டேன்" என்றார்.

சூர்யா

"கடந்த ஒரு வருஷமா டிக்டாக் பண்றேன். நான் பதிவிடுற வீடியோவுக்கு சராசரியா 3 லட்சம் லைக்ஸ் வரும். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் என்னை பின் தொடர்ந்துக்கிட்டிருக்காங்க. தினமும் டிக்டாக் வீடியோ பண்ணிருவேன். டிக்டாக் பண்ணினாதான் மனசு நிம்மதியா இருக்கும். டிக்டாக் பண்றது கலாசார சீரழிவுன்னு நிறைய பேர் சொல்றாங்க. நான் அதை ஏத்துக்க மாட்டேன். நிறைய பேர் தங்களுடைய திறமையை வளர்த்துக்கொள்ள டிக்டாக்கை பயன்படுத்திக்கிறாங்க.

சூர்யா
சூர்யா

டிக்டாக் மூலமாகத்தான் நிறைய பேர் பிரபலம் ஆகியிருக்காங்க. பல பேருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதெல்லாம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பங்கள். டிக்டாக் தடை செய்யப் போறதா நியூஸ்லதான் பார்த்தேன். என் ரசிகர்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன். சீக்கிரமே டிக்டாக் செயலி, தடையை மீண்டு வந்துடும்னு நம்புறேன். டிக்டாக்ல எனக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க. அதுதான் என்னுடைய வளர்ச்சிக்கும் காரணம். இப்பகூட வீட்ல அம்மா, அண்ணன், உறவினர்கள் எல்லாரும் நான் டிக்டாக் பண்றதால என்கிட்ட பேச மாட்டாங்க. அதை நான் பெரிதுபடுத்த மாட்டேன். ஏன்னா, டிக்டாக்தான் என்னை பிரபலப்படுத்தியிருக்கு. இன்னைக்கு சினிமா, குறும்படங்கள், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கறதுக்கு டிக்டாக்தான் காரணம். அதனால் டிக்டாக்கை என்றும் நான் மறக்க மாட்டேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு