Published:Updated:

‘இக்கட்டான சூழலிலும் மக்களின் செயல் வியக்கவைக்கிறது!’ - தஞ்சாவூரில் ஒரு நேர்மை கடை

ஆளில்லா கடை
ஆளில்லா கடை ( ம.அரவிந்த் )

நான் வைக்கிற பொருளுக்கான பணம், பைசா குறையாமல் பெட்டியில் இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களின் நேர்மை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

தஞ்சாவூர் அருகே கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காகவும், மக்களிடையே நேர்மையை விதைக்கும் விதத்திலும் பேக்கரி நடத்தி வரும் ஒருவர் தன்னுடைய கடையில் முக்கியமான பொருள்களை வைத்து அதை மக்களே எடுத்துக்கொண்டு பணத்தை வைத்துவிட்டுச் செல்லும் வகையில் ஆளில்லாத கடையைத் தொடங்கி நடத்தி வருகிறார். மக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன் நெகிழ்ச்சியோடு அவரை பாராட்டியும் வருகின்றனர்.

ஆளில்லா கடை
ஆளில்லா கடை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு எதிரே சீனிவாசன் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். மருத்துவமனைக்கு வருபவர்கள் மற்றும் பொதுமக்கள் இவர் கடையில் பிரட், ரஸ்க் உள்ளிட்ட பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த நிலையில், கொரோனா பரவாமல் இருப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடை அடைக்கப்பட்டன. இதையடுத்து, கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் கிடைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்துள்ளார்.

இது குறித்து கடை உரிமையாளர் சீனிவாசனிடம் பேசினோம், ``கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் ஒரு சமூகத் தொற்றாக மாறாமல் இருப்பது மக்களாகிய நம் கையில்தான் உள்ளது. இந்த நிலையில், மக்கள் தேவையில்லாமல் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், கடை இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் மக்கள் பிரட், ரஸ்க் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்காமல் சிரமப்படக் கூடாது என்பதற்காக கடந்த மூன்று நாள்களுக்கு மேலாக ஆளே இல்லாத கடையை நடத்தி வருகிறேன்.

சீனிவாசன்
சீனிவாசன்

மக்கள் அடிக்கடி வாங்கும் பொருளான பிரட், ரஸ்க், கோதுமை ரஸ்க் உள்ளிட்ட பொருள்களை தயார் செய்து கடைக்கு எதிரே உள்ள ஸ்டாலில் வைத்துள்ளேன். அதற்குரிய விலை பட்டியலையும் வைத்து அதில் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய காசை அருகில் உள்ள பணப்பெட்டியில் போட்டு விடுமாறு அன்போடு வேண்டுகிறேன் என்ற வாசகமும் எழுதி வைத்துள்ளேன். மக்கள் தங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு பணத்தைப் பெட்டியில் வைத்துவிட்டுச் செல்கின்றனர்.

தினமும் ரூ 2,000-க்கு மேற்பட்ட மதிப்பிலான பொருள்களை வைத்துவருகிறேன். மூன்று நாள்களுக்கு மேலாக இந்தக் கடை செயல்பட்டு வருகிறது. நான் வைக்கிற பொருளுக்கான பணம் பைசா கூட குறையாமல் பெட்டியில் இருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மக்களின் நேர்மை என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. எங்க கடைக்கு வந்த ஒருவர் பொருளை எடுத்துக்கொண்டதுடன் எனக்கு போன் செய்து ரொம்ப நல்ல விஷயம் செய்திருக்கிறீர்கள்; குறிப்பிட்ட நேரம் மட்டும் கடையிருந்தால் மக்கள் ஒரே நேரத்தில் வருவார்கள். ஆனால், இந்த முயற்சியால் தேவைப்படும்போது வந்து எடுத்துச் செல்வார்கள்.

கொரோனா பாதுகாப்பு கடை
கொரோனா பாதுகாப்பு கடை

இதனால் மக்கள் கூடுவது தடுக்கப்படுவது ஒரு புறம் இருந்தாலும் அவர்களிடையே நேர்மையை விதைக்கும் வகையிலும் இது உள்ளதாக நெகிழ்ச்சியோடு பாராட்டினார். ஊரடங்கு தொடரும் வரை இந்த ஆளில்லா கடை செயல்படும். மக்கள் ஒன்று கூடாமல் கொரோனாவிலிருந்து நாமும் நம்மால் மற்றவர்களும் பாதிக்காமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதற்கு என்னால் ஆனா சின்ன முயற்சிதான் இந்தக் கடை“ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு