Published:Updated:

வறுமை கொடிது! - ஆசிரியை பகிரும் லாக்டெளன் துயர கதை #MyVikatan

Students (Representational Image)
Students (Representational Image)

ஊரடங்கு என்பதால் வெளியே எங்கும் செல்ல இயலாத சூழ்நிலை. குமார் பற்றிய நினைவுகளுடன், வருத்தத்தினூடே, என் பிற மாணவர்களின் வீட்டுப்பாடங்களையும் விடைத்தாள்களையும் மொபைலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது, அலைபேசி அலறியது.

''பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சென்ற வாரம் மூன்றாம் வகுப்பிற்கான இணைய வகுப்பில், Colorful Butterflies என்ற கவிதைப் பகுதியை நடத்திக்கொண்டிருந்தேன்.

'வண்ணத்துப்பூச்சி பற்றி உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்கள் என்ன? ஒவ்வொருத்தரா மைக் ஆன் பண்ணிச் சொல்லுங்க பார்க்கலாம்' என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்.

Education
Education
Pixabay

''டீச்சர், அதோட றெக்கைகள்ல பல வண்ணங்கள் இருக்கு. அதான் வண்ணத்துப்பூச்சின்னு சொல்றோம்.’’

‘’ டீச்சர், அதைப் பிடிக்கவே முடியாது... வேகமா பறக்கும்...’’

‘’டீச்சர், இந்த வண்ணத்துப்பூச்சியிலிருந்துதான் பட்டுப்புடவை கிடைக்குது.’’

இப்படியாகப் பலவித பதில்கள் மாணவர்களிடமிருந்து வந்த வண்ணம் இருந்தன.

இதற்கிடையில், ``டீச்சர், டீச்சர்... எனக்கு வண்ணத்துப்பூச்சி பத்தி ஒரு விஷயம் தெரியும், சொல்லட்டுமா டீச்சர்?’’ என்று ஆர்வமாகக் கேட்ட குமாரிடம், ``சொல்லுப்பா’’ என்றேன்.

’’டீச்சர், வண்ணத்துப்பூச்சியை அதிகமா எந்தப் பறவைகளும் வேட்டையாடி சாப்பிடாது. அதிக வண்ணங்களோடு பளிச்சுன்னு இருக்கிறதால அது நமக்கு ஆபத்துன்னு எந்தப் பறவையும் பக்கத்துலகூட வராதாம். அப்புறம், பட்டாம்பூச்சி உடம்புல நச்சுத்தன்மை இருக்கிறதால அதைச் சாப்பிட்டா நமக்கு ஆபத்துனு நெனச்சுட்டு, பறவைகள் ஒண்ணும் செய்யாதாம். பட்டாம்பூச்சிக்கு வயசான பிறகு, அதோட உடம்புல விஷத்தன்மை குறைஞ்சிடுமாம். அதனால ஒரு சில புத்திசாலிப் பறவைகள் அப்போ பட்டாம்பூச்சியைக் கொத்தி சாப்பிட்டுடுமாம் டீச்சர்’’ என்றான் குமார் குதூகலத்தோடு.

``அருமை குமார், யாருக்கும் தெரியாத சில விஷயங்களைச் சொல்லி இருக்கே. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?’’ என்றேன்.

’’டீச்சர், நீங்க இன்னைக்கு இந்தப் பாடம்தான் நடத்தப் போறீங்கன்னு நெனச்சேன். எப்படியும் வண்ணத்துப்பூச்சி பத்தி கேள்வி கேப்பீங்கன்னு இணையத்துல இதைப் பத்தி சேகரிச்சேன்’’ என்றான் குமார்.

Representational Image
Representational Image
Pixabay

8 வயதிலேயே குமார் பாடங்கள் பயில்வதில் மிகவும் விருப்பமுற்றிருந்தான். வகுப்பின் இடைவெளியில் கேள்விகள் கேட்கும்போது அவன் காட்டும் ஆர்வமும் வேகமும் அனைத்துப் பாடங்களிலும் அவன் முதன்மையாகத் திகழ மிக முக்கியக் காரணங்களாக இருந்தன.

ஆனால், அன்றைய தினத்துக்குப் பிறகு குமார் இணைய வகுப்பிற்கு வரவே இல்லை.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, என்னுடைய அலைபேசிக்கு புதிதாக ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

''ஹலோ டீச்சர், நான் குமார் பேசறேன். மன்னிச்சுடுங்க டீச்சர் நேத்து அப்பா போனை ரீசார்ஜ் பண்ணல, அதனால வகுப்புக்கு வர முடியல, வீட்டுப்பாடம் அனுப்ப முடியல டீச்சர். இப்போ பக்கத்து வீட்டு அக்கா போனிலிருந்து பேசறேன்'' என்று பணிவாகப் பேசினான் குமார்.

''பரவாயில்லை குமார், எனக்கு உன்னைப் பத்தி தெரியாதா? நீ நேர்மையான மாணவன், வகுப்புல, முதல்ல வீட்டுப்பாடம் எழுதி அனுப்புறது நீதான்.

இப்போ ஒண்ணும் பிரச்னை இல்லை. எழுதி வெச்ச வீட்டுப்பாடம் எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வை, அப்பா ரீசார்ஜ் பண்ணினதும், ஸ்கேன் பண்ணி அனுப்பிடு'' என்று சமாதானப்படுத்தினேன்.

''சரிங்க டீச்சர், ஆனா, அது வரைக்கும் நான் வகுப்பை எப்படி கவனிக்கறது'' என்றான் குமார்.

''நான் பதிவு பண்ணி அனுப்பி வைக்கிறேன், ரீசார்ஜ் பண்ணின பிறகு பார்த்துக்க'' என்று ஆறுதல் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து, இன்றோடு எட்டு நாள்கள் ஆகிவிட்டன.

குமாரிடமிருந்தும் அவன் பெற்றோரிடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை. அவன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, இந்த எண்ணிற்கான அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன என்ற பதில் வந்தது. இந்தச் சிறிய வயதிலும், எந்தச் சூழ்நிலையிலும் தன் கடமையை செய்யத் தவறமாட்டான் குமார். இதுவரை அவன்தான் முதலில் வீட்டுப்பாடங்களை அனுப்பி இருக்கிறான். இந்த ஐந்து மாதங்களில், 'டீச்சர், கொரோனா எப்போ நம்ம நாட்டை விட்டுப் போகும்? ஸ்கூல் எப்போ திறப்பாங்க?' என்று பல முறை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டே இருப்பான்.

ஊரடங்கு
ஊரடங்கு

இதிலிருந்தே புரிந்துகொள்வீர்கள், படிப்பின் மீது குமாருக்கு இருக்கும் ஆர்வத்தை. அவன் வீட்டு அருகிலிருந்து வேறு எந்த மாணவர்களும் எங்கள் பள்ளிக்கு வராத காரணத்தால், குமார் பற்றிய தகவலை சேகரிக்க முடியவில்லை.

ஊரடங்கு என்பதால் வெளியே எங்கும் செல்ல இயலாத சூழ்நிலை. குமார் பற்றிய நினைவுகளுடன், வருத்தத்தினூடே, என் பிற மாணவர்களின் வீட்டுப்பாடங்களையும் விடைத்தாள்களையும் மொபைலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது, அலைபேசி அலறியது.

அழைப்பில், ’’டீச்சர், உங்ககிட்ட மூணாம் வகுப்பு படிக்கிற குமாரோட அம்மா பேசறேன்’’ என்றதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

``சொல்லுங்கம்மா’’ என்றேன்.

‘’டீச்சர், குமாரால தொடர்ந்து வகுப்புக்கு வர முடியல. அவங்கப்பா போன்ல காசு போடல. நாளைக்குக் கண்டிப்பா வந்திடுவான். வீட்டுப்பாடத்தையும் அனுப்பிடுவான். மன்னிச்சுடுங்க டீச்சர்...’’ என்று கெஞ்சும் குரலில் கேட்டுக்கொண்டார்.

‘’எனக்கு குமாரை பத்தி நல்லா தெரியும், நான் பார்த்துக்கிறேன் கவலைப்படாதீங்க’’ என்று ஆறுதல் கூறி அவரை தேற்றினேன்.

’’டீச்சர், குமாருக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும். எல்லார்கிட்டயும் அன்பாவும், அதே நேரம் படிப்பு விஷயத்துல கண்டிப்பாவும் இருப்பீங்கன்னு சொல்லுவான்'' என்ற குமாரின் அம்மாவிடம், ''எனக்கும் குமாரை ரொம்பப் பிடிக்கும், நல்ல பக்குவமும் பொறுப்பும் அவன்கிட்ட இருக்கு. படிப்பு விஷயத்துல நான் எந்த வேலை கொடுத்தாலும் காலம் தவறாம செய்வான்'' என்று பெருமையாகக் கூறினேன்.

''டீச்சர், உங்களுக்கே நல்லா தெரியும், அஞ்சு மாசமா பஸ் எதுவும் ஓடுறதில்ல. நாலு மாசமா வருமானம் எதுவும் இல்ல. அதனால நானும் அவரும் கட்டட வேலைக்குப் போயிட்டு இருக்கோம். வாரத்துல மூணு நாள்தான் வேலை. எப்படியோ கொஞ்சம் ஸ்கூல் பீஸ் கட்டிட்டோம் டீச்சர். குமார் சரியா வகுப்புக்கு வர முடியலேன்னா கொஞ்சம் பார்த்து அனுசரிச்சுக்கோங்க. கையில பணம் இருக்கும்போது போனுக்கு காசு போட்டு விடுறேன்'' என்று தழுதழுத்தார் குமாரின் அம்மா.

Representational Image
Representational Image

''அம்மா, தயவுசெஞ்சு கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்கிறேன்'' என்று ஆறுதல்படுத்தி அழைப்பைத் துண்டித்துவிட்டு, பள்ளி திறக்கும் வரையில் குமாருக்காக அவனது தொலைபேசிக் கட்டணத்தை நானே செலுத்திவிடுவது என்றும், காலையில் முதல் வேலையாக அவன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு, வகுப்பிற்கு வரச்சொல்ல வேண்டும் என்றும் எனக்குள் தீர்மானித்துக்கொண்டு உறங்கிப்போனேன்.

மறுநாள் காலையில், என் அம்மாவிற்கு திடீரென நெஞ்சுவலி என்று என் தம்பி தொலைபேசியில் தெரிவிக்க, பள்ளி நிர்வாகத்திடம், ஒரு நாள் இணைய வகுப்பிற்கு விடுப்புப் பெற்றேன். இ-பாஸ் பெற 10 முறை விண்ணப்பித்தும்,10 முறையும் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையில் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், இப்போது நலமாக உள்ளதாகவும், அவசரப்பட்டு நான் வர வேண்டாம் எனவும் தம்பி கூறினான். அரைமனதாக பயணத்தை ரத்து செய்தேன்.

இந்தச் சூழ்நிலையில் குமார் விஷயத்தை சுத்தமாக மறந்தே போனேன். மறுநாள் காலையில், முன்னர் குமார் அம்மா அழைத்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரிக்கையில், 'இது அவங்க நம்பர் இல்லைங்க, நான் அவங்க வேலை செய்யுற கட்டட மேஸ்திரி பேசறேன், நீங்க யாருங்க?' என்ற குரல் கேட்டது.

’’அய்யா, நான் அவங்க பையனோட ஸ்கூல் டீச்சர். அவங்க இந்த எண்ணிலிருந்து நேத்து என்கிட்ட பேசினாங்க. அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும், இப்போ முடியுமா?’’ என்று கேட்டேன். ``அந்த அம்மாவையும் அவங்க வீட்டுக்காரரையும் நேத்து எங்க இன்ஜினீயர் வேலையைவிட்டு அனுப்பிட்டாங்க.

Representational Image
Representational Image
Pixabay

டிரைவர் வேலை பார்த்தவருக்கு கட்டட வேலையெல்லாம் அவ்வளவா பழக்கமில்லாம இருந்துச்சு. அவர் சரியா வேலை செய்யுறதில்லைன்னு இன்ஜினீயருக்கு அவர் மேல வருத்தம். 'சூழ்நிலைக்காக வேலைக்கு வந்தவங்க, கொஞ்ச நாள் போனா நல்லா வேலை பழகிக்கப் போறாங்க...'னு நானும் சொன்னேன். அவர் கேட்கிற மனநிலையில இல்ல. நேத்து இன்ஜினீயர் கொஞ்சம் கடுமையா பேச, ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முத்திடுச்சு. இன்ஜினீயர் அவரை அடிக்கப்போய், கடைசியில, புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரையும் வேலையைவிட்டு அனுப்பிட்டாரு. இதுவரைக்கும் தர வேண்டிய சம்பளத்தையும் தரல.

ரெண்டு பேரும், 'எங்க குடும்பத்தை எப்படி காப்பாத்துவோம், எங்க பையனை எப்படி படிக்க வைப்போம்'னு அழுதுகிட்டே போனாங்க’’ என்று அவர் சொல்லச் சொல்ல, என் கண்களில் தாரை தாரையாக வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டே, தகவல் சொன்னதற்காக அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

இன்றைய வகுப்புகள் முடிந்ததும் குமாரின் வீட்டிற்கே சென்று விடுவது என்ற முடிவுடன், வகுப்பை ஆரம்பிக்க தொலைபேசியை எடுத்தபோது, எங்கள் பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் அனுப்பப்பட்டிருந்த செய்தியைப் படித்து அதிர்ச்சியில் உறைந்து நின்றேன்...

Representational Image
Representational Image
Pixabay

"நமது பள்ளியின் மூன்றாவது வகுப்பு ஆ பிரிவில் பயிலும் குமார் என்ற மாணவனின் தாயார் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவர்களது ஆத்மா சாந்தியடைய ........................................................................................"

அதற்கு மேல் ஒரு எழுத்தைக்கூட வாசிக்க என்னால் முடியவில்லை.

ஊரடங்கின் காரணமாக துக்கம் விசாரிக்கக்கூட செல்ல முடியவில்லை என மனது ரணமானது. இந்த கொரோனாவால் மக்கள் படும் அளவில்லா துயரங்களிலிருந்து காப்பாற்றி அருள் இறைவா என, கண்ணீர் மல்க வேண்டிக்கொண்டேன். பின்னர் அலைபேசியை எடுத்தபோது, விக்கித்துப் போனேன். விட்டுப்போன வீட்டுப்பாடங்கள் அனைத்தையும் அனுப்பியிருந்தான் குமார்.

என்றும் அன்புடன்
நித்யா இறையன்பு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு