Published:Updated:

`இவ்ளோ நேர்மையாவா இருப்பீங்க?' -மகளுக்கு `டீச்சர் அம்மா’ கற்றுக்கொடுத்த பாடம் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

மறுநாள் சாயங்காலப் பொழுதில் அவசர அவசரமாக அம்மா வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்த வேகத்தில் என்னைத் திட்ட ஆரம்பித்தாள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அந்திசாயும் வேளையில் அம்மா கொடுத்த மிக்ஸர், காபியுடன் ஆதித்யா டி.வி பார்க்கும் பதின்பருவக் கல்லூரி மாணவி நான். பள்ளியிலும் வீட்டிலும் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு அம்மா காபி டம்ளருடன், ஐந்தாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்த அமர்ந்தாள். அம்மாவைப் பார்க்க களைப்பாக இருந்தது.

``அம்மா நான் வேணா திருத்தித் தரட்டுமா?'' எனக் கேட்டேன்.

``அதெல்லாம் அவ்வளவு சுலபமில்ல. எழுத்துப் பிழை எல்லாம் சரியா திருத்தணும்’’ என்றார்.

Representational Image
Representational Image

அப்படி என்றால் விடைத்தாளைக் கூட்டித் தருகிறேன் என்றுகூறி, விடைத்தாளை வாங்கிக் கொண்டேன். விடைத்தாளைக் கூட்ட ஆரம்பித்தேன், ஒரு விடைத்தாளில் இன்னும் இரண்டு மதிப்பெண் இருந்தால் தேர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளது. அதனால் நான் இரண்டு மதிப்பெண்ணை என் கூட்டலில் சேர்த்தேன். இதுபோல இன்னும் இரண்டு விடைத்தாள்களில் ஒன்று, இரண்டு மதிப்பெண் சேர்த்து தேர்ச்சி பெறச் செய்தேன். என் மனதிற்குள் சிறிய பதற்றம் நிலவியது. 'நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா எதுவுமே தவறில்லை'. நாம நாலுக்கு பதிலா மூணு பேருக்கு செஞ்சிருக்கோம், அவ்வளவுதான்!.

இந்த மூன்று பிள்ளைகளுக்கு ஏதோ ஒரு நல்லநேரம் என் கையில் மாட்டி இருக்கு என்று சந்தோஷத்துடன் அப்படியே டி.வி பார்க்க ஆரம்பித்தேன். மறுநாள் சாயங்காலப் பொழுதில் அவசர அவசரமாக அம்மா வீட்டுக்குள் நுழைந்தாள். வீட்டுக்குள் நுழைந்த வேகத்தில் கடகட என என்னைத் திட்ட ஆரம்பித்தாள்..

``நீ எப்படி உருப்படப் போறே? என் பிள்ளைகளை எல்லாம் என்ன உன்னை மாதிரி நினைச்சியா? என் பிள்ளைகள் ஒண்ணு ஒண்ணும் சொக்கத்தங்கம். என்ன நல்லது பண்றதா நினைப்பா உனக்கு?....’’

என்று வசைபாடிய களைப்பில் கோபத்துடன் அமர்ந்தாள் அம்மா. திட்டு வாங்கியதற்கான கோபம் என்னை இறுக்கப் பிடித்து இருந்தது. அந்தநேரம் பார்த்து சிலுமின கொண்டையோடு, அலம்பாத முகத்துடன் வரித்துக் கட்டிய புடவையுடன் , லாலி-பாப் சாப்பிடற குழந்தையுடன் என் வீட்டுக்குள் நுழைந்தாள் ஒரு அம்மா.

`` டீச்சர், டீச்சர் என்ன இப்படி பண்ணிட்டீங்க.. ஃபெயிலான பயலுக்கு மிட்டாய் கொடுத்து அனுப்பி இருக்கீங்க.

Representational Image
Representational Image

இது என்ன கூத்தா இருக்குன்னு, என் பயல கேட்டா ? ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தவங்களுக்குக்கூட எங்க டீச்சர் மிட்டாய் கொடுக்கல, எனக்குதான் மிட்டாய் கொடுத்து இருக்காங்க என்று பெருமையா சொல்லுறான்.. ஒண்ணுமே புரியல டீச்சர். அதான் உங்களப் பாத்துட்டு போலாம்னு வந்தேன். இந்தப் பையன் ஏதாவது நாலு படிச்சு நல்ல குடும்பத்தைக் காப்பாற்றும் என்று பார்த்தால் ஒரே குழப்பமா இருக்கு டீச்சர்’’ என்றார் அந்தப் பெண்.

இப்போது அம்மா என்னை எதற்காகத் திட்டினாள் என்று முழுவதும் புரிந்தது. அதனால் நானே முன்வந்து பையனைப் பெற்ற அம்மாவிடம் சொன்னேன் .

``உங்க பையன் விடைத்தாளைக் கூட்டும்போது இரண்டு மதிப்பெண் அதிகமாகப் போட்டுவிட்டேன். உங்க பையன் நேர்மையாகச் சொன்னதால உங்க பையனுக்கு மிட்டாய் கிடைச்சிருக்கு’’ என்றேன்.

``அப்படியா பாப்பா, இப்படி இருந்தா என் பிள்ள பொழச்சுப்பானா?’’ என்று கேட்டார்.

``உங்க புள்ளை எல்லாம் நல்லா பொழச்சுக்குவான். நான்தான் உருப்பட மாட்டேன்னு உங்க டீச்சர் சொல்லுறாங்க’’ என்றேன்.

சிறிது நேரம் கழித்து, ``சரிங்க டீச்சர் நான் போயிட்டு வரேன்’’ என்று இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர்.

வாயில் கதவு வரை சென்ற சிறுவன் திரும்பி ஓடிவந்து என்னைப் பார்த்து ,

``ஏன் அக்கா மார்க்க கூட்டிப் போட்ட?’’ என்றான்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் அந்தப் பொடியனைத் தலையில் நங்கென்று கொட்ட வேண்டும் போல கோபம் வந்தது. ஆனால் நான்தான் கொட்டு வாங்கும் இடத்தில் இருக்கேன் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

உடனே அம்மா ஒரு நமட்டுச் சிரிப்புடன், ``கேட்கிறான்ல சொல்லு’’ என்றாள்.

Representational Image
Representational Image

அன்றைய இரவு எனக்கு தூக்கமே வரவில்லை, என் மனது கும்பிபாகமாய் கும்மி அடிக்கத் தொடங்கியது. சிவனேன்னு மிச்சர் சாப்பிட்டுக்கிட்டு இருந்திருக்கலாம். உதவி செய்கிறேன் என்று உபத்திரம் வாங்கியதுதான் மிச்சம். நானும் அம்மாவும் பேசிக்கொள்ளவே இல்லை.

`` என் பிள்ளைகள் எல்லாம் என்ன உன்ன மாதிரி நினைச்சியா’’ என்று சொன்ன வார்த்தைக்காகவே நான் பேசவில்லை. எனக்குத் தூக்கம் வராத இரவுகளில் அப்பா அவ்வப்போது கதை சொல்லுவார். இப்போதும் கதை சொன்னார்.

``ஒரு பள்ளியில் மேலதிகாரி பார்வையிட வந்தபோது அந்தப் பள்ளியின் ஆசிரியை குழந்தைகளுக்கு டிக்டேஷன் போட்டாங்க.

அப்போது கெட்டில் என்ற வார்த்தையைச் சொல்லி எழுதச் சொல்லுறாங்க. அப்போ அதில் ஒரு குழந்தை கெட்டில் வார்த்தையைத் தப்பா எழுதிவிட்டது. அதைக் கவனித்த ஆசிரியர் மெதுவாக அந்தச் சிறுவனிடம் விடைத்தாளைக் காண்பித்தார். அந்தச் சிறுவன் விடைத்தாளைப் பார்க்க மறுத்துவிட்டான். அந்தச் சிறுவன்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி'' என்றார் அப்பா.

தூங்க வைப்பதற்கான கதையல்ல, புரிய வைப்பதற்கான கதை எனப் புரிந்தது. அம்மா என்னைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்தாள். உடனே அம்மாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.

``இந்தா பாரு மா, நீ வேணும்னா ஃபெயிலான பசங்கள உன் பிள்ளைகளாக வச்சிக்க, கெட்டில் எழுத தெரியாதவரா நான் என் தாத்தா வா ஏத்துகிறேன்’’ என்றேன் . அடுத்த நொடியே அம்மா என்னை அணைத்தாள். நான் சட்டென்று தூங்கிவிட்டேன்.

-மதுரா ரஞ்சனி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு