Published:Updated:

அப்பா மகளுக்கு போதித்த பாலியல் கல்வி; உருவான மன்மதக்குளம் - ஆச்சர்யமூட்டும் கதை!

மன்மதக்குளம்

பாலுணர்வு வரம்பில்லாதது. மிக நுண்ணிய கற்பனை இழைகள்ல பயணிக்கிற உணர்வு அது. இதுதான், இப்படித்தான்னு இல்லாம விதவிதமான பாலுணர்வு சிற்பங்கள் குளத்தோட பக்கச்சுவர்ல வடிச்சு வச்சிருக்காங்க.

அப்பா மகளுக்கு போதித்த பாலியல் கல்வி; உருவான மன்மதக்குளம் - ஆச்சர்யமூட்டும் கதை!

பாலுணர்வு வரம்பில்லாதது. மிக நுண்ணிய கற்பனை இழைகள்ல பயணிக்கிற உணர்வு அது. இதுதான், இப்படித்தான்னு இல்லாம விதவிதமான பாலுணர்வு சிற்பங்கள் குளத்தோட பக்கச்சுவர்ல வடிச்சு வச்சிருக்காங்க.

Published:Updated:
மன்மதக்குளம்

காமம் பத்தி பேசுறதே இங்கே அருவருப்பான விஷயமா இருக்கு. அது எல்லா உயிர்களுக்கும் வர்ற இயற்கையான உணர்வுன்னு நம்ம பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்காததால நம்ம சமூகத்துல ஏகப்பட்ட பிரச்னைகள். அந்தக் காலத்துலேயே ஒரு ராஜா, தன் மகளுக்குப் பாலியல் கல்வியைச் சித்திரங்களா வடிச்சு பயிற்றுவிச்சிக்காருங்கிற வரலாறு ஆச்சர்யமூட்டுதுல்ல. தமிழ்நாட்டுல கற்பனையே செய்யமுடியாத அப்படி ஒரு பாலுணர்வுச் சித்திரத் தொகுப்பு இருக்கு. பாலியல் சார்ந்த சிற்பங்கள்ன்னா கஜுராஹோவையும் மார்க்கண்டேஷ்வர் கோயிலையும் சுட்டிக்காட்டுற நம்ம மக்களுக்கு, நம்ம ஊர்ல பொதுவெளியில அப்படியொரு அழகுணர்வு ததும்புற சிற்பத் தொகுப்புகள் இருக்குன்னு தெரியாது...

மன்மதக்குளம்
மன்மதக்குளம்
எங்கேயிருக்குன்னு கேக்குறீங்களா... வாங்க கிளம்பலாம்...!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவண்ணாமலையில இருந்து 35 கி.மீ தூரத்துல இருக்கு தண்டராம்பட்டு. இந்த சின்ன நகரத்துலருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்துல பிரதான சாலைக்குக் கீழே இருக்கு, பிரமாண்டமான ஒரு குளம். நாலு பக்கமும் குளத்துக்குள்ள இறங்க துறைகளும் தடுப்புச்சுவர்களும் அழகான படிகளும் கொண்ட அந்தக்குளம் பார்க்கவே வித்தியாசமா இருக்கு. மன்மதக்குளம்ன்னு அந்த ஊர் மக்களால அழைக்கப்படுற அந்தக் குளத்தோட பக்கச்சுவர்கள்லயும் படிக்கட்டுகள்லயும் விதவிதமான சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கு. பெரும்பாலான சிற்பங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட காதல் களியாட்டச் சிற்பங்கள்!

குளத்தோட நான்கு படித்துறைகள்லயும் நந்தி சிலைகள் அற்புதமான வேலைப்பாடுகளோட அமைக்கப்பட்டிருக்கு. அதுல சில சிலைகள் உடைஞ்சிருக்கு. சில சிலைகள் காணாமப் போயிடுச்சு. கீழே படிகள்ல கால் வைக்கிற இடமெல்லாம் பள்ளி, தேள், நண்டு, பாம்பு, ஆமை, மான், அன்னம், மீன், நாகம்னு கூடலுக்கும் ஊடலுக்கும் அடையாளச் சின்னங்களா இருக்கிற உயிரினங்களோட சிற்பங்களை அழகழகா கற்கள்ல செதுக்கி வச்சுருக்காங்க அந்தக்காலச் சிற்பிகள்.

மன்மதக்குளம்
மன்மதக்குளம்
குளத்தோட வாயிலைக் கடந்து கீழே இறங்கினா தடுப்புச்சுவர் முழுக்க அந்தக்கால மக்களோட வாழ்க்கை முறையையும் கொண்டாட்டங்களையும் விவரிக்கிற சிற்பங்கள்... வில் தரிச்சு சண்டையிடுற வீரர்கள், சிவன் விஷ்ணுன்னு நுட்பமா வடிக்கப்பட்ட தெய்வ உருவங்கள்... விதவிதமான இசைக்கருவிகளை இசைக்கிற ஆண்கள், அந்த இசைக்கேற்ப நடனமாடுற பெண்கள்... இரண்டு யானைகள் தும்பிக்கையால இணைஞ்சு நிற்கிற சிற்பம் அவ்வளவு நேர்த்தியா வடிக்கப்பட்டிருக்கு. இன்னொரு சிற்பத்துல ஒரு யானையோட சண்டையிடுற வீரன் உருவம் செதுக்கப்பட்டிருக்கு.

அந்தக்கால மக்களோட வாழ்க்கையில யுத்தம் பிரதான அங்கமா இருந்திருக்கு. உணவுக்காக விலங்குகளோட களமாடுறது... நாட்டுக்காக எதிரிகளோட சண்டை போடுறதுன்னு சண்டை போட்டுட்டு வந்து இசையும் நடனமுமா வாழ்க்கையைக் கொண்டாடி களைப்பையும் அழுத்தத்தையும் போக்கியிருக்காங்க. அதற்குப் பிறகு என்ன..? காதலும் காமமும் தானே... அதை உணர்த்துற மாதிரி யுத்தம், வேட்டை, நடனம், இசைக்கப்புறம் காதல் களியாட்டச் சிற்பத் தொகுப்புகள் தொடங்குது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலுணர்வு வரம்பில்லாதது. மிக நுண்ணிய கற்பனை இழைகள்ல பயணிக்கிற உணர்வு அது. இதுதான், இப்படித்தான்ன்னு இல்லாம விதவிதமான பாலுணர்வு சிற்பங்கள் குளத்தோட பக்கச்சுவர்ல வடிச்சு வச்சிருக்காங்க. விலங்குகளோட கலவிக்காட்சிகள், தகிப்போட இணைக்காகக் காத்திருக்கும் ஆண் சிற்பங்கள், விதவிதமான பாலுறவுக் காட்சிகள்னு அந்தச் சுற்றுச்சுவரோட நான்கு பக்கங்களும் சிற்பப் புத்தகமா வடிக்கப்பட்டிருக்கு.

ஊருக்குப் பொதுவா இருக்கிற ஒரு குளத்துல ஏன் இப்படியான பாலியல் சிற்பங்களை வடிச்சாங்க?

மன்மதக்குளம்
மன்மதக்குளம்

இந்தக் கேள்விக்கு ஒரு தந்தையும் மகளும் உள்ளடங்கின நெகிழ்ச்சியான வரலாறு பதிலா இருக்கு.

கி.பி 16, 17ம் நூற்றாண்டுல தண்டராம்பட்டு வட்டாரத்தை சின்னையன்ங்கிற குறுநில மன்னன் ஆட்சி செஞ்சிருக்கான். அறிவும் வீரமும் ஒருங்கே அமைஞ்சு மக்கள்மேல அக்கறையோட ஆட்சி செஞ்சுக்கிட்டிருந்த அந்த மன்னனுக்கு ஒரு மகள் இருந்திருக்கா. அந்த ஒற்றை மகள்மேல உயிரையை வச்சிருந்தானாம் சின்னையன். அந்தப் பெண் பருவம் எய்துறதுக்கு முன்னாடியே அவளோட அம்மா, அதாவது ராணி இறந்துட்டாங்களாம். நாட்டு நிர்வாகம், யுத்தம்ன்னு பரபரப்பா இருந்த அரசனுக்கு மகள்மேல கவனம் செலுத்த முடியல. அந்தந்த வயசுல கத்துக்க வேண்டிய விஷயங்களை அந்தப் பெண் கத்துக்காமலே வளர்ந்திருக்கா.

காலம் ஓட ஓட இளவரசிக்கு வயசாகிக்கிட்டே போச்சு. மந்திரிமாரெல்லாம் அரசனுக்கு நினைவூட்ட, மக இருக்கிற நினைப்பே இல்லாமப் போச்சேன்னு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாராம் ராஜா. அண்டை நாட்டுல உறவுமுறைக்குள்ள வர்ற ஒரு இளவரசனுக்கு தன்னோட மகளை நிச்சயம் பண்ணி சீரும் சிறப்புமா கல்யாணத்தை முடிச்சாரு ராஜா.

ஊரு மெச்ச சீர் செனத்திகளை நிரப்பி புகுந்த வீட்டுக்கு மகளை அனுப்பி வச்சாரு. போன மகள் நல்லா வாழ்ந்து பேரெடுத்துத் தருவான்னு நினைச்ச ராஜாவுக்கு, இடி விழுந்த மாதிரி ஆயிப்போச்சு... நான்காவது நாள் மகளும் மருமகனும் அரண்மனையில வந்து நின்னாங்க. "உங்க மகளை வச்சு என்னால வாழமுடியாது. அவளுக்கு தாம்பத்யத்துல கொஞ்சம்கூட ஈடுபாடே இல்லை. நல்லது கெட்டது கத்துக்கொடுத்து அனுப்பி வைங்க"ன்னு வந்த கையோட மனைவியை விட்டுட்டுக் கிளம்பிட்டார் மருமகன்.
மன்மதக்குளம்
மன்மதக்குளம்

ராஜா நிலைகுலைஞ்சு போயிட்டாராம். அம்மா இல்லாம வளர்ந்த பொண்ணு. அந்தந்த வயசுல சொல்ல வேண்டியதைச் சொல்லிக்கொடுத்து வளர்க்காம விட்டதுதான் இப்போ பிரச்னையாயிடுச்சு... தோளுக்கு மேல வளர்ந்த மகளுக்கு அப்பாவா இருந்து இந்த மாதிரி விஷயங்களை எப்படிச் சொல்லிக்கொடுக்கிறதுன்னு கவலை... முகம் வாடி நின்ன ராஜாவைப் பார்த்து ஒரு மந்திரிதான் அந்த ஆலோசனையைச் சொல்லியிருக்கார்.

"ராஜா, நேரடியா உங்க மகள்கிட்ட இது விஷயமாப் பேச முடியாது. இளவரசிக்காக அரண்மனைக்கு பக்கத்துல ஒரு குளம் வெட்டுவோம். அந்தக் குளத்தைச் சுத்தி வாழ்க்கைன்னா என்ன, குடும்பம்னா என்ன, தாம்பத்யம்னா என்னன்னு சொல்லிக்கொடுக்கிற மாதிரி சிற்பங்களை செதுக்கி வைப்போம். அதைப் பார்த்து இளவரசி கத்துக்கட்டும்"ன்னு அந்த மந்திரி சொன்ன யோசனை ராஜாவுக்குப் பிடிச்சுப்போச்சு. உடனடியா குளம் வெட்டுற வேலை நடந்துச்சு.

கைதேர்ந்த சிற்பிகள் வரவழைக்கப்பட்டு கிளர்ச்சியூட்டுற வகையில குளத்தோட தடுப்புச்சுவர்களெங்கும் சிற்பங்கள் வடிச்சாங்க. குளத்துக்குக் குளிக்கப்போன இளவரசி அந்தச் சிற்பங்களைப் பாத்து தாம்பத்ய ரகசியங்களைப் புரிஞ்சுக்கிட்டு புகுந்த வீட்டுக்குப் போய் குழந்தை குட்டிகளோட சந்தோஷமா வாழ்ந்ததா இந்தப்பகுதி மக்கள் ஒரு கதை சொல்றாங்க.

அம்மா ஸ்தானத்துல இருந்து இளவரசிக்குப் பாலியல் விஷயங்களை புரிய வைச்ச இந்தக் குளத்துக்கு ராஜா, அம்மா குளம்னே பேர் வச்சுட்டார்.

மன்மதக்குளம்
மன்மதக்குளம்

அம்மா குளம் இப்போ தமிழகத் தொல்லியல் துறையோட பாதுகாப்புல இருக்கு. கால ஓட்டத்துல இந்தச் சிற்பங்கள் எல்லாம் தேய்ஞ்சுக்கிட்டே போகுது. பல சிற்பங்கள் முகம் சிதைஞ்சு பொருளற்றதா மாறிக்கிட்டிருக்கு.

தான் வெட்டின சிற்பக் குளம் தன்னோட மகளுக்குப் பாலியல் கல்வியைப் போதிச்சு அவ வாழ்க்கையை மாத்தினதைக் கண்ட ராஜா, தன் தேசத்துல உள்ள அம்மா இல்லாத பெண்கள் எல்லாருக்கும் இதே வழியைப் பயன்படுத்தி பாலியல் கல்வி போதிக்கனும்னு நினைச்சிருக்கார். அவரோட ஆளுகைக்கு உட்பட்ட தண்டராம்பட்டு அரூர் சாலையில இருக்கிற சின்னையன்பேட்டைங்கிற ஊர்ல இதேமாதிரி ஒரு சிற்பக் குளத்தை உருவாக்கினார்.

அந்தக் குளமும் அற்புதமான பாலுணர்வு சிற்பத் தொகுப்புகள் கொண்ட கல் அருங்காட்சியமாக இருக்கு. ராமாயண மகாபாரதக் காட்சிகளோட கற்பனையே செய்யமுடியாத காதல் களி்யாட்டக் காட்சிகள் அங்கே சிற்பங்களா வடிக்கப்பட்டிருக்கு. அந்தச் சிற்பங்களோட வடிவ நேர்த்தியும் கற்பனையும் வியக்க வைக்குது.

சின்னையன்ங்கிற மன்னனால வெட்டப்பட்ட குளம்ன்னு வரலாறு சொன்னாலும் இந்தப் பகுதி மக்கள் இந்தக் குளம் பத்தி இன்னொரு கதை சொல்றாங்க. இந்தப் பகுதியில ரெண்டு கொள்ளையர்கள் வாழ்ந்திருக்காங்க. அவங்களுக்கு ஒரு தங்கை இருந்திருக்கா. ராஜாக்கள் காலத்துல பெரிய வணிகப்பாதையா இருந்த இந்தவழியா வந்த வணிகர்களை வழிமறிச்சு கொள்ளையடிச்சு பெரும் செல்வம் சேர்ந்ததாவும் அந்தச் செல்வத்தை வச்சு தங்கைக்கு மிகப்பெரிய அரண்மனை கட்டிக் கொடுத்ததாவும் தனிமையில் வாழ்ந்த தங்கை பருவ வயதுக்கான வளர்ச்சியில்லாம இருந்ததாவும் அதைப் பார்த்து வருந்திய சகோதரர்கள் தங்கள் செஞ்ச பாவங்கள்தான் தங்கை இப்படியாக காரணம்ன்னு நினைச்சு அந்தப் பாவத்தைப் போக்க இந்தக் குளத்தை வெட்டியதாவும் சுற்றுச்சுவர்கள்ல இச்சையைத் தூண்டும் சிற்பங்களை வடிச்சதாவும் தினமும் அங்கே குளிக்க வந்த அந்தப்பெண் சிற்பங்கள் ஏற்படுத்தின மாற்றம் காரணமா திருமண ஆசை ஏற்பட்டு நல்லபடியா வாழ்ந்ததாவும் அந்தக் கதைப் பயணிக்குது.

மன்மதக்குளம்
மன்மதக்குளம்

இந்தக் குளத்துல ஆண்-பெண் பாலியல் சிற்பங்கள் மட்டுமில்லாம விலங்குகள் மனிதர்களைப் பாலியல் இச்சையோட துரத்தும் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கு. கேலியும் கிண்டலும் நிறைஞ்ச சிற்பங்களும் இங்கே நிறைய இருக்கு.

இந்த இரண்டு குளங்கள்லயுமே வடிக்கப்பட்ட சிற்பங்கள்ல ஒரு வித்தியாசத்தை நான் உணர்ந்தேன். வழக்கமா நம் சமூகத்துல காணக்கிடைக்கிற பாலியல் விஷயங்கள் எல்லாம் ஆண்களோட பார்வையில ஆண்களுக்கானதாவே இருக்கு. ஆனா இங்கே செதுக்கப்பட்டிருக்கிற பாலியல் சிற்பங்கள் அனைத்தும் பெண்களோட பார்வையில பெண்களுக்கானதாக செதுக்கப்பட்டிருக்கு. பெரும்பாலும் ஆண்கள் கேலிக்குரியவர்களாவும் பெண்கள் ஆதிக்கம் செலுத்துறவங்களாவுமே சிற்பங்கள் இருக்கு.
மன்மதக்குளம்
மன்மதக்குளம்

பாலியல் கல்வி பத்தி காலங்காலமா பேசிக்கிட்டேயிருக்கோம். இன்னைக்கு இணையம் சரியும் தப்புமா பிள்ளைகளுக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்திருக்கிட்டிருக்கு. ஆண்களும் பெண்களும் முகம் பார்த்தே பேசத்தயங்குன அந்தக்காலத்துல கலைகள் மூலமா பாலியல் போதிச்சிருக்காங்க. ஊரோட எல்லையில இருக்கிற காவல் தெய்வங்களோட திருவிழாவுல மூத்த ஆண்கள் முன்னிலையில விடலைப்பசங்க கூடியிருக்க குறவன் குறத்தியாட்டம் நடத்துவாங்க. நடன அசைவுகளும் உரையாடல்களும் இலைமறைகாயா பாலியலைக் கத்துக்கொடுக்கும். பெண்களுக்கு அவ்வை நோன்புங்கிற வழிபாடு மூலமா பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினாங்க நம்ம அம்மாக்கள். இதுக்கெல்லாம் முன்னால குளத்தையே பாலியல் பள்ளிக்கூடமா மாத்தி வச்சிருக்கார் ஒரு ராஜா. கற்களால உருவாக்கப்பட்ட கலவிப் புத்தகமா இருக்கிற இந்த மன்மதக் குளத்தை நம் பண்பாட்டை நினைவுகூர்ற ஒரு வரலாற்று நினைவு சின்னம்னு சொன்னா மிகையில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism