மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரனை தெரியுமானு கேட்டா, எல்லாரும் கொஞ்சம் யோசிப்பாங்க.. ஆனா, எம்.ஜி.ஆரைத் தெரியுமானு கேட்டுப்பாருங்க. தெரியாதுன்னு யார்னாலயும் சொல்லமுடியாது. அப்படியொரு அடையாளத்தை உருவாக்கிச் சென்றவர் அவர். அந்த அடையாளம் உருவாவதற்கு, அசாதாரன முயற்சி தேவைப்பட்டுச்சு. ஏன்னா, அவரோட ஆரம்பகாலத்துல, எம்.ஜி.ஆர்னு சொன்னாலும் சரி மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்னு சொன்னாலும் சரி.. யாருக்குமே தெரியாது. ’சின்னவர்’ னு சொன்னாதான் தெரியும். எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்திவந்த அவரோட சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியை, நாடக உலகத்துல பெரியவர்னு கூப்பிடுவாங்க. அதனால எம்.ஜி.ஆருக்கு 'சின்னவர்'னு பேரு. அந்த சின்னவர் மாபெரும் தலைவரா உருவான கதை, இன்னும் ஆண்டாண்டு காலத்துக்கு சொல்லிக்கொண்டே இருக்கக்கூடிய ஆச்சர்யக் கதை.

அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி.. எம்.ஜி.ஆர் யாரும் தொட முடியாத உச்சத்தை தொட்டிருக்காரு. ’அவரு சினிமாவுல நடிச்சு பெரியாள் ஆனாரு. அப்புறம் அத வெச்சே அரசியலுக்கு வந்து ஜெயிச்சாரு’ என்பதுதான் எம்.ஜி.ஆர் மேல பெரும்பாலானோருக்கு இருக்கப் பார்வை. சினிமாவானாலும் அரசியல் ஆனாலும், எம்.ஜி.ஆர் எவ்வளவு தீவிரமா உழைச்சார்-ன்றது இன்னைக்கு வரைக்கும் மறைக்கப்பட்ட கதையாகவே இருக்கு.
இலங்கையின் கண்டிக்கு பக்கத்துல நாவலப்பிட்டி-ன்ற கிராமத்துல மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்.ஜி.ஆர். தாயகமான தமிழகம் திரும்பிய கொஞ்ச நாள்லயே எம்.ஜி.ஆரின் தந்தை இறந்திடுறாரு. வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாத காரணத்துனால நாடகக் கம்பனில வேலைக்கு சேர்ந்தனர் எம்.ஜி.ஆரும் அவரோட அண்ணன் சக்கரபாணியும்.
பள்ளியில் படிக்கும்போது ‘லவகுசா’ன்ற நாடகத்துல லவனாக நடிச்சார் எம்.ஜி.ஆர். அவரோட தோற்றத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்து, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனி வேலை குடுக்குறாங்க. அண்ணனையும் சேர்த்துக்கிட்டாத்தான் நான் வருவேன்னு சொல்லிடுறார் எம்.ஜி.ஆர். காரணம் குடும்பத்தின் வறுமை. 3 வது படிக்கும்போது படிப்பைவிட்டுட்டு குடும்பத்துக்காக நடிக்க வந்தவர் எம்.ஜி.ஆர். ’படிக்க வேண்டிய வயசுல இருக்குற பசங்கள பிழைப்புக்காக நடிக்க அனுப்பவேண்டியதா போச்சே’னு வருத்தப்பட்டாங்க எம்.ஜி.ஆரின் அம்மா.

இப்படியான சூழல்லதான், நாடகங்கள்ல தன்னோட சிறப்பான பங்களிப்பின் மூலம் தவிர்க்கமுடியாத கதாப்பாத்திரமா உருவானார் எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில இருக்கவங்க எல்லாருக்கும் சினிமா வாய்ப்பு கிடச்சிடுறதில்ல. அதுக்கு அபாரமான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டது. அங்கிருந்து உச்சநட்சத்திரம் ஆன எம்.ஜி.ஆரின் உழைப்பும் உயர்வும் உலகம் அறிந்தது.
எப்படி எம்.ஜி.ஆரின் சினிமா வரவுக்குப் பின்னாடி இப்படியான யாரும் அறிந்திடாத உழைப்பின் கதை இருக்கோ, அதே மாதிரி எம்.ஜி.ஆரோட அரசியல் வரவுக்குப் பின்னாடியும் இப்படியான உழைப்பும், அர்ப்பணிப்பும் இருக்கு.
சினிமால நடிச்சிட்டு அரசியலே தெரியாம கட்சி ஆரம்பித்தவர் அல்ல எம்.ஜி.ஆர். அதிமுக ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1972. அதுக்கு சரியா 20 ஆண்டுகளுக்கு முன்னாடி 1952ல பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுகவில் இணைந்தார். 1957ல முதல்முறையா தி.மு.க.வை ஆதரிச்சு தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செஞ்சாரு. அந்த தேர்தல்ல திமுக 15 இடங்கள்ல வென்றது.

1958 - சென்னை வருவதாக இருந்த நேருவுக்கு கறுப்புக் கொடி காட்ட தி.மு.க. திட்டம் வகுத்ததால, முன்னெச்சரிக்கை நடவடிக்கையா எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., போன்றோரை கைது செஞ்சு சென்னை மத்திய சிறையில் அடைச்சாங்க. அப்போதைய உச்ச நட்சத்திரமா இருந்த எம்.ஜி.ஆர், சிறைக்குள்ள கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகைகளை மறுத்துட்டார். 1962ல இரண்டாவது முறையா தி.மு.க.வை ஆதரிச்சு எம்.ஜி.ஆர் பிரசாரம் செஞ்சார். அந்த தேர்தல்ல, 52 இடங்கள்ல தி.மு.க. வென்றது. 1962ல சட்டமன்ற மேலவை உறுப்பினரானார். 1965ல இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்டத்துல கலந்துக்கிட்டாரு. 1967ல தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரா தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறுசேமிப்பு துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 1971ல மறுபடியும் சட்டமன்ற உறுப்பினரா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வருடம் ஜூலையில, திராவிட முன்னேற்றக் கழக பொருளாளரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1972ல திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்படுறாரு எம்ஜிஆர். அப்போதான் அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பிக்கிறார். அதுவும் அதிமுக அவரால் தொடங்கப்பட்ட கட்சியல்ல. அது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட கட்சி.

புதியக் கட்சி தொடங்க விரும்பிய எம்.ஜி.ஆர், அப்போ அனகாபுத்தூர் இராமலிங்கம்-ன்றவர் ‘அதிமுக’-ன்ற பேர்ல பதிவு செஞ்சு வெச்சிருந்த கட்சியில தன்னை இணைச்சுக்கிட்டாரு. அப்போ, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்’ னு அறிவிச்சார் எம்.ஜி.ஆர். அதுமட்டுமில்லாம, இராமலிங்கத்துக்கு மேல்சபை உறுப்பினர் பதவியும் கொடுத்தாரு. இந்தக் கட்சிதான் பின்னாட்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இப்படி முறையா அரசியலின் அடியாழத்திலிருந்து தலைவரா தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர் எம்.ஜி.ஆர். அரசியலிலும் சினிமாவிலும் தன்னாலான அதிகபட்ச பங்களிப்பை செஞ்சிடனும்னு தீவிரமா உழைச்சார். சினிமாவுல புகழ்பெற்ற நடிகராக இருந்தபோதும், தொடர்ந்து தனது எம்.ஜி.ஆர் நாடக மன்றம் மூலம் நாடகங்களை ஊர் ஊரா நடத்திவந்தார் எம்.ஜி.ஆர். அவருடைய 'இடிந்தகோயில்', 'இன்பக்கனவு' நாடகங்கள் தமிழகத்தில் நடக்காத ஊர்களே இல்லனு சொல்லலாம். நடிகரா இருந்தது மட்டுமில்லாம, இயக்குநர் தயாரிப்பாளர், கதாசிரியர்னு எல்லா முயற்சிகளும் செய்துபார்த்தவர் எம்.ஜி.ஆர்.

திரைத்துறைக்கு தன்னாலான பங்களிப்பை கொடுத்துட்டே இருக்கனும்னு, முதல்வரான பிறகும் நினைச்சவர். மிகப்பெரிய செல்வாக்கு வெளிச்சத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்னாலும், மக்களுக்காக அவர் எதுவுமே செய்யலனு குற்றச்சாட்டு இன்னைய வரைக்கும் வைக்கப்படுது. அரசியல்வாதியா அவர் சரியானவரா இல்லாம இருந்திருக்கலாம், ஆனா கலைத்துறையில் எம்.ஜி.ஆரின் பங்கு என்றென்றும் நினைவுகூறக்கூடியது.