Published:Updated:

``குழந்தைகளுக்கு கொரோனா பற்றி தெரியணும்…” - விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் தேனி இளைஞர்

ஓவியத்தை ஆர்வமாக பார்க்கும் குழந்தைகள்
ஓவியத்தை ஆர்வமாக பார்க்கும் குழந்தைகள்

கொரோனா விழிப்புணர்வு, குழந்தைகளுக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேனி நகரின் முக்கிய இடங்களில் சுவரில் ஓவியம் வரைந்து அசத்திவருகிறார் இளைஞர் ஒருவர். அவருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

தேனி நகரின் முக்கிய இடங்களில் உள்ள சுவர்களில் பெரும்பாலும் அரசியல் கட்சிகள், சினிமா நடிகர்கள், திருமணம், விளம்பரங்கள் அடிப்படையிலான போஸ்டர்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் அந்தச் சுவரை சுத்தம் செய்து, கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்துகிறார் சந்துரு.

ஓவியத்தை ஆர்வமாக பார்க்கும் குழந்தைகள்
ஓவியத்தை ஆர்வமாக பார்க்கும் குழந்தைகள்
ஒரு முறை ஓவியம் வரைய ரூ.500 செலவாகும். ஆனால், ஓவியத்தைப் பார்த்து, 10 குழந்தைக்கு கொரோனா பற்றியும், அதிலிருந்து தற்காத்துக்கொள்வது பற்றி தெரிந்தால் அதுவே எனக்குப் போதும்.
சந்துரு

அவரிடம் பேசினோம். ``சென்னையில், இளங்கலை கவின்கலை முடித்துள்ளேன். தேனியில் தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்துவந்தேன். கொரோனா நோய் தொற்று நம்முடைய இயல்பு வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. பெரியவர்கள் அனைவரும் கொரோனா வைரஸிடம் இருந்து தங்களை எப்படி தற்காத்துக்கொள்வது என தெரிந்துவைத்துள்ளனர். அரசு செய்த விழிப்புணர்வும் அவர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக்கொடுத்தால்தான் கொரோனா பற்றி தெரியும். பெரும்பாலான பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை பத்திரமாக வீட்டுக்குள் வைத்துக்கொள்வதைதான் செய்கிறார்கள். குழந்தைகளுக்கு கொரோனா பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை. அதற்காகதான் இந்த ஓவியம் வரைய திட்டமிட்டு வரைந்திருக்கிறேன்.

`பாக்கெட்டில் உள்ள தேதியைப் பாருங்கள்..!' -தேனி மக்களை அச்சுறுத்தும் காலாவதி உணவுப் பொருள்கள்

ஓவியத்தில் சின்சான், சோட்டா பீம் போன்ற கார்டூன் கதாபாத்திரங்கள் உரையாடிக்கொள்வது போலவும், குழந்தைகளுக்கு கொரோனா பற்றியும், அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது என்று சொல்லுவது போலவும் வரைகிறேன். இதுவரை, தேனி நகரின் கொண்டுராஜா பள்ளி அருகேயும், பழைய அரசு மருத்துவமனை அருகேயும் உள்ள சுவரில் ஓவியம் வரைந்துள்ளேன். அடுத்து சில இடங்களில் வரையத் திட்டமிட்டுள்ளேன்.

சந்துரு
சந்துரு

அப்பா, அம்மாவுடன் காரிலோ, பைக்கிலோ செல்லும் குழந்தைகள், இந்தச் சுவர் ஓவியத்தைப் பார்த்து ஆர்வத்தோடு பெற்றோர்களிடம் கேட்கின்றனர். குழந்தைகளுக்கு அந்த ஓவியத்தில் என்ன இருக்கிறது என சொல்வதற்காகவே, சில நிமிடங்கள் சாலையோரம் நின்று ஓவியத்தைப் பார்த்து அதில் உள்ள கருத்துகளைப் படித்து, தனது குழந்தைக்குச் சொல்கின்றனர். இதுதான் எனக்குக் கிடைத்த வெற்றி. ஒரு முறை ஓவியம் வரைய ரூ.500 செலவாகும். ஆனால், ஓவியத்தைப் பார்த்து, 10 குழந்தைக்கு கொரோனா பற்றியும், அதிலிருந்து தற்காத்துக்கொள்வது பற்றி தெரிந்தால் அதுவே எனக்குப் போதும்” என்றார் புன்னகையோடு.

`வேதனையான நாள்களைக் கடந்து வந்திருக்கிறேன்!' -துபாயில் தவித்த தேனி இளைஞர் ஊர் திரும்புகிறார்
அடுத்த கட்டுரைக்கு