Published:Updated:

``50 வருஷமா கீத்து பின்னியும் குடிசைய கட்டமுடியலை!” - புலம்பும் புதுக்கோட்டை தொழிலாளர்கள்!


தென்னங்கீற்று முடையும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பங்கள்
தென்னங்கீற்று முடையும் தொழிலில் ஈடுபட்டு வரும் குடும்பங்கள்

குடிசை வீடுகளாக இருந்த பல பகுதிகள் இன்று கான்கிரீட் கட்டடங்களாக உருவெடுத்து வருவதாலும், வீட்டுச் சுப, துக்க நிகழ்வுகளில் தென்னங்கீற்று கொட்டைகளுக்கு மாற்றாக சாமியான பந்தல், தகரச்சீட்டு கொண்டு கொட்டகைகள் அமைக்கப்படுவதாலும், தென்னங்கீற்று முடையும் தொழில் நலிவடைந்து வருகிறது.

புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது முத்துப்பட்டினம் கிராமம். இங்கு புதுக்கோட்டை- அறந்தாங்கி பிரதான சாலையையொட்டி 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை போட்டு வசித்துவருகின்றன. இவர்களுக்குத் தென்னங்கீற்று முடைவதுதான் முழு நேரத் தொழில். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னங்கீற்று முடையும் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்துவருகின்றனர்.

சாலையின் ஓரங்களில் உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மரங்களையொட்டி, ஆயிரக்கணக்கில் முடைந்த தென்னங்கீற்றுகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. அருகில் உள்ள சிறிய குட்டையில் நூற்றுக்கணக்கான தென்னை மட்டைகள் ஊறிக்கொண்டிருக்கின்றன.

``ஊறவைத்த தென்னை மட்டைகளை இரண்டாக வெட்டி எடுத்து வந்து, சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தடியில் போடுகிறார் நாகூர் கனி. சாலையில் இடைவிடாது வாகனங்கள் சென்று கொண்டிருக்கிறது. சாலையைக் கடந்துசெல்லும் வாகனங்களின் ஹாரன் சத்தம் காது சவ்வுகளைக் கிழிக்கிறது

பின்னுவதற்காக ஊற வைக்கப்பட்டுள்ள தென்னமட்டைகள்
பின்னுவதற்காக ஊற வைக்கப்பட்டுள்ள தென்னமட்டைகள்

இவ்வளவு நெருக்கடிகளுக்கும் இடையில் புளிய மரத்தடி நிழலில் அமர்ந்தபடி, கீற்று முடைந்துகொண்டிருக்கும் நாகூர் கனிக்கு வயது 64. அவரிடம் பேசினோம், ``20 வருஷத்துக்கும் முன்னாடி எல்லாம் எங்கு பார்த்தாலும் குடிசை வீடுகளாத்தான் இருக்கும். மாட்டுக்கொட்டகை, வீட்டுத் தாவாரம்னு தென்னங்கீத்து கொட்டகைகள் இல்லாத வீடுகளே இருக்காது.

தென்னங்கீற்று முடையும் நாகூர்  கனி
தென்னங்கீற்று முடையும் நாகூர் கனி

வீடுங்க, கொட்டகைங்க எல்லாத்தையும் தென்னங்கீத்துலதான் கட்டி இருப்பாங்க. வருஷத்துக்கு ஒரு தடவை எப்படியும் அதை மாத்திருவாங்க. அப்போ, தென்னங்கீத்துகளைப் பின்னிக் கொடுக்க முடியாத அளவுக்குப் பரபரப்பா இருப்போம். சில நேரங்கள்ல ஆர்டர் கொடுத்தவங்க நம்ம வேலையை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நேரடியாக வந்துருவாங்க. பொறுமையாக உட்கார்ந்து வாங்கிக்கிட்டுப் போவாங்க.

ஒரு மணி நேரத்துக்குள்ள பின்னிய கீத்துகள் எல்லாம் விற்பனைக்குப் பறந்து போயிடும். அந்த அளவுக்கு அப்போ கீத்துக்களுக்கு கடுமையான கிராக்கி இருந்துச்சு. இன்னைக்கு பின்னி முடிஞ்ச நூத்துக்கணக்கான கீத்துக்களைச் சாலை ஒரத்துல உள்ள மரங்களையொட்டி அடிக்கி வச்சிருக்கோம். ஒரு மாசம் ஆனாலும், அப்படியேதான் இருக்குது. இப்போ, தென்னங்கீத்துகளை வச்சு மட்டும் முழுசா வீடு கட்டுறவங்க எல்லாம் ரொம்பவே கொறஞ்சு போய்ட்டாங்க. குடிசை வீட்டுக்காரங்க பெரும்பாலும் மெத்த வீடு கட்டிட்டாங்க.


விற்பனைக்காக தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்தென்னங்கீற்றுகள்
விற்பனைக்காக தயார் நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்தென்னங்கீற்றுகள்

மெத்த வீடு கட்டுறது நல்ல விஷயம்தான், அது எங்க தொழிலை பாதிச்சிருச்சே என்ற சின்ன வருத்தம்தான் எங்களுக்கு. இப்பவும் கிராமத்துப் பக்கம் கல்யாணம், காதுகுத்துகள்ல தென்னங்கீத்து கொட்டகை போடுவதற்குன்னு ஆளுங்க இருக்கத்தான் செய்றாங்க. அவங்களை வச்சுத்தான் இப்போ இந்தத் தொழிலை ஓட்டிக்கிட்டு இருக்கோம். எனக்கு வெவரம் தெரிந்த காலத்துல இருந்து 50 வருஷமா நான் கீத்து பின்னுறதை தொழிலா செஞ்சிட்டு வர்றேன்.

இத்தனை வருஷ உழைப்புல என்னோட ரெண்டு பொம்பளை பிள்ளைகளைக் கல்யாணம் செஞ்சுகொடுத்ததுதான் மிச்சம். கஜா புயல் அடிச்சி, குடியிருக்கிற வீடு முழுமையா சேதமடைஞ்சு போச்சு. தார்பாய் போட்டு மூடி குடியிருந்துக்கிட்டு இருக்கேன். இப்போ 6 மாசத்துக்கும் மேலாகிப் போச்சு. 50 வருஷமா கீத்து பின்னுற என்னால, என்னோட குடிசை வீட்டை எடுத்து, கட்ட முடியலை. ஒரு நாளைக்கு மனைவியோடு சேர்ந்து பின்ன ஆரம்பிச்சா 200 கீத்துகள் பின்ன முடியும். எல்லாம் விற்பனைக்குப் போனால் கைக்கு ரூ.300 கிடைக்கும். இப்ப எல்லாம் நாளைக்கு 100 கீத்துகள் பின்னுறதே கஷ்டம்தான். இப்போ, கஜா புயலுக்குப் பிறகு தென்னமட்டைகளுக்கும் கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டு போச்சு. இதனால், விலையும் ஏறிப் போச்சு. கீத்து பின்னுறதையும் கொஞ்சம் கொறச்சுக்கிட்டோம்.

தென்னங்கீற்று முடையும் தொழிலாளி
தென்னங்கீற்று முடையும் தொழிலாளி

ஆர்டர் கொடுத்தா மட்டும் பின்னிக்கொடுக்கிறோம். வருமானமும் கொறஞ்சுபோச்சு. இந்த ஊரைச் சுற்றியுள்ள பல பகுதிகள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கு. கடந்த பல வருஷமா பருவமழை இல்லாததால, விவசாய வேலைகள் எல்லாம் கிடைக்கிறதில்லை. ஆனாலும், வேற எந்தத் தொழிலும் எங்களுக்குத் தெரியாது. வருமானம் கிடைக்கலைன்னாலும்கூட கீத்து பின்னின கை சும்மா இருக்காது. எப்படியாவது கீத்து பின்னச் சொல்லிக்கிட்டே இருக்கும். விற்குதோ, விற்கலையோ கீத்து பின்னாமல் ஒரு நாளும் இருக்க மாட்டேன்" என்கிறார் வைராக்கியமாக.

4-வது தலைமுறையாக தென்னங்கீற்று முடைந்து வரும் நாகராஜனிடம் பேசினோம், ``ஆலங்குடி, சிலட்டூர், தாந்தாணி, மறமடக்கினு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளுக்கு நேரடியாகச் சென்று, தென்னமட்டைகளை மொத்தமாக எடுத்து வந்து கீத்து முடைவோம். கஜா புயலால், தென்ன மரங்கள் எல்லாம் அழிஞ்சு போனதால, மட்டைக் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. தென்ன மட்டை விலையையும் ஏத்திட்டாங்க. ஏத்துக்கூலி, இறக்குக்கூலி போக இன்னைக்கு தென்ன மட்டையைக் கொண்டு வந்து சேர்க்க, 4 ரூபாய் அடக்கம் ஆகுது. தென்னங்கீத்த பின்னி விற்கும்போது கீத்தப் பொறுத்து 5 ரூபாயில் இருந்து ரூ.6 வரையிலும் கிடைக்கும்.

கஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள்
கஜா புயலால் வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள்

அதுவும், விற்பனை ஆனாதான் கிடைக்கும். ஒரு நாளைக்கு ரூ.100 கிடைக்கிறதே கஷ்டம்தான். எனக்கு விவரம் தெரிஞ்சி இங்கு 25 குடும்பங்கள் வரையிலும் கீத்து பின்னுற தொழில்தான் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. 15 குடும்பத்துக்கும் குறைவாகத்தான் இப்போ இந்தத் தொழிலைச் செய்றாங்க. மத்தவங்க, மாற்றுத் தொழிலுக்குப் போயிட்டாங்க.

மாற்றுத்தொழில் தெரியாத நாங்கதான் இந்தத் தொழிலை விடாமல் கெட்டியா பிடிச்சிக்கிட்டு இருக்கோம். இலவச வீடு திட்டங்கள் வந்ததுக்குப் பிறகுதான் எங்க தொழிலுக்கு பெரிய அடி விழுந்திடுச்சு. இப்போ, இந்தத் தொழில்ல பெரிய வருமானம் கிடைக்கலை. நாளுக்கு நாள் நலிவடைஞ்சுக்கிட்டு வருது. பிள்ளைகளுக்கும் இந்தத் தொழிலைச் சொல்லிக்கொடுத்திருக்கோம். ஆனாலும், இந்தத் தொழில் வேண்டாம்னு சொல்லி வளர்க்கிறோம். படிச்சு, வேற ஏதாவது வேலைக்குப் போங்கனு சொல்றோம். இப்படிச் சொல்ல கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும், இன்னும் எத்தனை நாளுக்கு இந்தத் தொழில் நீடிக்குமோ'னு தெரியலை.

தென்னங்கீற்று முடையும் தொழிலாளி நாகராஜன்
தென்னங்கீற்று முடையும் தொழிலாளி நாகராஜன்

இப்ப தொழில் செய்யுற பலரும் கந்துவட்டிக்குப் பணம் வாங்கித்தான் செஞ்சிக்கிட்டு இருக்காங்க. இதனால, ரொம்பவே கஷ்டப்படுறாங்க. அரசு மானியம் கொடுத்து எங்களைக் கை தூக்கிவிட்டால், நிச்சயம் இந்தத் தொழிலை எங்களால் தொடர முடியும்" என்கிறார் எதிர்பார்ப்புடன்.

அரசுதான் இவர்களின் தொழிலைக் காக்க முன்வர வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு