மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மூன்றாம் உலகப் போர் - 01

மூன்றாம் உலகப்போர்
News
மூன்றாம் உலகப்போர் ( மூன்றாம் உலகப்போர் )

கவிப்பேரரசு வைரமுத்து ஓவியங்கள் : ஸ்யாம்

ன்றொரு நாள்...

அதிகாலை அழகை வழிபட வந்தவள் கடற்கரையிலேயே உறைந்துபோனாள் கற்சிலையாக.

நேற்றுப் பார்த்த மணல்வெளியா இது? நிறம் மாறி இருந்தது. காற்றின் பாடலுக்கு நடனமாடிய நாணற்புதரா அது..? தரையோடு தரையாய்க்-கிடந்தது. வெள்ளி மணல் வெளியெங்கும் தாறுமாறாய்த் தார் ஊற்றியது போல் ஒரு கரும் படலம்.

இது என்ன இயற்கைக்குப் புறம்பாய்..?

இது மெக்சிகோ வளைகுடாதானா? லூசியானா கடற்கரைதானா? இடம் மாறி வந்துவிட்டேனா? தலை சுற்றியது அவளுக்கு.

கடலோசையில் கேட்டது ஓர் அவலத்தின் சுரம்; நிமிர்ந்து நின்றவள் திடுக்கிட்டாள். அலையின் நிறம் வெள்ளை அல்லவா? பிறகு, ஏன் இருளின் திரவ வடிவமாய் அலை பொங்கி அடிக்கிறது கருங்கருப்பாய்?

பயந்து நடந்தாள்; காலணிகள் தாண்டிக் கால்களில் ஏறியது ஏதோ பிசுக்கு. ஒரு கால் ஊன்றி மறு கால் உதறினாள் எமிலி. காலணி கழன்றதன்றிக் கறுப்புச் சாயம் போகவில்லை.

அண்ணாந்து பார்த்தாள். காலைப் பறவை ஏதும் காணவில்லை வானத்தில். இன்னும் தரை இறங்கவில்லை வெளிச்சத்தின் விழுதுகள். தூரக் கடலில் தொடுவானத்தில் செம்பிழம்பு தெரிந்தது. கடல் எரியுமா? எரிகிறதே...

கடல்பரப்பில் சிவந்து எழுந்து நின்றது தீத்தூண் ஒன்று. அதை மண்டி நின்றது புகைமண்டலம். எரிமலை வெடித்திருக்குமோ கடலுக்குள்..?

அவள் உடல் நடுங்கியது. தங்கச் சாய-மிட்ட பட்டு நூல் கற்றைகளாய் அவள் வெள்ளிக் கழுத்தில் பொன்முடிகள் பட-படத்தன; காற்றில் ஆடியது காது வளையம்.

வெளிச்சம் பரவிப் பரவி, தூரத்து இருளைத் துடைத்துக்கொண்டே வந்தது.

லூசியானா கடற்கரையின் பதினாறு மைல் நீளத்திற்கும் ஒரே கறுப்புக் காட்சி தானா? ஏதோ ஒன்று நேர்ந்திருக்கிறது பூமி யின் இருப்புக்கு விரோதமாய்.

தூரத்தில் என்னவோ குவியல் குவிய லாய்..? ஓடிப்போய் பார்த்தாள்.

‘‘ஓ ஜீசஸ்!’’

கொத்துக் கொத்தாய்ச் செத்துக்கிடந்தன பெலிகான் பறவைகள். அவற்றின் ‘பனம் படு பனையின் கிழங்கு பிளந்-தன்ன’ கூரிய அலகுகள் பல திறந்தே-கிடந்தன; சில சிறகுகள் காட்டின ஜீவனின் கடைசி அசைவுகளை.

இன்னொரு பக்கம் பார்த்தாள் எமிலி; இழுத்த மூச்சை வெளியிட மறந்தாள். அலைகள் தூக்கியெறிந்த படகுகள், ஒன்றன் மேல் ஒன்றேறி ஒழுங்கற்றுக் கிடப்பதுபோல் கூட்டம் கூட்டமாய் இறந்துகிடந்தன நூற்றுக்-கணக்கான டால்ஃபின்கள்.

இழுத்த மூச்சை இப்போது விட்டதில் ஏறி இறங்கியது எமிலியின் மார்பு.

இன்னொரு புறம் & நெடுஞ்சாலை லாரியில் கொட்டிச் சிதறிய தானியங்-களாய், ஆயிரக்கணக்கான மீன் வகைகள் இரைந்துகிடந்தன இறந்தும் இறவாமலும். சில மீன்களின் உயிர்கள் வெளியேறிக் கொண்டிருப்பது தெரிந்தது வால்களின் துடிதுடிப்பில்.

என்ன கொடுமை இது!

மூன்றாம் உலகப் போர் - 01

யுகம்யுகமாய் உயிர்கள் படைத்த இயற்கை, ஒரே நாளில் அழிக்கப் பார்க்கிறதா? மிச்சம் -இருக்கப்போகும் ஒரே பிராணி மனிதன்-தானா? மனிதர்கள் இல்லாத உலகத்தில் விலங்குகளும் பறவைகளும் வாழ முடியும். ஆனால், மனிதரால் வாழ முடியுமா விலங்கு--களும் பறவைகளுமற்ற உலகத்தில்?

இந்தப் பக்கம் மொத்தமாய்ச் செத்துக் கிடந்தன ஹெரான் பறவைகள். அவற்றின் பேருடல்களுக்குப் பொருத்தமில்லாத குச்சிக் கால்கள் பின்னிக்கிடந்தன ஒன்றோடு ஒன்று.

‘‘செத்த பறவைகளில் ஒன்றுதான் நேற்று என் கேமராவில் மீன் பிடித்ததா?’’

பறவைகளின் சிநேகிதியாய்ப் பிறந்து, சுற்றுச்சூழல் பட்டதாரியாய் வளர்ந்த எமிலியின் நீலக் கண்கள் நீருறின.

கர்ப்பிணிபோல் வயிறு பெருத்த கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கினவா; கரை ஒதுங்கி இறந்தனவா -தெரியவில்லை.

மெக்சிகோ விழிக்கவில்லை. மிசிசிபியின் கரைகளுக்கு எட்டவில்லை சேதி இன்னும்.

எமிலி தெளிந்தாள். தோள்களைக் குலுக்கித் துணிச்சலை அழைத்துக்கொண் டாள். ஓடி ஓடிப் படம் எடுத்தாள். எல்லா உடல்களிலும் எண்ணெய்ப் பிசுக்கு மட்டும் இருப்பது கண்டாள். சில அதிகாரிகளும் வீரர்களும் கடலுக்குள் விரைந்துகொண்டு-இருந்--தார்கள் அவசரங்களின் முதுகில் ஏறி.

என்னவாயிற்று?

லூசியானா கடற்கரையிலிருந்து நாற்பத்-தோராவது மைலில் மெக்சிகோ வளை-குடாவுக்குள் அது நிகழ்ந்தது.

எண்ணெய்க் கிணறு குடைந்த ஆழ்துளைக் கருவிகள் தம் சக்தியின் மொத்தம் திரட்டி ஆழத்தில் ஒரு முட்டு முட்டியபோது, வெடித்து வெளியேறியது பூமி ஜாடியில் பூட்டப்பட்டுக் கிடந்த மீத்தேன் பூதம். அது வெளிப்பட்ட வேகத்தில் பட்டென்று திறந்துகொண்டது பெட்ரோல் ஊற்றின் பெருங்கண்.

மீத்தேனும் பெட்ரோலும் முட்டிக் கொண்டதில் பற்றிக்கொண்டது வளை-குடா; கடல் நீராலும் அதை அணைக்க முடிய--வில்லை. கடற்பரப்பில் இரண்டு-அங்குலம் படர்ந்த பெட்ரோல், போகப் போகப் பத்தங்குலமாய்க் கெட்டிப்பட்டது. கடல் எங்கும் கசிவுதான்; 580 சதுர மைலுக்கு எண்ணெய்ப் போர்வைதான். எண்ணெயை சுவாசிக்கத் தெரியாத தண்ணீர் ஜீவிகளில் செத்துச் செத்து மிதந்தவை பல; கரை ஒதுங்கியவை சில. எரிகிறது கடல்; கறுப்பாடை கட்டுகிறது பூமி.

இந்த மனிதர்கள் பூமியின் முகத்தில் அறைவதையும், முதுகில் குத்துவதையும், வயிறு கீறுவதையும், கருவறையில் கம்பி நுழைப்பதையும், ஓசோன் கூரை ஓட்டை வழி எட்டி எட்டிப் பார்த்துவிட்டு ஓர் அழுக்கு மேகத்தை இழுத்து முகம் பொத்திக் கொண்டது சூரியன்.

மூன்றாம் உலகப் போர் - 01

பின்னொரு நாள்...

ஜப்பான் குலுங்கியது. பசிபிக் சமுத்திரம் எழுந்து சென்டாய் மீது விழுந்தது. இது--தான் ஊழியா? இன்னொரு ஹிரோ-ஷிமாவா?

பூந்தொட்டியை இடம் மாற்றும் சீமாட்டியைப்போல நகரத்தின் மையத்தில் துறைமுகத்தைத் தூக்கிவைத்தது ஆழி அலை. 35,000 அடி உயரத்தில் 700 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆயிரம் விமானங்கள் அதே வேகத்தில் ஊருக்குள் புகுந்து தரையில் பறந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது நகரத்துக்குள் புகுந்த தண்ணீர் வேகம்.

உடம்பு உணர்ந்த சேதி மூளைக்குச் சென்று சேருவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.

சடசடவென்று சரிந்தன மனிதன் தூக்கி நிறுத்திய தொழில்நுட்பங்கள். மரணம் படை திரட்டிக்கொண்டு வந்தது-போல், சென்டாய் நகரத்தின் சகல வீதி-களி லும் புகுந்தது கடல். தன் சக்தி போதாது என்பதுபோல், துறைமுகத்தில் நின்ற படகு களையும் கப்பல்களையும் கடப்பாரை களாய்த் தூக்கி வந்து, கையில் சிக்கிய கட்டடங்களை அடித்து இடித்தது அலை.

அலைகளில் மிதக்கும் பலூன்களாய்ப் பறந்தன கார்கள். சருகுகளாய் அந்தரத்தில் அலைந்தன அக்ரலிக் கூரைகள். இடியாத வீடுகளைத் திரும்பி வரும்போது பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, சென்டாய் துறைமுகத்தின் அடிவண்டல் அள்ளி முன்னேறிய கடல், நகரத்தின் வர்ண பேதங்-களை அழித்து ஊருக்கெல்லாம் ஒரே நிறம் கறுப்பென்று கற்பித்துப் போனது.

வீட்டுக்குள் திருடப்போகிறவன் முதலில் குழந்தையின் குரல்வளை பிடித்து நசுக்கி-விடுவது மாதிரி, மனிதர்களின் ஓலத்தைத் தன் ஓசைக்குள் புதைத்துக் கொண்டோடியது அத்துமீறிய வெள்ளம்.

எனது பெருமூச்சுக்கு முன்னால் மனிதப் பூச்சிகள் என்னாகும் என்று இடித்துச் சிரித்தது இயற்கை.

மனிதர்களைத் தூக்கி வீதியில் எறிந்து, வாகனங்களைத் தூக்கி வீட்டுக்குள் எறிந்து, அநியாயமாக அழிச்சாட்டியமாடியது ஆழிப் பேரலை.

உயிர் தப்பிய ஒவ்வொரு நபரும் தன்-னைத் தவிர சென்டாய் நகரில் இன்னோர் உயிர் இருக்க முடியாது என்று குலை நடுங்கவைத்த கோரத் தாண்டவம் அது.

சென்டாய் நகரத்தின் மீது சுனாமி அலை ஆயிரங்கால்களால் நடந்து அழிவு செய்துகொண்டிருந்தபோது மியாகி நகரத்தில் இருந்தான் இஷிமுரா; தங்கள் பண்ணையின் அடுத்த நெல் நடவுக்கு இயற்கை உரம் இட்டுக்கொண்டிருந்தான்.

அவன் தாயும் தந்தையும் இயற்கை விவசாயிகள். மண்ணையும் சூரியனையும் கும்பிடுகிறவர்கள். ரசாயனத்தின் வாச னையே விவசாயத்துக்கு ஆகாது என்கிற-வர்கள். செயற்கை உரமிடுகிறவன் மண்-ணைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொலை செய்கிறவன் என்ற கொள்கை உடைய-வர்கள். இயற்கை உணவு உண்கிறவர்களே மண்ணின் மக்கள்; மற்றவர்கள் மருந்தின் மக்கள் என்று நகையாடுகிறவர்கள்.

அவர்கள் பண்ணையில் விளைகிற பொருள்களுக்கு சென்டாயில் விலை அதிகம். இயற்கை உணவுக் கண்காட்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்டாய் சென்றவர்கள்; நாளை திரும்புவதாய் இருந்தார்கள். என்னவானார்களோ?

தொலைக்காட்சி கண்டதும் பதறினான் இஷிமுரா. எப்போதும் கொடூரம் குறைத்துச் சொல்லும் ஜப்பானிய அறிவிப்புக்கூட இந்த முறை அபாயக் குறி காட்டியது.

மியாகி & சென்டாய் 286 கிலோ மீட்டர்தான். இரண்டு மணி நேரத்தில் அவன் சென்டாய் அடைந்தபோது, ஜல சமாதியாகிக் கிடந்தது நகரமே.

நகரத்தின் பெரும்பகுதியைத் திட்டுத்-திட்டாய்த் தின்று தீர்த்திருந்தன தண்ணீ ரின் கோரப் பற்கள். அடையாளங்கள் தடம் புரண்டுகிடந்தன. எந்தச் சாலையும் முழு நீளம் சென்று முடியவில்லை. தரை யில் கிடந்த பெயர்ப் பலகைகள் அந்தந்த வீதிகளுக்குத்தான் சொந்தமானவை என்று நம்ப முடியவில்லை.

இன்னொரு பூகம்பமோ, சுனாமியோ வரக்கூடும் என்ற அச்சம் உறைந்துகிடந்தது ஊருக்குள். பிணங்களையும் மரங்களையும் சிதிலங்களையும் அப்புறப்படுத்துவதில் முனைந்திருந்தது உணர்ச்சி காட்டாத மீட்புக் குழு.

தங்கள் உறவுகளை உயிரோடோ பிண-மாகவோ கதறிக்கொண்டே கண்டுபிடிக்க முனைந்த கூட்டத்தில் கலந்து போனான் இஷிமுரா.

கண்காட்சி நடந்த அரங்கம் சென்டாய் துறைமுகத்திலிருந்து தென் மேற்கே 3.5 கிலோ மீட்டர் என்று காட்டியது கையில் இருந்த வரைபடம்.

இதில் எது வீதி? எது தென் மேற்கு? உத்தேசமாய்ப் போராடி நகர்ந்து & நடந்து & தாவி & ஓடி அவ்விடம் அடைந்தபோது மனிதர்கள் இருந்த எந்தச் சுவடும் அங்-கில்லை. தண்ணீர் பயணப்பட்ட தடத்தின் வழியே நெடுந்தூரம் கடந்த பிறகு ஒரு திறந்த மைதானத்தில் ஒதுங்கிக்-கிடந்தன நூற்றுக்கணக்கான கார்கள் & உடைந்ததும் கவிழ்ந்ததும் நொறுங்கியதும் சிதைந்தது-மாய்.

பல கார்களுக்கு எண் பலகையே இல்லை. சிவப்பு நிற ஆல்ட்டோ கார் அவன் தந்தையுடையது. பூனைகளின் நாய்களின் உடல்களும், பிணங்களும், பொம்மைகளும், டயர்களும், உடைந்த பாத்திரங்களும் சிதறிக்கிடந்த மைதானத்தில் இதயம் பிழியும் கண்ணீரோடு தந்தையின் காரைத் தேடினான் இஷிமுரா.

‘‘அதோ அதோ சிவப்பு ஆல்ட்டோ.’’

ஓடி நெருங்கினான். எண் சரி & ஆனால், எங்கள் கார் இல்லை இது. மஞ்சள் பலகையில் கறுப்பு எண்கள் இருந்தால், அது தனியார் வாகனம். கறுப்புப் பலகை--யில் மஞ்சள் எண்கள் இருந்தால், அது வணிக வாகனம். இது வணிக வாகனம்.

பதறிச் சலித்து மைதானத்தின் மறு-முனை அடைந்தபோது, தூரத்து வீட்டின் பால்கனியில் தொங்கிக் கொண்டிருந்தது ஒரு சிவப்பு ஆல்ட்டோ.

நெருங்கினான்; எண் பார்த்தான்; வண்ணம் பார்த்தான். அது & அதுதான் & அதுவேதான். தாவி ஓடித் தாண்டினான். பூட்டிய கார் கதவின் உடைந்த கண்ணாடி வழி எட்டிப் பார்த்தான்.

மூன்றாம் உலகப் போர் - 01

உள்ளே...

செங்குத்தான பிணமாய் அப்பா; அவர் தோளில் கை வைத்தபடி சிதைந்த கோலத்தில் அம்மாவின் பிணம்; ‘‘கடவுளே!’’ ஓங்கிக் கதறினான் இஷிமுரா & நெளிந்த காரில் தலை முட்டினான்; துக்கம் கேட்க ஆளின்றி அவன் மட்டும் அழுதான்.

எரியும் மூங்கில் காட்டில் சிறகு கருகும் ஒரு பட்டாம்பூச்சியை எந்தப் பறவை விசாரிக்கும்?

நொறுங்கி விழுந்தான்.

மறுமுறை ஒருமுறை ஆடி அடங்கியது பூமி. 6.7 என்று பதிவு காட்டியது ரிக்டர்.

அட்டணம் பட்டி அட்டணம் பட்டினு ஒரு ஊரு தேனி மாவட்டத்துல. அங்க கருத்தமாயி கருத்தமாயின்னு ஒரு தொத்த விவசாயி. ஆளுன்னா ஆளு அம்சமான ஆளு. ஆறடிக்குக் கொஞ்சம் கம்மி. அறுபது அறுபத்தஞ்சு இருக்கும் வயசு. ஆனா, அம்பது அம்பத்தஞ்சுக்கு மேல சொல்ல முடியாது.

கறுப்பும் வெள்ளையுமாக் கலந்து கெடந்--தாலும், மண்டையில ஒத்த முடி உதிரல பாத்துக்குங்க. கூனும் வகுறும் போடாத வரைக்கும் மனுசனுக்கு வயசு தெரியாதில்ல.

சும்மா செக்குல ஆட்டுன எண்ணெய் எடுத்துச் சிவலிங்கத்துக்குப் பூசுன மாதிரி தேக்கங்கட்ட மாதிரி திரேகம்.

படிக்காத ஆளுதான்; பழுத்த அனுபவம்.

கிராமத்து ஆளுகளுக்கு ஆகாயமும் பூமாதேவியும்தான் பள்ளிக்கூடம்.

மனுசப்பய ஒவ்வொருத்தனும் வாத்தி யார்தான் அவுகளுக்கு.

கருத்தமாயி பங்குக்கு வந்தது அப்பன் பாட்டன் வழி வந்த பூமி மட்டுமில்ல. மண்--ணைக் கிண்டுற சாதிக்குன்னு உண்-டான பரம்பர ஞானமும் பட்டாவோட வந்திருக்கு.

இந்தியாவுக்கு நிதி மந்திரி யாரு? விவ-சாயம் யாரு கையில இருக்கு? கரண்டு மந்திரி யாரு? எதப்பத்தியும் கவலை இல்ல அவருக்கு. மூணு கோடியே எரநூத்தி எம்பத்தேழாயிரத்தி எரநூத்தி அறுபத்தி மூணு சதுர கிலோ மீட்டர் உள்ள இந்தியாவுல அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் ஒண்ணே முக்கா ஏக்கரும் பொறம்போக்கு ஏழு சென்ட்டும்தான்.

அவரு சொன்னா சொன்னபடி கேக்கும் மண்ணு. உக்கி போடுன்னு அவரு சொல்-லீட்டா, மரம் மட்டையெல்லாம் ஒக்காந்து ஒக்காந்து எந்திரிக்கும்.

எப்ப மழை வரும் & எப்ப வெறிக்கும் & தெரியும் அவருக்கு. எந்த வெள்ளாமைக்கு எந்தச் சீக்கு வரும் & அதுக்கு என்ன பண்டு தம் & அத்துபடி அவருக்கு.

ஒண்ணே முக்கா ஏக்கர்லயும் அடக்கித் தக்காளி நட்டிருந்தாரு. ஆறு மாச வெள்ளாம தக்காளி. நட்டுத் தொண்ணூறு நாள்ல பழம் எடுக்கலாம். அங்கிட்டு ஒரு தொண்ணூறு நாள் காய்க்கும். நட்டு நாப்பது நாளாச்சு. இப்பவோ பிறகோன்னு குத்தவைக்கத் தயாராகிற பொட்டப்புள்ள மாதிரி சும்மா தளதளன்னு வந்த தக்காளி திடீர்னு குக்கு நோவு வந்த கோழி மாதிரி சொடிஞ்சு ஒக்காருது.

‘‘யாத்தே! கொண்(¬)டக் கருகல் நோய் வந்துருச்சுடா.’’ பதறிப்போனார் கருத்தமாயி.

வேலியோரமா வெள்ளாட்டங்குட்டிக்குக் கொழை ஒடிச்சுக் குடுத்துக்கிட்டிருந்தா கருத்தமாயி பொண்டாட்டி சிட்டம்மா. வாய் வெடிச்ச பொம்பள; பெறக்கும்போதே பேசிக்கிட்டே பொறந்தவ.

வீட்டுக்கு வெலக்கான பொம்பளைங்க தக்காளிச் செடிகளுக்குள்ள ஊடமாடத் திரிஞ்சா, அந்த வெக்கையில கொண்டக் கருவல் நோய் வந்துரும்ங்கறது ஐதீகம்.

அது உண்மையோ பொய்யோ & பொலம்பிட்டாரு கருத்தமாயி:

‘‘எந்தப் பொசகெட்ட சிறுக்கியோ எந்-தோட்டத்துக்குள்ளே வந்து பொழப்பக் கெடுத்துட்டுப் போயிட்டாளே.’’

சிட்டம்மாவுக்குச் சுருக்குன்னு தச்சிருச்சு.

புருசனக் கட்டி ஏறிக் காதறுக்க ஆரம்-பிச்சிட்டா. ‘‘ஏ வெள்ளாட்டங்குட்டி! இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்-கிற வேணாம்னு சொல்லு. எங்களுக்-கெல்லாம் ‘நின்னு’ நெடுங்காலமாயிப்-போச்சு. இந்-தாளத் தேடி எந்தச் சக்களத்தி வந்-துட்டுப் போனாளோ. கண்டுபுடிச்சு அவளக் காது அக்கல & நான் சிட்டம்மா இல்ல.’’

கருத்தமாயி ஒரு மஞ்சட்டி எடுத்தாரு. வேப்பம்பட்டையும் புளியம்பட்டையும் நெப்பிச் சட்டியில கங்கள்ளிப் போட்டாரு. அதுல பொசுபொசுன்னு புகை வரவும், மஞ்சட்டியில கயிறு கட்டித் தோட்டம் பூராப் புடிச்சு நடந்துட்டாரு.

அதுக்குண்டான வைத்தியம் அது-தானாம்.

தண்ணி மோட்டார் ஓடிக்கிட்டிருக்கு. கையில புடிச்சுவந்த வெள்ளாட்டங்குட்டிய வேப்பங்குட்டியில கட்டிவிட்டுட்டுக் கெணத்--தடிக்கு வந்த சிட்டம்மா, பலகைக்-கல்லுல ஒக்காந்து பை எடுத்தா வெத்தல போட. எதார்த்தமாக் கெணத்த எட்டிப் பாத்தவ பதறிப்போனா:

‘‘ஏலே அய்யா சின்னப்பாண்டி! இங்க வந்து பாருங்கடா; கெணத்துல ரத்தம்.’’

தக்காளிக்குத் தண்ணி கட்டிக்கிட்டிருந்த இளைய மகன் சின்னப்பாண்டி மம்முட்டிய வாய்க்கால்ல எறிஞ்சிட்டு, ஓட்டமா ஓடி வர்--றான். மஞ்சட்டிய வரப்புல வச்சுட்டு விசுக்--விசுக்குன்னு எட்டுவச்சு வாராரு கருத்தமாயி.

எல்லாரும் ஓடியாந்து கெணத்துக்குள்ள எட்டிப் பாத்தா &

இதுவரைக்கும் தாய்ப் பாலு மாதிரி வெள்ள வெளேர்னு வந்து விழுந்த ஊத்து, இப்ப செக்கச் செவேர்னு ஒழுகுது.

காடுகரையில சிதறிக்கெடந்த சாதிசன-மெல்லாம் கொஞ்ச நேரத்துல கூடிக் குமுஞ்சுப்போச்சு.

‘‘இது என்னடா கூத்தா இருக்கு?’’

ஊராளுகளோட சேந்து புங்க மரத்துக் காக்கா குருவி கரிச்சான்குஞ்செல்லாம் காச்மூச்சுன்னு கத்துதுக.

- மூளும்