Published:Updated:

`முடிவெட்ட ரூ 80; புத்தகம் படித்தால் ரூ 50 மட்டுமே!’ தூத்துக்குடி லைப்ரரி சலூன்

முடி திருத்தும் பொன் மாரியப்பன்
முடி திருத்தும் பொன் மாரியப்பன்

வாசிப்பைத் தூண்டும் விதமாக, புத்தகம் வாசித்தால் முடிதிருத்தும் கட்டணம் குறைக்கப்படும் என அறிவித்துள்ளார், தூத்துக்குடி லைப்ரரி சலூன் கடை உரிமையாளர் பொன்.மாரியப்பன்.

டீக்கடைகளுக்கு அடுத்தபடியாக அரசியல் பேசப்படும் இடம், சலூன் கடை. வழக்கமான சலூன்களில் காணப்படும் சினிமா நட்சத்திரப் படங்கள் இந்தக் கடையில் இல்லை. மாறாக, தூத்துக்குடியில் உள்ள ஒரு சலூனின் அலமாரியில், புத்தகங்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

தன் கடைக்கு வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, சலூன் கடைக்குள் சிறிய நூலகத்தை அமைத்துள்ளார், பொன்.மாரியப்பன். தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ளது இவரது லைப்ரரி சலூன்.

கடை முன்பு பொன் மாரியப்பன்
கடை முன்பு பொன் மாரியப்பன்

கடைக்குள் நாளிதழ்கள், வார இதழ்களுடன் கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், நாவல்... என சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். பேச்சு, சினிமா பாடல்கள் என எந்த சத்தமுமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சத்தம் மட்டுமே கேட்கிறது. பொன்.மாரியப்பனிடம் பேசினோம்.

"சின்ன வயதிலிருந்தே எனக்கு புத்தகங்கள் வாசிக்க ஆர்வம் உண்டு. 8-ம் வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். சில ஆண்டுகள் வேறு சில வேலைகளைச் செய்துட்டிருந்தேன். அதுக்குப் பிறகு, அப்பா செய்துவந்த இந்தத் தொழிலையே தொடர ஆரம்பிச்சேன். முடிவெட்ட ஆள் வராத நேரத்துல புத்தகம் வாசிப்பேன். இப்படி, முழுமையா படிச்சு முடிச்ச புத்தகங்களை அலமாரியில அடுக்கி வைச்சேன். முடிவெட்ட கிடைக்கும் பணத்துல, ஒரு பகுதியைப் புத்தகங்கள் வாங்க ஒதுக்கிடுவேன்.

கட்டணக் குறைப்பு அறிவிப்பு நோட்டீஸுடன்.
கட்டணக் குறைப்பு அறிவிப்பு நோட்டீஸுடன்.

இந்தக் கடையை வெச்சு ஆறு வருஷம் ஆகுது. கடைக்கு முடி வெட்ட வர்றவங்க, உள்ளே வந்ததும் “ஏதாவது குத்துப் பாட்டாப் போடுங்க”னு சொல்வாங்க. பாட்டைக் கேட்டுட்டே செல்போனையும் பார்த்துட்டு இருப்பாங்க. இதைவிட கொடுமை என்னன்னா, முடி வெட்டும்போதும், செல்போனை பார்த்துட்டு, கேம் விளையாடிட்டு இருப்பாங்க.

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கணும், குறைந்தபட்சம் முடிவெட்ட வந்திருக்கும் நேரத்துலயாவது புத்தகங்களைப் படிக்க வைக்கணும்னு நினைச்சேன். தனியா புத்தக அலமாரி ஒண்ணு வாங்கி, அதுல என் கைவசம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் வரிசையா அடுக்கிவெச்சேன். முடிவெட்ட காத்திருப்பவர்களிடம், பிடிச்ச புத்தகத்தை எடுத்து படிக்கச் சொன்னேன். முதலில் தயக்கம்காட்டியவர்கள், பிறகு எடுத்து மேலோட்டமா புரட்ட ஆரம்பிச்சாங்க. தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சாங்க. செல்போனில் மூழ்கிக் கிடக்கக்கூடாது, அடிக்கடி செல்போன் பார்ப்பதால் ஏற்படும் விபரீதம் குறித்து நாளிதழ்களில் வெளியான தகவல்கள், கட்டுரைகளையும் அனைவரின் பார்வையில் படுறமாதிரி ஒட்டி வச்சிருக்கேன். புத்தக வாசிப்பை அனைவரும் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

முடி திருத்தும் பொன் மாரியப்பன்
முடி திருத்தும் பொன் மாரியப்பன்
புத்தகங்கள், கடந்த காலங்களின் மனசாட்சியாக இருக்கின்றன. அவற்றைத் தொட்டு உணர்ந்து படித்தால் நாம் முன்னேறலாம். எந்தப் புத்தகமும் வாய்திறந்து பேசாது. ஆனால், ஏதோ ஒரு குரல் புத்தக வாசிப்பின் வழிகாக ஒலித்துக்கொண்டே இருக்கும். படிப்பவன் சிந்திக்கிறான்; சிந்திப்பவன் முன்னேறுகிறான். சிந்தனை படிப்பினால் மட்டுமே வரக்கூடியது. சிந்தனையைத் தூண்டுவது அந்த படிப்பு மட்டுதான்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஐயாவின் பரிந்துரையில், எனக்கு ’புத்தகர் விருது’ கிடைச்சுது. அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்னு 'எஸ்.ரா' ஐயா கொடுத்த புத்தகங்களின் பட்டியலில் உள்ளவற்றை ஒவ்வொன்றாக வாங்கிக்கிட்டிருக்கேன். தூத்துக்குடி எம்.பி, கனிமொழி மேடமும் என்னோட கடைக்கு வந்து நூலகத்தைப் பார்த்து பாராட்டியதுடன் 50 புத்தகங்களை நூலகத்திற்கு அன்பளிப்பா கொடுத்தாங்க.

விருதுகளுடன் பொன் மாரியப்பன்
விருதுகளுடன் பொன் மாரியப்பன்

கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் ஒண்ணு, ரெண்டு புத்தகங்களைத் தந்துக்கிட்டு இருக்காங்க. இப்போ கடைக்கு முடிவெட்ட வர்றவங்க யாரும் செல்போன் பார்ப்பதில்லை. முடிவெட்டிய பிறகும் சில நிமிடங்கள் உட்கார்ந்து புத்தகத்தைப் படித்துவிட்டு, பொறுமையாக வீட்டுக்குப் போறவங்களும் உண்டு.

முடிதிருத்தும் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டு செல்லும்போதும், இந்த ஆறு வஷத்துல ஒரு ரூபாய்கூட கட்டணத்தை உயர்த்தியதில்லை. இந்த ஆண்டு உயர்த்தச் சொல்லி மற்ற கடைக்காரர்கள் நிர்பந்தித்தபோதிலும், 50 ரூபாயாக இருந்த கட்டணத்தை, 80 ரூபாயாக உயர்த்தி அறிவிச்சாலும், புத்தகம் வாசிச்சா 30 ரூபாய் கட்டணத்தைக் குறைத்துக்கொள்கிறேன்.

“கட்டணத்தைக் கூட்டிச் சொல்லி, புத்தகம் வாசிச்சா 30 ரூபாய் குறைப்புன்னு சொல்றது... எப்படிப் பார்த்தாலும் அதே 50 ரூபாய் கட்டணம்தானே உனக்கு கிடைக்குது”னு மத்த கடைக்காரங்க கேட்கிறாங்க.

புத்தக வாசிப்பில்  பொன் மாரியப்பன்
புத்தக வாசிப்பில் பொன் மாரியப்பன்

அவர்களுக்கு நான் சொன்ன பதில், 'மற்ற கடைக்காரர்களுக்காக கட்டணத்தைக் கூட்டினேன். இதில் எனக்கு உடன்படில்லை. அதனால், புத்தகத்தை வாசிக்கச் சொல்லி குறைச்சிட்டேன். இதுல எனக்கு ஒரு மன நிறைவு” – மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் பொன். மாரியப்பன்.

தலைக்குமேல் வளர்ந்துள்ள முடி திருத்தப்படும்போது, தலைக்குள்ளேயும் அறிவு வளர உதவி செய்யப்படுகிறது.

Vikatan
பின் செல்ல