Election bannerElection banner
Published:Updated:

ஆயிரம் விளக்கில் மலரும் தாமரை!

குஷ்பு
குஷ்பு

வெள்ளித்திரை, சின்னத்திரை கடந்து தமிழக அரசியலிலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான பெயராக இருப்பது குஷ்பு. உரிய அங்கீகாரம் கிடைக்காததால் திமுக, காங்கிரஸ் என மாறிய குஷ்பு இப்போது பாஜக-வில் இணைந்துள்ளார்.

கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே, குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் தன்னுடைய பிரபலத்தை வைத்து அரசியலில் லாபம் சம்பாதிக்க பார்க்கிறார் என விமர்சித்தவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் அளவிற்கு, ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. திமுகவின் கோட்டை என்ற பிம்பத்தை உடைத்து தூள் தூளாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள குஷ்புவிற்கு அப்பகுதி மக்கள் ஆதரவை மட்டுமல்ல அளவு கடந்த அன்பையும் அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் அதிக கவனமுடன் செயல்பட்டு வரும் குஷ்பு, பெண்கள், மாணவர்களை கவரும் விதமாக சமீபத்தில் வெளியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் அறிக்கை, மக்களின் ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற அறிவிப்பு சமூகவலைத்தளங்களிலும், மக்கள் மத்தியிலும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

குஷ்பு-வுக்கு வலுக்கும் ஆதரவு

2016 தேர்தலில் திமுகவிற்கு 61,746 வாக்குகள் கிடைத்தன. அதற்கு அடுத்தபடியாக அதிமுகவிற்கு 52,897 வாக்குகள் விழுந்திருந்தன. இரண்டிற்கும் பெரிதாக வித்தியாசம் கிடையாது. மக்கள்நல கூட்டணி-7,805 வாக்குகளும், பாஜக-8,516, பாமக-3,968 வாக்குகளும் பெற்றன.

வர உள்ள சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் கடந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக-விற்கு வாக்களித்தவர்கள் நிச்சயம் இந்த முறை குஷ்புவிற்கு வாக்களிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதன்படி கணக்கு போட்டாலே குஷ்புவிற்கு கணிசமாக 65 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதாவது கடந்த தேர்தலில் திமுக வாங்கிய ஓட்டுக்களை விட 4 முதல் 5 ஆயிரம் வரையிலான ஓட்டுக்கள் கூடுதலாகவே கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

குஷ்பு பல மேடையில் கூறியது போல ‘என்னுடைய BackBone சுந்தர்தான் சுந்தர் மட்டும்தான்' போல அவரும் தீவிரமாக மனைவிக்கு தன் சார்பிலும் சினிமா நட்சத்திரங்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். தொலைக்காட்சிகள் அத்தொகுதியில் எடுக்கப்பட்ட கருத்துகணிப்பு அடிப்படையில் குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் குஷ்பு வெற்றி பெறுவார் என்று கூறுகின்றனர்.

குஷ்பு
குஷ்பு

சில தினங்களுக்கு முன்பு ஆ.ராசா முதல்வர் பழனிசாமியின் தாயாரை இழிவாகப் பேசிய பேச்சு விவாத பொருளாக ஆனது. ஓட்டுமொத்த தமிழகமே திமுகவை கடுமையாக விமர்சிக்க காரணமாக அமைந்த சம்பவம் அரங்கேறியது, ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலனை ஆதரிக்கும் போது தான். ‘பெண்களின் ஆதரவு மொத்தமும் தனக்குத் தான், குறிப்பாக இஸ்லாமிய சகோதரிகள் எனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்’ என கொக்கரித்த எழிலன், ஆ.ராசாவின் ஆபாச பேச்சை சிரித்து ரசித்தது அப்பகுதி பெண்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

தவளை தன் வாயால் கெட்டது என்பதைப் போல், பெண்ணியம் பேசும் திமுக பாசாறையைச் சேர்ந்த ஆ.ராசா, எழிலன் ஆகியோர் பெண்களை அவதூறாக பேசியது திமுகவிற்கு கூடுதல் சரிவைக் கொடுத்துள்ளது. அதிலும் ஆ.ராசா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை அவதூறாக பேசியது ஆயிரம் விளக்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் என்பதால் அப்பகுதி மக்களுக்கு திமுக மீதான எதிர் அதிர்வலை அதிகரித்து, குஷ்புவிற்கான ஆதரவு அலை வலுத்துள்ளது.

புன்னகை மாறா முகத்துடன் வெயில், கொரோனா என எதற்கும் அஞ்சாமல் களத்தில் இறங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் குஷ்புவை அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைக்க ஆரம்பித்துள்ளதையும், வீடு தேடி வரும் அவருக்கு உபசரிப்பை மட்டுமல்லாது ஆதரவையும் அள்ளி, அள்ளிக்கொடுப்பதை இயல்பாகக் காண முடிகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியான பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளின் படியும் பாஜக போட்டியிடும் தொகுதிகளிலேயே ஆயிரம் விளக்கில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது, குஷ்புவின் வெற்றி வாய்ப்பைப் பல மடங்காக அதிகரித்துள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு