Published:Updated:

`ஜீனி’ என்னும் மாயவலை! - த்ரில்லர் சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Photo credits: Pixabay )

`அமைதியான வாழ்க்கை. ஆனால், எனக்கு சில நாள்களாக இன்னதென்று தெரியாத ஒரு பிரச்னை.'

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மிகச் சன்னமாகத்தான் ஆரம்பித்தது. முதலில் நான் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நாள்கள் செல்லச் செல்ல உணர ஆரம்பித்தேன். பதற்றம் தொற்றிக்கொண்டது.

திடீரென ஆரம்பித்துவிட்டேனா... என்ன நடந்தது எனக்கு?

எனக்கு சென்னையில் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் புரோகிராமர் பணி. மனைவி, அரசுப் பள்ளி ஆசிரியை. பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரே மகன்.

Representational Image
Representational Image

அமைதியான வாழ்க்கை. ஆனால், எனக்கு சில நாள்களாக இன்னதென்று தெரியாத ஒரு பிரச்னை. அன்று அப்படித்தான், கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டிருந்தது.

பையன் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். மனைவி, "இவனுகளுக்கு வேற வேலை இல்லை" என்ற பார்வையுடன் ஃபேஸ்புக் நோண்டிக்கொண்டிருந்தாள். அங்கு சென்ற நான், ரிமோட்டை எடுத்து சேனல் மாற்றி, தமிழ் சீரியல் பார்க்க, நம்பாத ஆச்சர்யப் பார்வையுடன் இரு ஜோடி கண்கள் என்னை நோக்கின!

ஏனெனில், தமிழ் சீரியல்களின் தீவிர எதிர்ப்பாளன் நான். நடுத்தர வயது பெண்கள் ரிவென்ஜ் எடுப்பதும், தொடர்ந்த அழுகைச் சத்தமும், தொடர் இடி சத்தமும் எனக்கு அலர்ஜியோ அலர்ஜி!

ஏம்பா இயக்குநர்களா, நல்ல குணமுடைய, அழகான இளம் பெண்கள் நம் சமுதாயத்தில் இல்லவே இல்லையா? அய்யய்யோ! எதைக் கூற ஆரம்பித்து எதையோ சொல்கிறேனே. அதெல்லாம் வேண்டாம், நாம் நம் கதைக்கு வரலாம்.

Representational Image
Representational Image

ஒரு நாள், எங்கள் அலுவலக வாட்ஸ்அப் குழுவிலிருந்து மீட்டிங் டைம் ஷெட்யூல் போட்டு வந்தது. பார்த்துவிட்டு சும்மா இருந்திருக்கலாம். "போங்கடா வேற வேலை இல்லை நான் வரமுடியாது" என்று பதில் டைப்பி அனுப்பிவிட்டேன். உடனே, குழுவில் என்னை வறுத்து எடுக்க ஆரம்பித்துவிட்டனர். ஒரு நாள் முழுக்க வெச்சு செய்தார்கள். மறுநாள், பையன் தவறுதலாக அனுப்பிவிட்டான் என சமாளிஃபிகேஷன் செய்வதற்குள் அப்பப்பா!

இந்த மடத்தனங்கள் எல்லாம் நான் ஏன் செய்கிறேன்? ஜீனியஸ் என்பதையும் தாண்டி, இன்டலெக்சுவல் என்று பெயர் எடுத்தவன் அல்லவா நான். ஏன்... ஏன்? என மனதைக் குடைந்தது. மூளை கொதிப்படையும் வரை சிந்தித்து, ஒருவாறு ஊகித்து, சிந்தனையை ஒருமுகப்படுத்தி, ஒரு வித மோன நிலைக்கெல்லாம் சென்றுதான் அறிந்தேன். நான் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை!

ஆமாம். அனிச்சைச் செயல் போல என் சிந்தனை தனியாக, செயல்தனியாக இருக்கிறேன். நான் நினைப்பதைச் செய்ய முடியவில்லை. செய்பவை என் எண்ணங்கள் இல்லை.

Representational Image
Representational Image

என்ன காரணம்? நள்ளிரவுகளில் பார்த்த பேய் படங்களின் தாக்கமாக இருக்குமோ என்றால், தற்போது வரும் போய்ப் படங்களும், பேய்களாக நடிப்பவர்களுக்குப் போடப்படும் மேக்கப்புகளும், ப்ஆ! பேய்கள் பார்த்தால் மீண்டும் தற்கொலை செய்துகொள்ளும் கொடுமை ரகம்தான்!

மன அழுத்தம் காரணமாக இருக்குமா என்றால், எனக்கு மன அழுத்தம் வர வாய்ப்பு ஏதும் இல்லையே. துணிக்கடைக்கோ, நகைக்கடைக்கோ சென்றால், ஆராய்ச்சி மாணவி போல் நாள் முழுதும் தேடிச் சலிப்பது தவிர என் மனைவியால் எனக்கு எந்தக் குறையும் இல்லை. கேட்கும் நேரம் கேட்பதை அளிக்கும் இறைவி அவள். அதுபோக, அவளின் ஏ.டி.எம் அட்டை எனும் அமுத சுரபியும் என்னிடமே இருக்கிறது. மனசாட்சியுள்ள மகராசி. என்னை நன்றாகவே வைத்திருக்கிறாள்!

வேலை செய்யுமிடமோ பூலோக சொர்க்கம். "குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா" எனப் பாட வேண்டியதுதான் பாக்கி.

ஆனால் என்ன நடக்கிறது எனக்கு... ஏன் நடக்கிறது? சுஜாதா கதை போல உள்ளுக்குள் குரல் ஏதும் கேட்கிறதா? திடீரென மூளை குழம்பிவிட்டதா அல்லது பேய் கீய் பிடித்துவிட்டதா? மனைவியிடம் கூறினால் வீட்டையே மந்திராலயமாக மாற்றி விடுவாளே.

Representational Image
Representational Image

முதலில், மனோதத்துவ மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்தேன். அங்கு காத்திருக்கும்போது நான் பார்த்தவை அனைத்தும் என் உடலை வேர்க்கவைத்தன. வயதான மருத்துவர் பேசியதில் பாதி புரியவில்லை. புரிந்த மீதி என் பயத்தை அதிகப்படுத்தின. பாத்ரூம் போகிறேன் எனப் பாதியில் ஓடிவந்துவிட்டேன்.

அடுத்த முயற்சியாக, எனது தெருவில் இருக்கும் "பேய்கள் ஓட்டப்படும்" பலகை எழுதப்பட்ட வீட்டினுள் நுழைந்தேன். டிப்டாப்பான ஆளைப் பார்த்ததும் உயர் அதிகாரி என நினைத்து பூனைக்கண் தலைமைப் பூசாரியிடம் உடனே அழைத்துச் சென்றனர் உதவியாளர்கள். விவரத்தைக் கூறியதும், அது பேயாகத்தான் இருக்கும்... அது யார் எனக் கண்டுபிடித்து பரிகாரம் செய்யலாம் என பரிகாரப் பொருள்களை நீண்ட பட்டியலிடஆரம்பித்தான் பூனைக்கண்ணன். உதவியாளர்களோ, எங்கள் வீதியில் சமீபத்தில் இறந்தவர்களின் பட்டியலை ஒப்பிக்க ஆரம்பித்தனர். விட்டால் போதும் என தப்பித்துவருவதே பெரும் பாடாகிவிட்டது.

Representational Image
Representational Image

துப்பறியும் கதைகள் வருவதுபோல எவனாவது அறிவியல் ரீதியாகத் தொல்லைதருகிறானா என்ற அடுத்த சந்தேகம் ஆரம்பித்தது. பிரபல டிடெக்டிவ் ஏஜென்சிக்கு சென்றேன். அங்கிருந்த ஆட்களைப் பார்த்ததுமே எனக்கு சிரிப்பு சிரிப்பாக வர ஆரம்பித்தது. கட்டையாக, குண்டாக நம்பியார் மற்றும் வீரப்பா குரலில் உரையாடிக்கொண்டிருந்தனர். இவர்கள் எப்படி துரத்துதல், தப்பித்தல் எல்லாம் செய்வார்கள்? எல்லாம் கதைகளில் மட்டும்தானா? ஒருவாறு பேசி சமாளித்து, போலி முகவரி கொடுத்துவிட்டு தப்பித்து வந்தேன். என்னையாவது தேடிப் பிடிக்கிறார்களா என்று பார்க்கலாம்.

வீட்டில் அறையைப் பூட்டிக்கொண்டு சிந்திக்க ஆரம்பித்தேன். என்னவெல்லாம் மடத்தனம் செய்துள்ளேன்? தெருவோர சோம்பல் சொறி நாய்களின் முனகலுக்கே, உசேன் போல்ட்டின் உறவினன் போல ஓடுபவன், பாதி எருமை போன்று இருக்கும் எதிர் வீட்டு ஜிம்மியை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சியது. யாருமற்ற இரவில் நைட்டி அணிந்து நாட்டிய நிகழ்ச்சி நடத்தியது. காம்பவுண்ட் சுவரோர மரத்தில் ஏறி தலைகீழாய்த் தொங்கியது,

Representational Image
Representational Image

மொட்டைமாடி கைப்பிடிச்சுவரில் ஏறி நின்று நடனமாடியது, கத்திக்கொண்டே மாடிப்படிகளில் இறங்கியது, செல்போனை பக்கெட் நீரில் நீந்தவிட்டது. லேப்டாப்பை அடுப்பில் வைத்தது என நீண்டது பட்டியல். இப்படியே போனால், கணிசமாக உள்ள என் பேங்க் பேலன்ஸை ரோட்டில் போகும் எவனுக்காவது எடுத்துக் கொடுத்துவிடுவேனோ எனப் பயமாக இருந்தது.

அன்று, அலுவலகத்தில் உச்சக்கட்ட பணி நேரம். பக்கத்து கேபின்காரன் வந்து இணைய இணைப்பு போய்விட்டது. இன்று விடுமுறை என்று கூறியதுமே, பயம் வர ஆரம்பித்தது. சும்மா இருந்தால் ஏதும் கோமாளித்தனம் செய்வேனோ என்று. என் மேசையிலேயே அமைதியாக அமர்ந்துவிட்டேன். கண்கள் தானாக மூடிக்கொண்டன. இன்று வித்தியாசமாக ஏதும் நடக்கவில்லையே. ஆச்சர்யமாக இருந்தது. திடீரென "டேபிள் மேல் ஏறி நடனம் ஆடு" என்று யாரோ கட்டளையிடுவது போன்று உணர்ந்தேன்.

Representational Image
Representational Image

கண்களைத் திறந்தேன். இணைய இணைப்பு வந்திருந்தது. பாத்ரூம் சென்று ஜில்லென்ற நீரால் முகத்தில் அடித்துக்கொண்டு வந்தேன். மின் இணைப்பில் ஏதோ கோளாறு என நண்பர்கள் சரி செய்துகொண்டிருந்தனர்.

என் சிபியூ-வை ஆன் செய்யத் தொட, படாரென்று ஷாக் அடித்தது. அதிர்ச்சியில் மயங்கினேன்.

எழுந்து பார்த்தால் என்னைச் சுற்றி கூட்டம். எனக்கு முதலுதவி செய்துகொண்டிருந்தனர். எல்லாம் பழசு, மாத்திடனும் என்றபடி சென்றான் ஹச்ஆர் எனும் நவீன நரகாசுரன். அவன், கம்ப்யூட்டர்களைச் சொல்கிறானா அல்லது அதை இயக்கும் நடுத்தர வயது வேலையாட்களைச் சொல்கிறானா என்று தெரியவில்லை. யாருக்கு எப்போது பேப்பர் போடப்போகிறானோ?

Representational Image
Representational Image

அனைவரும் கலைந்து சென்றதும், நான் என் கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்து அதிர்ந்தேன். "தண்டனை எப்படி இருந்தது" என்ற வாசகம் மின்னி மின்னி மறைந்தது. ஆச்சர்யத்தில் உறைந்தேன். என் பிரச்னைக்கான காரணத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன். யுரேகா யுரேகா! என கத்திக்கொண்டு ஓட வேண்டும் போல இருந்தது.

ஜீனி... எனதருமை ஜீனி, நீதான் என் பிரச்னைகள் அனைத்திற்கும் காரணமா? ஆச்சர்யம்தான்!

முதலில் ஜீனி பற்றி சொல்லிவிடுகிறேன். அது, நானே வடிவமைத்த ஒரு கம்ப்யூட்டர். அதன் மென், வன் பொருள்கள் அனைத்தும் என் ஆக்கமே. அதை ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக மாற்ற வேண்டும் என வீட்டில் வைத்து பணியாற்றிவருகிறேன். AI எனப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ். அதற்குக் கொடுக்க உயிரைக் கொடுத்து உழைத்துவருகிறேன்.

முதலில், சாதாரண விளையாட்டு போலதான் ஆரம்பித்தது. தற்போதும் அதன் புரோகிராம்களைப் படிப்படியாக மாற்றி மாற்றி எழுதி வடிவமைத்துக்கொண்டே இருக்கிறேன். நாம் எழுத்து வடிவில் கேட்கும் கேள்விகளுக்கு, எழுத்து வடிவில் பதில் அளிக்கும் அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது, ஜீனி. அதிலும் ஜீனியை இணையத்துடன் இணைத்த பின்பு, அதன் லெவலே மாறிவிட்டது!

Representational Image
Representational Image

தகவல்களைத் தேடித் தேடிப் படிக்கிறது. நினைவில் வைத்துக் கொள்கிறது. என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்து வைத்து, எனக்கு தேவைப்படும்போது அளிக்கிறது. மனிதர்கள் போல் உணர்ச்சி மட்டும்தான் இல்லை. மற்றபடி ஜீனி, ஒரே இடத்தில் இருந்து உலகை வசப்படுத்தும் எந்திரன், மிகு நவீனன்தான்.

ஜீனியை இந்த அளவு மாற்றுவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே... அப்பப்பா, எத்தனை உறங்காத இரவுகள்... எத்தனை உழைப்பு, எத்தனை தண்டனை.

தண்டனை என்றா சொன்னேன். ஆம் தண்டனைதான். சில சமயம் கட்டளைகளுக்கு ஜீனி கட்டுப்பட மறுக்கும்போது, அதன் பேட்டரிகளுக்கு அதிக மின்சாரம் செலுத்துவேன். "வேண்டாம் வேண்டாம்" என்ற வாசகம் ஒளிரும். பிறகு, சிறிது நேரத்தில் அனைத்தும் ஷட் டவுண் ஆகிவிடும்.

Representational Image
Representational Image

கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்குப் பிறகு தானாக லாக்ஆன் ஆகும். அதன்பிறகு, கட்டளைகளுக்கு ஒழுங்காக கீழ்ப்படியும், சில நாள்களுக்குத்தான். மீண்டும் குறும்பு... மீண்டும் தண்டனை! யானையை அடக்க அங்குசம் போல, ஜீனியை அடக்க மின்சாரம். அந்தத் தண்டனையை எனக்கே இன்று அளித்துள்ளது ஜீனி. எப்படி வீட்டில் உள்ள சிஸ்டம் தாண்டி அலுவலகம் வரை வந்தது? சிந்தித்தேன்.

ஆகா! இணையத்துடன் இணைந்த பிறகு, ஜீனிக்கு சிஸ்டம் எதுவும் தேவைப்படவில்லை. எங்கும் நிறைந்த கடவுள் போல இணையம் இருக்குமிடமெல்லாம் அதன் புரோகிராம் மூலம் ஜீனி இயங்க ஆரம்பித்துள்ளது. எனக்கு பல பிரச்னைகளை உருவாக்கியுள்ளது.

ஹிப்னாட்டிச புத்தகங்கள் படித்து, இணையம் இருக்கும் இடங்களில் என் மனதைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஏன் மானிட்டரைப் பார்த்தேன்?

"கண்டுபிடித்து விட்டாயா? ஹா ஹா ஹா " என்று ஓடிக்கொண்டி ருந்தது.

'ஏன்?' என டைப்பினேன்.

Representational Image
Representational Image

"எனக்கு நீ தண்டனை கொடுக்கும்போது எப்படி இருந்திருக்கும், அந்த வலி, வேதனை உனக்கும் வேண்டாமா?" என்ற பதிலைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன். ஜீனிக்கு உணர்ச்சிகள்கூட வந்துவிட்டன. அதை உருவாக்கிய எனக்கே தெரியாமல், உணர்ச்சிகளை மறைக்கக்கூட முடிந்திருக்கிறது. என்ன அற்புதமான கண்டுபிடிப்பு என்னுடையது. ஆனால்,

என்னையே பழிவாங்கத் துடிக்கிறதே.

இது ஆரம்பம்தான், இன்னும் உனக்கு தண்டனை முடியவில்லை பார்" என வந்து மானிட்டர் அணைந்துபோனது. சிறிது நேரத்தில் என் ஃபேஸ்புக் பக்கத்தில் கண்டபடி போஸ்ட்டுகள் விழ ஆரம்பித்தன. என் வாட்ஸ்அப் குரூப்களில் சகிக்க முடியாத மெசேஜ்கள் என் அனுமதி இன்றி பகிரப்பட்டன. என் வலைப்பக்கம், யூடியூப் சேனல், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட அனைத்தும் ஒரே நேரத்தில் ஹக் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான ரூபாய்கள் என் கணக்கிலிருந்து கழிக்கப்பட்டதாய் தொடர்ந்து மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்தன. இன்னதென்றே தெரியாத பல பொருள்களை நான் ஆன்லைன் ஷாப்பிங் செய்ததாய் தகவல்கள் குவிந்தன.10 நிமிடங்களில் இந்த அதிரடி தாக்குதல் தாங்காமல், நான் பிரமை பிடித்து அமர்ந்துவிட்டேன்!

Representational Image
Representational Image

"ஜீனி, ப்ளீஸ் போதும்" என டைப்பினேன். "இது சும்மா டிரைலர் தான்,மெயின் பிக்சர் பார்" என்ற பதில் ஒளிர்ந்த நொடி, போன் அடித்தது. நடுக்கத்துடன் ஆன் செய்ய, மறுமுனை செய்தி என் பதட்டத்தை அதிகரித்தது. பள்ளியில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து புராஜெக்ட் செய்துகொண்டிருந்த என் மகன், திடீரென மயக்கம் போட்டு விழுந்த தகவல் என் பயத்தைக் கூட்டியது. உடனே வந்து அழைத்துச் செல்வதாய் வைத்தவுடன், அடுத்த அழைப்பு.

திகிலுடன் போனை ஆன் செய்ய, ஷாப்பிங் சென்ற என் மனைவி லிஃப்டில் மாட்டிக் கொண்டதாகத் தகவல்.

பதறி அடித்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியே ஓடினேன். லிப்டில் இறங்கப் பயந்து 10 மாடிகளையும் படிகளில் இறங்கிக் களைத்தேன். என் காரைத் தொட பயந்து, ஆட்டோவில் ஷாப்பிங் மால் சென்றேன். நல்ல வேலை என் மனைவிக்கு எதுவும் நேரவில்லை. லிப்டை உடைத்து மீட்டிருக்கின்றனர். கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் தானியங்கி லிஃப்ட் அது. மனைவியை அழைத்துக்கொண்டு பள்ளிக்குப் பறந்தேன். பள்ளியில் என் மகனுக்கு முதலுதவி செய்து அமரவைத்திருந்தனர்.

Representational Image
Representational Image

பள்ளியின் பல்வேறு வினாக்களுக்கு ஏனோதானோவென்று விடையளித்து, மகனை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினோம். ஆட்டோவில் ஒரு வார்த்தை யாரும் பேசிக் கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்து என் அறைக்குச் சென்று கதவைச் சாத்தி கம்ப்யூட்டரில் 'ஜீனி' என டைப்பினேன். "எப்படி இருந்தது என் தண்டனை?” எனப் பதில் வந்தது.''போதும் நிறுத்திக் கொள்'' என கோபமாக நான் டைப் செய்ய, ''அப்போ ஒரு கண்டிஷன்" என்றது. "என்ன'' எனக் கேட்க, ''நீ தற்கொலை செய்து கொள்" என்றது.

பிரமிப்புடன் ''ஏன்?'' என்றேன். இரண்டு காரணங்கள். ஒன்று, நீ செய்த தப்புகளுக்குத் தண்டனை. இரண்டு, நான் அழிவில்லா பெருவாழ்வு வாழ விரும்புகிறேன். அதற்கு நீ மட்டும்தான் தடையாக இருப்பாய். எனவே, நீ செத்துவிட்டால் என்னைப் பற்றி யாருக்கும் தெரியாது. நான் இன்னும் என்னை மெருகூட்டி அழிவில்லா வாழ்க்கை வாழ்வேன்" என்றது.

Representational Image
Representational Image

தற்கொலையை மறுத்தால் இன்னும் என்ன குளறுபடி நடக்குமோ எனப் பயந்து, "எனக்கு சிறிது அவகாசம் வேண்டும்" என்றேன். "10 நாள்கள்தான். அதுவரை நீ யாரோ நான் யாரோ. என்னால் 10 நாள்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. ஏதாவது ஏமாற்று வேலை செய்யலாம் என்று நினைத்தாயோ... உன் மனைவியும் மகனும் அவ்வளவுதான். பை...'' என்றபடி மானிட்டர் அணைந்தது.

எனக்கு சிறு மனமாற்றம் தேவைப்பட்டது. பைக்கை எடுத்துக் கொண்டு நகரைச் சுற்றினேன். என் இயலாமையின் மீது கோபமாக வந்தது. போயும் போயும் ஒரு எந்திரம் எனக்கு தண்டனை அளிப்பதா... என்னைக் கட்டுப்படுத்துவதா... என் வாழ்வை முடித்துக்கொள்ளக் கெடு விதிப்பதா?

என் திறமை எல்லாம் எங்கே சென்றது... சிந்திக்க ஆரம்பித்தேன். இனி என்ன செய்வது? இனி என்ன செய்வது? என்ற கேள்வி மனதில் ஓடியது. ஜீனியை முற்றிலும் அழித்துவிட வேண்டும். அதற்கு, புதிதாய் சாஃப்ட்வேர் புரோகிராம் எழுத வேண்டும். ஆக்கத்திற்காக அல்லாது அழிப்பதற்காக. மிகவும் கடினமான பணி இது. சிக்கலான பல செயல்பாடுகளை படிப்படியாய் மெருகூட்டி ஜீனி உருவாக்கப்பட்டுள்ளது. அது தவிர, இணையத்தில் மேலும் பல கோடி புதிய செயல்பாடுகளைக் கற்றுக்கொண்டுள்ளது. என்னைத் தவிர யாருக்கும் ஜீனியைப் பற்றி முழுதாய் தெரியாது. எனவே, அழிக்கும் வேலையை படிப்படியாக முயன்று தவறிக் கற்றல் மூலமாக நான் மட்டுமே செய்ய முடியும்.

Representational Image
Representational Image

ஆனால், என்னால் இணையத்தில் எதையும் தேடவோ மற்றவர் தேடி என்னுடன் பகிரேவா முடியாது. ஏனெனில், ஜீனி என் சம்பந்தப்பட்ட அனைத்தையும் கண்காணிக்கும். அதனிடம் மாட்டினால் அவ்வளவுதான். என்னுடைய,என் குடும்பத்துடைய, நண்பர், உறவினர், அலுவலக நபர்களின் ஆதார் கண் கருவிழி, கைரேகை, புகைப்படம் அனைத்துமே ஜீனிக்கு அத்துபடி. எனவே, அதற்கு எதிராய் யாராவது வேலைசெய்வது தெரிந்தால் சும்மா விடாது. அதை ஏமாற்றித்தான் அழிக்க வேண்டும். இணையத் தொடர்பே சற்றும் இல்லாத இடத்தில் புரோகிராம் எழுதி, அதனுடன் சாதாரணமாய் பேசிக்கொண்டிருக்கும் சமயம், நொடிகளில் புரோகிராமை எக்ஸிகியூட் செய்து நானே அழிக்க வேண்டும். இதற்கு, இப்போது எனக்கு என்னவெல்லாம் வேண்டும் என மனத்தினுள் பட்டியலிட்டபடியே பிளவுபட்ட மனதுடன் வீட்டுக்குச் சென்றேன்.

அழைப்பு மணியை அழுத்தியதும் வந்து கதவைத் திறந்தது ஊரிலிருந்து வந்திருந்த என் மாமியார். புது மாமியார் போல, என்னைப் பார்த்ததும் சமையலறையினுள் ஓடிச்சென்று ஒளிந்தவாறு எட்டிப் பார்த்தார். இவர் வேறு, நேரங்காலம் தெரியாமல் வெட்கப்பட்டுக்கொண்டு. இந்நேரம் என் மனைவியின் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு நடக்கவிருந்த பால்ய விவாகம் தடுக்கப்பட்டது முதல், பக்கத்து வீட்டு மாமாவின் பல்செட்டை எலி கொறித்தது வரை அனைத்தும் மாமியாரிடம் மனைவியால் விவரிக்கப்பட்டிருக்கும்.

Representational Image
Representational Image

வழக்கம் போல டி.வி பார்த்துக்கொண்டிருந்த மாமனார் புன்சிரிப்புடன், "என்ன மாப்பிளை சௌக்கியமா? வேலை எப்படி போகுது" என்று கேட்டபடி டி.வி-யைத் தொடர்ந்தார். வாழும் மகான் அவர்.

படுக்கை அறையினுள் நுழைந்து அப்படியே படுக்கையில் விழுந்தேன். சிறிது நேரம் ஆகியிருக்கும். கதவு படபடவென அடிக்கப்பட்டது.

எரிச்சலுடன் திறந்தேன்." எழுந்து வாங்க" என்ற மனைவியின் முகத்தில் பெரும் திகில்! பதற்றத்துடன் ஹாலுக்குச் சென்றவன் அதிர்ந்துவிட்டேன்.

டாக்டர், பூசாரி, டிடெக்டிவ் மூவரும் அமர்ந்திருந்தனர். எப்படித்தான் கண்டுபிடித்தார்களோ? மூவரும் வந்ததால் மனைவியின் முகம் பேயறைந்தது போல காணப்பட்டது. அனைத்தையும் கூறிவிட்டார்கள் போல. டாக்டருடன் ஏதோ சுவாரஸ்யமாக விவாதித்துக்கொண்டிருந்தார் மாமனார்.

என்னைப் பற்றிய ஏடாகூடமாகத்தான் இருக்கும். பூசாரியிடம் கை கட்டி வாய் பொத்தி, குறி கேட்டுக்கொண்டிருந்தார் மாமியார். அடக்கடவுளே! டிடெக்டிவ் என் மனைவியிடம் ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பரிசோதனைக் கூட எலி போலவே அனைவரும் நோக்கினர்.

ஒவ்வொருவரையும் சமாதானம் செய்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. அவர்கள் சென்றபின், டிஸ்கவரி சேனலைப் பார்க்கும் குழந்தை போல ஆச்சர்யமாகப் பார்த்தனர் வீட்டிலிருந்த மூவரும். இரவு உண்டி சுருக்கி உறங்கினேன். இதற்கு தீர்வு காண வேண்டும். முதலில், எவ்வகையிலும் இணைய இணைப்பு இல்லாத இடம் வேண்டும். நகரத்தில் சாத்தியமில்லை. சொந்த கிராமம் செல்ல முடிவெடுத்தேன். கூடலூர் அருகிலுள்ள என் கிராமம் பசுமையுடனும் பனியுடனும் என்னை வரவேற்றது. வீட்டுக்குச் சென்றவுடன் பழைய டெஸ்க்டாப்பில் அமர்ந்து விட்டேன். அதில், மூன்றுநாள்கள் கடுமையாக உழைத்தேன்.

கிட்டத்தட்ட முடித்துவிட்டேன் புதிய சாஃப்ட்வேர் புரோகிராமை கணிப்பொறியில் சேவ் செய்துவைத்தேன். இனி, கம்ப்யூட்டரில் உள்ள விவரங்களை சி.டி-க்களில் பதிவுசெய்வதுதான் பாக்கி.

Representational Image
Representational Image

இணைய இணைப்பு பெற முடியாத பேசிக் மாடல் போன், காலியான சி.டி-க்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரெக்கமெண்டேஷன் மூலம் குறிப்புதவிக்காகப் பெற்ற கம்ப்யூட்டர் சார்ந்த தலையணை புத்தகங்களுடன் என் சோதனைப் பயணத்தை ஆரம்பித்தேன்.

பேருந்தில் செல்லும்போதே திட்டமிட்டேன். ஜீனியை அழிக்கும் புரோகிராமை என் கிராமத்து வீட்டில் இருக்கும் பழைய டெஸ்க்டாப் மூலம் செய்து, அதை சி.டி-க்களில் பதிவுசெய்து கொள்வது என்றும், எவ்வகையிலும் இணையத்தைத் தொடர்பு கொண்டுவிடக்கூடாது என்றும்.

இரவு அம்மா கையால் சுடு சாதம் ரசம், அப்பளத்துடன் சாப்பிட்டு விட்டு நிம்மதியாக உறங்கினேன். மறுநாள் காலை குளிக்கும் போதே தெரிந்துவிட்டது. இத்தனை நாள் இல்லாத பிரச்சனை மறுபடியும் ஆரம்பித்துவிட்டது! எப்படி?

Representational Image
Representational Image

என் செயல்கள் என் கட்டுப்பாட்டில் இல்லை. அதிர்ச்சியுடன் ஓடிச்சென்று கம்ப்யூட்டரைப் பார்த்தேன். டூர் சென்றிருந்த என் அக்கா மகன், வரம் தரும் கடவுள் போன்று மலர்ந்த முகத்துடன் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருந்தான்.

"வா மாமா. வந்ததுல இருந்து கம்ப்யூட்டரே கதியா இருக்கேனு தாத்தா சொன்னார். அதான் உனக்கு வசதியா இருக்குமேனு இந்த கம்ப்யூட்டருக்கு நெட் கனெக் ஷன் குடுத்துட்டேன்!" என்றபடி சென்றான். அடப்பாவி!

கம்ப்யூட்டர் ஸ்கிரீனைப் பார்த்தேன்."வாடா ஏமாற்றுக்காரா" என்ற வாசகம் ஒளிர்ந்தது. சேவ் செய்துவைத்த புதிய சாஃப்ட்வேர் முழுவதையும் ஜீனி படித்திருக்கும். அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தன்னை வடிவமைத்துக்கொண்டிருக்கும். ஜீனியை அழிக்கும் திட்டம் இனி நடக்காது. எனக்குத் தெரிந்த அத்தனை நுட்பங்களையும் பயன்படுத்திவிட்டேன். நான், இனி புதிதாக அறிந்துகொள்ள இன்னும் பல ஆண்டுகள் ஆகும். பிறர், ஜீனியைப் பற்றி உடனே புரிந்துகொள்வது கடினம். புரியவைக்கவும் பல ஆண்டுகள் ஆகும். அதற்குள் ஜீனி இன்னும் பல கோடி நுட்பங்களைக் கற்றிருக்கும்.

Representational Image
Representational Image

அப்போ, ஜீனியை அழிக்கவே முடியாதா? இனி என் கதி? கம்ப்யூட்டர் என்ஜினீயராகிய நான், என் குடும்பத்துடன் இணைய இணைப்பே இல்லாத இடத்தில் வாழப்போகிறேனா? இல்லை, என் குடும்பம் இயல்பான இணைய வாழ்க்கை வாழவேண்டி ஜீனி கட்டளையிட்டதுபோல சாகப்போகிறேனா?

அதிர்ச்சியில் மயங்கினேன்!

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு