Published:Updated:

இன்டர்வியூ! - த்ரில் சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image

இன்று இறுதிக்கட்ட நேர்காணல் இந்த ஹோட்டலில் நடப்பது குறித்த இ-மெயில் தகவல் நேற்று இரவுதான் அவர்களுக்குக் கிடைத்து இருந்தது...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

அவர்கள் 10 பேரும் அந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் கூடியிருந்தனர். இந்தியாவின் மிகப் பிரபலமான ஒரு நிறுவனத்தின் வேலைக்கான நேர்காணலுக்காக அவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு இருந்தனர். ஏற்கெனவே அனைவரும் நல்லதொரு வேலையிலும், சிறப்பான பொருளாதார நிலையிலும் இருந்தபோதும், இந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பது என்பது அவர்களது கனவாக இருந்தது. எனவே, இங்கு ஆட்கள் தேவை என்று கேள்விப்பட்ட உடனேயே விண்ணப்பித்து, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு10 பேர் இறுதிக்கட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.

Representational Image
Representational Image
Pixabay

இன்று இறுதிக்கட்ட நேர்காணல் இந்த ஹோட்டலில் நடப்பது குறித்த இ-மெயில் தகவல் நேற்று இரவுதான் அவர்களுக்குக் கிடைத்து இருந்தது.

தற்போது வேலை செய்துகொண்டிருக்கும் நிறுவனத்திற்குத் தெரியாமல் விடுப்பு எடுத்துவிட்டு இந்த நேர்காணலுக்கு அவர்கள் வந்திருந்தனர். இறுதிக்கட்ட நேர்காணல் எப்படியிருக்குமோ என்ற ஆவலுடன் அவர்கள் காத்திருந்தபோது,அ ந்த ஹாலின் கதவைத் திறந்துகொண்டு கோட் சூட் அணிந்த சில உயரதிகாரிகள் மேடைக்கு வந்தனர்.

அவர்களில் ஒருவர் மைக் முன்பு நின்று பேச ஆரம்பித்தார்.

"நண்பர்களே, நாம் நேர்காணலைத் துவங்குவதற்கு முன்பாக எந்தவிதமான இடையூறுகளும் இல்லாமல் உங்களுடன் நான் பேச விரும்புகிறேன். ஆகவே, உங்களுடைய செல்போன்களை ஆஃப் செய்து நம்முடைய அலுவலர்கள் கொண்டுவரக்கூடிய டிரேக்களில் வைத்துவிடுங்கள். அவற்றை நீங்கள் வெளியே செல்லும்போது எடுத்துக்கொள்ளலாம்" என்றார்.

Representational Image
Representational Image
Pixabay

அனைவரும் செல்போன்களை ஒப்படைத்த பிறகு, அவர் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

"நீங்கள் 10 பேருமே மிகவும் திறமைசாலிகள். அதீத புத்திசாலிகள். அதனால்தான் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்த எமது நிறுவன வேலையின் இறுதிக்கட்ட தேர்விற்கு நீங்கள் 10 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். ஆனால், எங்களுக்கு தற்போது 10 பேர் தேவை இல்லை. உங்களில் இரண்டு பேரை மட்டுமே நாங்கள் வேலைக்கு தேர்வு செய்யப்போகிறோம். தேர்வு செய்யப்படும் திறமையான அந்த இருவருக்கும் நீங்கள் கனவிலும் கண்டிராத ஆண்டு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ஆனால், நீங்கள் அனைவருமே இங்கு வேலை செய்யப்போதுமான திறமை உடையவர்களாக இருப்பதால், அந்த இரண்டு பேர் யார் என்பதை எங்களால் முடிவு செய்ய முடியவில்லை. ஆகவே, இன்றைய டிரெண்டிற்குத் தகுந்தவாறு புதுமையான முறையில் ஒரு இன்டர்வியூ நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம்" என்று கூறி நிறுத்தினார் அவர்.

Representational Image
Representational Image
You X Ventures / Unsplash

அது என்ன புதுமையான சோதனையாக இருக்கும் என அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் அவரை நோக்கினர். அந்த அதிகாரி தொடர்ந்தார், "இப்போது உங்கள் அனைவரையும் ஒரு வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறோம். பிக்பாஸ் வீடு போலதான் இதுவும். வெளியுலக மற்றும் இணையத் தொடர்புகள் இல்லாமல் மூன்று நாள்கள் நீங்கள் அந்த வீட்டில் இருக்க வேண்டும். அங்கு நாங்கள் அவ்வப்போது உங்களுக்குக் கொடுக்கக்கூடிய டாஸ்க்குகளை நீங்கள் சரியாகச் செய்ய வேண்டும். அந்த வீடு முழுக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

உங்களுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் உற்று நோக்கப்பட்டு, எங்களுக்குத் தேவையான இரண்டு பேர் மட்டுமே இறுதியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த நொடியிலிருந்து உங்களுக்கான இன்டர்வியூ ஸ்டார்ட் ஆகிறது. உங்களுக்கு இந்த நொடியிலிருந்தே வெளியுலகத் தொடர்புகள் எதுவுமே இருக்காது. இதற்கு சம்மதம் என்பவர்கள் மட்டும் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் நமது நிறுவனத்தின் வாகனத்தில் ஏறுங்கள். ஒருவேளை இதற்கு சம்மதம் இல்லை என்பவர்கள் இப்போதே திரும்பிச் சென்றுவிடலாம். யார் யார் போட்டிக்கு வருகிறீர்கள்?" என்று கூறி அவர்களின் முகங்களை நோக்கினார் அந்த அதிகாரி.

Representational Image
Representational Image

அவர்கள் 10 பேருமே கைகளை உயர்த்தி தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். "மிக்க மகிழ்ச்சி. மீண்டும் சந்திப்போம்" என்றபடி அவர் விடைபெற்றார். அதிகாரியின் உதவியாளர் அவர்களிடம், "நீங்கள் வெளியே செல்வதற்கு முன்பாக இந்த பேப்பரில் உங்கள் வீட்டு செல்போன் எண்ணை எழுதிக் கொடுங்கள்.

நீங்கள் 3 நாள்கள் வீட்டிற்குச் செல்லாவிட்டால் அவர்கள் பதறிப்போவர். எனவே, நாங்கள் அவர்களுக்கு உரியவாறு தகவல் தெரிவித்து விடுகிறோம்" என்றார்.

அனைவரும் தங்களது வீட்டின் செல்போன் எண்களை எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏறினர். ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பின் ஒரு பெரிய வீட்டின் முன்பாக வாகனம் நின்றது. அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர். அது ஒரு மிகப் பெரிய வீடு. அந்த வீட்டில் அவர்கள் தங்குவதற்குத் தேவையான அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அவர்களை இறக்கி விட்டதும் டிரைவர் வெளிக்கதவைப் பூட்டிவிட்டு வண்டியை எடுத்துச் சென்றுவிட்டார்.

அவர்கள் அந்த வீட்டில் சமைத்து, உண்டு, ஆடிப்பாடி தங்கள் பொழுதைக் கழித்தனர். மைக் மூலம் அவ்வப்போது கொடுக்கப்படும் டாஸ்க்குகளைக் கேமரா முன்பு கவனமுடன் செய்தனர்.

அலுவலர்களுடன் உரையாடுவது, ஊழியர்களிடம் வேலை வாங்குவது, மீட்டிங்குகளில் பேசுவது போன்றெல்லாம் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் சிரத்தையுடன் நடித்துக் காண்பித்தனர்.

பொழுதுபோக்கிற்கு என சினிமா நடிகர்கள், போலீஸ்காரர்கள், கடத்தப்பட்ட நபர்கள், வில்லன்கள் போன்றெல்லாம் பலவாறு கேமரா முன்பு நடிக்கவும் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது.

Representational Image
Representational Image
Vanilla Bear Films / Unsplash

நடிப்பு மட்டுமல்லாது பல்வேறு செயல்திட்ட வேலைகளும் அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அவற்றை அனைவருமே சிரத்தையுடன் செய்தனர். அனைவருமே திறமையுடனும், முழு ஈடுபாட்டுடனும் இருந்ததால் அவர்களில் எந்த இரண்டு பேர் தேர்வு செய்யப்படப் போகின்றனர் என்பது சஸ்பென்சாகவே தொடர்ந்தது.

இப்படியே இரண்டு நாள்கள் கடந்தன.

மூன்றாம் நாள் காலை அவர்கள் தூங்கி எழுந்ததுமே கதவு திறக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். கதவின் அருகில் அவர்களுடைய செல்போன்கள் உள்ள ட்ரே வைக்கப்பட்டு இருந்தது. ஓடிச் சென்று அவரவர்கள் செல்போனை எடுத்து ஆன் செய்து பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

ஆமாம். அவர்கள் 10 பேரும் கடத்தப்பட்ட செய்தி அனைத்து சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங்கில் இருந்தது. அனைத்து டிவி சேனல்களிலும் அவர்கள் 10 பேரும் கடத்தி வைக்கப்பட்ட இடம் தெரிந்ததாக அவர்களது புகைப்படத்துடன் ப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டு இருந்தது. அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

செல்போன்கள் இருந்த ட்ரேயில் உரையுடன்கூடிய ஒரு கடிதம் இருந்தது. அதனை எடுத்து அவர்களில் ஒருவர் உரக்க வாசிக்கத் தொடங்கினார்.

Representational Image
Representational Image
You X Ventures / Unsplash

"நண்பர்களே! இப்போது எங்கள்மீது அனைவரும் நிச்சயமாகக் கடும் கோபத்தில் இருப்பீர்கள். இதோ எங்கள் ஒப்புதல் வாக்குமூலம்! ஆம் நாங்கள்தான் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான இ-மெயில் அனுப்பி உங்களைக் கடத்தினோம். நீங்கள் கேமரா முன்பு நடித்ததில் கடத்தப்பட்டது போன்று நடித்ததை உங்கள் போனில் இருந்தே உங்கள் வீட்டிற்கு அனுப்பினோம். உங்கள் குடும்ப நபர்களைப் பிளாக்மெயில் செய்து இந்த இரண்டு நாள்களில் ஒவ்வொரு குடும்பத்திடமும் பெரும்பணம் பெற்றோம்.

அடுத்த அரை மணி நேரத்தில் உங்களைத் தேடி போலீஸும் மீடியாவும் வந்துவிடுவர்.

நீங்கள் அனைவரும் அறிவாளிகள்.

என்ன செய்ய வேண்டுமென உங்களுக்கே தெரியும். எங்களுக்குப் பணம் தேவைப்பட்டது. எடுத்துக்கொண்டோம்.

உங்களால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், எங்களால் உங்களுக்கு தொல்லைதர முடியும். புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் இதுவரை அளித்த மற்றும் இனி அளிக்கப்போகும் முழுமையான ஒத்துழைப்பிற்கு நன்றி" எனக் கடிதம் முடிந்திருந்தது.

அவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் சில நிமிடங்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். பிறகு ஒருவாறு சுதாரித்துக் கொண்டு கதவைச் சாத்திவிட்டு வந்த அவர்கள் 10 பேரும் தங்களுக்குள் ஆலோசனை செய்தனர். பலவகை யோசனைகளுக்குப் பிறகு இறுதியாக ஒரு முடிவு அனைவராலும் ஏற்கப்பட்டது.

சில நிமிடங்களில் வீட்டின் கதவு உடைத்துத் திறக்கப்பட்டது. குடும்பத்தினரும் போலீஸும் மீடியா ஆட்களும் கும்பலாக உள்ளே நுழைந்தனர். சில நிமிட ஆசுவாசங்களுக்குப் பிறகு நிருபர்கள் அவர்களிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர்.

Representational Image
Representational Image
y Romain V / Unsplash

"உங்களைக் கடத்தியவர்களை நீங்கள் பார்த்தீர்களா?" என்ற முதல் கேள்விக்கு,

"இல்லை. எங்களை மயக்கப்படுத்தி கடத்தி வந்தனர்" என்றார் ஒருவர்! மற்றவர்கள் அவரைப் புன்னகையுடன் நோக்கினர்.

பேட்டி தொடர்ந்தது...

அவர்களுக்கு தாங்கள் வீட்டினுள் இருக்கும்போது எடுத்த முடிவு மனதினுள் நிழலாடியது. "போலி இன்டர்வியூ பற்றியும், கடத்தல்காரர்களின் அடையாளங்கள் பற்றியும் போலீஸிடம் நம்மால் கூற முடியும். ஆனால், இதில் மிகப்பெரிய சிக்கல் இருக்கிறது. நாம் வேறு வேலை தேடியது தற்போதைய நமது நிறுவனத்திற்குத் தெரிந்தால் அங்கு நம்முடைய மதிப்பு குறையும். வேலை கூட போகலாம். மேலும் இவ்வளவு கேவலமாகவும், முட்டாள்தனமாகவும் நாம் ஏமாந்தது வெளி உலகிற்குத் தெரிய வரும்.

நேற்றுவரை நம்மை அறிவாளி என்றும் புத்திசாலி என்றும் கொண்டாடியவர்கள் இனி ஒரு கோமாளி போன்றே நோக்குவர்.

மேலும் கடத்தல்காரர்கள் இரண்டு நாள்களில் நமது செல்போன்களைக் ஹேக் செய்து நமது போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நிச்சயம் சேகரித்திருப்பர்.

எனவே, நம்மைக் கடத்தியவர்கள் இறுதிவரை போலீஸில் பிடிபடாமல் இருப்பதே நமக்கு அனைத்து வகையிலும் நல்லது. அதற்கு நாம் போலீசை திசைதிருப்பும் வகையில் ஒரே மாதிரி தவறான தகவல்களைக் கூறுவது அவசியம். இதைத்தான் அளிக்கப் போகும் ஒத்துழைப்பிற்கு நன்றி என கடத்தல்காரர்கள் புத்திசாலித்தனமாகக் குறிப்பால் தெரிவித்துள்ளனர். எனவே, நாம் உறுதியான, தெளிவான ஒரு முடிவு எடுப்போம். ஏனென்றால் நாம் அறிவாளிகள்!

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு