Published:Updated:

2019 டாப் 10 மனிதர்கள்

2019 டாப் 10 மனிதர்கள்
பிரீமியம் ஸ்டோரி
2019 டாப் 10 மனிதர்கள்

அகரம் எழுதும் ஆயுத எழுத்து - சூர்யா

2019 டாப் 10 மனிதர்கள்

அகரம் எழுதும் ஆயுத எழுத்து - சூர்யா

Published:Updated:
2019 டாப் 10 மனிதர்கள்
பிரீமியம் ஸ்டோரி
2019 டாப் 10 மனிதர்கள்

அறத்தின் குரல் - பொ.ரத்தினம்

மூன்று தசாப்தங்களாக எளிய மக்களின் நீதிக்காக சட்டப் புத்தகத்தைக் கையிலேந்திப் போராடிவருபவர் வழக்கறிஞர் பொ.ரத்தினம். நாமக்கல் பகுதியில் உள்ள திண்டமங்கலம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான சுரண்டல்கள் வன்முறைகளுக்கு எதிராக, துளியும் சமரசமின்றி அறத்தின் குரலாகக் களத்தில் ஒலிப்பவர்.

 பொ.ரத்தினம்
பொ.ரத்தினம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குஜராத்தில் நர்மதா அணைக்காகக் கையகப்படுத்தப்பட்ட பழங்குடியினரின் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் முறைகேடு நடந்தபோது, சட்டத்தின் துணைகொண்டு போராடி அவர்களுக்குரிய பணத்தைப் பெற்றுக் கொடுத்த குழுவில் பொ.ரத்தினத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலவளவுப் படுகொலை, சென்னகரம்பட்டிப் படுகொலை, திண்ணியம் வன்கொடுமை, கண்ணகி முருகேசன் படுகொலை போன்ற அநீதிகளுக்கு எதிராக வழக்குகளைத் துணிந்து நடத்தியவர். மேலவளவுக் கொலைக்குற்றவாளிகள் சமீபத்தில் தமிழக அரசால் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வைத் தமிழ்மக்களிடம் ஏற்படுத்துவதைத் தன் கடமையாகக் கொண்டு செயல்படுபவர். சாதிவெறியர்கள் மற்றும் அதிகாரவர்க்கத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாத போராளி பொ.ரத்தினம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரலாற்றின் மைந்தர்கள்வை. - பாலசுப்ரமணியன், கனிமொழி மதி

னித்துவமான தமிழர் மரபு 2,500 ஆண்டுகள் பழைமையானது என்பதை ஆய்ந்தறிந்து சொன்னது கீழடி. உலகிற்கே முன்னோடி நாம்தான் என்பதை உறுதிப்படுத்தும் புதைபொருள் சாட்சியங்களை வெளிக்கொணர்ந்தது அவ்வளவு எளிதில் சாத்தியப்படவில்லை.

பாலசுப்ரமணியன்
பாலசுப்ரமணியன்

ஆயிரங்கரங்களின் முயற்சியே அதை நனவாக்கியது. கீழடியில் தமிழர்களின் வரலாறு புதைந்து கிடக்கிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து குரல் கொடுத்தவர், கீழடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்றாசிரியராகப் பணியாற்றிய பாலசுப்பிரமணியன். தனக்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு ஆய்வுசெய்யத் தொல்லியல்துறை முதல் பிரதமர் வரை தொடர்ந்து கடிதம் எழுதி, கீழடி ஆய்வுக்கு வித்திட்டவர்.

கீழடி ஆய்வுகள் தொடங்கி தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை குறித்த செய்திகள் வந்தபோதும், ஆய்வுகளைத் தொடரவிடாமல் ஏராளமான இடையூறுகள். தடைகளை உடைக்கவும் தமிழரின் தொன்மையை நிலைநாட்டவும் நீதிமன்றத்தின் கதவைத் தட்டியவர் வழக்கறிஞர் கனிமொழி மதி.

கனிமொழி மதி
கனிமொழி மதி

அவர் தொடுத்த வழக்குதான் கீழடியை மூடியிருந்த அடர் மண்ணை விலக்கியது. கீழடி அகழ்வுப் பணி, வெற்றிகரமாகத் தொடங்கவும் தொடரவும் காரணமாக இருந்த பாலசுப்பிரமணியன், கனிமொழி மதி இருவரும் தேடித்தந்திருப்பது உலகத் தமிழர்களுக்கான வரலாற்றுப் பெருமிதம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அகரம் எழுதும் ஆயுத எழுத்து - சூர்யா

ல்வி கற்க வாய்ப்பற்ற, மேற்படிப்பைப் படிக்க முடியாமல் ஏழ்மையின் காரணமாக முடங்கிய மாணவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தர சூர்யாவால் தொடங்கப்பட்ட ‘அகரம் ஃபவுண்டேஷ’னுக்கு இது பத்தாம் ஆண்டு. `அகரம்' மூலம் 3,000 மாணவர்களைப் படிக்கவைத்திருக்கிறார் என்பதும் 90 சதவிகிதம் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதும் நம்பிக்கை விதைக்கும் நற்செய்திகள்.

 சூர்யா
சூர்யா

இத்தகைய உதவிகளோடு தன் செயற்பாடுகளைச் சுருக்கிவிடவில்லை சூர்யா. புதிய கல்விக்கொள்கை வரைவு முன்வைக்கப்பட்டு நாடு முழுவதும் விவாதங்கள் தகித்த நேரத்தில் அதற்கு எதிராகவும் `நீட்' என்னும் அநீதிக்கு எதிராகவும் தமிழகத்திலிருந்து அழுத்தமாய் ஒலித்த குரல் சூர்யாவுடையது.

பயிர் காத்த மருத்துவர் - கே.நடராஜன்

கே.நடராஜன்
கே.நடராஜன்

பஞ்சகவ்யா, இன்று இந்தியா முழுவதும் இயற்கை விவசாயிகள் பயன்படுத்தும் முக்கிய இடுபொருளாக மாறிவிட்டது. வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள்கூட, இன்று பஞ்சகவ்யாவை அறிவியல்பூர்வமாக அங்கீகரித்து விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கின்றன. அப்படிப்பட்ட பஞ்சகவ்யாவைக் கண்டறிந்து நடைமுறைக்குக் கொண்டுவந்தவர் டாக்டர்.கே.நடராஜன். ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த அலோபதி மருத்துவர். இவரது பஞ்சகவ்யா வருகைக்குப் பிறகே தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் இயற்கை விவசாயம் வேகமெடுத்தது. பஞ்சகவ்யா பயன்பாட்டின் மூலம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன் கொடுமைகளிலிருந்தும் தற்கொலையிலிருந்தும் தப்பித்திருக்கிறார்கள். நவீன இளைஞர்கள் பலரையும் இயற்கை விவசாயத்தின் பக்கம் ஈர்த்த பெருமை டாக்டர் நடராஜனுக்கு உண்டு.

உரிமைக்கான உரத்த குரல் - வழக்கறிஞர் செல்வகோமதி

னித உரிமை மீறல்கள், பெண்கள், சிறார்களுக்கு எதிரான கொடுமைகளைத் தயங்காமல் தட்டிக்கேட்டு, சட்டரீதியாக நீதியைப் பெற்றுத்தருகிறார் வழக்கறிஞர் செல்வகோமதி. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இளம்பெண்களைப் பஞ்சாலைகளில் கொத்தடிமையாகப் பணியமர்த்தப்பட்ட கொடுமை குறித்துக் கள ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இவர் மூலம்தான் அந்தத் திட்டத்தின் பேரால் நடைபெறும் கொடுமைகள் வெளியுலகத்துக்குத் தெரியவந்தது.

வழக்கறிஞர் செல்வகோமதி
வழக்கறிஞர் செல்வகோமதி

இரண்டு வருடங்களுக்கு முன் மத்திய அரசு பசுவதைத் தடைச்சட்டம் கொண்டு வந்தபோது, அதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடர்ந்து இடைக்காலத் தடை வாங்கிய செல்வகோமதி, சைவ உணவுப்பழக்கம் உள்ளவர் என்பதே இவர் நேர்மையையும் போர்க்குணத்தையும் சொல்லும்.

மாற்றத்தின் மனிதர் - டாக்டர் காந்திமதிநாதன்

முட்புதர்கள் மண்டி, மக்கள் கால்வைக்கவும் தயங்கிய அரசு மருத்துவமனையை மதுரையே பார்த்து வியக்கும் பசுமை வளாகமாக மாற்றிய மகத்தான மனிதர் டாக்டர் காந்திமதிநாதன்.

டாக்டர் காந்திமதிநாதன்
டாக்டர் காந்திமதிநாதன்

தூய்மையான வார்டுகள், ஒவ்வொரு வார்டிலும் டி.வி, ரேடியோ, சுகாதார வசதிகள் கொண்ட சலூன், மூலிகைத் தோட்டம், நூலகம், விளையாட்டு அரங்கங்கள், நோயாளிகளுக்குத் தொழிற்பயிற்சிகள் என இவரது முயற்சியால் முழுமையான மறுவாழ்வு மையமாக மாறியிருக்கிறது, முன்பு ‘காட்டாஸ்பத்திரி’ என்று மோசமாக அழைக்கப்பட்ட மதுரைக்கு அருகே தோப்பூரில் இருக்கும் அரசு நெஞ்சக மற்றும் தொற்றுநோய் மருத்துவமனை. சக மருத்துவர்களின் உதவியுடன் 100 ஏக்கர் கொண்ட மருத்துவமனையை மண்ணுக்கான சொர்க்கமாக மாற்றிய டாக்டர் காந்திமதிநாதனின் பணி மதிப்புக்குரியது.

வேர்களின் மீது வெளிச்சம் - ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, தன் தாய்மொழியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வெழுதி இந்தியத் தேர்தல் ஆணையம் வரை உயரம்தொட்ட முதல் தமிழர்.

ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்
ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்

ஒடிசா மாநிலத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும் அம்மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராகத் தொடரும் அளவுக்கு அவரது சேவை தூய்மையானது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் குறித்து ஆராய்ந்து, ‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’ என்ற கருத்தை ஆய்வுலகுக்கு அளித்தவர். தன் மொத்த ஆய்வு முடிவுகளையும் திரட்டி, இவர் வெளியிட்டுள்ள ‘Journey of Civilization - Indus to Vaigai’ நூல், இந்திய வரலாற்றில் புது வெளிச்சம். இந்திய நாகரிகத்தின் வேர்கள், தமிழில் இருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதில் இவர் காட்டும் விருப்பம் போற்றுதற்குரியது.

கனவுகளின் வழிகாட்டி - கனகராஜ்

தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் நான்காவதாகப் பிறந்தவர் கனகராஜ். அரசுப் பள்ளியில் படித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எம்.பில்., பிஹெச்.டி எனப் படித்து முடித்தார்.

கனகராஜ்
கனகராஜ்

அப்போதே ஐ.ஏ.எஸ் தேர்வுக்காக இருமுறை முயன்று தோல்வியடைந்து, கல்லூரி விரிவுரையாளர் ஆகிவிட்டார். ஆனாலும் தன் நிறைவேறாத கனவை, மற்றவர்களுக்கு நனவாக்கிக் காட்ட மனம் கொண்டார். 2007–ம் ஆண்டு கோவை அரசுக் கலைக் கல்லுாரியில் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சியைத் தொடக்கினார். இவரது முயற்சியால் இதுவரை 88 பேர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ், மற்றும் ஐ.ஆர்.எஸ்-களாகத் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். நாலே முக்கால் லட்சம் குழந்தைகளுக்கு, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு உதவும் ‘வாழ்விற்குத் திறனேற்றுதல்’ (Empowerment for Future) என்கிற பயிற்சியையும் இலவசமாக அளித்திருக்கிறார்!

சந்திரயான் சாதனைத் தமிழச்சி - வனிதா முத்தையா

கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே இரவு கண்விழித்த இந்தியனை ஒரு விண்வெளிச் சாதனைக்காகக் கண்விழிக்க வைத்த பெருமை சந்திரயான் 2-க்கு உண்டு. இஸ்ரோவின் இந்தக் கனவுத்திட்டத்தை முன்னின்று தயார் செய்தவர் வனிதா முத்தையா.

சிவனிதா முத்தையா
சிவனிதா முத்தையா

செவ்வாய் கிரகத்தை ஆராயும் மங்கள்யான் திட்டத்திலும் முக்கியப் பங்காற்றியவர். அடுத்து இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றார் வனிதா. அதுவும், நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கும் முதல் நாடாக வேண்டும் என்னும் பெரும் லட்சியத்துடன் தொடங்கிய சந்திரயான் 2 மிஷனிற்குத் தடைகளும் பின்னடைவுகளும் இருந்தாலும், சந்திரயான் என்னும் மகத்தான திட்டத்துக்கு முன்னேர் ஓட்டியவர்களில் முக்கியமானவர் வனிதா முத்தையா.

பொது நில மீட்புப் போராளி - தியாகராஜன்

வ்வொரு குடியிருப்பின் பரப்பளவிலும் 10 சதவிகிதத்தைப் பொது ஒதுக்கீட்டு இடமாக (ரிசர்வ் சைட்) ஒதுக்க வேண்டுமென்று நகர ஊரமைப்பு விதிகள் உருவாக்கப்பட்டன.

தியாகராஜன்
தியாகராஜன்

ஆனால் இந்த இடங்கள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன, அல்லது குடியிருப்புகளாக உருமாற்றப்பட்டுள்ளன. இவற்றை மீட்டு பூங்காக்களாகவும் குழந்தைகள் விளையாட மைதானங்களாகவும் மாற்றுவதையே தன் வாழ்நாள் கடமையாகச் செய்துகொண்டிருக்கிறார் தியாகராஜன். கோவையைச் சேர்ந்த இவர், இதுவரை கோவை மாநகராட்சியிலும், சுற்றிலும் உள்ள உள்ளாட்சிகளுக்குச் சொந்தமான பகுதிகளிலும் மட்டுமே பலநுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள பல ஏக்கர் பரப்புள்ள ரிசர்வ் சைட் இடங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தைரியமாகப் போராடி மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

அறிவியல் கொண்டு அவலம் துடைத்த இளைஞர்கள்

னிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலம், மனித சமூகத்தின் மாபெரும் அவமானம். இதுகுறித்துத் தொடர்ச்சியான விமர்சனங்களும் கண்டனங்களும் முன்வைக்கப்படும் சூழலில், அதற்கான அறிவியல் தீர்வை உருவாக்கியிருக்கிறார்கள், கேரளாவைச் சேர்ந்த எட்டு இளைஞர்கள்.

2019 டாப் 10 மனிதர்கள்

விமல் கோவிந்த், ரஷீத், நிகில், அருண் ஜார்ஜ், ஜலீஸ், அப்சல் முட்டிக்கல், சுஜோத், விஷ்ணு ஆகிய பொறியியல் மாணவர்கள் கழிவுகளை அகற்றுவதற்காக உருவாக்கிய இயந்திரம்தான் Bandicoot.

இவர்கள் அனைவரும் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள குற்றிபுறம் எம்.இ.எஸ் இன்ஜினீயரிங் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். ரோபோக்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர்கள், ஐ.டி.துறை சார்ந்த கண்காட்சிகளில் கலந்துகொண்டபோது கேரளத் தகவல் தொழில்நுட்பத்துறைச் செயலாளர் சிவசங்கரன், சாக்கடையைச் சுத்தம் செய்யும் ரோபோவைக் கண்டுபிடிக்கும்படி ஆலோசனை கூறினார். அதன்படி உருவாக்கப்பட்டதுதான் இந்த ரோபோ.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதன்முதலில் இந்த ரோபோவின் முதல் வெர்ஷனை கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகப்படுத்தினார். பின்னர் தமிழகத்தின் கும்பகோணம் நகராட்சியில் அந்த ரோபோ பயன்படுத்தப்பட்டது. அதன் அடுத்தகட்ட வெர்ஷன், தஞ்சாவூரில் பயன்படுத்தப்படுகிறது. டாடா நிறுவனம் இந்த இளைஞர்களின் கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கொடுக்க முன்வந்துள்ளதுடன், நாடு முழுவதும் ரோபோக்களைத் தயாரித்து விநியோகிக்கவும் ஒப்பந்தம் போடவுள்ளது. இந்தியா முழுவதும் இந்த ரோபோ பயன்பாட்டுக்கு வரும்போது, மனித மலத்தை மனிதர்களே அள்ளும் இழிவு ஒழிக்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism