Published:Updated:

2019 டாப் 10 இளைஞர்கள்

இளவேனில் வாலறிவன்
பிரீமியம் ஸ்டோரி
இளவேனில் வாலறிவன்

தங்கம் நோக்கிப் பாயும் தோட்டா! - இளவேனில் வாலறிவன்

2019 டாப் 10 இளைஞர்கள்

தங்கம் நோக்கிப் பாயும் தோட்டா! - இளவேனில் வாலறிவன்

Published:Updated:
இளவேனில் வாலறிவன்
பிரீமியம் ஸ்டோரி
இளவேனில் வாலறிவன்

நம்பிக்கை நங்கை -  சம்யுக்தா விஜயன்

சமூகப் புறக்கணிப்புகளைப் புறந்தள்ளி சாதித்திருக்கும் மரியாதைக்குரிய திருநங்கை, பொள்ளாச்சியைச் சேர்ந்த சம்யுக்தா விஜயன், திருநங்கைகளுக்கு ஏற்படும் சமூகப் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் சந்தித்தவர்.

சம்யுக்தா விஜயன்
சம்யுக்தா விஜயன்

ஆனாலும் நன்றாகப் படித்து லக்சம்பர்க், அமெரிக்கா நாடுகளிலுள்ள அமேசான் நிறுவனங்களில் பணியாற்றினார். 2017-ம் ஆண்டு இந்தியா திரும்பியவர், தற்போது பெங்களூரிலுள்ள ஸ்விகி நிறுவனத்தின் முதன்மைத் தொழில்நுட்பத் திட்ட மேலாளராக உயர் பொறுப்பில் பணியாற்றுகிறார். திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதுடன், `Toutestudio’ என்கிற ஸ்டார்ட்-அப் நிறுவனத்தைத் தொடங்கி, திருநங்கைகளின் திறமைகளுக்குக் களம் அமைத்துக்கொடுக்கும் சம்யுக்தா, திருநங்கைகளின் முக்கியமான முன்னோடி!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நகைச்சுவை இசைஞன் - அலெக்சாண்டர் பாபு

தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும் தனித்துவமான தனிக்குரல் நகைச்சுவைக் கலைஞன். இன்ஜினீயரிங்கில் மாஸ்டர்ஸ் முடித்து அமெரிக்காவில் ஐடி வேலை பார்த்தவர், `திறமையை நிறுவ திசையை மாற்றுவோம்' என வேலையை உதறி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாண்ட் அப் காமெடியனாக மைக் பிடித்தார். கவரும் இசைத்திறமை, கலகலப்பான கலாய் பேச்சு எனக் கலவையான அலெக்ஸாண்டரின் நிகழ்ச்சிகளில் கூட்டம் குவிகிறது.

அலெக்சாண்டர் பாபு
அலெக்சாண்டர் பாபு

உடனே இதுதான் நமக்கான ரூட் என ஆட்டோவில் ஏறிவிட்டார் அலெக்ஸ். சென்னை, பெங்களூரு என இந்தியாவின் பெருநகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தியவர், இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து என வொண்டர்லாண்ட்களில் நகைச்சுவை நையாண்டி விருந்துவைக்கிறார். இசையும், பாடலும், பேச்சும், குறும்பும் எனக் கலக்கல் காம்போ விருந்து படைக்கும் இந்த ராமநாதபுரத்துத் தமிழன் கொண்டாடப்படவேண்டிய நம்பிக்கை இளைஞன்!

வனத்தின் மனசாட்சி -  சோபா மதன்

நீலகிரி மாவட்டத்தில் அம்பலமூலா என்ற சின்னஞ்சிறு கிராமத்தில், வெளிச்சம்படாத ஒரு பழங்குடிச் சமூகத்தில் பிறந்தவர் சோபா மதன். பள்ளிக்கல்வியையே எட்டிப்பிடிக்க முடியாத சூழலில் வளர்ந்து சமூகசேவைப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு இப்போது காடுகளையும் தன் மக்களையும் காக்கப் போராடிவருகிறார்.

சோபா மதன்
சோபா மதன்

இவரெழுதிய ‘எங்கள் வனத்தின் கனவு’ என்ற நூல், பழங்குடி மக்களுக்கும் வனத்துக்குமான உறவையும் உரிமைகளையும் சட்டபூர்வமாக முன்னெடுத்து வைக்கிறது. பூர்வகுடி மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டத்தை முடக்கியுள்ள அரசுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் சோபா மதன், ஆதிச்சமூகத்தின் அறக்குரல்!

சித்திரத்தால் சேர்ந்த கூட்டம்‘ - பட்டாம்பூச்சிகள்’ குழு

திருப்பூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளிகளின் வகுப்பறை மற்றும் சுற்றுச்சுவர்களை வண்ண ஓவியங்களால் அலங்கரித்துவருகிறார்கள். 15க்கும் அதிகமான ஆசிரியர்கள் தங்கள் சொந்தப்பணத்தில் இந்தச் சித்திரச்சேவையை மேற்கொண்டுவருகிறார்கள்.

பட்டாம்பூச்சிகள்’ குழு
பட்டாம்பூச்சிகள்’ குழு

கடந்த ஏழு ஆண்டுகளாக, திருப்பூர் நஞ்சப்பா மேனிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த இர.ராஜசேகரன், பட்டாம்பூச்சிகள் குழுவின் ஒருங்கிணைப்பாளர். தேனி மாவட்டம் அல்லிநகரம் மேனிலைப்பள்ளிக்குப் பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுள்ளபோதும் நண்பர்களுடன் இணைந்து பள்ளிச்சுவர் ஓவியப்பணியைத் தொடர்கிறார். இதுவரை 80க்கும் மேற்பட்ட பள்ளிகளின் சுற்றுச்சுவர் மற்றும் 350வகுப்பறைகளில் விழிப்புணர்வு ஓவியங்களைத் தீட்டியுள்ளனர், பாராட்டுக்குரிய பட்டாம்பூச்சிகள் குழுவினர்!

அலைகளின் மைந்தர் -  சே. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ

கடல் அலைகள் தாலாட்டும் பாம்பனில் மீனவக் குடும்பத்தில் பிறந்த ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, தான் தொடங்கிய `நேசக்கரங்கள் அறக்கட்டளை'யின் ஓர் அங்கமாக, ‘கடலோசை 90.4’ பண்பலையை நடத்திவருகிறார்.மீனவர்களுக்காகத் தொடங்கப்பட்ட முதல் சமுதாய வானொலியான இதன் ஓசை, காற்றையும், கடல் அலைகளையும் கடந்து கடலோடிகளின் காதில் ஒலிக்கிறது.

சே. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ
சே. ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ

கடலில் நிலவும் தட்பவெப்பநிலை, புயல் எச்சரிக்கை ஆகியவற்றுடன் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம், வேலை வாய்ப்பு, மீன் விலை நிலவரம் போன்ற தகவல்களையும் ஒலிபரப்பிவரும் பயனுள்ள இந்தப் பண்பலையை நடத்தும் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, வாழ்த்துகளுக்கு உரியவர்.

பொறுப்பு உணர்ந்த புகைப்படக்கலைஞன் - பழனிக்குமார்

இந்தியச் சமூகத்தின் அவமானத்துக்குரிய அவலம் மலக்குழி மரணங்கள். இந்த மரணங்கள் குறித்த முறையான தரவுகள் இல்லாத சூழலில், புகைப்படங்கள் மூலம் அவற்றை ஆவணப்படுத்தும் முக்கியமான பணியைச் செய்கிறார் பழனிக்குமார். துப்புரவுத்தொழிலாளர்களின் துயர்மிகு வாழ்க்கையைப் பதிவுசெய்த `கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்.

பழனிக்குமார்
பழனிக்குமார்

தொல்குடிகளின் குழந்தைகள், விழித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் எனப் பலருக்கும் புகைப்படக்கலையைப் பயிற்றுவித்து வளர்த்தெடுப்பது இவரது ஆக்கபூர்வமான பணிகளில் ஒன்று. மலக்குழி மரணங்களுக்கு உள்ளானவர்களின் குழந்தைகள் எதிர்காலத்தில் அதே வேலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதே இவரின் மகத்தான லட்சியம்.

தங்கம் நோக்கிப் பாயும் தோட்டா! - இளவேனில் வாலறிவன்

களத்துக்குள் வந்துவிட்டால் இலக்கைத் துளைப்பது துப்பாக்கியிலிருந்து கிளம்பும் தோட்டாவா, குறி தவறாத நேர்த்தியான பார்வையா எனப் பிரித்துப்பார்க்க முடியாத அளவு, இணையற்ற திறமைசாலி இளவேனில் வாலறிவன்.

இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன்

ஈயமும் தகரமும் கலந்து செய்யப்பட்ட தோட்டாக்கள் இவரது துப்பாக்கியிலிருந்து பாய்ந்து தங்கப்பதக்கங்களைத் தட்டிவருகின்றன. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், பிரேசிலின் ரியோ, சீனாவின் புதியான் நகரங்களில் நடந்த இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் இந்த 20 வயது கடலூர்ப் பெண். உலக துப்பாக்கி சுடுதல் கழகத்தின் ‘கோல்டன் டார்கெட்’ விருதையும் வென்றுள்ள இளவேனில், பெருமையுடன் இந்தியா தன் தோளில் சுமக்கவேண்டிய துப்பாக்கி மங்கை!

சேலம் எக்ஸ்பிரஸ் - பெரியசாமி

பிறந்ததிலிருந்தே ஒரு கண்ணில் பார்வைக் குறைபாடு. ஆனால், கனவு காண்பதற்கு அது தடையில்லையே! தன்னை ஒரு கிரிக்கெட் வீரனாக அடையாளப்படுத்திக்கொள்ள நினைத்தார் பெரியசாமி. அளவில்லா நம்பிக்கையும் அயராத உழைப்பும், கனவில் நின்றிருந்தவரைக் களத்துக்குள் நிறுத்தியது. புறக்கணிப்புகளையும் தோல்விகளையும் அதிகம் கண்டவர், வாய்ப்புகளின் அருமையை நன்கு உணர்ந்திருந்தார்.

பெரியசாமி
பெரியசாமி

மலிங்காவைப் போன்ற இவரது பந்துவீச்சு ஸ்டைலும், அதே மின்னல்வேக யார்க்கர்களும், பேட்ஸ்மேன்களின் பார்வையில் பயத்தைப் பரவச்செய்தன. முதல் TNPL தொடரிலேயே தொடர் நாயகன். இரண்டே மாதங்களில் தமிழ்நாட்டு அணியில் இடம். தன்னைத் தடுமாறவைத்த வாழ்க்கைக்குத் தன் யார்க்கர்களால் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கிறது இந்த சேலம் எக்ஸ்பிரஸ். நம் கனவுகள்தான் நம் அடையாளம். எந்தக் குறைகளாலும் நம் கனவைக் கலைக்க முடியாது என்பதற்குப் பெரியசாமியே பேருதாரணம்!

வயதை வென்ற வாத்திய நாயகன் - லிடியன் நாதஸ்வரம்

7 கோடி ரூபாய் பரிசான ‘தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ டைட்டிலை வென்றுவந்திருக்கும் பொடியன் இந்த லிடியன். 196 நாடுகளிலிருந்து போட்டியாளர்கள்... 53 நடுவர்கள்... மிகக் கடுமையான போட்டி. ஆனால், லிடியனின் விரல்களில் எந்த நடுக்கமும் இல்லை. பியானோவில் வாசிக்க சீனியர்களே சிரமப்படும் இசைக்கோவை ‘ஃபிளைட் ஆப் தி பம்பிள்பி.

லிடியன் நாதஸ்வரம்
லிடியன் நாதஸ்வரம்

’ இதை ஜஸ்ட் லைக் தட் வாசித்து உலக வைரலானான் லிடியன். ஹோம் ஸ்கூலிங் முறையில் படிக்கும் லிடியனுக்கு இசைதான் 24*7. இரண்டு வயதில் டிரம்ஸ் வாசிக்க ஆரம்பித்தவனுக்கு, 10 வயதில் எட்டாவது கிரேடில் முதலிடம் கொடுத்து கெளரவித்தது லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரி. டிரம்ஸ், மிருதங்கம், கிட்டார், ஃப்ளூட் என எல்லா இசைக்கருவிகளும் வாசித்து அசத்தும் லிடியனின் முழுக் கவனமும் இப்போது பியானோவில். உலகை அசத்தத் தயாராகிவருகிறான் இந்த இசைச்சிறுவன்!

மாற்றி யோசித்த மனிதர்கள்  - ஐஐடி குழு!

பேராசிரியர் சுஜாதா ஸ்ரீனிவாசன் தலைமையில், விவேக் சர்தா, ஸ்வஸ்திக் டாஷ் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என 9 பேர் அடங்கிய குழுவினர், நான்கு ஆண்டுகள் முயன்று மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கியதுதான் ‘ஸ்டேண்டிங் வீல் சேர்.’ மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஒரு கருவியை உருவாக்க வேண்டும் என்று பேராசிரியர் சுஜாதாவின் மனதில் விழுந்த விதைதான் இன்று பயனுள்ள கருவியாக உருவம் பெற்றிருக்கிறது.

ஐஐடி குழு!
ஐஐடி குழு!

‘ARISE’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவதால் மாற்றுத்திறனாளிகள் யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே எழுந்து நிற்கவும், மீண்டும் உட்காரவும் முடியும். இதன்மூலம் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளையும் தவிர்க்க முடியும். பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 2020 பிப்ரவரி மாதம் விற்பனைவுக்கு வரவுள்ள இந்தக் கருவி மாற்றுத்திறனாளிகளுக்கான வரம். அண்மைக் காலத்தில் உலக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இக்கருவியை உருவாக்கியவர்கள் வணங்கத்தக்கவர்கள்.