Published:Updated:

டாப் 10 இளைஞர்கள் - 2020

நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
நடராஜன்

ஒருபுறம் கொரோனா, மறுபுறம் ஊரடங்கு... இரண்டும் தந்த இன்னல்களால் உயிரைக் கையிலும் கண்களிலும் ஏந்தி துயரப்பயணம் சென்றார்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

டாப் 10 இளைஞர்கள் - 2020

ஒருபுறம் கொரோனா, மறுபுறம் ஊரடங்கு... இரண்டும் தந்த இன்னல்களால் உயிரைக் கையிலும் கண்களிலும் ஏந்தி துயரப்பயணம் சென்றார்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

Published:Updated:
நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
நடராஜன்

யார்க்கர் நாயகன் - நடராஜன்

டாப் 10 இளைஞர்கள் - 2020

மிழகக் களத்துமேட்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட் களத்துக்குள் நுழைந்திருக்கும் எளிய இளைஞன். கிராமத்து இளைஞர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் நுழைவதே பெரும்போராட்டம் எனும்போது, மூடப்பட்டிருந்த அத்தனை கதவுகளையும் உடைத்துக்கொண்டு இந்திய கிரிக்கெட் அணிக்குள்ளேயே கால்பதித்து அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் நடராஜன். யார்க்கர் கிங்காக 2020 ஐ.பி.எல் போட்டிகளில் கலக்கிய நடராஜன், ஆஸ்திரேலியாவில் நிகழ்த்தியவை அத்தனையும் அற்புதங்கள். இந்தியாவின் பக்கம் வெற்றியைக் கொணர்ந்த மாயவித்தைக்காரர். 2021 உலகக்கோப்பையில் இந்தியாவின் நம்பிக்கை நாயகனாகத் திகழப்போகும் நடராஜனை வாழ்த்தி வரவேற்கிறது விகடன்.

டாப் 10 இளைஞர்கள் - 2020

சவால் வென்ற சாதனையாளர் - பாலநாகேந்திரன்

சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கெல்லாம் மனதொடிந்துபோகும் மனிதர்களுக்கு பாலநாகேந்திரனின் கதையைப் பாடமாக நடத்தலாம். சென்னை, ஓட்டேரியில் எளிய குடும்பத்தில் பிறந்தவர், இந்தியக் குடிமைப் பணியை எட்டிப் பிடித்த பயணத்தில் துயரங்களும் கண்ணீரும் நிரம்பியுள்ளன. பிறவியிலேயே பார்வையற்றவரான நாகேந்திரனிடம், ‘நீ முயன்றால் கலெக்டராகலாம்’ என்று பள்ளி ஆசிரியைகள் இருவர் பற்ற வைத்த நெருப்பு, கரடுமுரடான இருட்டுப் பாதையைக் கடந்து இன்று இலக்கை எட்ட வைத்திருக்கிறது. ஏழு முறை தோல்வி... ஒருமுறை தேர்ச்சி பெற்றும் நினைத்த வேலை கிடைக்கவில்லை... ஒன்பதாம் முறை சொல்லி வைத்து அடித்திருக்கிறார். ‘இதெல்லாம் பார்வை இருக்கவங்களுக்கே சிரமம். உன்னால முடியாது’ என்ற அவநம்பிக்கை வார்த்தைகள்... எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தில் பிரெய்லி நூல்களின் விலை... கைபிடித்து வழிநடத்த யாருமற்ற நிலை... இதுபோல பாதையெங்கும் பல நூறு தடைகள்... எதுவும் முடக்கிப் போடவில்லை நாகேந்திரனை. எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்தார். இதோ கையில் வந்தமர்ந்திருக்கிறது வெற்றி. இந்தியத் தகவல் சேவைப் பிரிவில் ஆணை பெற்று, பணியில் இணையக் காத்திருக்கும் நாகேந்திரன், நமக்கான நன்னம்பிக்கை முனை!

டாப் 10 இளைஞர்கள் - 2020

கானா குயில் - இசைவாணி

சென்னையின் தனித்துவ இசைமொழியான கானாவில் ஓங்கி ஒலிக்கும் ஒற்றைப் பெண்குரல். பொழுதுபோக்குப் பாடலாக இருந்த கானாவை போராயுதமாக்கும் நவீன சென்னைக்கார இளைஞர்களில் தனித்த அடையாளம். ‘கானா ஆண்களுக்கானது’ என்று வந்த எதிர்ப்புக் குரல்களைத் தன் கணீர்க் குரலால் எள்ளி நகர்த்தி, தெளிந்த அரசியல் புரிதலோடு மேடைகளைக் கலக்கிக்கொண்டிருக்கும் இந்த இசைநாயகி, பள்ளிப்படிப்பைக்கூட முடிக்க முடியாத வறுமையான வாழ்க்கைச்சூழலிலிருந்து துளிர்த்தெழுந்தவர். மேடைகளில் ரசிகர்களை ஆடவைத்துக்கொண்டிருந்த இசைவாணிக்கு இப்போது திரையுலகமும் மேடை அமைத்துத் தருகிறது. பெண்ணடிமை தொடங்கி ஆணவக்கொலை வரை அநீதிகளுக்கு எதிராக இசையெழுப்பும் இந்தச் சென்னைத் தமிழச்சி, தமிழகத்தின் நம்பிக்கை மனுஷி.

டாப் 10 இளைஞர்கள் - 2020

மகிழ்ச்சி மருத்துவர் - டாக்டர் விக்ரம்குமார்

டல் பாதிப்புகளைவிட மனபாதிப்புகளையே அதிகம் ஏற்படுத்தியது கொரோனா. வதந்திகளுக்கு இறக்கை முளைக்க, உயிர்பயத்தைச் சுமந்துகொண்டு திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகி்ச்சை மையத்துக்குச் சென்ற நோயாளிகள், சுற்றுலா சென்றுவந்த உணர்வோடு குணமாகி வந்தார்கள். மூலிகைப் புகை, மண்பானைச் சமையல், ஆர்க்கெஸ்ட்ரா, நிலாச்சோறு, பிறந்தநாள் கொண்டாட்டமென நோய்ப்பதற்றம் தணித்து உளவியல்ரீதியாகவும் குணப்படுத்தி அனுப்பிவைத்தார் சித்த மருத்துவர் விக்ரம்குமார். இரவுகளில் கவச உடையோடு அவரே நடனமாட, எல்லோரும் சேர்ந்தாட, கொண்டாட்டக் களமானது சிகிச்சை மையம். நூலகம், தினமும் மூலிகைகள் பற்றிய சிற்றுரையென ஒருங்கிணைந்த வாழ்வியல் மையமாக மாற்றியது அரும்பணி. ஜூலை 16 முதல் நவம்பர் 29வரை 625 நோய்தொற்றாளர்கள், தொற்று அகன்று சென்றார்கள். ஒருநாளும் விடுமுறையின்றி முன்களத்தில் நின்றதோடு, அந்த அனுபவங்களை நூலாக்கி ஆவணப்படுத்தியுமிருக்கிறார். பாரம்பர்ய மருத்துவத்தின் மேல் இளம் தலைமுறையின் கவனம் குவியும் சூழலில், விக்ரம்குமார் காலத்தின் தேவை!

டாப் 10 இளைஞர்கள் - 2020

துயர் துடைத்த தோழன் - ஸ்ரீனி சுவாமிநாதன்

ருபுறம் கொரோனா, மறுபுறம் ஊரடங்கு... இரண்டும் தந்த இன்னல்களால் உயிரைக் கையிலும் கண்களிலும் ஏந்தி துயரப்பயணம் சென்றார்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அந்த மக்களின் ஒருவேளைப் பசியையேனும் ஆற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த ஸ்ரீனி சுவாமிநாதன், வெளிமாநிலத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கடைசி ரயில் கிளம்பும் வரைக்கும் உணவையும் நீரையும் கையில் வைத்துக்கொண்டு சேவையாற்றினார். உதவி பெறுவோரின் சுயமரியாதைக்கு பங்கமின்றி உதவுவதே மனிதம். எவரையும் கையேந்த விடாமல் விருந்தினர்களைப் போல கனிவும் கருணையுமாக உபசரித்தார்கள் ஸ்ரீனியும் நண்பர்களும். ‘வெளிமாநில விருந்தினர்களை உபசரிக்கும் நான் தமிழகத்தின் நல்லெண்ணத் தூதுவன்’ எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஸ்ரீனி, கைவிடப்பட்ட மக்களின் கருணை நண்பன்!

டாப் 10 இளைஞர்கள் - 2020

நவீனத் தமிழுக்கான நாற்று - கணியம் அறக்கட்டளை

மிழ், இணையத்துக்கு ஏற்றமொழியல்ல என்ற மூடநம்பிக்கையை உடைத்து, தூய தமிழில் தொழில்நுட்பத்தை வடிவமைக்கும் இளைஞர்கள் குழு.நிரலாக்கத்தைத் தமிழ்மயப்படுத்துவது, அதற்கான இ-புத்தகங்களை உருவாக்குவது, உரை ஒலி மாற்றி, எழுத்துணரி உருவாக்குவது எனக் கணினியியலில் எல்லோருக்கும் பயன்படும் அழகுதமிழ் சாத்தியங்களை அகலப்படுத்தும் இந்த இளைஞர்கள், FreeTamilEbooks.com மூலமாக ‘கிரியேட்டிவ் காமன்ஸ்’ உரிமத்தின் கீழ் பதிப்புரிமை விதிகளுக்கு உட்பட்டு 650-க்கும் மேற்பட்ட மின்புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவை 80 லட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டியிருக்கிறது என்பது பெருமிதமான செய்தி. இவர்களின் ‘ஒலிபீடியா’ மற்றுமொரு டிஜிட்டல் புதுமை. இந்தத் திட்டத்தின் மூலம் வெளியிடப்படும் ஒலிநூல்களை உலகத் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள். சங்க இலக்கியம் தொடங்கி Machine Learning வரை அனைத்தையும் உள்வாங்கித் தொழில்நுட்பத் தமிழை வளப்படுத்தும் இந்த அறக்கட்டளை நாயகர்கள் சீனிவாசன், நித்யா, அன்வர், கலீல், கார்க்கி, லெனின், அருணாசலம் ஆகியோருக்கு மனமுவந்த தமிழ் வணக்கம்!

டாப் 10 இளைஞர்கள் - 2020

ஊருக்கான உதாரணம் - ஜெயலட்சுமி

ற்றைத் தீக்குச்சி ஒரு நூறு விளக்குகளை ஏற்றும் என்பதற்கான உதாரணம் ஜெயலட்சுமி. உடல்நலம் சரியில்லாத பெற்றோர்... முந்திரிக்கொட்டை உடைத்துச் சம்பாதித்தபடியே பள்ளிக்கும் செல்லும் ஜெயலட்சுமி, மாற்றியிருப்பது ஒரு கிராமத்தின் தலையெழுத்தை. அறிவியலில் ஆர்வமுள்ள இந்த ஆதனக்கோட்டைச் சிறுமி, நாசா செல்வதற்குத் தேர்வானபோது, பல்வேறு இடங்களிலிருந்து கரங்கள் நீண்டன. தேவைக்கும் மேல் உதவிகள் கிடைத்தன. தனக்கு உதவ வந்த ஒரு தொண்டு நிறுவனத்திடம் “எனக்கான உதவிகள் கிடைத்துவிட்டன. எங்கள் ஊர்ப் பெண்களின் கண்ணியம் காக்க வீட்டுக்கொரு கழிவறை கட்டிக்கொடுங்கள்” என்று வேண்டினார் ஜெயலட்சுமி. வீட்டுக்கு ஒன்றென குளியலறையுடன் கூடிய 125 கழிவறைகளைக் கட்டியெழுப்பிப் பரிசாக அளித்திருக்கிறது அந்தத் தொண்டு நிறுவனம். தனக்கென வந்த உதவியை, அடர்புதர்களுக்குள் ஒதுங்கி அல்லல்பட்ட மக்களுக்குத் திருப்பிவிட்ட ஜெயலட்சுமியை குலசாமியாகக் கொண்டாடுகிறது ஆதனக்கோட்டை!

டாப் 10 இளைஞர்கள் - 2020

வேகப்புயல் - ரெஹானா ரியா

ண்கள் மட்டுமே கோலோச்சும் ரேஸ் ட்ராக்கில் வேகம் கூட்டும் பெண் ரேஸர். ‘‘உன்னையெல்லாம் ஸ்கூட்டி ஓட்ட விடுறதே பெருசு! கையைக் காலை ஒடைச்சுக்கிட்டா யார் பார்க்கிறது’’ என்று, மூர் மார்க்கெட்டில் சின்னதாக ஜவுளிக்கடை வைத்திருக்கும் அம்மா–அப்பா தடா போட, நண்பர்களிடம் இரவல் வாங்கி பைக் பழகிய ரெஹானா, 160 கிமீ வேகத்தில் பறந்து முதல் ரேஸிலேயே முதலிடத்துக்கான போடியம் ஏறியது, துணிச்சலுக்கும் உழைப்புக்குமான பரிசு. பயத்துடன் திட்டிய பெற்றோருக்கு, இப்போது வெற்றிக்கிண்ணங்கள் நிறைய பெருமிதங்களை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார் இந்தத் தங்கமகள். டிவிஎஸ், ஹோண்டா, யமஹா எனப் பெரு நிறுவனங்கள் ரெஹானாவுக்காக போட்டி போட, RACR டீமுக்காக ரேஸ் ட்ராக்கில் அனல் கிளப்புகிறார். ஆசியா கப் ஆப் ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப், 500 சி.சி புல்லட் ரைடர் மேனியா சாம்பியன்ஷிப் எனக் கோப்பைகள் குவித்தவர், ஆண் ரேஸர்களே அல்லுவிடும் ஆப்ரோடு ரேஸையும் விட்டுவைக்கவில்லை. உயிரைப் பணயம் வைத்து ஓட்டும் ராலி ரேஸில், 2020–ன் லேட்டஸ்ட் ஆப்ரோடு சாம்பியன் ரெஹானாதான். 'யாருக்கும் இங்கே இளைப்பில்லை காண்' என ஆக்ஸிலேட்டர் முறுக்கும் இந்தச் சிங்கப்பெண்ணுக்கு ராயல் சல்யூட்!

டாப் 10 இளைஞர்கள் - 2020

கலை மருத்துவன் - கிருஷ்ணகுமார்

வீன நாடகம், சினிமா என நம்பிக்கையளிக்கும் பன்முகக்கலைஞன். மேடை நாடக யுத்திகளை கொரியாவில் கற்றுத்தேர்ந்த கிருஷ்ணகுமார் ‘லிட்டில் தியேட்டர்’ நாடகக்குழுவின் இயக்குநர். எழுத்து, இயக்கம், நடிப்பென எல்லா எல்லைகளையும் தொட்டுக் கலக்கும் கே.கே, தீராத நோய்களாலும் மன அழுத்தத்தாலும் தவிக்கும் நோயாளிகளை சிரிக்கவைக்கும் க்ளவுனிங் டாக்டரும்கூட. தன் கலையை இயலாதோரின் துயரம் ஆற்றப் படைத்துப் பயன்படுத்தும் இந்த உன்னதக் கலைஞனுக்கு ‘சூரரைப் போற்று’ திரையில் கொடுத்தது நல்லறிமுகம். பைலட் ‘சே’வாக மனதில் அமர்ந்த கிருஷ்ணகுமார், நடிப்புலகின் நம்பிக்கை இளைஞர்!

டாப் 10 இளைஞர்கள் - 2020

சதுரங்க நாயகன் - இனியன் பன்னீர்செல்வம்

ஷ்ய வீரர்களே ஆதிக்கம் செலுத்தும் சதுரங்க அரங்கில் இந்தியாவின் கொடியுயர்த்திப் பிடித்த மற்றுமொரு இளம் கிராண்ட் மாஸ்டர். 5 வயதில் ஆரம்பித்த இனியனின் வெற்றிக்கான காய் நகர்த்தல்கள் 16 வயதில் கிராண்ட் மாஸ்டர் அங்கீகாரத்தைச் சூட்டியிருக்கின்றன. ஈரோட்டின் இடையன்காட்டுவலசு கிராமத்திலிருந்து கிளம்பி உலகை வசப்படுத்திய இனியன், 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க உலக ஓப்பன் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த முதல் இந்தியர் ஆனார். 280 போட்டிகள், 150 மெடல்கள் என இவரின் சாதனை சரித்திரம் ஒளிர்கிறது. ‘நம்பிக்கையளிக்கும் தம்பி’யென முன்னோடி விஸ்வநாதன் ஆனந்தை உச்சரிக்க வைத்தது இனியனின் உழைப்பு. 210 நாடுகளைச் சேர்ந்த 271 வீரர்களோடு 45 மணி நேரம் செஸ் விளையாடி ஈட்டிய பணத்தை அரசுக்கு கொரோனா நிதியாக வழங்கிய அக்கறைக்காக இனியனுக்கு மற்றுமொரு பூங்கொத்து!