Published:Updated:

டாப் 25 பரபரா - 2020

டாப் 25 பரபரா - 2020
பிரீமியம் ஸ்டோரி
டாப் 25 பரபரா - 2020

மஞ்சள் துண்டால் வாயைப் பொத்தி அழுதபடி மௌனமாகக் கலைந்து சென்றதுதான் இந்த ஆண்டின் பெரிய கறுப்புக் காமெடி

டாப் 25 பரபரா - 2020

மஞ்சள் துண்டால் வாயைப் பொத்தி அழுதபடி மௌனமாகக் கலைந்து சென்றதுதான் இந்த ஆண்டின் பெரிய கறுப்புக் காமெடி

Published:Updated:
டாப் 25 பரபரா - 2020
பிரீமியம் ஸ்டோரி
டாப் 25 பரபரா - 2020
டாப் 25 பரபரா - 2020

சிங்கத்தைச் சிதைச்சுப்புட்டாங்கய்யா!

‘என்னத்த’ கண்ணையாவாக லாக் டெளன் வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருந்தவர்கள் ஐ.பி.எல் அறிவிப்பு வந்தவுடன் ஆளுங்கட்சி கவுன்சிலர்போல மிதப்பில் திரிந்தார்கள். வழக்கம்போல சேப்பாக்கம் பக்கம் சவுண்டு காதைக் கிழிக்க, ‘என்னப்பா அங்க சத்தம்’ எனக் குத்த வைத்தது கொரோனா. ‘உசரப் பறக்குறப்போ அடிக்கிற காத்துல கிருமி எல்லாம் பிச்சுகிட்டுப் போயிடும்னு நினைச்சோம்’ எனக் காதைச் சொறிந்தது விழாக்கமிட்டி. ஒருபக்கம், ‘தேவாவும் சூர்யாவும் சேர்ந்திருந்தாதான் அது ‘தளபதி.’ மாஸா இருக்கும். ‘தேவா’ மட்டும் இருந்தா அது தளபதி நடிச்ச படம். செம மொக்கையா இருக்கும்’ என ரசிகர்கள் இன்ஸ்டாவில் ரெய்னாவுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் அமுல்பேபி சாம் கர்ரனின் டிண்டர் ப்ரொபைலைத் தேடிக்கொண்டிருந்தார்கள் ரசிகைகள். ‘கண்டிப்பா ப்ளே ஆப், கடைசி நிமிஷத்துல ப்ளே ஆப். கெளரவமா அஞ்சாவது இடம் வந்தாப் போதும், ‘கடைசி இடமா, அய்யோ’ என தொடர் செல்லச் செல்ல டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு வாழும் உதாரணமாகிப் போனார்கள் சென்னை ரசிகர்கள். ராஜஸ்தான் புண்ணியத்தில் ஏழாவது இடம் கிடைக்க, மஞ்சள் துண்டால் வாயைப் பொத்தி அழுதபடி மௌனமாகக் கலைந்து சென்றதுதான் இந்த ஆண்டின் பெரிய கறுப்புக் காமெடி.

டாப் 25 பரபரா - 2020

ஆளுக்கொரு சங்கம் பார்சல்ல்ல்!

சட்டமன்றத் தேர்தல் தொடங்கி அப்பார்ட்மென்ட் செக்யூரிட்டி தேர்தல்வரை வேகவேகமாய் விஷால் வேட்புமனு தாக்கல் செய்வார். ஆனால் நடிகர் சங்கத் தேர்தலோ நடந்து முடிந்தும் இன்னும் ரிசல்ட் வரவில்லை. இன்னொருபக்கம் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்ட சீன நிறுவனம்போல டரியலாகிக் கிடந்தது தயாரிப்பாளர் சங்கம். ‘அந்தச் சங்கம்தானே செயல்படக்கூடாது, நாம புதுசா ஆரம்பிச்சுப் பறக்கவிடுவோம்’ என ஒரே நேரத்தில் பலருக்கு யோசனை உதிக்க, அதேபோல பறந்தது... மானம்! ‘நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’, ‘நடக்காத சினிமாவுக்கு நாங்க ஆரம்பிக்கிறோம் சங்கம்’, ‘எந்த சங்கத்துலயும் இல்லாதவங்க சேருற சங்கம்’ என நாளொரு சங்கம், பொழுதொரு அறிக்கையாய் தமிழ்க்குடிகளுக்கு டைம்பாஸானது. ‘நாங்கதான் ஒரிஜினல்’ என தேனாண்டாள் முரளி நாக்கைக் கடிக்க, ‘தேனே பொய்ன்னு சொல்லிட்டாங்க, போங்கப்பு’ எனத் தட்டிவிட்டுச் சென்றார்கள் தயாரிப்பாளர்கள். ‘புலிக்கு ஆப்போசிட்டு சிங்கம், இது என் தலைமையிலான சங்கம், மத்தவங்க ஆகப்போறாங்க பங்கம், என் பையன் பத்தரமாத்துத் தங்கம்’ என டி.ஆர் சம்பந்தமில்லாமல் பி.ஜி.எம் வாசிக்க, களேபரமாகிக் கிடக்கிறது கோடம்பாக்கம்.

டாப் 25 பரபரா - 2020

லாக்.. அன்லாக்... லாக், அன்லாக்!

லாக் டௌன் 1, லாக் டௌன் 2, லாக் டௌன் 2ல முதல் அன்லாக், லாக்டவுன் 1ல மூணாவது லாக் என சன் டிவியில் வரும் டாப் 10 சினிமா தொகுப்பாளர்போல கால்மேல் கால் போட்டுக்கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் மங்காத்தா ஆட, விழி பிதுங்கினார்கள் மக்கள். ஒவ்வொரு மாலையும், ‘இருக்கு, ஆனா இல்ல’ என எஸ்.ஜே.சூர்யாவாக அறிவிப்புகள் வெளியாக, எதிரே உட்கார்ந்திருக்கும் ஊர்வசி ரியாக்‌ஷன்தான் எல்லாருடைய முகத்திலும். வெளியே தலை தென்பட்டாலே, ‘லாக் டௌன் 2 ரூல் படி நீங்க காய்கறிக்கடை வரை நடந்து போலாம். ஆனா, லாக் டௌன் 1 ரூல்படி வழியில இருக்கிற கறிக்கடைல மட்டும் நிக்கக்கூடாது, சீக்கிரம் போய்ட்டு வாங்க, திரும்ப வர்றதுக்குள்ள லாக் டௌன் 3 வந்தாலும் வரும். அப்புறம் வழியிலேயே வந்து தூக்கிப் போட்டு கொரோனா கொரில்லா செல்லுல அடைச்சுடுவோம்’ என இஷ்டத்துக்கு மிரட்டியது போலீஸ். பயத்தில், ‘ஐயா, வயித்தக் கலக்குது. இப்போ நான் பெட்ரூம்ல இருந்து பாத்ரூம் வரையாவது நடந்துபோலாமா’ என கன்ட்ரோல் ரூமுக்கு கால் செய்து கேட்குமளவிற்கு குழம்பித் தவித்தார்கள் பாவப்பட்ட பப்ளிக்.

டாப் 25 பரபரா - 2020

தலைகீழா மாறிப்போச்சு... தகிடுதத்தோம்!

வழக்கமாய் ஹரி மட்டுமே கிறுகிறுக்க வைக்கும் டிரோன் ஷாட்டுகளை இந்தமுறை குத்தகைக்கு எடுத்தது காவல்துறை. கேரம் ஆடியவர்கள் தலையில் சட்டியைக் கவிழ்த்தது, ‘விண்ட் ஆன் தி பேஸ்’ என கெளதம் பட பாணியில் பைக்கில் சுற்றிய காதலர்களுக்கு விட்டாலாச்சார்யாவின் ஹாரர் ஜானர் காட்டியது என காவல்துறை ‘நண்பனாய்’ மாற, செய்திச் சேனல்களில் நிரம்பி வழிந்தது க்வாரன்டீன் என்டர்டெயின்மென்ட். ‘நல்ல மனுஷன்தான். பாவம் கொரோனா வந்துடுச்சு. ஒரு பத்து நிமிஷம் பேசிட்ருங்க. டீ சாப்பிட்டு வந்துடுறோம்’ எனச் சிக்கியவர்களை ஆம்புலன்ஸில் அடைத்து வைத்தது ஹைலைட் காமெடி. இன்னொருபக்கம், ‘என் அம்மாவோட அப்பாவோட பேரன் இருக்காருல... அதாவது என் கூடப்பிறந்த அண்ணன். அவரு அமெரிக்கன் எம்பஸி பக்கத்துலதான் கடை வச்சிருக்காரு. சட்டுனு பின்வாசல் வழியா உள்ள போய் பாஸ் வாங்கிட்டு வந்துடுவாரு. நீங்க காசைக் கொடுங்க’ என்று இ-பாஸை வைத்து கல்லா கட்டியது ஒரு பெருங்கூட்டம். ‘நாங்க என்ன தக்காளித் தொக்கா’ என வெகுண்டெழுந்த நெட்டிசன்கள், ‘டல்கோனா காபி’, `பிங்கோ சேலஞ்ச்’ என கெத்து காட்டினார்கள். ஸ்மார்ட்போன் வெறியர்கள் லூடோ கிங்கில் டைஸ் சுற்ற, வெளியுலகம் பரணில் போட்டுவைத்திருந்த தாயக்கட்டையைத் தேடி எடுத்து உருட்டியது.

டாப் 25 பரபரா - 2020

ஊரைத் தெரிஞ்சுகிட்டேன், பேரைப் புரிஞ்சுகிட்டேன்

இருக்கும் காமெடிகள் போதாது என்று என்டர்டெயின்மென்ட் வேட்கையுடன் தமிழக அரசு, ‘வாங்க ஊரு பேரை மாத்தி வெச்சு விளையாடுவோம்’ எனக் களமிறங்கியது. 1018 ஊர்களின் பெயரையும் மாற்றி அரசாணை வெளியிட, ‘அவனவன் உசுருக்குப் போராடிகிட்டு இருக்குற நிலைமைல நிஜமாவே இதை ஒரு வேலைன்னு உட்கார்ந்து பார்த்தீங்களாய்யா?’ என அதிசயித்துப்போனது மொத்த மாநிலமும். ‘இது கோயம்புத்தூர், அதாவது திஸ் இஸ் koyampuththoor’ என லோ பட்ஜெட் மேஜர் சுந்தர்ராஜனாகவே மா.பா மாற, துவைத்தெடுத்தார்கள் நெட்டிசன்கள். ‘இந்தத் திட்டத்துக்கு சில பல லட்சங்கள் செலவாகும்’ என அவர் கூடுதலாய் பிட்டு போட, ‘ஒன்றரை எம்பி டேட்டால கூகுள் ட்ரான்ஸ்லேட் பண்ணுமேய்யா இந்த வேலையை’ எனக் கலாய்த்துத் தள்ளினார்கள். ‘நான் அமைச்சரா இருக்குறதே இந்த அஞ்சு வருஷத்துல இப்போதான் எல்லாருக்கும் தெரிஞ்சது, அதுக்குள்ள இப்படிப் பண்றீங்களேய்யா’ எனப் பதறிப்போய் ஒரே வாரத்தில் அரசாணையைத் திரும்பப் பெற்று ஓடினார் அமைச்சர்.

டாப் 25 பரபரா - 2020

டிக்டொக்கெல்லாம் இங்கே ban-ம்மா!

‘தசாவதாரம்’ படத்தில் கமல் சொன்ன கேயாஸ் தியரி தசாப்தம் கழித்து வழக்கம்போல இப்போதுதான் தமிழ் கூறு நல்லுலகுக்குப் புரிந்தது. எல்லையில் சீனா செய்த சேட்டை இங்கே பல பேரைப் பித்துப் பிடித்துத் திரிய வைத்தது. பார்ட் டைம் வாட்ச்மேனாய் வீடுதோறும் வாசல்களில் உட்கார்ந்து ‘அவன விடாதீங்க, இவனை மண்டைல போடுங்க’ என சமயங்களில் தெலுங்குப் பட காரசார வில்லன் போலவும் ‘ஹே லெட்ஸ் ப்ளே எராங்கல்ய்யா, ஹே ஓபன் தி பாராசூட் ஆன் மில்டா’ என சமயங்களில் பீட்டராகவும் விளையாடினவர்களை கைநடுங்க வைத்தது பப்ஜி தடை அறிவிப்பு. மறுபக்கம் முன்பு மேடைகளில் நடைபெற்று வந்த ஆடல் பாடல் ஆட்டங்களை இப்போது ஆப்பில் செய்துவரும் டிக்டொக் கரகாட்ட கோஷ்டியோ ‘போச்சே போச்சே... குரளி வித்தை காட்டிச் சேர்த்த பாலோயர்ஸ் எல்லாம் போச்சு’ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைத்தார்கள். பாடாவதி கபீம்குபாம் கருத்துகளைப் பேசிப் பாடாய்ப்படுத்திய ‘ஹலோ’ கூட்டத்தையும் தொடர்பு எல்லைக்கு வெளியே துரத்தினார்கள்.

டாப் 25 பரபரா - 2020

இன்னும்_எத்தன_வருஷத்துக்கு..?

சென்ற ஆண்டு முழுக்க கிட்டத்தட்ட சைலன்ட் மோடில் இருந்த சிட்டிக்கு, துக்ளக் விழாவில் ஆடிட்டர் பேட்டரியை சார்ஜ் செய்ய, பெரியார் பற்றிப் பற்றவைத்தார். ‘என்னா சார் தர்பார் புரொமோஷனா?’ என சிலர் கரெக்ட்டாகக் கண்டுபிடிக்க, இன்னும் சிலரோ, ‘தலீவரே தகவல் பிழை இருக்கு’ எனக் குரல் உயர்த்தினார்கள். ‘28 வருஷமா இதானே பண்றேன். நான் சரியாப் பேசினாத்தானே தப்பு’ என அவர்களுக்கு ஆங்க்ரி முத்திரை காட்டினார் பாபா. பியர் க்ரில்ஸோடு காட்டுக்குள் அவர் கைகுலுக்க, ‘நீங்க அரசியல் பத்தி முதல்ல பேசினப்போ நான் டீனேஜ் பையன். இப்போ நான் அரசியல் பக்கம் வந்தே பல வருஷமாச்சு’ எனக் கைகொடுத்தார் பியர். ‘மக்கள் எழுச்சி வந்தா மடக்கின சேர்ல உக்காருவேன்’ என அவர் மக்கள் பக்கம் லைட்டைத் திருப்ப, ‘மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன மெஷின்’ வடிவேலு காமெடி ஞாபகம் வந்தது பலருக்கு. ‘எழுச்சி வரும் எழுச்சி வரும்’ என அவரின் பங்காளிகள் காத்திருக்க, ‘கூப்பிட்டீங்களா’ என எந்திரிச்சி வந்தது என்னவோ கொரோனாதான். பண்ணைவீட்டுப் பக்கம் ஒதுங்கியவரை பாஸ் கேட்டுப் படுத்தியெடுத்தார்கள் நெட்டிசன்கள். மாநகராட்சி வரி தொடர்பாக அவர் வழக்கு போட, ‘இதென்ன குசேலன் படமா, பார்த்து டைம்வேஸ்ட் பண்றதுக்கு?’ எனக் கண்டித்தது கோர்ட். ஒருகட்டத்தில் ‘அவர் கட்சி ஆரம்பிப்பாரான்னு அவருக்கு மட்டும்தான் தெரியும்’ என தமிழருவியே வி.ஆர்.எஸ் வாங்க, அடுத்த நாளே கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அதில் தன் பங்குக்கு ‘இருக்கின்ற கட்சியிலே இருக்கின்ற மேடையிலே’ வண்டுமுருகன் காமெடியை நடத்திக்காட்டினார் அர்ஜுனமூர்த்தி. ரஜினியே விடாத அறிக்கை வெளியானது லகலக என்றால், கட்சிப்பெயரும் லீக் ஆனது கலகல காமெடி!

டாப் 25 பரபரா - 2020

ஆண்டவர் ஆட்டம்

சும்மாவே ட்விட்டரில் டான்ஸ் ஆடுவார் ஆண்டவர். இந்த வருடம் லாக்டௌனும் வசதியாய் வர, விடுவாரா என்ன? ‘மய்யம் மீது மையல் கொண்ட மாந்தரெல்லாம் மைதாவின் மாவைப்போல இலகுவானவர்கள்’ எனத் தமிழில் தாண்டவமாடினார். ‘இந்தியன் 2’ விபத்து விவகாரத்தில் பெரிதாய் அறிக்கைவிட்டு அவர் நழுவப் பார்க்க, ‘அப்படிலாம் விடமுடியாது. கொளுத்திக்கிட்டு வந்து உங்களையும் கட்டிப்பிடிப்போம்’ என ரிவிட் அடித்தது தயாரிப்பு நிறுவனம். இந்த வருடமும், ‘இதுதான் என் கடைசிப்படம்’ எனப் புதுப்படம் ஒன்றின் அறிவிப்பை வெளியிடத் தவறவில்லை. ‘சூரப்பா இன்னொரு நம்பி நாராயணனா?’ என அவர் முஷ்டி முறுக்க, ‘ஹை... பம்மல் கே சம்பந்தம் பார்ட் டூவா’ என ரகளை செய்தார்கள் நெட்டிசன்கள். கொஞ்சம் லேட்டாய் பிக்பாஸ் பக்கம் ஒதுங்கியவருக்கு, ‘அன்பு கேங்கையே நாலு வார்த்தை கேட்க முடியல. நீங்கெல்லாம் அரசாங்கத்தை எதிர்த்து நல்லது பண்ணிட்டாலும்?’ என ட்விட்டரில் அர்ச்சனை குவிந்தது. சமீபமாக, ‘இனி_நாம்’, ‘நான்_கேட்பேன்’ என தினுசுதினுசாய் ஹேஷ்டேக் போட்டு ரஜினிக்கு டப் கொடுக்கிறார். நடுவே ‘டார்ச்லைட், ‘டார்ச்லைட்’ என முழங்க, ‘உங்களுக்கு இதே வேலையாப் போச்சு. ஏற்கெனவே டைட்டில் சொன்ன படங்கள்ல எல்லாம் முடிச்சுட்டு அப்புறமா இந்த டார்ச்லைட் படத்துல நடிங்க’ என லெப்டில் டீல் செய்து ஆண்டவருக்கு அதிர்ச்சியளித்தது தேர்தல் ஆணையம்.

டாப் 25 பரபரா - 2020

ஜூம் ஸோம்பிகள்

‘ஹோம் ஒர்க் நோட்டை வீட்டுல வச்சுட்டு வந்துட்டேன் மிஸ்’ எனச் சொல்லித் தப்பித்த குழந்தைகள் இப்போது ‘வைபை சரியில்ல’ என ஆன்லைன் கிளாஸுக்கு அல்வா கொடுத்தார்கள். காலேஜ் கோஷ்டியோ, ‘சார் இவன் பக்கத்து டிபார்ட்மென்ட். இவன் கூடத்தான் காலேஜ்ல பிரேக்ல டீ சாப்பிடப் போவேன். இப்போதான் பிரேக்கே இல்லையே. அதான் அவனுக்கும் நம்ம ஜும் லிங்க் ஷேர் பண்ணினேன். நீங்க நடத்துங்க, நாங்க டீ சாப்பிட்டுகிட்டே கேட்குறோம்’ என ஆன்லைனில் சியர்ஸ் தட்டினார்கள். ஆபீஸ் போகும் கனவான்களின் உள்ளாடைகள் லாங் வெக்கேஷனில் ஊரைவிட்டுப் போக, மேலே பிராண்டட் ஷர்ட், கீழே மழைநேரத்துச் சென்னையைவிட கலீஜாய் இருக்கும் கைலி சகிதம் கூகுள் மீட்டில் குப்பை கொட்டினார்கள். நடுவே ‘ஜூம் வழியா உங்க பேங்க் டீட்டெயில்ஸ் எல்லாம் லீக்காகுதாம்’ எனத் தகவல் பரவ, ‘நிர்மலா நிதியமைச்சரா இருக்குறப்போ நம்மகிட்ட காசா? வாய்ப்பே இல்ல, நோ நெவர்’ என கூலாய்த் தோளைக் குலுக்கினார்கள் ஐ.டி அதிகாரிகள்.

டாப் 25 பரபரா - 2020

சாமி... எங்க எடப்பாடி பழனிசாமி

‘உங்களை மாணவ சமுதாயமே தலையில தூக்கி வெச்சுக் கொண்டாடப்போகுது சார்’ என எடப்பாடியிடம் போன வருடம் இதே நேரம் சொல்லியிருந்தால்கூட ‘என்ன பாஸு, ப்ராங்க் ஷோவா... கேமரா எங்க மறைச்சு வச்சிருக்கீங்க?’ என்றுதான் கேட்டிருப்பார். ஆனால் அதெல்லாம் நடந்ததுதான் காலக்கொடுமை. ச்சே... காலத்தின் தேவை. முதல் கட்டமாக வழக்கமான தேர்வுகளை ரத்து செய்தபோதே ‘சூர்யவம்சம்’ தேவயானிபோல காயினைக் கீழே போட்டுக் காலைத் தொட்டுக் கும்பிட்டார்கள் மாணவர்கள். ‘ட்ரெய்னிங் பத்தலையே, நம்ம பழைய வீடியோ எல்லாம் பயலுக பாத்தானுகளா இல்லையான்னு தெரியலையே’ என நினைத்தாரோ என்னவோ அரியரையும் ஆல் க்ளியராக்கினார். உடனே பாண்டிச்சேரி ரங்கசாமிக்குப் போட்டியாய் பட்டிதொட்டியெல்லாம் பேனர் மெட்டீரியலானார் எடப்பாடியார். ‘அரியர் மாணவர்களின் அரசனே, மாணவர்களின் மனிதக் கடவுளே, ஆல் பாஸ் போட்ட அரிஸ்டாட்டிலே’ என எங்கும் எதிலும் எடப்பாடியின் சிரித்த முகம்தான். ‘சார் அப்படியே அந்த நீட்டு?’ எனக் கேட்டவர்களிடம் ‘அடடா, அதுல ஆளுங்க கம்மி, ஓட்டு தேறாதே’ என சைகைமொழியில் பதில் தந்தார். ‘உங்க இஷ்டத்துக்கு அறிவிப்பு விட இதென்ன பறக்கும் குதிரைக்கு பெயின்ட் அடிக்கிற கான்ட்ராக்ட்டா?’ என யுசிஜி காண்டாக, ‘கிடைக்கிற பத்து ஓட்டையும் கெடுக்கலாம்னு பார்க்குறீங்களா?’ என வேகவேகமாய் நீதிமன்றப் படியேறினார் எடப்பாடி.

டாப் 25 பரபரா - 2020

தூக்கம் கண்களைத் தழுவட்டுமே!

தமிழகத்தின் தலைவிதியையே மாற்றியமைக்கத் திரண்டுநின்ற மக்கள் படையான மூன்றே பேரோடு குறுக்கும் மறுக்குமாகத் திரிந்து வந்த தீபா அரசியலை விட்டு விலகி ப்ளைட் மோடுக்குச் சென்றபின் மே மாதம்தான் வெளியே வந்தார். அதுவும் அவராக இல்லை. ‘ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு வாரிசுகள் தீபக்கும் தீபாவும்தான்’ என்ற உத்தரவு அவரை வெளியே வரவைத்தது. வந்த வேகத்தில், ‘என்ன ஊரெல்லாம் காலியாக் கிடக்கு? எது சைனாவுல இருந்து கிருமி வந்துருக்கா? தீபக் என்கிட்ட சொல்லவே இல்லையே! சரி, அது போகவும் எழுப்புங்க’ எனத் திரும்ப வீட்டுக்குள் போனார். ஊரடங்கு உத்தரவுகள் தளரவும், ‘என் உயிருக்குப் பாதுகாப்பு இல்ல, கட்சில இருந்த ரெண்டு பேரையும் நீக்கிட்டதால அவங்க மிரட்டுறாங்க’ எனப் புகார் வாசித்தார். ‘இன்னமும் நீங்க மூணுபேரும் இங்கினதான் ஐஸ்பால் ஆடிக்கிட்டு இருக்கீங்களா?’ எனக் கடுப்பான தமிழக அரசு, ‘காசக் கட்டுங்க, பாதுகாப்பு தர்றோம்’ எனக் கறார் காட்டியது. ‘சும்மா வந்த சொத்தைச் செலவழிக்கச் சொல்றீங்களா? நெவர்’ என தீபா பாதுகாப்பு கேட்டதை வாபஸ் வாங்கிக்கொள்ள, ‘பப்பிம்மா பேக் டு பார்ம்’ என அகமகிழ்ந்தார்கள் அபிமானிகள்.

டாப் 25 பரபரா - 2020

இலவு காத்த கிளி

ஹாஸ்டலில் பிறந்தநாள், பேர்வெலின் போதெல்லாம் பூட்டிய இருட்டு அறைக்குள் கைக்குச் சிக்கியவர்களையெல்லாம் அடித்து விளையாடுவார்களே, அப்படி இந்த ஆண்டு முழுக்க எல்லாப் பக்கமும் அணை கட்டினார் ஓ.பி.எஸ். ‘நம்பர் ஒன்னைவிட நம்பர் டூ தாண்ணே பெருசு’ என அவரை இவ்வளவு காலம் நம்ப வைத்தவர்களெல்லாம் நழுவ, தானும் முதல்வர் ரேஸில் குதித்தார். கட்சிச் செயற்குழுவில் காரசாரமாக அவர், ‘வழிநடத்தும் குழு வெச்சே ஆகணும்’ என அடம்பிடிக்க, ‘போய் நிக்கப்போறது எப்படியும் முட்டுச்சந்துதான், இதுக்கு வழிநடத்தும் குழு ஒண்ணுதான் கேடு’ என ஆட்டையைக் கலைத்துவிட்டார் எடப்பாடி. ‘இன்னொரு தியானத்தைப் போட்ற வேண்டியதுதான்’ என ஓ.பி.எஸ் கிளம்ப, ‘அண்ணே... லாக்டௌன்ல! அன்னிக்கு மாதிரி சுண்டல், பஜ்ஜியெல்லாம் சுளுவா கிடைக்காது. வாங்க பெரியகுளத்துல உங்க கடை வாசல்லயே பட்டறைய போட்ருவோம்’ என உடனிருந்தவர்கள் நடையைக் கட்ட, தனிமரமானார். வேறு வழியே இல்லாமல், ‘நாங்க பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். அவரைப் பத்தி நான் கேவலமாப் பேசுவேன், என்னைப் பத்தி அவர் ரொம்பக் கேவலமாப் பேசுவாரு’ எனக் கைகுலுக்கி சகஜமானார். அமித் ஷா வந்தபோது 308 டிகிரி ஆங்கிளில் வளைந்து கும்பிடு வைக்க, ‘ஓ இதான் அந்த ஹெலிகாப்டர் யோகாவா?’ என்று ஆர்வமானார் அமித். ரஜினி, ‘நான் கட்சி தொடங்...’ எனச் சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு வாழ்த்து சொல்லி, சசிகலா ரிலீஸாகலாம் எனத் தெரிந்தவுடன், ‘ஆண் ரெண்டரை வருஷம், பெண் ரெண்டரை வருஷம் ஆளணும். நான் தாய்ப்பாசத்துல சின்னத்தம்பி பிரபுவை மிஞ்சுனவனாக்கும்’ என்று மெகா சீரியல் மாமனார் போல கண்ணைக் கசக்கி என, சிக்கும் வழிகளிலெல்லாம் சிண்டு முடியப் பார்ப்பதுதான் லேட்டஸ்ட் அத்தியாயம்.

டாப் 25 பரபரா - 2020

முரசு சத்தம் கேக்குதா கேக்குதா?

செங்கோட்டையை டூரிஸ்ட் கைடு போல தூரத்திலிருந்தாவது பார்த்துவிடவேண்டும் எனப் பத்தாண்டுகளாகத் துடித்துவரும் சுதீஷ், இந்த ஆண்டு ராஜ்யசபா சீட்டுக்குத் தூபம் போட, ‘இருக்குற ஒத்த ஆளும் ராஜ்யசபாக்குப் போய்ட்டீங்கன்னா அப்புறம் சட்டசபைலயும் நீங்களே போட்டி போட்டு... நீங்களே பூத்ல உக்காந்து... நீங்களே ஓட்டும் எண்ணி... ரொம்பக் கஷ்டம்ல’ என மடைமாற்றிவிட்டது அ.தி.மு.க. அந்தப்பக்கம் அண்ணியாரோ முதல் வாரம், ‘நம்மள விட்டா 234லயும் நின்னு ஜெயிச்சுப்புடுவோம்னு பயம் அவங்களுக்கு’ என ஜான்சி ராணியாய் கர்ஜித்துவிட்டு, அடுத்த வாரமே, ‘40 கேட்ருக்கோம். கேட்டதுல கொஞ்சமே கொஞ்சம் கம்மியாகி மூணே சீட்டுனு வந்தாக்கூட குடும்பத்துல ஆளுக்கு ஒண்ணுன்னு நாங்க பிரச்னை இல்லாம பிரிச்சுக்கிடுவோம். யூ டோன்ட் ஒர்ரி. நெக்ஸ்ட் எலக்‌ஷன்ல மீட் பண்ணுவோம்’ என்கிற ரீதியில் நிர்வாகிகளுக்கு டாட்டா பைபை காட்டினார். தனி ரூட்டில் ட்ராக் ஓட்டும் விஜய பிரபாகரனோ, ‘போன தடவை ரகசியமா பண்ணதாலதானே கலாய்ச்சீங்க, இந்தத் தடவை சொல்லிட்டே பண்றோம்’ என ஓப்பனாக இரண்டு கட்சிகளுடனும் டீல் பேச, ‘கேப்டனை கண்ணுலயாவது காட்டுங்கய்யா’ என காம்பவுண்ட் தாண்டி எட்டிப் பார்த்தபடி இருந்தார்கள் கொடி சுமந்த கட்சிக்காரர்கள்.

டாப் 25 பரபரா - 2020

கண்ணுல படத்தைக் காட்டப்பா!

‘இந்த வருஷம் பெரிய பெரிய ரிலீஸெல்லாம் இருக்குது’ எனக் குதூகலமாய் இருந்த கோலிவுட் ரசிகனின் ஆசையில் குண்டு வைத்தது கொரோனா. தளபதி அபிமானிகள் கடுப்பில் மாஸ்டர் ஆடியோ லாஞ்ச்சையே லூப்பில் பார்க்க, தல ரசிகர்களோ ஒன்றரை ஆண்டுகள் பின்னோக்கி டைம் ட்ராவல் செய்து விஸ்வாசத்திடம் ‘எஞ்சாமீமீமீ’ என சரணடைந்தார்கள். மறுபக்கம் லாக்டௌனுக்கு முன்பாக வெளியான திரைப்படம் என்பதால் ‘தியேட்டரில் இரண்டே நாள்களும் பேனரில் 175 நாள்களும் ஓடிய ஒரே திரைப்படம்’ என்கிற பெருமையைப் பெற்றது சிபி சத்யராஜின் ‘வால்டர்.’ ‘தியேட்டர் எல்லாம் இனி ட்ரெய்லர்தான். மெயின் பிக்சர் நம்மாண்டதான்’ என கெத்தாகக் களமிறங்கின ஓடிடி தளங்கள். ‘இதைப் பார்க்குறதுக்கு அண்டார்ட்டிகா பனியையே வாழ்க்கை புல்லா வெறிச்சுப்பார்க்கலாம்’ என பென்குயின்களையே ஓடவைக்கும் கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’, வரலட்சுமியே மறக்க நினைக்கும் துயர சம்பவமான ‘டேனி’, யோகி பாபுவே இரண்டாவது முறை பார்க்க பயப்படும் ‘காக்டெயில்’ என அங்கும் துன்பங்கள் துரத்த, ‘யய்யா... கதவைத் தொறங்கய்யா’ என பூட்டிய தியேட்டர் கதவுகளைக் கதறியபடி தட்டித் தீர்த்தார்கள் ரசிகர்கள். ‘புத்தம்புதுக் காலை’ ‘சூரரைப் போற்று’ ஆகியவற்றுக்கு நடுவே, ‘நாங்களும் ஹிட்டு, நாங்களும் ஹிட்டு’ என ஆர்.ஜே பாலாஜி குறுக்குமறுக்காக ஓடினார். ‘ஹிட்டா, யாரு சொன்னா?’ என சாமானியன் தலையைச் சொறிய, ‘இதைப் பார்த்தா கண்டிப்பா யாரும் சொல்லமாட்டாங்க, அதான் நாங்களே சொல்லிக்கிட்டோம்’ எனக் கிச்சுகிச்சு மூட்டினார். இப்போது மொத்தத் திரையுலகமும் மாஸ்டருக்காக வெயிட்டிங்.

டாப் 25 பரபரா - 2020

டாடி - மகன் பரிதாபங்கள்

வழக்கம்போல தேர்தலுக்குச் சரியாக ஆறு மாதங்கள் முன் அலாரம் வைத்து ஆக்டிவ்வாக கிரவுண்டுக்கு வந்தார் மருத்துவர். வந்த வேகத்தில் ‘இட ஒதுக்கீடு வேணும்’ என இவர் குரலுயர்த்த, பண்டிகை நாளில் லக்கேஜ்களோடு அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட்டை மொய்ப்பதுபோல போய் ரயில் முன் விழுந்தார்கள் தொண்டர்கள். ‘இவ்வளவு கஷ்டமான கோரிக்கையை வெச்சா எப்படி நிறைவேத்துறது’ என அரசுத் தரப்பில் முகம் காட்ட, ‘நிறைவேத்திடக்கூடாதுன்னு தானே கஷ்டமானதா கேக்குறோம்’ எனக் கண்ணடித்தார் சின்னய்யா. ‘எனக்குத் துணை முதல்வர் வேணும்’ எனக் குழந்தையாகவே மாறி சின்னய்யா அடம்பிடிக்க, ‘இன்னும் இந்தக் கூட்டணியில நீங்க கேட்காதது ஜனாதிபதி பதவியை மட்டும்தான்’ என விரட்டிவிட்டது அ.தி.மு.க. ‘என்ன இது, ஒன்றரை வருஷமா ஒரே கூட்டணில இருக்கோம், சரியில்லையே’ என வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக தி.மு.க பக்கமும் தூதுவிட்டார்கள். ‘அன்பு கேங்குக்கு விழுகுற ஓட்டுல கால்வாசி இந்த அன்புக்கு விழுந்திருந்தாக்கூட நான் ஜெயிச்சுருப்பேன்’ என இந்த ஆண்டும் சின்னய்யா குமுறக் காரணமானது பிக்பாஸ். ‘போன புதன்கிழமை வியாழன் கிரகம் பூமிக்குப் பக்கத்துல வந்துச்சே... அதுக்குக் காரணம் அன்புமணி அமைச்சரா இருந்தப்போ அதை வரச்சொல்லிப் போட்ட அரசாணைதான்’ என தொட்டதெற்கெல்லாம் அப்பாவும் மகனும் க்ரெடிட் கேட்டதுடன் கொரோனா டெஸ்ட்டில் பாசிட்டிவ் வந்தால்கூட ‘இது பா.ம.க-வுக்குக் கிடைத்த வெற்றி’ என்று ராமதாஸ் அறிக்கை தட்ட, ‘அடுத்த ஆறு மாசம் சிரிப்பொலி, ஆதித்யாவுக்கு சப்ஸ்க்ரிப்ஷனே தேவையில்ல’ என குஷியானார்கள் வாக்காளர்கள்.

டாப் 25 பரபரா - 2020

ரிப்பீட்டு... அப்பீட்டு

ஷூட்டிங் தடையால் சினிமா ரசிகர்களைவிட அதிகம் நொந்தது சின்னத்திரை ரசிகர்கள்தான். கூட்டத்தை சமாளிக்க, சேனல்கள் ட்ரங்குப் பெட்டியிலிருந்து பழைய சீரியல் ரீல்களைத் தூசி தட்டி எடுத்தன. ‘சித்தி’ சீரியல் டைட்டில் கார்டில் சிவகுமார் தினமும் ஆற்றில் முங்கி முங்கி எழுந்துகொண்டிருக்க, ‘பாரேன்... எல்லாரும் 20 வருஷம் முன்னாடி எப்படி இருந்தாங்களோ அப்படியே இருக்காங்க. ஹெவி டயட் போல’ என அதை ‘சித்தி 2’ என்று நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு கூட்டம். ரியாலிட்டி ஷோ பக்கம், ‘நான் சீரியஸா சொல்றேன். நீங்க சினிமாவுல நல்ல காமெடியனா வருவீங்க’ என சிவகார்த்திகேயனை ‘செளகார்பேட்டை’ படப்புகழ் காந்த் ஆசீர்வதித்துக்கொண்டிருந்தது காலம் செய்த காமெடி. சும்மாவே 1082 தடவை மறுஒளிபரப்பாகியுள்ள ‘மானாட மயிலாட’ ரீல் முழுக்கவே தேய்ந்து பழைய தூர்தர்ஷன் திரைபோல புள்ளி புள்ளியாகத்தான் தெரிந்தது. டிஜிட்டல் ஏரியாவில் இதுவரை பிறந்திராத குழந்தையும் இறங்கிடாத ஏலியனையும் தவிர எல்லாரும் யூடியூப் சேனல்கள் தொடங்க, ‘எல்லாரும் சேனல் ஆரம்பிச்சா அப்புறம் யாருதான்ய்யா பார்க்குறது?’ எனக் குழப்பத்தில் தெறித்தன கம்ப்யூட்டர் திரைகள்.

டாப் 25 பரபரா - 2020

கடல், மலை தாண்டிக் கடை தேடி...!

கொரோனா வருது, லாக் டௌன் ஆகுது, வேலை போகுது... ம்ஹூம்! எதற்கும் அசரவில்லை குடிமகன்கள். ‘கடையை மட்டும் மூடிராதீங்க’ எனக் கோரஸாய் ஒப்பாரி வைத்தார்கள். மோடி ‘மன் கி பாத்’தில் வந்தாலே வில்லங்கம் என்பதைப் புரிந்துகொண்டவர்கள் ‘பதுக்குடா பங்காளி’ என மக்கள் ஊரடங்கின்போதே சரக்கு வாங்கிக் குவிக்க தங்க வேட்டையில் குளித்தது டாஸ்மாக். லாக் டௌனின்போது கை நடுங்கும் கடுப்பில் சிக்கிய சானிட்டைசர் பாட்டில், பீர் போல நுரை வருமென்பதற்காகவே சோப்புத்தண்ணீர் எனக் கண்டதையும் குடித்து சாகக்கிடந்தார்கள். ‘வருமானம்னு வர்றதே இது ஒண்ணுதான்’ என அரசும் கூசாமல் சில இடங்களில் கடையைத் திறக்க, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டார்கள் குடிவிரும்பிகள். ‘பி.எம்முக்கு எல்லாம் பாதுகாப்பு வேலை பாத்த எங்களைப் போயி...’ எனச் சலிப்போடு இவர்களைத் தடுக்க பார்டரில் பேரிகேட் போட்டுப் படுத்துக்கிடந்தார்கள் போலீஸ்காரர்கள். பாட்டில் வாங்கத் தேவையான கலர் டோக்கனையே எடைக்குப் போட்டுக் குடித்தது, முதல் நாள் நிரம்பி வழிந்த கடையை மறுநாள் மொத்தமாக ஆட்டயப் போட்டு மேஜிக் காட்டியது என இவ்வாண்டு முழுவதும் அந்தரசல்லி ஆக்கினார்கள் டாஸ்மாக் அபிமானிகள்.

டாப் 25 பரபரா - 2020

காவிக்கட்சி களேபரங்கள்

இந்த ஆண்டும் காமெடி ஏரியாவை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார்கள் தமிழகக் காவிகள். ‘யாரு தலைவர், யாரு தலைவர்’ என இருக்கும் நால்வரும் தங்களுக்குள்ளேயே மாறி மாறிக் கேட்டுக்கொண்டிருக்க, ‘இந்தா இவர்தான் அது’ என ஐந்தாவது ஆளாய் முருகனை அறிமுகப்படுத்தியது டெல்லி தலைமை. பார்ப்பதற்கு முதல் படம் லோ பட்ஜெட்டில் நடிக்கும் தயாரிப்பாளரின் மகன் போல அமைதியாய் அவர் இருக்க, ‘இங்க ஸ்பீக்கர் வெச்சு சத்தம் போட்டாலே எடுபடல, இதுல இவர் வேறயா?’ என சொந்தக் கட்சிக்குள்ளேயே குண்டு வைத்தார்கள். கூட்டம் இருந்தாத்தான் கட்சி ஆபீஸ்னு கூட்டணி பேச வர்றவங்க நம்புவாங்க என யாரோ ஒருவருக்கு உறைக்க, சகட்டுமேனிக்கு ஆளெடுத்தார்கள். ‘குஷ்புவை வெச்சு டான்ஸ் ரியாலிட்டி ஷோ, பொன்னம்பலத்தை வெச்சு பாட்டுக் கச்சேரி, அப்போ கலக்கப்போவது யாரு? அதுக்குத்தான் மொத்தக் கட்சியும் இருக்கே’ எனத் தாமரை டிவிக்கு ஸ்கெட்யூல் போட்டார்கள். ‘அறிவுஜீவிகள் பிரிவு, கலைப் பிரிவு’ என்றெல்லாம் தலைமை அறிக்கை விட, ‘எப்படி ஜி இதெல்லாம் சிரிக்காம டைப் பண்ணி அறிக்கையா விடுறீங்க?’ எனக் கேட்டுக் கேட்டு மாய்ந்துபோனார்கள் நெட்டிசன்கள். சும்மா இருக்கும் ஆட்களை வேலை வாங்க மேலிடம் யாத்திரை தொடங்க, ‘ஓ இவர்தான் முருகரா, முன்னப்பின்ன பாத்ததே இல்லையே?’ என்றே அணுகினார்கள் கட்சியின் தமிழகத் தலைவர்கள். ‘தனியா விட்டா 234லயும் அள்ளிடுவோம் தெரியும்ல’ என அதன் தலைவர்கள் உதார்விட, ‘ஆமா அப்படியே அறுத்துத் தள்ளிட்டாலும், உள்ளாட்சியிலேயே முக்குது, இதுல ஸ்டேட்டு கேக்குதோ’ என லெப்டில் டீல் செய்கின்றன திராவிடக் கட்சிகள்.

டாப் 25 பரபரா - 2020

நித்யானந்தா என்னும் சிந்துபாத்

‘அண்டர்ஸ்டாண்ட் தி புட் நோஷன் அண்ட் பீ காஷன், டெய்லி மார்னிங் ப்ரீ மோஷன்’ என ‘ல்தகாசைஆ’ வாசித்துக்கொண்டிருந்த நித்யானந்தா வெளிநாடு(?) போனாலும் ஆட்டம் குறைக்கவில்லை. விநாயகர் சதுர்த்தி நாளில் , ‘கைலாசா ரிசர்வ் வங்கி’ ஆரம்பித்து கரன்சியையும் 300 பக்கப் பொருளாதாரக் கொள்கையையும் அறிமுகப்படுத்தினார். ‘கொரியர் அனுப்புங்க, குளிருக்கு எரிக்க ஏதுவா இருக்கும்’ என ஒரண்டை இழுத்தார்கள் நெட்டிசன்கள். ‘கொரோனா வர்றது முன்னாடியே தெரிஞ்சுதான் தனிநாட்டையே வாங்கித் தனிமைப்படுத்திக்கிட்டேன்’ என அவர் பெருமை பீத்த, ‘இத்தனூண்டு கிருமி வர்றது எல்லாம் முன்னாடியே தெரியுது, இத்தாத்தண்டி கேஸ் வர்றது கண்ணுக்குத் தெரியலயாக்கும்’ எனத் திரும்பவும் காலை வாரினார்கள். கடைசியாய், ‘மூணு நாள் ப்ரீ ட்ரிப். வந்து பாருங்க. இங்க செட்டில் ஆகப்போறவங்க எண்ணிக்கை ஒரு லட்சம்ப்பே’ எனக் கொளுத்திப்போட, ‘அய்யய்ய, அடங்கமாட்டாப்ல போலயே இந்தாளு, நம்மளவிட பெரிய விஷக்கிருமி இவர்தான்போல’ என கொரோனாவே கடலுக்குள் புகுந்து தலைமறைவானது.

டாப் 25 பரபரா - 2020

அடிச்சேன் பாரு ஒரு லாங் ஜம்ப்!

குஷ்புவால் ட்விட்டர்வாசிகளுக்கும் மீம் க்ரியேட்டர்களுக்கும் இந்த ஆண்டு அடித்தது ஜாக்பாட். ஆண்டின் முதல் பாதி முழுக்க காவிக்கட்சிக்கு எதிராகக் கம்பு சுற்றிக்கொண்டே இருந்தார் குஷ்பு. திடீரென அவர் அதே கட்சியில் சேரப்போவதாகத் தகவல் வெளியாக, சென்னையில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜ.க-வைக் கழுவிக் கழுவி ஊற்றினார். சரியாக ஏழே நாள்களில் ‘மோடிதான் பெஸ்ட்டு, காங்கிரஸ் வொர்ஸ்ட்டு’ எனப் பேட்டி தட்ட, ‘அடேங்கப்பா இது வேதாளம் ட்ரான்ஸ்பர்மேஷனைவிட வேகமா இருக்கே’ என பிரமித்தது தமிழகம். ‘பா.ஜ.க-வில் இருந்தாலும் நான் பெரியாரியவாதிதான்’ என அவர் சொல்ல, ‘என்னது, சிக்கன் பிரியாணிக்குத் தொட்டுக்கக் கீரைக் கரைசலா?’ என முகம் சுளித்தார்கள் மக்கள். விவசாயிகள் போராட்டத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவளிக்க, ‘பீ கேர்புல்’ என அவர்மீது பாய்ந்தார். ‘நீங்க மிரட்டிட்டீங்கல்ல! அவரு கண்டிப்பா பயந்திருப்பாரு’ என சுற்றியிருப்பவர்கள் சொல்லவே, சமாதானமானார். ‘திருமாவை எதிர்க்கிறேன் பேர்வழி’ எனத் தீரமாக அவர் கிளம்ப, வழியிலேயே லாக் செய்து ரிசார்ட்டுக்குக் கூட்டிச் சென்றது காவல்துறை. ‘சரி வந்தது வந்துட்டோம். வீக்கெண்ட் இருந்துட்டுப் போவோம்’ என அவர் தலைமையில் மகளிரணி அங்கு சில் பண்ண, ‘இது லிஸ்ட்லயே இல்லையே’ என அதிர்ந்தார்கள் மற்ற நிர்வாகிகள். லேட்டஸ்ட்டாக ரஜினிக்கு அளவுக்கதிகமாய் சப்போர்ட் செய்ய, ‘ரைட்டு நெக்ஸ்ட்டு ஜம்ப்பு கன்பார்ம். அங்கே எத்தன வாரம் இருப்பாங்க’ என பெட் கட்டிக் காத்திருக்கிறார்கள் எல்லாரும்.

டாப் 25 பரபரா - 2020

கட்சி தொடங்கியிருப்பது உங்கள் விஜய் அல்ல!

‘ரிலீஸ் தேதியெல்லாம் சொல்லியும் இன்னும் ஒரு பஞ்சாயத்துகூட வரலையே. அதெல்லாம் இல்லாம ரிலீசானா விஜய் படம் மாதிரியே இருக்காதே’ என கோலிவுட் சிந்தித்துக்கொண்டிருக்க, வந்திறங்கினார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள். அவர்கள் சிக்கிய செல்ப்புகளிலெல்லாம் டாக்குமென்ட் தேடிக்கொண்டிருக்க இந்தப்பக்கம் ஜாலியாய் செல்பி தட்டி விளையாடிக்கொண்டிருந்தார் விஜய். ரிலீஸ் தள்ளிப்போகப் போக, அப்டேட் கேட்டுக் கதறியவர்களுக்கு, ‘நாந்தான் இருக்கேன்ல’ என ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கினார் எஸ்.ஏ.சி. ‘கட்சி அவர் பேருலதான் இருக்கு, ஆனா கட்சி அவரோடதில்ல’ என அவர் விளக்க, ‘இது கட்சியே இல்ல’ என விலகியோடினார் ஷோபா. ‘ஒரு கூட்டமே பண்ற பெரிய சதி’ என எஸ்.ஏ.சி எகிற, ‘உலகமே பிடேனா, ட்ரம்ப்பான்னு அலைமோதிக்கிட்டு இருக்கு. நீங்க வேற நொய் நொய்னு, சத்த நேரம் அனத்தாம இருங்க சார்’ என அதட்டி ஆப் செய்தது பொதுஜனம். கடைசியாக, கட்சியின் ஒரே உறுப்பினரான மாநிலத் தலைவரும் விலகிக்கொள்ள, ‘இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்’ போர்டில் ‘விற்கப்படும்’ மட்டுமே எஞ்சியது. வேறு வழியே இல்லாமல் போர்டைத் தூக்கி உள்ளே வைத்துவிட்டு ஷட்டரை சாத்தி மீண்டும் சைலன்ட்டானார் புரட்சி இயக்குநர்.

டாப் 25 பரபரா - 2020

முதல்வர் வேட்பாளர் நம்பர் 2435!

முதல்வர் நாற்காலியில் பி.டி மாஸ்டரிடம் சிக்கி பனிஷ்மென்ட் வாங்கும் கடைசி பெஞ்ச் மாணவனைப்போல ‘சேர்’ பொஷிசனில் உட்காருவதுபோல் நிற்பதுதான் எடப்பாடி ஸ்டைல். இந்த முறை அந்தச் சேரையும் பன்னீர் அண்ட் கோ உருவப் பார்க்க, கப்பென கம் போட்டு உட்கார்ந்து கொண்டார். ஏலச்சீட்டு எடுப்பதுபோல ஆளாளுக்கு சீட்டு கேட்க, மெகா சீரியல் எபிசோடுகளைவிட முதல்வர் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. பைனல் ரவுண்டில் ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் நிற்க, ‘என்னைத் தாண்டி நாற்காலியைத் தொடுங்க பார்ப்போம்’ என உறுமினார் பன்னீர். ‘அந்தா அங்குன யாருமே இல்ல பாருங்க. அங்க நின்னு பேசிகிட்டு இருங்க’ என சுவர்பக்கமாய் அவரை நகர்த்தி வைத்துவிட்டு அமர்ந்தது எடப்பாடி சாமர்த்தியம். ‘எங்க ஆட்சியில சும்மாவே குடும்பம் உருப்படாது. இதுல பிக்பாஸ் வேற பார்த்தா எப்படி?’ என கமலை நோண்ட, ‘வேலைவெட்டி இல்லாம பிக்பாஸ் பார்க்குறீங்களா?’ என கோல் அடித்தார் கமல். ‘தலைவரே! சொல்லவே இல்ல, ஹாட்ஸ்டார் பாஸ்வேர்டு ஷேர் பண்ணுங்க’ எனக் கிசுகிசுத்தார்கள் ர.ரக்கள். அமெரிக்காவிலிருந்து யாரோ ‘பால் ஹாரீஸ் பெல்லோ’ பட்டத்தை பார்சல் அனுப்ப, ‘அமேசான்ல ஆர்டர் போட்டதா? எங்களுக்கும் ஒண்ணு சேர்த்துப் போட்ருக்கலாம்ல’ என்று குதித்தது எதிர் கோஷ்டி. வடக்கில் பா.ஜ.க, சைடில் ஸ்டாலின், சென்டராக கமல், எஞ்சிய திசையில் ரஜினி என ஆளுக்கொரு பக்கம் எகிறினாலும் தன் டிரேடுமார்க் ‘மத்தியானம் சாப்பிட்ட பொங்கல் செரிக்கல’ ரியாக்‌ஷனில் எடப்பாடி வலம் வந்ததுதான் இந்தாண்டின் ஹைலைட்.

டாப் 25 பரபரா - 2020

மாத்துவோம்... ஹேர்ஸ்டைலை மாத்துவோம்

பொதுச்செயலாளர் பதவிக்கு அஞ்சலிப் பாப்பாவாக மாறி துரைமுருகன் அடம்பிடிக்க, வேறுவழியே இல்லாமல் முன்மொழிந்தார் ஸ்டாலின். ஆனால் கொரோனா வந்து வீம்பாய் விளையாட, ‘முப்பது வருஷமா நான்தான் இலவு காத்த கிளியா இருக்கேன், ஒரு மூணு மாசம் நீங்க இருங்க’ என துரைமுருகனிடம் கிளி வேஷத்தைக் கைமாற்றிவிட்டார். ‘மாற்றம் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்’ என முழங்கியவர் சட்டென விக்கை மாற்றிக்கொண்டு வந்து நிற்க, ‘யப்பா, இது ‘எலி’ பட வடிவேலு கெட்டப்பா’ என ஓட்டித் தள்ளினார்கள் மீம் க்ரியேட்டர்கள். நடுவே பிள்ளையாரை வைத்து உதயநிதி குபீர் காமெடி செய்ய, ‘நான் பையனா இருந்து இப்போ எனக்கு பையன் ஆகியுமே பஞ்சாயத்து மட்டும் மாறவே மாட்டுதே’ என சலிப்பாய் உச்சுக் கொட்டினார். ‘உடம்பு மிதிச்சா சைக்கிளுக்கு நல்லது’ என அவர் ஈ.சி.ஆரில் லாங் டிரைவ் கிளம்ப, ‘வாங்களேன் கூட்டணி பத்திப் பேசலாம்’ எனப் பாண்டிச்சேரியிலிருந்து சிவப்புக்கொடி ஆட்டினார் நாராயணசாமி. பதறிப்போய் யூ-டர்ன் போட்டவர் நேராய் கோட்டை வாசலில் வந்து, ‘இந்தத் திட்டங்களை எல்லாம் அறிவி...’ என அறிக்கை தட்டுவதற்குள் எடப்பாடி அவற்றை நிறைவேற்றி வைக்க, ‘இதெல்லாம் நமக்கு என்ன புதுசா? பல வருஷமா மாதிரி தலைவரா இருந்தேன், இப்போ மாதிரி முதல்வரா இருக்கேன். ஸோ சிம்பிள்’ என கூலாய் ஷோல்டர் குலுக்கினார்.

டாப் 25 பரபரா - 2020

காமெடிக்கு நான் கியாரன்டி

சீமான் இல்லாத டாப் 25 பரபர வெங்காயப்பச்சடி இல்லாத பிரியாணிபோல. முழுமை அடையவே அடையாது. ‘ஆமை அட்வெஞ்ச்சர், ‘பலூன் சுடும் ரவையால் கப்பலில் ஓட்டை போட்டது’ போன்ற பேன்டஸி கதைகளுக்கு அடுத்தபடியாக ‘இட்லிக்கறி’யை அவர் சுடச்சுடப் பரிமாற, ‘மிலிட்டரியவே பயமுறுத்தின அமைப்பை மிலிட்டரி ஓட்டல் ஆக்கிட்டீங்களே’ எனப் பாய்ந்தார்கள் ஈழ ஆதரவாளர்கள். இனமானத் தம்பிகளில் இரண்டு பேர் சட்டெனக் கழன்றுகொள்ள, ‘சீமானிசம்னா அப்படித்தான் இருக்கும்’ என புஹாஹாஹா செய்தார். ‘ஸ்டாலின் எங்கே போட்டியோ அங்கதான் நானும் போட்டி’ என இவர் பேட்டி தட்ட, ‘உலகத்துலயே எதிர்க்கட்சித் தலைவரை எதிர்த்து நிப்பேன்னு சொல்ற இன்னொரு கட்சி இதுதான்’ எனப் பட்டயம் கொடுத்தார்கள் அறிஞர்கள். ‘முருகன் என்றால் என் முகம்தான் ஞாபகம் வரும்’ எனப் போகிறபோக்கில் அவர் பேச, கோபித்துக்கொண்டு திரும்பிப் படுத்தார் காலண்டர் முருகன். ‘ரஜினி, கமலுக்கு விழுகுற அடியில விஜய்க்கு அரசியல் ஆசை வரக்கூடாது’ என அண்ணன் சூடாக, ‘பகலவனை தளபதி தூசி தட்டினா அப்படியே ப்ளேட்டை மாத்திடுவீங்கல்ல’ என டவுட் கேட்டார்கள் தம்பிகள். ‘அப்படித் திருப்பினாத்தானே அது நானு’ என மறுபடியும் ஒரு புஹாஹாஹாவோடு அண்ணன் ஆண்டை நிறைவு செய்யப்பார்க்க, அ.தி.மு.க.-வில் சேர்ந்து அதிர்ச்சியைக் கொடுத்தார் முன்னாள் ‘ஒறவு’ கல்யாணசுந்தரம்!

டாப் 25 பரபரா - 2020

ஆனா... ஆவன்ன்னா.. அமைச்சர் நாங்கண்ணா!

தமிழக அமைச்சரவைக்கும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கும் ஆறு மைக்ரோ வித்தியாசங்கள்கூட கண்டுபிடிக்கமுடியாது. ஆளாளுக்கு எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆண்டின் தொடக்கத்திலேயே ‘பா.ஜ.க-வைக் கழட்டிவிடப் பார்க்கிறோம்’ என அமைச்சர் பாஸ்கரன் சொல்ல, தமிழகமே அதிர்ந்தது. அவர் சொன்னதற்கல்ல, ‘என்னாது இப்படி ஒரு அமைச்சர் இருக்காரா’ என! கொரோனா களத்தில் இறங்கவும் மைக்செட்டைக் கையிலேயே வைத்துச் சுற்றிக்கொண்டிருந்த செங்கோட்டையன், ‘மே மாதம் முகூர்த்தம் நல்லா இருக்கு, இல்லல்ல, ஆகஸ்ட்ல குருபெயர்ச்சி’ என ஜோசியர் கணக்காக ரீ ஓப்பனிங்கிற்கு இஷ்டத்திற்கு ஆரூடம் சொல்லித் திரிந்தார். மறுபக்கம் மூடவே முடியாத நகராட்சிக் குழாய் போலானது ராஜேந்திர பாலாஜியின் வாய். பிரஸ்மீட் எனக் கூப்பிட்டு கூப்பிட்டு அவர் ‘பீப் சாங்’ பாடிக்கொண்டிருக்க, கடுப்பில் சேனல் மாற்றியது தமிழகம். கே.சி.கருப்பணன் தன் பங்குக்கு, ‘இந்தியாவிலேயே இரண்டே நிமிடங்களில் சந்திக்க முடிந்த முதல்வர் எடப்பாடிதான்’ எனச் சொல்ல, ‘சும்மாவே இருந்தா பார்க்கத்தான் செய்வாரு. இதெல்லாம் ஒரு சாதனையா பாஸு?’ எனக் கலாய்த்தார்கள். ஒருபக்கம் எடப்பாடியின் முதல்வர் ஆசைக்குக் குழிபறித்துக்கொண்டே மறுபக்கம் அவருக்கு, ‘கரிகாலன், கலங்கரை விளக்கம், வண்டலூர் சிங்கம்’ என்றெல்லாம் அகராதி புரட்டி பட்டம் சூட்டிக்கொண்டிருக்க, இவர்களின் ஸ்பிலிட் பர்சனாலிடியைப் பார்த்து, ‘இவங்கெல்லாம் என்னா ரகம்னே தெரியலையே’ எனத் தலையிலடித்துக்கொண்டார்கள் மக்கள்.