Published:Updated:

``ஒருவேளைதான் சாப்பாடு, எங்களையும் மனுஷங்களா நினைச்சு உதவுங்க" - பசியில் வாடும் திருநங்கைகள்

திருநங்கைகள்
திருநங்கைகள்

``நான் சாதிச்சுட்டு வந்து நிற்பேன், அன்னைக்கு நீங்க என்னை ஏத்துப்பீங்கனு ஒரு முடிவு எடுத்துட்டுதான் வீட்டைவிட்டு வர்றோம்.’’

உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறிய நிறுவனங்கள் உற்பத்திக்கும் விற்பனைக்கும் போராடி வருகிறார்கள். நிறுவனங்களின் நிலை இதுவென்றால் விவசாயிகளோ அறுவடை செய்தவற்றை விற்க முடியாமல் மாட்டுக்கும் பன்றிகளுக்கும் இரையாக்கிவிட்டுச் செல்கிறார்கள். இப்படி ஊரையே முடக்கிப்போட்ட கொரோனாவை மக்களின் மனித நேயம் பல இடங்களில் வென்று இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. ஆனாலும், பாலினத்தில் ஒதுக்கப்பட்டு, குடும்பங்களில் இருந்து புறக்கணிக்கப்பட்டு, கேலி, கிண்டல்களுடன் வாழ்க்கையை வாழ போராடும் திருநங்கைகளின் இன்றைய நிலை என்ன? அவர்களுக்கு மூன்று நேரம் உணவு கிடைக்கிறதா என்ற சந்தேகங்களுக்கு விடை தேடி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநங்கைளிடம் பேச ஆரம்பித்தோம்.

திருநங்கைகள்
திருநங்கைகள்

"பேசி என்ன ஆகப்போகுது, இப்படி ஓர் இனம் இருக்குறாங்கனுகூட மக்கள் யாரும் யோசிக்கிறதே இல்ல. எங்க பேட்டி மட்டும் அவங்க மனசை மாத்திருமா" என்று மனிதர்கள் மீது நம்பிக்கை அறுந்த நிலையில் பேசும் விமலா அம்மாவை ஆசுவாசப்படுத்திப் பேச வைத்தோம்.

"விழுப்புரத்துல மொத்தம் 300 திருநங்கைகள் இருக்கோம். 10 பேர், 20 பேருனு தனித்தனி குரூப்பா ஒவ்வொரு இடத்துல இருக்கோம். முன்னாடியெல்லாம் வீடே கொடுக்க மாட்டாங்க. ரோட்டுலையே நாய்களுக்குப் பக்கத்துல வாழ்க்கை நடத்துன நாள்களெல்லாம்கூட இருக்கு. ஆனா, இப்போ அரசாங்க குடியிருப்பில் பாதுகாப்பாக இருக்கோம், நூத்துல ஒருத்தர் ரெண்டு பேர்தான் எங்கள நம்பி வேலை கொடுக்குறாங்க. வேலையில்லாட்டாலும் வயிறுனு ஒண்ணு இருக்குதுல. அதான் ரயிலு, பஸ்ஸுனு கை நீட்டி காசு வாங்கி சாப்பிடுறோம்.

கை நீட்டி காசு வாங்கும்போது அவமானமாதான் இருக்கு. நாங்க யாரும் பிச்சை எடுக்கணும்னு நினைக்கல. ஆனா, படிப்பைத் தொடர முடியல, வேலை கிடைக்கல, போற இடத்துல எல்லாம் விரட்டி விடுறாங்க. அப்புறம் சாப்பாட்டுக்கு நாங்க என்ன பண்றதும்மா. அதுக்காக நாங்க பிச்சை எடுக்கிறதை நியாயப்படுத்தல. வேறு வழியில்லாம நிக்கிறோம்" எனச் சொல்லும்போதே கண்கள் கலங்குகிறது விமலா அம்மாவுக்கு.

திருநங்கைகள்
திருநங்கைகள்

அது சரி, எங்க அப்பன் ஆத்தாளுக்கே எங்களைப் பற்றி புரியவைக்க முடியல, மத்தவங்களச் சொல்லி என்ன ஆகப்போகுது. இங்க இருக்கவங்களில் நிறைய பேர் காலேஜ் வரை படிச்சவங்க, ஆனா எங்கையும் வேலை கிடைக்கல. எல்லா இடத்துலேயும் ஏதாவது ஒரு புறக்கணிப்பைச் சந்திச்சு இருக்காங்க. படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்காம பிச்சை எடுத்து சாப்பிடுறதெல்லாம் மரண வேதனை. ஆனா, அதுதான் விதினு வாழப் பழகிட்டோம். எங்கையாவது வேலை கிடைச்சாலும், அது காணோம், இது காணோம்னு யாராவது திருடனதுக்கும் எங்கள சொல்லி வெளிய அனுப்பிருவாங்க. இப்படியான அவமானங்கள் எங்களுக்கு புதுசு இல்ல.

திருநங்கைகள் எழுத்தறிவு விகிதம்
திருநங்கைகள் எழுத்தறிவு விகிதம்

சமீபகாலமாகத்தான் சில திருநங்கைகள் அரசாங்க தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசாங்க வேலைக்குப் போக ஆரம்பிச்சுருக்காங்க. அவர்களைத்தான் எங்களோட அடையாளமாகப் பார்க்கிறோம். திருநங்கையா இருக்க எல்லாருமே வீட்டில் புறக்கணிக்கப்பட்டு வெளியே வரும்போது, நான் சாதிச்சுட்டு வந்து நிற்பேன், அன்னைக்கு நீங்க என்னை ஏத்துப்பீங்கனு ஒரு முடிவு எடுத்துட்டுதான் வர்றோம். அப்படியான கனவுகள் இங்க இருக்க 300 பேருக்குள்ளும் இருக்கு. ஆனா, சமுதாயத்தில் நாங்க உயிர் வாழ்றதே ஒரு போராட்டமா இருக்கு, இதுல எங்க இருந்து கனவுக்கு உயிர் கொடுக்கிறதுனு சொல்லுங்க. அதனால வீட்டுப் பக்கமே போறது இல்ல. எங்களுக்குள்ளயே அம்மா, அக்கா, தங்கச்சினு நாங்களே உறவு சொல்லி கூப்பிட்டுப்போம்" என்றவரிடம் கொரோனா நேரத்தில் உணவுக்கு என்ன பண்றீங்கனு கேட்டோம்.

ஊரடங்கு விதிச்சதிலிருந்து காசு கேட்க எங்கையும் போக முடியல. அரசாங்கம் கொடுக்கும் 1,000 ரூபாய் பணத்தையும் வாங்க முடியல. 12 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் கொடுத்து ஒரு மாசம் ஆச்சு. அது எப்படி இத்தனை நாளுக்கு பத்தும். அடையாள அட்டை இருக்கவங்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுத்தாங்க. ஆனா, அதை வாங்க ரேஷன் கார்டும் அடையாள அட்டையும் நிறைய பேர்ட்ட இல்ல. எங்களோட குடும்ப அட்டைகளில் எங்களோட பழைய பேர்கள் இருக்கும். அதை அந்த அட்டையிலிருந்து நீக்கினால்தான், திருநங்கைக்கான பெயருடன் புது குடும்ப அட்டை கொடுப்பாங்க. வீட்டைவிட்டு துரத்தினவங்ககிட்ட, நான் வாழனும் ரேஷன் கார்டு குடுங்க, பிறப்புச் சான்றிதழ் கொடுங்கனு கேட்க அசிங்கப்பட்டுகிட்டு, எந்த அடையாள அட்டையும் இல்லாமல் சிலர் இருக்குறாங்க.

கூத்தாண்டவர் திருவிழாவின் வரலாற்றுப் பின்னணி. #KoovagamFestival #Viluppuram வீடியோ - p. பிரபு ஸ்க்ரிப்ட் - சு.சூர்யா கோமதி. ஆடியோ- நிவேதா

Posted by Vikatan EMagazine on Wednesday, April 22, 2020

அதனால் இப்போ ஒரு வேளை சாப்பாடு, ரெண்டு வேளை பிஸ்கட்னு சாப்பிட்டுகிட்டு இருக்கோம். யாராவது உதவி பண்ணுவாங்கனு நம்பிக்கையில்தான் ஒவ்வொரு நாளும் கழிஞ்சுட்டு இருக்கு. சொன்னா நம்பமாட்டீங்க ஆதரவற்று ரோட்டுல உட்கார்ந்துருக்கவங்களுக்கு ஓடி வந்து நிறைய பேர் உதவி செய்றாங்க. ஆனா, கிட்ட போயி, சாப்பாடு தாங்கனு நாங்க கேட்டா, திரும்பிப் பார்க்காம போயிருவாங்க. இன்னும் சிலபேர் அவமானப்படுத்திட்டும் போவாங்க. நாங்களும் மனுஷங்கதான், எங்களுக்கும் பசி வரும்னு நிறைய பேர் உணர்றதே இல்ல.

ஆனாலும், எங்களால் கொரோனா பரவக்கூடாது என்பதால், அரசாங்கத்துக்கு கட்டுப்பட்டு, எங்கேயும் போகாமல் வீட்டுக்குள்ளயே இருக்கோம். ஊருக்கு வெளியே இருக்கிறதால் யாரும் எங்களைத் தேடி வந்து உதவவும் முன்வரமாட்டாங்க. விழுப்புரத்தில் மட்டுமல்ல பல ஊர்களில் இருக்கும் திருநங்கைளுக்கும் இதே நிலைமைதான். அரசாங்கத்துக்கிட்ட உதவி கேட்டு மனு கொடுத்திருக்கோம். என்ன பண்ணுவாங்க, எப்ப பண்ணுவாங்கனு தெரியல. காத்துகிட்டு இருக்கோம்.

எங்க நிலைமையைப் புரிஞ்சுகிட்டு விழுப்புரம் வியாபாரிகள் காவல் துறையின் மூலமாக அரிசி, பருப்புனு கொடுத்து உதவி பண்ணாங்க. அதுவும் நிறைய திருநங்கைளுக்குக் கிடைக்கல. கிடைச்சதை வெச்சு சாப்பிட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளயே இருக்கோம். யாராவது வெளிய நடமாடுனாகூட வீட்டைவிட்டு வெளிய வராதீங்கனு சொல்லிட்டுதான் இருக்கோம். எல்லாம் இயல்பு நிலைக்குத் திரும்பினால்தான் நாங்க மூணு நேரம் சாப்பாடு சாப்பிட முடியுங்கிறதுதான் எங்களோட வாழ்க்கை நிலை.

கொரோனா: வெல்ல முடியாத வியாதி அல்ல!

பொதுவா, சாதாரண நாள்களிலேயே எங்ககிட்ட பேச மக்கள் தயங்குவாங்க. இப்போ யாருமே வெளியே வரல, நாங்களும் வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடப்பதால், மன அழுத்தம்தான் அதிகமாகியிருக்கு. அதுமட்டுமல்ல ஒவ்வொரு வருஷமும் ஏப்ரல் மாசத்துலதான் விழுப்புரத்தில் கூத்தாண்டவர் திருவிழா நடக்கும். உலகம் முழுக்க இருக்க எங்க ஜனங்களை அன்னைக்குத்தான் பார்க்க முடியும்.

கூவாகம் நிகழ்ச்சி இல்லை, சாப்பாட்டிற்கும் சிரமப்படும் திருநங்கைகள் #KoovagamFestival #Villupuram #LockDown ரிப்போர்டிங் - சு.சூர்யா கோமதி . வீடியோ - தே. சிலம்பரசன்

Posted by Vikatan EMagazine on Tuesday, April 21, 2020

வெவ்வேறு ஊர்களிலிருந்து வரும் திருநங்கைகள் அந்த ஒரு வாரம் ஒரே குடும்பமா இருப்போம். திருவிழா அன்னைக்கு தாலி கட்டி, சடங்குகள் செஞ்சு சந்தோஷமா இருப்போம். வருஷம் முழுக்க பட்ட கஷ்டம் எல்லாம் அந்த நாளில் மறந்து போயிரும். அது எங்களுக்கான நாள். இப்போ கொரொனாவுக்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதால் இந்த வருஷம் கூத்தாண்டவர் திருவிழா நடக்கல. இது எல்லோருடைய நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும் மனவருத்தமாகத்தான் இருக்கு. மும்பை, டெல்லினு வெவ்வேறு ஊர்களிலிருந்து திருநங்கைகள் போன் பண்ணி எப்போ திருவிழானு விசாரிச்சுட்டு இருக்காங்க. வீட்டுலேயே கும்பிட்டுக்கோங்கனு சொல்லிட்டு இருக்கோம்.

எல்லாம் சீக்கிரம் சரியாகக் கூத்தாண்டவர் துணை நிக்கணும். நிறைய பேருக்கு வருமானம் இல்லாத இந்தச் சூழலில் உதவி கேட்கத் தயக்கமாதான் இருக்கு, ஆனால், எங்களை உங்க வீட்டு சகோதரியாக நினைச்சு உதவி பண்ணுங்க" எனக் கை கூப்பி விடைபெறுகிறார் விமலா அம்மா.

அடுத்த கட்டுரைக்கு