Published:Updated:

``ஒட்டகப்பாலில் டீ விற்கிறேன்... வடிவேலுக்கு நன்றி!’’ - உடுமலை இளைஞரின் செம்ம்ம ஐடியா

`விலை அதிகம்னாலும், அதற்கான காரணமும் மக்களுக்குப் புரியுது. ஒட்டகப் பால் டீ குடிக்கவே நிறைய பேர் எங்க கடைக்கு வர்றாங்க.’

Ambrose Stephen
Ambrose Stephen

`ஒட்டகப் பால் டீ வேணும்' என்று `வெற்றிக்கொடிகட்டு' படத்தில் வடிவேலு பேசிய வசனங்களும், அதுதொடர்பான காமெடிக் காட்சிகளும் வெகு பிரபலம். துபாய் நாட்டில் முக்கியக் கால்நடையான ஒட்டகம், இந்தியாவில் ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களில் அதிகளவில் வளர்க்கப்படுவதில்லை. அதற்கு, நம் நாட்டின் மாறுபட்ட நிலவியல் மற்றும் பருவநிலைகளும் முக்கியக் காரணம். எனவே, ஒட்டகப் பால் பொருள்களும் இந்தியாவில் பிரபலமில்லை. 

camel milk tea
camel milk tea

இந்த நிலையில், ஒட்டகப் பாலில் டீ விற்பனை செய்துவருகிறார், உடுமலைப்பேட்டை `ஏ.வி.எம் சிப்ஸ் & கஃபே' உரிமையாளரான ஆம்ரோஸ் ஸ்டீபன். தகவல் அறிந்து, புதுமையான இந்த விற்பனை முறை குறித்து அவரிடம் பேசினோம்.

`` `வெற்றிக்கொடிகட்டு' படத்தைப் பார்க்கும்போதெல்லாம், ஒட்டகப் பால்ல டீ விற்பனை செய்யணும்னு எண்ணம் வரும். ஆனா, அதைச் சாத்தியப்படுத்த முடியலை. சில மாதங்களுக்கு முன்பு வடிவேலுவின் `ப்ரே ஃபார் நேசமணி' வாசகம் சமூக வலைதளங்களில் டிரண்ட் ஆனப்போ, எல்லா இடங்கள்லயும் வடிவேலு பத்தின பேச்சுதான். அப்போ ஒட்டகப் பால்ல டீ விற்கிற யோசனை அதிகமாச்சு.

camel milk tea
camel milk tea

அந்தத் தருணத்துல தனிப்பட்ட காரணங்களுக்காகத் துபாய் போயிருந்தேன். அங்க ஒட்டகப் பால் டீ விற்பனை குறித்த தகவல்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அங்கிருந்து ஒட்டகப் பாலை வாங்கிப் பதப்படுத்திக்கொண்டுவந்தேன். அந்தப் பாலைக் கொண்டு சோதனை அடிப்படையில டீ தயாரிச்சோம். அதன் சுவை குடும்பத்தில் பலருக்கும் பிடிச்சிருந்துச்சு. 

``புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் கட்டாயம் ஏற்பட்டிருக்கு. அந்த வகையிலதான், நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் கிடைச்ச ஐடியாவில், என் கடையில ஒட்டகப் பால் டீ விற்பனை செய்றேன்."
ஆம்ரோஸ் ஸ்டீபன்

அதைத் தொடர்ந்து எங்க கடையில ரெகுலரா ஒட்டகப் பால் டீயை விற்பனை செய்ய முடிவெடுத்தேன். பக்ரீத் போன்ற முஸ்லிம்களின் பண்டிகையின்போது குர்பானி தயாரிக்கவே, ஒரு சில ஒட்டகங்களை நம் ஊருக்குக் கொண்டுவருவாங்க. அதனால, பசுமாட்டுப் பால்போல நேரடியா ஒட்டகப் பால்ல டீ போடுறது நம்மூரில் நடக்காத காரியம். எனவே, ஒட்டகப் பால் பவுடரை இறக்குமதி செய்து, கடந்த ஜூலை மாதத்துல இருந்து டீ விற்பனை செய்துட்டிருக்கேன்" என்பவர் ஒட்டகப் பால் டீ தயாரிப்பு குறித்துப் பேசினார்.

``பசுமாட்டுப் பால்போல, சூடுபடுத்தி டீ போட்டால் ஒட்டகப் பால்ல இருக்கிற சத்துகள் குறைஞ்சுடும். எனவே, ஒட்டகப் பால் பவுடரில் தண்ணீர் கலந்து கரும்புச் சர்க்கரை சேர்த்து ஜூஸ் மாதிரி செய்து, அதை ஃப்ரிட்ஜில் வைத்திடுவோம். `கோல்டு காபி' (Cold Coffee) போல, ஒட்டகப் பால் டீயையும் குளிர்ந்த நிலையில்தான் விற்பனை செய்வோம். ஒட்டகப் பால் பொருள்களின் விலை அதிகம். எனவே, ஒரு டீ 70 ரூபாய்னு விற்பனை செய்றேன். விலை அதிகம்னாலும், அதற்கான காரணமும் மக்களுக்குப் புரியுது. எனவே, ஒட்டகப் பால் டீ குடிக்கவே நிறைய பேர் எங்க கடைக்கு வர்றாங்க. 

Ambrose Stephen
Ambrose Stephen

எல்லாத் துறைகளிலும் புதுமையான விஷயங்களை மக்கள் விரும்புறாங்க. அதுக்கேத்தமாதிரி புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் கட்டாயமும் ஏற்பட்டிருக்கு. அந்த வகையிலதான், நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் கிடைச்ச ஐடியாவில், என் கடையில ஒட்டகப் பால் டீ விற்பனை செய்றேன்" என்கிறார் ஆம்ரோஸ் ஸ்டீபன்.

நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே இரண்டு இளைஞர்கள் ``அண்ணே ஒட்டகப்பால் டீ இரண்டு'' எனக் குறும்புச் சிரிப்புடன் கேட்க, வேலையில் பிஸியானார் ஸ்டீபன்!

`அவர்கள் கவலைப்படுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கும்!’ - டீக்கடை உரிமையாளரின் அசத்தல் முயற்சி