Published:Updated:

மாஸ்க்கா.. அப்படின்னா..? - மனதை கனமாக்கிய நிகழ்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

வண்டியை மரத்தடியில் நிறுத்திவிட்டு மெக்கானிக்கின் வருகைக்காக காத்திருந்தேன். அப்போது என் அருகே வயது முதிர்ந்த ஒரு பெண் அமர்த்திருந்தார்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று பணிக்குச் சென்று திரும்பும் வழியில், வண்டி பழுதாகி நின்று விட்டது.

ஊரடங்கால் டூவீலர் பழுது பார்க்கும் கடைகள் எதுவும் இல்லை. ஆனால் தெரிந்த மெக்கானிக் ஒருவரின் தொலைபேசி எண் கையில் இருந்தது.

இடத்தின் லொகேஷனை அவருக்கு ஷேர் செய்தேன். ஐந்தே நிமிடத்தில் வருவதாகச் சொன்னார்.

வண்டியை மரத்தடியில் நிறுத்திவிட்டு மெக்கானிக்கின் வருகைக்காக காத்திருந்தேன்.

அப்போது என் அருகே வயது முதிர்ந்த ஒரு பெண் அமர்த்திருந்தார். எழுபது வயது இருக்கலாம்.

ஒடுங்கிய தேகம், சுருங்கிய தோள், அழுக்கேறிய தலைமுடி, கிழிந்த புடவை.

இதற்கு முன்பும் அவரை அதே இடத்தில் பார்த்ததாக நினைவு.

'மாஸ்க் போடலையா?' என்பதை செய்கையின் மூலம் கேட்டேன்.

மைய்யமாக சிரித்து வைத்தார்.

நான் கேட்டது புரியவில்லை என்பது தெரிந்தது.

அருகில் சென்று, 'மூக்குக்கு மாஸ்க் போடலையா?' என்றேன்.

மீண்டும் சிரித்தபடி தலையை முன்னும் பின்னும் ஆட்டினார்.

'உங்கக் கூட யாரும் இல்லையா?' போன்ற கேள்விகளை தவிர்த்து விட்டு,

'ஊரு பூரா கொரோனா பரவி கெடக்கு. பாத்து இருக்கனும். சரியா?' என்றேன்.

இப்போது அவரின் கண்கள் சுருங்கின.

உற்றுப் பார்த்தார்.

Representational Image
Representational Image
Gunjan Bhattacharjee from Pexels

அதற்குள் மெக்கானிக் வந்துவிட்டார்.

முகத்தில் இரண்டு மாஸ்க்குகள், அதற்கு மேல் ஒரு ஃபேஸ் ஷீல்டு, கையில் க்ளவுஸ் என மிகவும் பாதுகாப்பாக வந்திருந்தார்.

வண்டியின் பின் டயர் பஞ்சர் எனத் தெரிந்தது.

'தம்பி. ஒரு அஞ்சு நிமிஷம். ரெடி பண்ணிடலாம்' என சொல்லிவிட்டு வேலையில் மும்முரமானார் மெக்கானிக்.

நான் திரும்பி அந்த பாட்டியைப் பார்த்த போது, அவரும் என்னையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

மீண்டும் அவர் அருகே சென்றேன்.

பையில் இருந்த ஒரு மாஸ்க்கை எடுத்து அவரிடம் நீட்டினேன். அதைக் கொண்டு என்ன செய்வதென அவருக்குத் தெரியவில்லை. குழம்பியபடி மாஸ்க்கையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு ஆட்டோ ஓட்டுநர், சாப்பாடு பை ஒன்றை அந்த பாட்டியிடம் நீட்டினார்.

கையில் வைத்திருந்த மாஸ்க்கை தூக்கி தூர வீசி விட்டு, ஆர்வமுடன் அதை வாங்கி சாப்பிட ஆரம்பித்தார் அந்த பாட்டி.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, பசியிடம் தோற்றுப் போனதை அங்கு கண்டேன்.

இன்னமும் கொரோனாவே என்னவெனத் தெரியாத பலர் இங்குள்ளனர். இந்த முதியவர் போல.

அவர்களது உலகம் தனி.

அவர்களுக்கு மாஸ்க் தெரியாது. சானிடைசர் தெரியாது. ரெம்டிசிவிர் தெரியாது. கோவிஷீல்டு தெரியாது.

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அந்த 'மூன்று இன்ச் வயிறு' மட்டுமே.

ஏதோ ஒன்று யோசித்தபடி அந்த முதியவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

பசி நீங்கிய ஒரு திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது.

'தம்பி. வண்டி ரெடி ஆகிடுச்சு' என்றார் மெக்கானிக்.

வண்டியின் பழுது சரியாகிவிட்டது. ஆனால் என்னுள் ஏதோ ஒரு கனம் கூடியிருப்பதை உணர முடிந்தது.

-சரத், கடலூர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு