Published:Updated:

``ஒன்றியம்னு சொன்னா தப்பா..?’ - விளக்கும் வாசகர் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

இன்று வரை நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் இந்திய அரசு சார்ந்த வழக்குகளில் இந்திய ஒன்றியம் (யூனியன் ஆப் இந்தியா) என்றுதான் குறிப்பிடப்படுகிறது...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கடந்த மே மாதம், மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக, ஆட்சியமைத்த பிறகு "ஒன்றிய அரசு" என்ற சொல் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அரசின் தகவல் பரிமாற்றங்களில் மட்டுமல்லாது வெகுஜன மக்களிடையேயும் விரைவாக புழக்கத்தில் வந்து கொண்டிருக்கிறது.

உலகமெங்கும் முடியாட்சி முறியடிக்கப் பட்டு சனநாயகம் மலர்ந்து தேர்தல் பாதையில் பயணிக்கும் பல நாடுகளிலும் இரண்டு வெவ்வேறு விதமான ஆட்சி முறைகள் பின்பற்றப்படுகின்றன.

முதலாவது கூட்டாட்சி முறை, ஆங்கிலத்தில் பெடரல் சிஸ்டம், இதில் ஒன்றிய மற்றும் மாநில அல்லது மாகாண அரசுகளிடையே அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கும். அமெரிக்கா, கனடா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இதற்கு உதாரணங்கள். மேலும், இந்தியாவில் அதிகாரங்கள் பகிரப்பட்டு கூட்டாட்சி அமைப்பில் செயல்பட்டாலும் கூட இது ஒரு முழுமையான கூட்டாட்சி அமைப்பாக இல்லை, சில சூழ்நிலைகளில் ஒன்றிய அரசு மாநில அரசுகளை கட்டுப்படுத்துபவைகளாகவே இருக்கிறது. அதனால் இந்திய கூட்டாட்சி முறை என்பது ஒற்றை ஆட்சி முறைக்கும் மற்றும் முழுமையான ஒரு கூட்டாட்சி முறைக்கும் இடைநிலையில் உள்ள ஒரு அமைப்பாகும், இது, குவாசி பெடரல் சிஸ்டம் (Quasi-fedral system) என்று அழைக்கப்படுகிறது.

Representational Image
Representational Image
Pexels

இரண்டாவது, ஒற்றை ஆட்சி, இது கூட்டாட்சி முறைக்கு நேர் எதிரான ஒன்று, இங்கு அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே குவிக்கப்பட்டிருக்கும். மேலும், மாநிலங்களுக்கோ அல்லது மத்திய அரசின் கீழ் செயல்படும் மற்ற அமைப்புகளுக்கோ வெகு சில அதிகாரங்களே இருக்கும். இதற்கு உதாரணம் நமக்கு அருகில் இருக்கும் இலங்கை.

இந்த நாடு வடக்கு, கிழக்கு, மேற்கு மாகாணங்கள் என்று பல மாகாணமாக பிரிக்கப்பட்டிருந்தாலும், இதில் பெருவாரியான அதிகாரங்கள் இலங்கை அரசிடமே இருக்கிறது. இந்தியா போன்ற மிக பரந்த, பல மொழி வழி தேசிய இனங்கள் வாழக்கூடிய நாடுகளில் கூட்டாட்சி அமைப்பே (பெடரல் சிஸ்டம்) சாத்தியப்படுகிறது. இது போன்ற கூட்டாட்சி அமைப்பில் அனைத்து மாநிலங்களையும் அல்லது மாகாணங்களையும் ஒன்றிணைத்து நாட்டை மேம்படுத்துவது ஒன்றிய அரசு.

ஒன்றிய அரசு , இந்த வார்த்தை ஒன்றும் புதிதல்ல, இந்தியா விடுதலை அடைந்த பிறகு வெகுவாக பயன்படுத்தப்படுகின்ற ஒரு வார்த்தைதான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எடுத்து கொண்டால் அதன் பிரிவு ஒன்று, ஒன்றியமும் அதன் ஆட்சி பரப்பும் என்ற தலைப்பில் " இந்தியா, அதாவது பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்" என்ற வரிகளுடனேயே தொடங்குகிறது.

இந்த சட்டப்பிரிவில் மிக தெளிவாக இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்(யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, இந்திய அரசியலமைப்பு சட்டம், ஏழாவது அட்டவணையில், சட்ட பிரிவு 246 இல், குறிப்பிட்ட துறைகளின் மீது இந்திய மற்றும் மாநில அரசுகளுக்கான சட்டமியற்றுவதற்கான அதிகார பகிர்வு தொடர்பாக வரையறை விளக்கப்பட்டுள்ளது, அதில், இந்திய அரசு சட்டமியற்றும் துறைகளை “ஒன்றிய பட்டியல்” என்றும், மாநிலங்கள் சட்டமியற்றும் துறைகளை “மாநில பட்டியல்” என்றும், இரண்டிற்கும் பொதுவானவைகளை “பொது பட்டியல்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

மேலும், கடந்த மே 31 அன்று, உச்ச நீதிமன்றம் கோவிட் தடுப்பூசி தொடர்பாக கேள்வி எழுப்புகையில், நீதிபதி தனஞ்செய யஷ்வந்த் சந்திர சூட் அவர்கள் மேலே சொன்ன இந்திய அரசியலமைப்பு சட்டம் , பிரிவு ஒன்றை மேற்கோள் காட்டி “ஒன்றிய அரசு” என்று குறிப்பிட்டிருந்தார்.

இன்று வரை நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் இந்திய அரசு சார்ந்த வழக்குகளில் இந்திய ஒன்றியம் (யூனியன் ஆப் இந்தியா) என்றுதான் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக தமிழ்நாடு அரசிற்கும் இந்திய அரசிற்கும் இடையேயான வழக்கென்றால் தமிழ்நாடு அரசு வெர்சஸ் இந்திய ஒன்றியம் (யூனியன் ஆப் இந்தியா) என்றுதான் குறிப்பிடப்படுகிறது. இதுதவிர, இந்திய அரசின் துறை சார்ந்த கூட்டங்களில் அமைச்சர்களுக்கு முன் வைக்கும் பெயர் பலகைகளில் கூட ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய உள்துறை அமைச்சர் என்றுதான் வைக்கப்படுகிறது.

ஒன்றிய அரசு என்ற வார்த்தை இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, உச்ச நீதிமன்ற வழக்குகளில் குறிப்பிடப்படுகிறது , நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்படி எல்லா அரசு அலுவல்களிலும் ,அரசு ஆணைகளிலும், நீதிமன்றங்களிலும் ஒன்றிய அரசு என்ற வார்த்தை குறிப்பிடப்படும் போது , அந்த வார்த்தையை நாம் பயன்படுத்துவதால் என்ன தவறு வந்து விட போகிறது..?

-க.சேதுராமன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு