Published:Updated:

அன்று ஈழப்போராளிகளின் பயிற்சி மையம்... இன்று பலநூறு பேரை வாழவைக்கும் இல்லம்!

வள்ளலார் ஜோதி
வள்ளலார் ஜோதி ( உ.பாண்டி )

வள்ளலார் ஞான சபையினர், இங்கு ஆதரவற்றோர் மையத்தைத் தொடங்கினர். பல ஆண்டுகளாக இயங்கிவந்த இந்த ஆதரவற்றோர் மையத்தில், சிறுவர் முதல் வயோதிகர் வரை பலரும் தங்கியிருந்தனர்.

வைகையின் முகத்துவாரமாக விளங்கிவரும் ஆற்றாங்கரை கிராமத்தில், குண்டுச்சத்தங்கள் கேட்டு வந்த பழைமையான சத்திரம், இன்று அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. அதற்குக் காரணமாக இருப்பது, இங்கு இயங்கிவரும் வள்ளலார் நித்திய ஞான சபை. பழைமையின் நினைவாக உள்ள இந்த சத்திரத்தைப் புனரமைத்துப் பாதுகாக்க வேண்டும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வள்ளலார் ஞானசபை இயங்கும் சத்திரம்.
வள்ளலார் ஞானசபை இயங்கும் சத்திரம்.
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தமிழகத்தின் மிக நீண்ட கடற்பரப்பைக் கொண்ட மாவட்டமாக விளங்குகிறது. இங்கு, வைகை மற்றும் அதன் கிளையாறுகள் பலவாகப் பிரிந்து வங்கக்கடலில் கலக்கின்றன. இவை கடலில் கலக்கும் பகுதிகளில் உள்ள உப்பங்கழிகள் மூலம் அதிக அளவில் இயற்கைத் துறைமுகங்கள் உருவாகியுள்ளன. இதனால், இப்பகுதிகள் பழங்காலம் முதல் துறைமுகப் பட்டினங்களாகவும், வணிக நகரங்களாகவும் விளங்கிவந்துள்ளன.

சுந்தரபாண்டியன்பட்டினம், தீர்த்தாண்டதானம், பாசிப்பட்டினம், முத்துராமலிங்கபட்டினம், தொண்டி, நானாதேசிப்பட்டினம், புதுப்பட்டினம், தேவிபட்டினம், முடிவீரன்பட்டினம், அழகன்குளம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், பெரியபட்டினம், கீழக்கரை ஆகிய பல துறைமுகங்கள் புகழ்பெற்று விளங்கி இருந்துள்ளதைத் தொல்லியல் சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. இங்கு, சங்ககாலம் முதல் இடைக்காலம் வரை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வணிகம் மிகச் சிறந்த முறையில் நடந்துவந்துள்ளது. இதில், அழகன்குளத்தின் துறைமுகமாக விளங்கிய பகுதி, இன்று ஆற்றாங்கரை என்ற ஒரு கிராமமாகப் பிரிந்துள்ளது.

வள்ளலார் ஞானசபை சத்திரம்
வள்ளலார் ஞானசபை சத்திரம்
உ.பாண்டி

இந்த ஆற்றாங்கரை கடற்கரை அருகே, சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சத்திரம் ஒன்று உள்ளது. சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சத்திரத்தை, வாகன போக்குவரத்து இல்லாத காலங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கால்நடையாக வரும் யாத்ரீகர்களின் ஓய்விடமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வாறு இங்கு தங்கிச் செல்லும் யாத்திரைவாசிகளுக்கு இலவசமாக உணவும் வழங்கப்பட்டுவந்துள்ளது.

பறந்து விரிந்திருக்கும் கோட்டைச் சுவர். அதைச் சுற்றிலும் கல்மண்டபம், நடுநாயகமாக அரண்மனை மைய மண்டபம் என அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருந்தது. இந்த சத்திரத்தின் நுழைவு வாயிலில், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் சின்னமான கஜலட்சுமி உருவம் கற்சிலையாகச் செதுக்கப்பட்டிருந்தது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் வாகன போக்குவரத்து பெருகிய நிலையில், இத்தகைய சமஸ்தான சத்திரத்தின் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முற்றிலும் நின்றுபோனது. இதனால் புதர் மண்டிப்போனது இந்த ஆற்றாங்கரை சத்திரம்.

வள்ளலார் ஜோதி உள்ள மாடம்
வள்ளலார் ஜோதி உள்ள மாடம்
உ.பாண்டி
Vikatan

இலங்கையில் தனி நாடு கேட்டுப் போராடிவந்த போராளி குழுக்கள் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் முகாம்கள் அமைத்துத் தங்கியிருந்தனர். அவர்களில் ஒரு குழுவான ஈ.பி.ஆர்.எல்.எஃப் எனப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தங்களின் முகாமாக ஆற்றாங்கரை சத்திரத்தைப் பயன்படுத்திவந்தது. போராளி குழு தங்கியிருந்த நாள்களில் அவர்கள் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்ததால், இங்கு அவ்வப்போது குண்டுச்சத்தங்களும் கேட்டுவந்தன. இதனால், உள்ளூர் மக்கள் அந்தப் பகுதிக்குள் செல்வதைத் தவிர்த்துவந்தனர்.

போராளிகளின் ஆளுகையில் இருந்துவந்த இந்த சத்திரம், அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றபின் கவனிப்பாரற்றுக் கிடந்தது. இந்நிலையில், ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான ஜோதிமுருகன் தலைமையிலான வள்ளலார் நித்திய ஞான சபையினர், இங்கு ஆதரவற்றோர் மையத்தைத் தொடங்கினர். பல ஆண்டுகளாக இயங்கிவந்த இந்த ஆதரவற்றோர் மையத்தில், சிறுவர் முதல் வயோதிகர் வரை பலரும் தங்கியிருந்தனர். ஏராளமான சிறுவர்கள் கல்விபயின்று வந்தனர். காலப்போக்கில், இங்கு தங்கியிருந்த சிறுவர்கள் ராமநாதபுரத்தில் இயங்கிவரும் வள்ளலார் சபைக்குச் சென்று, அங்கிருந்து கல்வி கற்று வருகின்றனர். ஆனாலும், வள்ளலாரின் நினைவாக ஏற்றப்பட்ட ஜோதி, இங்கு இன்றும் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறது.

வள்ளலார் ஜோதி
வள்ளலார் ஜோதி
உ.பாண்டி

தற்போது, 90 வயது முதியவரான தங்கவேலு, இங்கு தங்கியிருந்து சத்திரத்தைப் பராமரித்து வருவதுடன், இந்த சத்திர மாடங்களில் பறந்துதிரியும் 20-க்கும் மேற்பட்ட மயில்களுக்கும் உணவளித்துவருகிறார். இதற்கென வள்ளலார் ஞான சபையினர் மாதம்தோறும் அரிசி மூட்டைகளை அளித்துவருகின்றனர். இங்கு செயல்படும் இந்த அறநிலையத்தைக் காண வெளியூரைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது வந்து செல்கின்றனர்.

``பாரதிராஜா, சீமானால் எங்கள் சினிமாவை உருவாக்க முடியாது!'' - ஈழ இயக்குநர் ரஞ்சித்
வள்ளலார் ஞானசபையின் பணியாளர் தங்கவேலு
வள்ளலார் ஞானசபையின் பணியாளர் தங்கவேலு
உ.பாண்டி

குண்டுச்சத்தங்களுக்கு மத்தியில் இருந்துவந்த நிலை மாறி, குன்றிலிட்ட விளக்காக வள்ளலார் ஜோதி ஒளிபரப்பிவரும் இந்தப் பழைமை வாய்ந்த சத்திரத்தைப் புனரமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு