Published:Updated:

`ஓ.டி.டி தளங்களில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?' -வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Unsplash )

ஒரு சிலநேரங்களில் எல்லை மீறிய கருத்துச் சுதந்திரம் அந்தத் திரைப்படங்கள் அல்லது வெப்சீரிஸ்களைத் தடை செய்யக் கூடிய நிலையைக்கூட ஏற்படுத்திவிடுகிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இணையதள சினிமா உலகில் இன்று ஓ.டி.டி-கள் கோலோச்சுகின்றன. விரும்பும் நேரத்தில் விரும்பும் படங்களைப் பார்த்து ரசிக்க வாய்ப்பு, இடைவேளைகளற்ற தரமான ஸ்ட்ரீமிங், நினைத்தபோது நினைத்த இடத்தில் நிறுத்தி முன்-பின் சென்று பார்க்க வாய்ப்பு, புதுப் படங்கள் நேரடியாக ரிலீஸ், புதுமையான வெப்சீரிஸ்கள், விளம்பரங்கள் எதுவும் இல்லாதது போன்ற மக்களைக் கவரும் பல ஏராளமான அம்சங்கள் ஓ.டி.டி-களில் கொட்டிக்கிடக்கின்றன.

இணையதள சினிமா உலகில் எதிர்காலத்தில் ஓ.டி.டி-கள் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. எனினும் ரசிகர்களைத் தொடர்ந்து அதிகரிக்கவும் அவர்களைத் தக்கவைக்கவும் மேலும் சில மாற்றங்களும் அடிப்படை வசதிகளும் ஓ.டி.டி தளங்களில் தேவைப்படுகின்றன.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்

ஓ.டி.டி தளங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்:

வன்முறைக் காட்சிகள்:

ஓ.டி.டி தளங்களுக்கு எந்தவிதமான தணிக்கையும் இல்லை. எனவே இங்கு ஒளிபரப்பாகும் சினிமாக்களிலும் வெப் சீரிஸ்களிலும் தேவையற்ற வன்முறைக் காட்சிகள் அதிகம் இடம்பெறுகின்றன. தொடர்ந்து இத்தகைய காட்சிகளைப் பார்க்கும்போது மக்களின் சமச்சீரான மனநிலை குலைய வாய்ப்புண்டு. எனவே கதைகளுக்குத் தேவையற்ற, திணிக்கப்படும் வன்முறையைத் தூண்டும் காட்சிகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க ஓ.டி.டி தளங்கள் முன்வர வேண்டும்.

தேவையற்ற வன்முறைக்காட்சிகள் குறைவது சமுதாயத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஒன்றாகும்.

கெட்டவார்த்தைகள் :

ஓ.டி.டி-களில் நேரடிப் படமோ, வெப் சீரிஸோ பார்க்கும்போது அவ்வப்போது தொடர்ந்து கெட்ட வார்த்தைகள் காதில் விழுந்த வண்ணம் உள்ளன. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கெட்ட வார்த்தைகள் வலிந்து திணிக்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுகிறது.

இதனைப் பார்க்கும் ரசிகர்களின் மனநிலையில் எதிர்மறையான மாற்றம் உண்டாக வாய்ப்புண்டு. எனவே ஓ.டி.டி தளங்கள் முழுக்க முழுக்கக் கெட்ட வார்த்தைகள் அற்று இருந்தால் இவற்றின் தரம் இன்னும் சிறப்பாக மாறும்.

Representational Image
Representational Image
Unsplash

மொழிபெயர்ப்பு:

மொழிபெயர்ப்புகளை அப்படியே காட்சிக்குக் காட்சி, வரிக்கு வரி செய்யாமல், பெயர்க்கப்படும் மொழியின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாசாரச் சூழலுக்கு ஏற்ப ஓ.டி.டி தளங்கள் மொழிபெயர்க்குமாயின் கதை குறித்த ரசிகர்களின் புரிதல் மேம்பட்டதாக மாறும்.

குறும்படங்கள்:

ஓ.டி.டி தளங்களில் உள்ள குறும்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அந்தக்கால நாடகங்களின் தொடர்ச்சியான தற்போதைய வெப் சீரிஸ்கள் கிரிக்கெட்டின் கிளாசிக்கான டெஸ்ட் மேட்ச் போன்றவை ஆகும்.

அவ்வாறே திரைப்படங்கள் ஒன் டே மேட்ச்சுகள் என்றால், குறும்படங்கள் சுவாரஸ்யமூட்டும் 20:20. ஒவ்வொரு வகைக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். எனவே ஓ.டி.டி தளங்களில் 20:20 மேட்சுகள் போன்று சுவாரஸ்யமூட்டும் குறும்படங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

IMDb ரேட்டிங்:

ஒரு படத்திற்கான அல்லது வெப் சீரிஸ்கான IMDb ரேட்டிங்கினை ஒரு சில ஓ.டி.டி-களில் மட்டுமே காண முடிகிறது.

ஆனால், பெரும்பாலான ஓ.டி.டி-கள் இந்த ரேட்டிங்கை ரசிகர்களுக்குக் காண்பிப்பதில்லை. படைப்பாளிகள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்டோரிடமிருந்து தொகுக்கப்பட்ட படைப்பு குறித்த கருத்துகளை அடிப்படையாகக்கொண்ட Internet Movie Database என்னும் IMDb ரேட்டிங்ஸ் ரசிகர்கள் படங்களை விரைவாகக் தேர்ந்தெடுத்துப் பார்க்க உதவும் என்பதால், அனைத்து ஓ.டி.டி தளங்களுமே IMDb ரேட்டிங்கை ரசிகர்களுக்குக் காட்ட முன்வர வேண்டும்.

Representational Image
Representational Image

மொழி:

எந்தெந்த மொழிகளில் திரைப்படத்தைப் பார்க்க முடியும் என்பதும், எந்தெந்த மொழிகளில் சப் டைட்டில் கிடைக்கும் என்பதும் படத்தைப் பிளே செய்து பார்த்த பிறகே சில ஓ.டி.டி தளங்களில் காணமுடிகிறது. இதனால் தான் விரும்பும் மொழியில் படம் உள்ளதா இல்லையா எனத் தெரிந்துகொள்ளவே ரசிகர்களுக்குத் தேவையில்லாமல் நிறைய நேரம் வீணாகிறது. எனவே படத்தை பிளே செய்வதற்கு முன்பாகவே என்னென்ன மொழிகளில் படைப்பு கிடைக்கும் என்னும் முன்னறிவிப்பை அனைத்து ஓ.டி.டி தளங்களும் அளிக்க முன்வந்தால் ரசிகர்களுக்குப் படங்களைத் தேர்ந்தெடுக்கும் நேரம் நிச்சயம் மிச்சமாகும்.

மாதாந்தரக் கட்டணங்கள் குறைய வாய்ப்பு... ஓ.டி.டி-யின் எதிர்காலம் எப்படி?

கருத்துச் சுதந்திரம்:

ஒருவருடைய கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவருடைய மூக்கு நுனிவரை என்பதை கவனத்தில் கொண்டு அவதூறான கருத்துகளை முடிந்தவரை ஓ.டி.டி தளங்கள் தவிர்த்து விடவேண்டும்.

ஒரு சில நேரங்களில் எல்லை மீறிய கருத்துச் சுதந்திரம் அந்தத் திரைப்படங்கள் அல்லது வெப்சீரிஸ்களைத் தடை செய்யக் கூடிய நிலையைக் கூட ஏற்படுத்திவிடுகிறது. கருத்துக் கூற அனைவருக்குமே உரிமை உண்டு. அதே சமயம் தன் கருத்தை வலிந்து திணிக்கவோ, தனி மனித அவதூறு செய்யவோ படைப்பாளிக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஒரு கருத்து குறித்த விமர்சனங்களும் திறனாய்வுகளும் நிச்சயமாக வரவேற்கத்தக்கவைதான்.

எனினும் கருத்துச் சுதந்திரம் என்னும் பெயரில் படைப்பாளிகள் தவறானவற்றையும் கண்டதையும் கூற ஓ.டி.டி தளங்கள் அனுமதிக்கக் கூடாது.

Representational Image
Representational Image

ரிவ்யூஸ்:

ரசிகர்களுக்கு ஒரு திரைப்படம் அல்லது வெப் சீரீஸின் ரிவ்யூஸ் தேவை என்றால் அல்லது தான் பார்த்த படைப்புகளுக்கு ரிவ்யூஸ் அளிக்க விரும்பினால் அதனைத் தனியாக இணையதளங்களுக்குச் சென்றே பார்க்கவும் அளிக்கவும் வேண்டியுள்ளது. அதனை ஓ.டி.டி தளங்களிலேயே வரச்செய்தால் ரசிகர்களின் நம்பகத் தன்மையும் ரசிப்புத்தன்மையும் இன்னும் மேம்படும்.

ஷார்ட் நோட்ஸ்:

ஓ.டி.டி தளங்களில் ஒரு திரைப்படத்தின் கதை குறித்த முன்னறிவிப்புகள் ரசிகர்களுக்குக் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அந்தத் திரைப்படத்தின் அல்லது வெப் சீரிஸின் சுவாரஸ்யமான பக்கங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய ஷார்ட் நோட்ஸ்கள் அவ்வப்போது கொடுக்கப்பட்டால் படம் பார்ப்பவர்களின் அனுபவம் இன்னும் சிறப்பானதாக அமையும்.

ஓ.டி.டி தள அடல்ட் கன்டென்ட்ஸ்... டீன்ஏஜ் குழந்தைகளின் பெற்றோர் கவனத்துக்கு!

சுய தணிக்கை:

ஓ.டி.டி தளங்கள் மிகுந்த சுய பொறுப்புணர்வுடன் தாங்கள் ஸ்ட்ரீமிங் செய்யக்கூடிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தமக்குத்தாமே சுய தணிக்கை செய்து வெளியிடுவது சமுதாயத்திற்கு நன்மைபயக்கக் கூடிய ஒன்றாக அமையும். இந்த சுய தணிக்கைகள் படைப்பாளிகளின் படைப்பு சுதந்திரத்தைக் காக்க வேண்டியதாய் இருக்க வேண்டும். அதேவேளையில் சமூகப் பொறுப்புணர்வுடனும் அமைய வேண்டும்.

ஒரு உணவு எவ்வளவுதான் சுவையாகச் சமைக்கப்பட்டாலும், அதனைப் பரிமாறும்விதமே உண்பவருக்கு சுவையை அளிக்கும். அவ்வாறே படைப்புகளைப் பரிமாறும் ஓ.டி.டி தளங்கள். அவை படைப்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று இருந்துவிடாமல், மேற்கண்ட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி இன்னும் சுவையாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என நம்புவோம்!

Representational Image
Representational Image

மாற்றம் என்பது மாறாதது.

டிஜிட்டல் உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல.ஒரு திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பதா, டிவியில் பார்ப்பதா அல்லது ஓ.டி.டி தளங்களில் பார்ப்பதா என்பதை ரசிகர்கள் முடிவு செய்யக்கூடிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

தணிக்கைகள் ஏதுமற்ற ஓ.டி.டி தளங்கள் தங்கள் ரசிகர்களைத் தக்கவைக்க நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். இத்தகைய நேர்மறைச் செயல்கள் ரசிகர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் ரசிப்புத்தன்மையையும் நிச்சயம் கூட்டும்.

கட்டற்ற கருத்துச் சுதந்திரம் தன் ஓ.டி.டி தளங்களின் மிகப்பெரிய பலம். அது பலவீனமாக மாறிவிடாமல், பலமாகவே என்றென்றும் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு