`சாப்பிட்டவங்க வாய் வாழ்த்தாட்டியும் அவங்க வயிறு வாழ்த்தும்ல?!' பெரியம்மாவின் அன்பு #MyVikatan

காய் நறுக்குவது தனிக்கலை என்று கூறி அரிவாள்மனையில் நொடிப்பொழுதில் வேலைகளை முடிப்பார். அனைத்து துண்டுகளும் ஒரே மாதிரி, அளவு எடுத்து நறுக்கியதுபோல இருக்கும்.
காய்கறிக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிர்ஷ்டவசமாக முருங்கைக்கீரை இருந்தது. இரண்டு பாக்கெட்டுகள் எடுத்துக்கொண்டேன். வீட்டுக்கு வந்து மதிய உணவுக்குக் கீரை சமைக்கத் தொடங்கினேன். பிளாஸ்டிக் கவரில் வைத்து கட்டப்பட்டிருந்ததால் பாக்கெட்டுகளை பிரித்துக் கொட்டியவுடன் இலைகள் சுலபமாக உதிர்ந்தன. வேலை மிச்சம் என்றாலும் கவரில் பொதிந்த கீரைகளை நான் விரும்புவதில்லை.
கீரை வாங்கும்போதெல்லாம் பெரியம்மாவை நினைத்துக்கொள்வேன். எண்ண அலைகள் இளம்பருவத்துக்கு அழைத்துச் சென்றன. பள்ளிப் பருவத்தில் அம்மா வெளியூர் செல்லும்போது என்னை பெரியம்மா வீட்டில்தான் விட்டுச் செல்வார்கள். பெரியம்மா, பெரியப்பா, அண்ணன் ஆகிய மூவரோடு நானும் பல பொழுதுகளைக் கழித்திருக்கிறேன்.

அன்றலர்ந்த மலர் போன்ற சிரித்த முகத்துடனும் உற்சாகத்துடனும் பெரியம்மா தோற்றமளிப்பார். வீட்டில் அதிகாலையே பக்திப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்கி பின்பு நாள் முழுவதும் பழைய பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். பெரியப்பா பழைய பாடல்களின் விளக்கங்களையும் வெளியான ஆண்டு, இசையமைப்பாளர், பாடலாசிரியர் என்று அனைத்து விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார். இருவரும் இசைப் பிரியர்கள். புத்தகம் படிப்பதில் இருவருக்கும் தனி ஆர்வம் உண்டு.
சிறுவயது என்பதால் அண்ணனும் நானும் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வோம். நான் அனைவருக்கும் தெரியுமாறு சண்டையிடுவேன். அவன் அப்படியே நேர்மாறாக இருப்பான். எதையும் ஆராய்ச்சி செய்து படித்துத் தெரிந்துகொள்வான். எனது அடிப்படைக் கல்வியிலிருந்து காலேஜ் புராஜெக்ட்வரை அவனிடமே தொல்லை செய்து கற்றுக்கொண்டேன். டிவி, கம்ப்யூட்டர், ரேடியோ, புரொஜெக்டர் என்று அனைத்தையும் பிரித்து மேய்ந்துவிடுவான். அவன் ஆராய்ச்சியில் ஈடுபடும்போது அருகே சென்றால், `எதையும் தொடாதே ஷாக் அடிக்கும்' என்று என்னை பயமுறுத்தி ஏமாற்றுவான். வீடு முழுவதும் லௌடு ஸ்பீக்கர், வயர் என்று எதையாவது வெட்டுவதும் ஒட்டுவதுமாக இருப்பான். 'தம்பி, ஆணி அடிக்காத, டேபிளை நகட்டாத, செவத்துல ஒட்டாத' என்று பெரியம்மா செல்லமாகக் கோபித்துக்கொள்வார்.

அடிக்கடி சண்டை போட்டாலும் உணவு விஷயத்தில் மட்டும் நானும் அண்ணனும் ஒரே கட்சி. கீரைகளையும் காய்கறிகளையும் ஒதுக்கிவிட்டு நொறுக்குத்தீனிகளை உண்போம். பெரியம்மாவின் கட்டாயத்தின் பேரில்தான் சில காய்களை உணவில் சேர்த்துக்கொள்வோம்.
பெரியம்மா சமையலில் கைதேர்ந்தவர். அவர் சமைக்கும் உணவுகளில் சுவை மட்டுமல்லாமல் சத்தும் நிறைந்து இருக்கும். விசேஷ நாள்களில் சாம்பார், அவியல், பாயசம், வடை என்று பெரிய விருந்தே தயார் செய்வார். அவியல் என்றால் பத்து காய்கறிகளாவது இடம்பெற வேண்டும் என்று, என்னை அழைத்துக் கொண்டு மார்க்கெட் செல்வார். காய்கறிகளைப் பார்த்து பார்த்து வாங்குவார். பெரிதாக பேரம் பேசமாட்டார்.
பைகளைத் தூக்கி வெயிலில் நடந்து வீடு திரும்பும்போது அவர் கைகள் சிவந்திருக்கும். காய் நறுக்குவது தனிக்கலை என்று கூறி அரிவாள்மனையில் நொடிப்பொழுதில் வேலைகளை முடிப்பார். அனைத்து துண்டுகளும் ஒரே மாதிரி, அளவு எடுத்து நறுக்கியதுபோல இருக்கும். அவர் சமைக்கத் தொடங்கும்போதே நாவில் நீர் சுரக்கும். அவ்வளவு ருசியாக சமைப்பார். உளுந்த வடை, சொதி, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல்... இவையெல்லாம் பெரியம்மாவின் கைப்பக்குவத்தில் எனக்கு மிகவும் பிடித்தவை.
கீரை, வாழைப்பூ, வாழைத்தண்டு என்று சுத்தம் செய்ய கடினமாக இருக்கும் காய்களைத் தேடிச்சென்று வாங்கி சமைப்பார். எங்களுக்கும் பயிற்றுவிப்பார். வெங்காயம், பூண்டு உரிப்பதுகூட அந்த வயதில் எனக்குப் பெரிய வேலையாகத் தெரியும். பெரியம்மாவின் புண்ணியத்தில் ஒன்றிரண்டு கற்றுக்கொண்டேன். கூடவே பொறுமையையும் கற்றுக்கொண்டேன்.

காலையில் கறிவேப்பிலை ஜூஸ், பழங்கள், முளைகட்டிய பயறு வகைகள், ஆவியில் வேகவைத்த இட்லி என்று சத்தான உணவு தருவார். மதிய உணவில் குறைந்தது இரு காய்கறிகளாவது இடம்பெறும். கீரைகளை எங்கள் தட்டில் நிறையவே வைப்பார். நான் அவற்றை சிறுஉருண்டைகளாகப் பிடித்து மாத்திரைபோல தண்ணீர் அருந்தி விழுங்குவேன். அப்போது அதன் அருமை புரியவில்லை.
மாலையில் பழங்கள் தருவார். இரவு உணவை அவர் நிறுத்தி பல வருடங்கள் ஆயிற்று. 'காய்கறிகளை ஒதுக்காதீர்கள். இப்போது சாப்பிட்டால்தான் சத்து உடம்பில் சேரும்' என்பார். அவர் உபயோகிக்கும் அத்தனை வார்த்தைகளும் அவ்வளவு அழகு. 'கண் பார்க்க கை செய்யணும். எதையும் கலைநயத்தோடு செய்யணும்' என்று அடிக்கடி கூறுவார்.

உறவினர்கள் வரும்போது சளைக்காமல் விதவிதமான பதார்த்தங்களை விரைவாகத் தயார் செய்து அன்போடு பரிமாறுவார். வீட்டுக்கு வரும் பூக்காரம்மா, தள்ளுவண்டியில் காய்கறி, கீரைகள் விற்கும் முதியவர், தேங்காய் கொண்டுவரும் பாட்டி என்று அனைவருக்கும் தண்ணீர், ஜூஸ் மற்றும் உணவுகளை அளிப்பார். 'வெயில்ல நமக்காக காய்கறிகளை வீட்டுக்கே கொண்டு வர்றாங்க... ஏதோ நம்மளால முடிஞ்ச உதவி...' என்று கூறுவார்.
விருந்தோம்பல் பண்பை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். 'வயிறு நிறைய சாப்பிடுங்க' என்று மனநிறைவோடு பரிமாறுவார். 'சாப்பிட்டவங்க வாய் வாழ்த்தாட்டியும் அவங்க வயிறு வாழ்த்தும்...' என்று அன்று அவர் கூறியது இன்றுவரை என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது.
- தாமரை
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.