Published:Updated:

பம்புசெட்டுக் குளியல்; மரத்தடி சோறு! - கிராமத்து இளைஞரின் தற்சார்பு வாழ்வியல் நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Sathishkumar.V )

`இதுபோன்ற கைவினைப் பயிற்சியை வியாபாரரீதியாக உபயோகப்படுத்தாவிட்டாலும் கிராமத்தில் அனைவருக்குமே தெரிந்திருக்கும்...’

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கடலைப் பயிர் அறுவடை சமயம், கடலை பயிரிட்ட காட்டுக்குச் சென்று புதிதாகப் பிடுங்கப்பட்ட கடலைச் செடியின் அடிப்புறம் துவரைச் செடியின் காய்ந்த குச்சிகளை அடுக்கி நெருப்புப் பற்ற வைத்து, அந்தக் கடலைகளை சுட்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா? பெரிய துவரைச் செடியின் அடியில், அதன் நிழலில் அமர்ந்து மதிய உணவாவாக மோரில் கரைத்த கம்மங்கூழை ஊறுகாயுடன் சாப்பிட்டு இருக்கீறிர்களா? நான் சாப்பிட்டிருக்கிறேன். இது போன்ற கிடைத்தற்கரிய பல அனுபவங்கள் கிராமத்து வாழ்வில் மட்டுமே சாத்தியம்.

எங்கள் தோட்டம்
எங்கள் தோட்டம்

என்னுடைய 23 வயது வரை நான் நகர வாழ்க்கைக்கு அறிமுகமாகவில்லை. காரணம், நான் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடிக்கும் வரை என்னுடைய கிராமத்திலிருந்து தினசரி நகரத்திற்கு (Days Scholar என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் ``நாள் அறிஞர்" என்று google சொல்கிறது) சென்று படித்துக் கொண்டிருந்தேன். எனது பள்ளிக் காலங்களில் ஐந்தாம் வகுப்பு வரை எங்கள் கிராமத்திலும், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிறுகாம்பூர் என்ற ஊரிலும், பின்பு மேல்நிலைக்கல்வி மண்ணச்சநல்லூர் என்ற சிறு நகரத்திலும் படித்தேன்.

கிராம வாழ்க்கை மிகவும் அழகானது. எங்கள் வீடு மெத்தை வீடு (கிராமத்தில் மாடி வீட்டை மெத்த வீடு என்றே சொல்வார்கள்). 1972 ஆம் வருடம் கட்டப்பட்ட வீடு. அன்றைய காலகட்டத்தில் இன்று போல் கான்கிரீட் என்ற தொழில்நுட்பம் கிடையாது. இருபுற சுவர்களையும் இணைக்கும் வகையில் குறுக்காக மரத்தூண்களை குறுகிய இடைவெளியில் உறுதிக்காகப் பதித்து அதன்மேல், காரை எனப்படும் சுண்ணாம்புக் கலவையை வைத்து மேற்புறக் கூரையை அமைத்திருப்பார்கள்.

எங்கள் வீடு..

ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்குப் பிறகும் இன்றும் உறுதியாக இருக்கிறது. அதன் நடுவில் ஒரு துளை இருக்கும். அது மேல்தளத்தில் ஏதேனும் தானியங்கள் (பெரும்பாலும் நெல், கம்பு, சோளம் மற்றும் கடலை) வெயிலில் உலர வைக்கப்பட்டிருக்கும்போது மழை வந்தால், விரைவாக அந்த துளை வழியே வீட்டிற்குள் தானியங்களை சேகரிக்க எதுவாக அமைக்கப்பட்டது. கோடைகாலத்தில் கூட அந்த அறையில் வெப்பவீச்சு குறைவாக இருக்கும்.

எங்கள் வீடு..
எங்கள் வீடு..

ஆனால், கோடைகாலத்தில் நாங்களே மேலே மாடியில் தென்னங் கீற்றினால் பந்தல் அமைத்து மாலை நேரத்தில் தரையில் நீர் தெளித்து இரவில் படுத்தால் சுகமாக தூக்கம் வரும். இன்று கூட எங்கள் கிராமத்திற்குச் சென்றால் மொட்டை மாடியில் நிலவையும் நட்சத்திரங்களையும் ரசித்துக் கொண்டு விட்டேத்தியாக வானம் பார்த்து படுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறேன். என்னுடைய குழந்தைகளும் இதை பெரிதும் விரும்புகிறார்கள். நகர வாழ்க்கையில் இல்லாத ஒரு பெரிய சுதந்திரம் இது என்பதை அவர்களும் உணர்ந்திருக்கக் கூடும்.

நாங்கள் என்றால் என்னுடைய அப்பா, அண்ணா மற்றும் என்னுடைய இரு சகோதரிகள் சேர்ந்து. அதற்குத் தேவையான கீற்று மற்றும் தென்னம்பாளை நார் (தென்னம்பாளையை நீரில் ஊற வைத்து ஒரு கோணி ஊசியால் மூன்று அல்லது நான்கு மில்லி மீட்டர் அகலத்திற்கு அதை கிழித்து கீற்று கட்டுவதற்கு உபயோப்படுத்துவார்கள்) எங்கள் வீட்டிலேயே இருக்கும்.

கோவை: `70 டிகிரி சாய்வில் வீடுகள்; பள்ளிக்கு 5 கி.மீ நடை!’ - நாகுரூத்துபதி பழங்குடி கிராமம்

கீற்று முடைதல் தென்னம்பாளை கிழித்தல் போன்றவற்றை என்னுடைய அப்பா எனக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறார். இதுபோன்ற கைவினைப் பயிற்சியை வியாபாரரீதியாக உபயோகப்படுத்தாவிட்டாலும் கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். காரணம், கிராமத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் தற்சார்பு வாழ்க்கை (Self Sustained) முறை வழக்கத்திலிருந்தது.

Representational Image
Representational Image

எல்லாவிதமான வேலைகளும் அந்த வீட்டிலிருப்பவர்களாலேயே செய்யப்படும். உதாரணத்திற்கு ,இங்கே நான் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். கிராமத்தில் பெரும்பாலும் அனைவரது வீடுகளிலும் ஆடு, மாடு மற்றும் கோழி போன்றவற்றை வளர்ப்பார்கள். விவசாயத் தேவை மற்றும் விவசாயம் சார்ந்த வேலைகளுக்கென காளை மாடுகளும் வீட்டின் பால் தேவைக்கென பசு மாடுகளும் வளர்ப்பார்கள் (அதிகப்படியான பாலை பிறருக்கு விற்பதன் மூலம் மாடு வளர்ப்பிற்குத் தேவையான செலவினங்களுக்கும் வீட்டிற்குத் தேவையான பொருளாதார உதவிக்கும் பயன்படுத்துவார்கள்).

ஆடு மாடுகளுக்கான புற்களை கொண்டுவருவது, அதன் கழிவுகளைச் சேகரித்து அதற்கென இருக்கும் குழியில் கொட்டி, பிற்பாடு ஒவ்வொரு வருடமும் அந்த மட்கிய கழிவுகள் உரமாக வயலுக்கு உபயோகப்படுத்துவது போன்ற வேலைகளை வீட்டிலுள்ளவர்களே செய்வார்கள். விவசாய வேலைகளான நிலத்தை சமன்படுத்த ஏர் உழுவது, வாய்க்கால் அமைப்பது, வரப்பு கட்டுவது, பயிர் செய்த பின், நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது உரமிடுவது, அறுவடை செய்வது போன்றவற்றில் வீட்டிலிருப்பவர்கள் ஈடுபாடு நிச்சயமாக இருக்கும்.

என்னுடைய குடும்பம் விவசாயக் குடும்பம் என்பதால் எங்களை இதுபோன்ற வேலைகளுக்கு எங்களுடைய அப்பா பழக்கப்படுத்தியிருக்கிறார். நாங்கள் படித்து கொண்டிருந்ததனால், முழு நேரமாக இந்த வேலைகளை செய்யாவிட்டாலும் வார இறுதி நாள்களிலும் காலை, மாலை பள்ளி சென்ற நேரம் தவிர எங்களால் முடிந்த இதுபோன்ற வேலைகளைச் செய்திருக்கிறோம்.

நான் படித்த பள்ளி
நான் படித்த பள்ளி

நான் படித்த பள்ளி

பள்ளி செல்லும் நாள்களில் காலை எழுந்தவுடன் எங்கள் தோட்டத்துக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து விட்டு பம்பு செட்டில் வயலுக்கு பாய்ந்து கொண்டிருக்கும் நீரில், அங்கேயே துணிகளை துவைத்து குளித்துவிட்டு வீட்டிற்கு வந்து, காலை உணவு முடித்து பள்ளிக்குக் கிளம்புவோம். பிற்காலத்தில் படிப்பு முடித்து வேலைக்கு சென்ற பின்பும், ஊருக்குச் சென்றால் தோட்டத்திற்கு சென்று பம்பு செட்டில் குளிப்பது என்பது ஒரு குதூகலமான விஷயம்தான்.

வார இறுதியில் விடுமுறை நாள்களில் எதாவது ஒரு விவசாய வேலை நடந்து கொண்டிருக்கும். இதுபோன்ற நாள்களில் காலை உணவோ அல்லது மதிய உணவோ எங்கள் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று விடுவோம். அங்கே இருக்கும் வாழை மரத்திலிருந்து இலையை அறுத்து, அதில் உணவைப் பரிமாறி அங்கேயே அமர்ந்து சாப்பிடுவோம். அந்த பசுமையான சூழலில் தென்னை மர நிழலில் அமர்ந்து சூடான உணவின் வாசனையை நாசியில் நுகரும்போதே அடிவயிற்றில் அமிலம் சுரக்கும். அதிகமான பசி எடுக்கும். நிச்சயமாக ஒரு பிடி உணவு அதிகமாக உட்கொள்வோம்.

மயிலாடுதுறை: `மன உளைச்சல்; விடுபட உதவும் காய்கறித் தோட்டம் போட்டி!’ - அசத்தும் பேரூராட்சி

தோட்டத்தின் சூழ்நிலையில் ஒரு அதீதமான இயற்கையின் மணம் இருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். புற்களின் மணம், நீர் பாய்ந்த சேற்றின் மணம், வளர்ந்த நெற்பயிரின் மணம் அல்லது அப்போது பயிர் செய்த பயிர்களின் மணம், அங்கு இருக்கும் பலவிதமான செடி கொடிகளின் மணம், பூக்களின் மணம் என்று அனைத்தும் கலந்து ஒரு அற்புதமான சுகந்தம் அங்கே பரவிக் கிடக்கும். அதை நெஞ்சு முழுக்க நிரப்பிக் கொண்டு தோட்டத்தின் வரப்புகளில் சுற்றி வருவதே ஒரு அலாதியான அனுபவம்.

Representational Image
Representational Image
Dhanasekaran.K

எங்கள் தோட்டம்.

மற்றும் காலை நேரப் பறவைகளின் குரல்களும் மிக இனிமையாக இருக்கும்.

என்னுடைய சிறு வயதில் குயில்களின் இனிமையான கூவல்களை தினமும் கேட்டிருக்கிறேன்.அந்தக் குயில்களுடன் நான் பலமுறை பேசியிருக்கிறேன். `என்னது குயிலுடன் பேசினியா...என்னப்பா கதை விடுற...?’ என்று உங்களுக்குத் தோன்றலாம். எப்படி குயிலுடன் பேசுவது? குயில் கூவும் அதே தொனியில் குறிப்பிட்ட இடைவெளியில் நீங்களும் ஒலி எழுப்புங்கள். பதிலுக்கு அதுவும் அதே தொனியில் ஒலி எழுப்பும்.

பல நேரங்களில் நம்முடைய கூவலை, அது இனம் கண்டு, பதில் குரல் அதனுடைய இணை இல்லை என்று தெரிந்து அது கோபமடைந்து விட்டால் அதனுடைய தொனி மாறி உச்ச ஸ்தாயியில் (High Decibel) கூவும். அந்த பால்ய காலத்தில் இந்த வேறுபாடு எனக்குப் புரியவில்லை. குயில் இவ்வாறு உச்ச ஸ்தாயியில் கூவ கூவ, நானும் என் குரலை உயர்த்தி, அதன் கோபத்தை ரசித்திருக்கிறேன். இப்பொழுது நினைக்கையில் நான் பலமுறை அந்த தோட்டத்துக் குயிலின் கோபத்தை கிளறி இருப்பதாகத் தோன்றுகிறது.

காலை நேரத்தில் குளிர் காலங்களில் மின் மோட்டாரிலிருந்து வரும் நீர் லேசான வெதுவெதுப்புடன் இருக்கும். அது சூழ்நிலை வெப்பநிலையை விட சற்று அதிகமாக இருப்பதினால் சூடாக ஆவி பறக்க நீர் வரும். தலை முழுக்க எண்ணெய் வைத்து ஐந்து குதிரை திறன் (5 Horse Power 5 HP) கொண்ட பம்பு செட் மோட்டாரிலிருந்து வரும் வேகமான நீரில் தலையை கொடுத்தீர்களானால் தலையில் இருக்கும் எண்ணெய் இரண்டு நிமிடத்தில் எங்கு சென்றது என்று தெரியாது. அதேபோல உங்கள் உடலை வேகமாக வரும் அந்த நீரில் காட்டினால் உடல் வலி, முதுகு வலி எல்லாம் பறந்து விடும். எங்களுக்கு அதுதான் குற்றாலம். அதேபோல மோட்டாரிலிருந்து வரும் நீர் ஒரு தொட்டியில் விடப்பட்டு பின்பு வழிந்து வாய்க்கால் வழியாக செல்லும். அந்தத் தொட்டிக்குள் அமிழ்ந்து ஆனந்தமாகக் குளிப்போம்.

Representational Image
Representational Image

ஒரு நல்ல மழைக்காலத்துக்கு பின், மிதமாக வெயில் அடிக்க தொடங்கும் போதுதான் கிணற்றில் நீர் ஊற ஆரம்பிக்கும். தினமும் காலையிலேயே சென்று கிணற்றில் எவ்வளவு நீர் ஊறியிருக்கிறது என்று பார்ப்போம். ஒரு நாளில் பலமுறை சென்று நீரின் அளவு உயர்ந்திருக்கிறதா என்று சோதித்துக் கொண்டேயிருப்போம். ஒருவேளை நீரின் அளவு வேகமாக உயருகிறதென்றால் உள்ளே இருக்கும் மின் மோட்டாரை மேலே தூக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். நன்றாக மழை பொழிந்த வருடங்களில் எங்கள் தோட்டத்துக் கிணறு நிரம்பி ஒரு பெரிய நீச்சல் குளம்போல காட்சி அளிக்கும். ஒரு நாளில் உணவு நேரம் தவிர (சில நேரங்களில் உணவையே மறந்து) பல மணிநேரங்கள் கண்கள் சிவக்க சிவக்க நீந்தி களி(ழி)த்திருக்கிறோம்.

மாடுகளைக் குளிப்பாட்டுவதற்கென்று ஒரு சிறிய குட்டை எப்பொழுதும் நீர் நிரப்பப்பட்டு இருக்கும். மத்திய நேரங்களில் ஆடு, மாடுகள் அதில்தான் தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளும். அந்த குட்டையைச் சுற்றி வாழை மரங்கள் நடப்பட்டிருக்கும். பத்து வருடங்களுக்கு முன்பு வரை தோட்டத்துக்கான அடையாளத்துடன் தென்னை மரங்களும் வாழை மரங்களும் தேக்கு மரங்களுமாக ஓரளவு பசுமையாகவே இருந்தது.

Representational Image
Representational Image

ஆனால், அதன் பின்பு போதிய மழை இல்லாத காரணத்தால் இன்று அவை ஏதுமின்றி வெறுமையாகக் காட்சி அளிப்பது மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது. ஆனால், இயற்கை எப்பொழுதும் தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இன்றைய இக்கட்டான சூழலில் சுற்றுச்சூழல் மாசு வெகுவாக குறைந்து இந்த வருடம் ஓரளவு அதிகப்படியான மழைப்பொழிவு இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த சூழல் மேலும் முன்னேற்றமடைந்து மீண்டும் எங்கள் தோட்டம் பழைய நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை ஒளி தெரிகிறது.

நகர வாழ்வுக்கு அறிமுகமான பின்பு மேற்சொன்ன கிராமத்து வாழக்கையின் இழப்பின் தீவிரம் நன்றாக புரிகிறது. என் போன்ற கிராமப் பின்புலம் உள்ள யாரை கேட்டாலும், `என்னுடைய வயோதிகக் காலத்தில் மீண்டும் என்னுடைய கிராமத்துக்கே சென்று, மீண்டும் அந்த அமைதியான எழில் கொஞ்சும் வாழ்வை வாழ வேண்டும் என்பதே என் கனவு..." என்றே கூறுவார்கள்.

கனவு காணாதே அது ஒரு போதும் உண்மை ஆகாது என்று அந்த காலத்தில் பெரியவர்கள் கூறுவார்கள்.

ஆனால் நமது முன்னாள் குடியரசு தலைவர் உயர் திரு. அப்துல் கலாம் அவர்கள் சொன்னதை இங்கே நினைவு கூற விரும்புகிறேன்.

"கனவு என்பது உன் தூக்கத்தில் வருவது அல்ல ..."

"உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு ..."

ஆதலால் கனவு காணுங்கள். நீங்கள் விரும்பும் இலக்கை அடையும் வரை. அது இந்தியாவை வல்லரசாக்கும் கனவானாலும் நீங்கள் விரும்பும் கிராம வாழ்க்கைக்கு திரும்பும் கனவானாலும். ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும்.

-ஆனந்தகுமார் முத்துசாமி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு