அதிகாலை கடுங்காப்பி.. டெய்லர் கடை இட்லி கெட்டி சட்னி..! - கிராமத்து இளைஞரின் ஜில் அனுபவம் #MyVikatan

எப்பொழுதாவது ஏதேனும் கிராமத்தின் ஊடாக பயணிக்க நேர்ந்தால் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் செலவழித்து நான் கூறுவதை அனுபவித்துப் பாருங்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
டைலர் (Tailor) கடை இட்லியும் கெட்டி சட்னியும் என்னுடைய பால்ய வயதில் எனக்கு மிக பிடித்தமானவை. "என்னடா டைலர் கடையில் இட்லியும் கெட்டி சட்னியுமா....?" என்று உங்கள் புருவம் உயர்வதை பார்க்க முடிகிறது. அந்த கடைக்கு பெயர் எதுவும் வைக்கவில்லை. கடைக்காரரும் அவருடைய மகனும் தையல் தொழிலை முதன்மையாகவும் அவருடைய மனைவி வீட்டிலேயே காலை மட்டும் இட்லி தோசையும் பகல் முழுதும் டீ மற்றும் பலகாரக் கடையும் நடத்தினார். அதனால் அந்த கடைக்கு ஊர் மக்கள் வைத்த பெயர் "டைலர் கடை..."

எங்கள் கிராமத்தில் பெரும்பாலும் பாலில்லாத கடுங்காப்பி (நீரில் காபி தூளை போட்டு கொதிக்க வைத்த பானம்), இன்று பிளாக் காபி (Black Coffee) என்று சொல்லப்படுகிறது. அதுவும் அச்சு வெல்லம் போட்டு குடிப்பார்கள். அதற்கும் முன்பு இனிப்பில்லாத கடுங்காப்பி வைத்து ஒரு அச்சு வெல்லத்தை கையில் வைத்து கொண்டு ஒரு மிடறு காபியும் ஒரு கடி வெல்லமும் (One Sip Coffee One Bite Jaggery) என்று குடிப்பார்கள் என்று என் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன்.
காலை நான்கரை அல்லது ஐந்து மணியிலிருந்து (இப்பொழுதும் கூட) எங்கள் ஊரிலுள்ள டீ கடைகளில் டீ, காபி கிடைக்கும். தேவைப்படுபவர்கள் அங்கு வந்து டீயோ அல்லது காபியோ குடித்துக் கொள்வார்கள் (பெரும்பாலும் டீ). அதுதான் எங்கள் கிராம மக்களின் சக்தி பானம் (Energy Drink). குறைவான விலையென்பதால் குறைவான பாலும் நிறைய நீரும் கலந்து மிகவும் இனிப்பான சுவையுடன் விரும்பத்தக்க மணத்துடன் இருக்கும்.

எப்படி தாஜ்மஹாலை பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாதோ அது போல இந்த கிராமத்து டீயையும் காபியையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. எப்பொழுதாவது ஏதேனும் கிராமத்தின் ஊடாக பயணிக்க நேர்ந்தால் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடம் செலவழித்து நான் மேலே கூறியதை அனுபவித்துப் பாருங்கள்.
குளிர் காலங்களில் காலை நான்கு மணிக்கே வந்து கடைக்காரரை எழுப்பி அடுப்புப் பற்றவைத்து பால் காய்ந்து டீயோ காபியோ தயாராகும் வரைக் காத்திருந்து குடிப்பவர்களை கிராமங்களில் சாதாரணமாக பார்க்கலாம். அந்த அதிகாலையிலேயே ஊர் மற்றும் நாட்டு நடப்பை பற்றி பேசிக்கொண்டே ஒன்று அல்லது இரண்டு முறை டீயோ காபியோ குடிப்பார்கள்.
இப்பொழுதும் எங்கள் ஊரில் டீ ஐந்து ரூபாய், ஒரு இட்லி இரண்டு ரூபாய், ஒரு தோசை பத்து ரூபாய் ஒரு போண்டா அல்லது பஜ்ஜி இரண்டு ரூபாய் தான். நான் என்னுடைய வேறொரு பதிவில் எழுதியது போல பத்து பைசாவாக இருந்த இட்லி இரண்டு ரூபாயாக உயர கிட்டதட்ட நாற்பது வருடங்கள் ஆகியிருக்கிறது.

அதற்கு காரணம் எங்கள் ஊரிலுள்ள உணவகங்கள் பெரும்பாலும் சொந்த வீட்டிலேயே அல்லது தங்களுக்கு சொந்தமான கடைகளிலேயே நடத்தபடுகிறது. வேலை ஆட்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள் அல்லது யாரும் இருக்கமாட்டார்கள், கடை நடத்துபவர்களே அனைத்து வேலைகளையும் செய்வார்கள். மேலும் அன்று முதல் இன்றுவரை உணவு விறகு அடுப்பில்தான் சமைக்கப்படுகிறது. அவ்வாறு விறகடுப்பில் சமைக்கப்படும் உணவுகளில் லேசாக ஒரு விறகடுப்பின் புகை மணம் கலந்திருக்கும்.
இன்றைய நாகரீக மாந்தர்கள் இந்த மணத்திற்காக "புகை நாற்றம் அடிக்கிறது..." என்று முகம் சுழிக்கக்கூடும். ஆனால் எனக்கு அந்த மணம் எந்த விதமான முக சுழிப்பையும் ஏற்படுத்தியதில்லை. நான் முதன் முதலாக அமெரிக்க நாட்டிற்கு சென்ற பொழுது அடுப்பில் சமைத்த உணவு பொருட்களுக்கென தனி விலை வைத்து விற்பதைப் பார்த்தேன் புகை மணமுள்ள வெண்ணை (Smoked Butter) புகை மணமுள்ள உருளைக் கிழங்கு (Smoked Potato) போன்றவை.

நான் சிறுவனாக இருந்த பொழுது உணவகங்கள் நடத்தியவர்கள் யாரும் ஒன்றும் பெரிய பணக்காரர்கள் ஆகவில்லை. அந்த தொழிலை எந்த லாப நோக்கமும் இல்லாமல் அவர்களுடைய குடும்ப பொருளாதார தேவைகளுக்கென மட்டுமே செய்து வந்தார்கள். இன்று போல ஆடம்பர அலங்காரங்களுடன் அதற்கான செலவினைகளையும் வாடிக்கையாளர்களின் தலையில் காட்டும் வியாபார யுக்திகள் அன்று இல்லாததே இதற்கு காரணம்.
ஒரு தொழில் நடத்தும் போது அந்த தொழில் நடக்கும் இடத்தின் பொருளாதார தேவைகளும் சூழ்நிலைகளுமே விற்கப்படும் பொருட்களுக்கான விலையை நிர்ணயம் செய்கிறது. என்னுடைய கிராமத்தில் உணவுகளின் விலை குறைவென்றாலும் மக்கள் உணவகங்களில் மிக மிக குறைவான நாட்களே வாங்கி உண்ணும் மனநிலையிலேயே இருப்பார்கள். இன்று சொல்வது போல வழக்கமான வாடிக்கையாளர்கள் (Regular Customers) என்பது கிராமங்களில் உண்டென்றாலும் கடைகளில் வாங்கி உண்ணும் கால இடைவெளி அதிகமாகவே இருக்கும்.
செய்தி தாளில் வாழை இலை வைத்து அதில் இட்லியையோ அல்லது தோசையையோ சுட சுட வைத்து கெட்டி சட்டினியை ஒரு ஓரத்தில் வைத்து கட்டி நாம் எடுத்துச் செல்லும் பாத்திரத்தில் சாம்பார் ஊற்றிக் கொடுப்பார்கள். வீட்டிற்கு வந்து பார்க்கும்போது அந்த சூட்டில் வாழை இலை வதங்கி இட்லிக்கு ஒரு கூடுதல் மணத்தைக் கொடுக்கும்.ஆனந்தகுமார் முத்துசாமி
இன்றைய கால கட்டத்தில் நான் வசிக்கும் பெங்களுருவில் இரண்டு இட்லி நாற்பது ரூபாய் கொடுத்து குழந்தைகளுக்கு பால் ஊட்டும் சங்கு அளவில் இருக்கும் கின்னத்தில் அவர்கள் தரும் சாம்பார் மற்றும் சட்டினியை பார்க்கும் போது மனம் அந்த கிராமத்து இட்லியையும் அளவில்லாமல் (Un-limited) கொடுக்கும் சட்னி சாம்பாரையும் மனதில் ஒரு சிறிய ஏக்கம் வரும்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் இப்போது போன்ற அரவை (Mixie or Grinder) இயந்திரங்கள் கிடையாது. ஆட்டுரலில்தான் சட்னி அரைப்பார்கள். அரைத்து முடித்ததும் கருவேப்பிலை கடுகு உளுத்தம் பருப்பு போட்டு சுட சுட தாளித்து அந்த உரலில் கொட்டி சட்டினியை கலந்து அப்படியே அள்ளுவார்கள். அந்த மணம் இன்னும் என் மனதில் இருக்கிறது என்னால் அதை இப்பொழுதும் உணர முடிகிறது.

அப்பொழுதெல்லாம் இன்று போல பாலித்தீன் (polyethene) பைகள் கிடையாது. இட்லியோ அல்லது தோசையோ ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் ஒரு சிறிய லோட்டா அல்லது தூக்கு சாம்பாருக்கென எடுத்துக்கொண்டு ஒரு துணிப்பை அல்லது ஒயர் கூடை பை எடுத்துக் கொண்டு ஹோட்டலுக்கு செல்வோம். செய்தி தாளில் வாழை இலை வைத்து அதில் இட்லியையோ அல்லது தோசையையோ சுட சுட வைத்து கெட்டி சட்டினியை ஒரு ஓரத்தில் வைத்து கட்டி நாம் எடுத்துச் செல்லும் பாத்திரத்தில் சாம்பார் ஊற்றிக் கொடுப்பார்கள். வீட்டிற்கு வந்து பார்க்கும்போது அந்த சூட்டில் வாழை இலை வதங்கி இட்லிக்கு ஒரு கூடுதல் மணத்தைக் கொடுக்கும். அந்த சூடு ஆறுவதற்குள் இட்லியை சட்னியை தொட்டு சாம்பாரை அதன் மீது குளிக்க வைத்து விட்டு சாப்பிடுவதே ஒரு அலாதியான என்றும் மறக்க முடியாத அனுபவம்.
அந்த வாழை இலையும் செய்திதாளும் நாம் வாழும் சூழலுக்கு (Environment) கேடு விளைவிக்காத பொருட்கள். கடந்த இருபத்தி ஐந்து வருடங்களில் நாம் எவ்வாறு இன்றைய சூழலியல் கேடுகளுக்கு பங்களிப்பாளர்களாக மாறியிருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் மனது வலிக்கிறது.
இன்று கூட நான் எங்கேனும் கிராமப்புறங்கள் வழியாகவோ நல்லதே சிறு ஊர்கள் வழியாகவோ செல்ல நேர்கையில் எங்கேனும் தள்ளு வண்டியில் சூடாக இட்லி அவிப்பதைப் பார்த்தால் முடிந்த அளவு வண்டியை நிறுத்தி சாப்பிட்டு விட்டுத்தான் செல்வேன். சாப்பிட முடியாவிட்டாலும் கூட அந்த காட்சி என்னை மீண்டும் என்னுடைய பால்யக் காலத்து நினைவுகளை கிளறிவிடும், மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
-ஆனந்தகுமார் முத்துசாமி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.