Published:Updated:

எங்க ஊர் புளியமரம்! #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

மரமேறிய இருவரில் பெருமாள் அண்ணனின் மகன் நான்காவது கிளையிலிருந்து விழுந்து விட்டான். எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்க்க பக்கத்து நகரத்துக்குப் போனார்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எங்கள் ஊர் மந்தையில் புளிய மரம் ஒன்று இருந்தது. யார் சொல்லியும் கேட்காமல் அதனிஷ்டத்துக்கு பறந்தும் விரிந்தும் மேனியெங்கும் முண்டும் முடிச்சுமாய் காட்சிப்பட்டது, அதன் நிழலில்தான் அமர்ந்தார்கள், அதன் நிழலில்தான் படுத்துத் தூங்கினார்கள், அதன் நிழலில்தான் ஒதுங்கினார்கள். அதன் நிழலில் நடைபெற்ற சீட்டு விளையாட்டின்போது நாலாவது தெருக்காரரை மூன்றாவது வீட்டுக்காரர் மண்டையை உடைத்து விட்டார்.

Representational Image
Representational Image

சண்டையை முன்னிட்டு மத்தியஸ்தம் பண்ணியவர்கள், கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல், ரத்தத்துக்கு ரத்தம் என்பது சரியாய் இருக்காது, உன் வீட்டுப்பிள்ளைக்கு உடல் நலமில்லாதபோது இரு சக்கரவாகனத்தில் கூட்டிப்போய் ஆஸ்பத்திரியில் சேர்த்த நல்ல மனம் அவனிடம் இருக்கிறது, அவன் வீட்டு விசேஷத்தில் எல்லா வேலைகளையும் யாரும் சொல்லாமல் இழுத்துப்போட்டுச்செய்த நல்ல குணம் உன்னிடம் இருந்தது. பரஸ்பரம் உங்களிருவர் போல் ஈரம் வற்றிப்போகாத மனங்கள் இருக்கிறவரை இது போலான சண்டைகள் எல்லாம் சோப்புக்குமிழி போல படக்கென தோன்றி உடைந்து போகிற தற்செயல் நிகழ்வுகள். அதற்கு உருவகம் கொடுத்து பூதாகரப்படுத்த வேண்டாம் என கை கூப்பியவாறே சொன்னவர்கள், மேலும் நடந்தது கெட்டது இனி நடப்பது நல்லதாய் இருக்க ஆசை கொள்வோம் என சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

குமார் அண்ணனின் வீட்டுக்கு எதிர்புறமாய் இருந்த மரத்துக்கு அவர் வீட்டிலிருந்துதான் பாத்திரம் கழுவும் தண்ணீரிலிருந்து எச்சில் நீர் வரை எல்லாம் கலந்து போனது, எதன் சுவையறிந்து எடுத்துக்கொண்டது மரம் எனத் தெரியாவிட்டாலும் கூட அதன் வளர்ச்சிக்கும் காய்த்தலுக்கும் பஞ்சமில்லை. அதன் மேனியெங்குமாய் பட்டுத்தெரிந்த மரப்பட்டைகளை உரித்து எரித்து குளிர் காயும் இரவு வேளைகள் தவிர்த்து, பகல் நேரவிடுமுறை தினங்களில் பள்ளிப் பையன்களில் சிலர் புளியம்பழம் பறிக்க மரமேறினார்கள்.

Representational Image
Representational Image

மரமேறிய இருவரில் பெருமாள் அண்ணனின் மகன் நான்காவது கிளையிலிருந்து விழுந்து விட்டான். எலும்பு முறிவுக்கு வைத்தியம் பார்க்க பக்கத்து நகரத்துக்குப் போனார்கள்.

அரசு ஆஸ்பத்திரியின் மாவுக்கட்டும் உள் சிகிச்சைக்காக அனுமதித்து அவனுக்குத்தந்த பாலும் பன்னும் அவனைத் தேற்றி விட்டன. ஊர் திரும்பி பள்ளிக்குப்போய் விட்டுத் திரும்பிய அவன் விடுமுறை நாளில் புளிய பழம் பறிக்க வேண்டும் என திட்டம் தீட்டிய நாளில் புளிய மரம் வேறோடும் வேரடி மண்ணோடுமாய் வெட்டிச் சாய்க்கப்பட்டிருந்தது மண்ணில். ஊர் வளர்ச்சிக்காய் ஏதோ அரசு அலுவலகம் வருகிறதாம். இடம் வேண்டி வெட்டினார்களாம். வருடத்துக்கு ஒரு கோட்டை புளியம்பழங்களை தந்த மரம் இனி இல்லை., அதன் நிழலில் ஒதுங்கியவர்களும், இழைப்பாறிக் கொண்டவர்களும் சீட்டு விளையாடி சண்டை போட்டவர்களும் நிழலில் ஒதுங்க இனி எந்த மரம் தேடிப்போவது என யோசித்தார்கள்.

Representational Image
Representational Image

ஊரின் உயிர் சாட்சியாய் நின்றிருந்த மரத்தை வெட்டி விட்டு அரசு அலுவலகம் என்றால் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது எனச்சொன்ன பறைவகள் இரண்டு நாங்கள் இனி கூடடையவும் காதல் மொழி பேசிக் கொள்ளவுமாய் எங்கு செல்வோம் என நினைத்தவாறே வேறு மரம் தேடி பறந்தன. பெருமாள் அண்ணன் மகனைக் கடந்து...!

-விமலன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு