Published:Updated:

`என்னது ஊர் மேல ராக்கெட் விழப் போகுதா?' -ராமசாமியும் ரேடியோவும் #MyVikatan

Representational Image
Representational Image ( Nirlendu Saha / Unsplash )

இப்ப ரேடியோவில் சொன்ன மாதிரி, நாள கழிச்சு ராக்கெட் விழப்போகுதாம். அதனால அன்னிக்கு ஊர் முச்சூடும் நம்ம ஊர் பள்ளிக்கோடத்துக்கு பொழுதுவிடிய வந்துடணும்....

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1979, ஜுலை மாதத்தின் முற்பகுதியில் ஒருநாள். திருமான்கோட்டை கிராமத்தில் ஊர்க்கூட்டம் கூடியது. பெரிய ஆலமரத்தின் அடியில் ஊர்மக்கள் கவலையோடு பேசிக்கொண்டிருந்தனர். மரத்தில் தங்கியிருந்த பறவைகளுக்குக் கூட்டம் நடப்பது பற்றியெல்லாம் கவலை இல்லை. அதன் கூச்சல் நின்றபாடில்லை. அனைவரின் பார்வையும் மரத்தின் அடியில் நடுநாயகமாக இருந்த ரேடியோவின் மீது நிலைக்குத்தியிருந்தது. தனது ரேடியோவை யாரும் தொட்டுவிடாத வண்ணம் ராமசாமி கவனமாக காவல் காத்துக்கொண்டிருந்தான்.

தொண்டையைக் கனைத்துக்கொண்டே ஊர்த்தலைவர் பேச ஆரம்பித்தார்.

இப்ப ரேடியோவில் சொன்ன மாதிரி, நாளகழிச்சு ராக்கெட் விழப்போகுதாம். அதனால அன்னிக்கு ஊர் முச்சூடும் நம்ம ஊர் பள்ளிக்கோடத்துக்கு பொழுது விடிய வந்துடணும். யாரும் தவுந்துடக் கூடாது. ராக்கெட் விழுந்தா மொத்தமா ஊர் ஜனங்க சோலி முடியட்டும். ஒட்டு உறவு இல்லாம் தனியா இருந்து என்ன ஆகப்போகுது? என்னிக்கு இருந்தாலும் சாகப்போறோம். மொத்தமா சாகலாம்! நேத்திக்குக் கூட வானத்திலிருந்து பெரிய மீனு எரிஞ்சு வடக்கு திசையில விழுந்துச்சு! இதெல்லாம் நமக்கு பிடிச்ச பீடைதான்!

Representational Image
Representational Image

சொல்லும்போதே அவர் குரல் தழுதழுத்தது…

தங்கள் பங்குக்கு சில பெண்கள் தங்களின் வலக்கண்ணும் வலத்தோளும் துடித்ததாகச் சொன்னார்கள்.

இதைக்கேட்டுப் பயந்த ராமசாமி மனைவி ராமாத்தாளுக்கு காக்கா வலிப்பு வந்து விழுந்தாள். சுந்தரம் தனது பாக்கெட்டில் இருந்த பீடியைப்பற்ற வைத்து அவளின் மூக்கு துவாரத்தில் எரியும் பீடியை வைத்து மற்றொரு துவாரத்தை விரலால் மூட காக்கா வலிப்பு நின்றது.

முகத்தில் தண்ணீர் தெளித்து உட்கார வைத்தார்கள். ராமாத்தாளும் தண்ணீர் வாங்கி முகத்தைக்கழுவும்போது வலது காதில் இருந்த தண்டட்டி காணாமல் போயிருந்தது. சாவு பயத்தைவிட தண்டட்டி காவுக்கொடுத்த பயமே அதிகமானது.

ஆளாளுக்கு பேசியதால் கூட்டம் முடிய நடுஜாமம் ஆகிவிட்டது. ராமசாமியும் சுந்தரமும் சேர்ந்து ரேடியோவைத் தூக்கி வந்து ராமசாமி வீட்டில் வைத்தனர்.

பறவைகள் இன்னும் தூங்காமல் என்ன பேசிக்கொண்டு இருந்தன தெரியவில்லை.

விடிந்ததும்… மகன் குமார் தன் அம்மா ஊரில் இருப்பதை எண்ணி ராமாத்தாள் அழுதாள். ஊர்க்கூட்டத்தில் அதை தான் திரும்ப திரும்பச் சொல்லியிருந்தார்கள். யாரையும் தனியாக விட்டுவிட்டுச் சாகக் கூடாது.

மகனை அழைத்து வர ராமசாமியும் ராமாத்தாளும் புறப்பட்டனர். அப்போது பல்லி சகுனம் சொல்லியது. இதைக்கேட்ட ராமாத்தாள் சைக்கிளிலிருந்து இறங்கி தரையில் மூன்றுமுறை விரலால் தட்டினாள். அவள் ஓசையின் எண்ணிக்கை, திசை மற்றும் கிழமையை வைத்து பல்லி சகுனம் நல்லதா கெட்டதா என முடிவு செய்வாள். இருவரும் பக்கத்திலுள்ள அவளின் அம்மா ஊரை அடையும்போது பொழுது உச்சிக்கு வந்திருந்தது. அந்த ஊரும் பயத்தில் அமைதியாக இருந்தது.

இளவட்டக்கூட்டம் மட்டும் எப்போதும் போலக் கோயில் மரத்தடியில் சீட்டாடிக்கொண்டிருந்தனர். அவன் மனதுக்குள் கடைசியாகச் சாகும்முன் சீட் விளையாடலாம் என ஆசைப்பட்டான்.

Representational Image
Representational Image
kyran low / Unsplash

வீட்டின் முன் சைக்கிள் நின்றவுடன்… ராமாத்தாளின் அம்மா ஓடி வந்தாள். அவளைக் கட்டிப்பிடித்து அணைத்தாள். காதில் தண்டட்டி இல்லாததைக் கண்டு விசாரித்தாள். இந்தத் தண்டட்டி குத்திய நிகழ்வை ராமாத்தாள் நினைத்துப்பார்த்தாள்.

திண்ணையில் தென்னைக்கீற்றால் கட்டப்பட்ட யாருமில்லாத தனியறையில் ஒரு குறவன் மட்டும் சூரியை வைத்துக் காதைக் கீறிவிட்டு ஓட்டை ஆக்கி அதில் பஞ்சை வைத்துசுற்றி துணியால் கட்டிவிட்டு சென்று விட்டான். வலி உயிர் போனது. மீண்டும் மூன்று நாளுக்கு ஒருமுறை வந்து அவிழ்த்துக்கட்டி விட்டுப்போனான். காது குத்தப்பட்டு மூன்று மாதம் தனி அறையில் இருந்து காது ஓட்டையை வளர்த்தாள். அந்த காலகட்டத்தில் யார் கண்ணிலும் படக்கூடாது என்பது மரபாம். தொண்ணூறாவது நாள் தான் இந்தத் தண்டட்டிகளை மாற்றி விட்டார்கள்.

அப்பா இவளையே பார்த்துக்கொண்டே திண்ணையில் உட்கார்ந்து இருந்தார். ராமசாமி அருகே போனவுடன் கையெடுத்துக் கும்பிட்டார். இருவரும் மனதுக்குள் இது கடைசி கும்பிடு என நினைத்துக்கொண்டனர்.

ராமசாமி மகனைத் தேடினான். ``ரேடியோவில்.. மத்தியானத்துக்கு செய்தில ராக்கெட் பத்தி என்ன சொல்றாங்கன்னு கேட்க எல்லொரும் போயிருக்காங்க, இவனும் போயிருக்கான். இருங்க மாப்பிள்ளை, நான் போய் கூப்பிட்டு வர்றேன்” என மாமனார் கிளம்பினார்.

தன் மகன் அடுத்தவன் வீட்டுக்கு ரேடியோ கேட்கப்போனதை அவமானமாகக் கருதினான் ராமசாமி. சாகப்போகும் கடைசிநேரத்தில் சண்டை எதற்கு என அடக்கிக்கொண்டான். மாமனார் அவசர அவசரமாக எழுந்து பேரனை கூப்பிடப் போனார். அருகிலுள்ள வீட்டில் செய்திக்கேட்க கூட்டத்தோடு ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த பேரனை `குமாரு.. குமாரு’ எனச் சத்தம் போட்டார்.

தாத்தா அருகில் வந்ததும் முத்தமிட்டு என்றைக்கும் இல்லாதவாறு இன்றைக்குத் தோள்மீது தூக்கி உட்கார வைத்து வீட்டுக்கு தன்னைத் தூக்கிச் செல்வது குமாருக்கு ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக தன் மகன் வழிப் பேரனை மட்டும்தான் தோளில் அவராக சுமப்பார். இந்த இரண்டு நாள்களாக தாத்தாவின் நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் இருந்ததை அவனால் உணர முடிந்தது.

மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர். தட்டில் கறிச்சோறு இருந்தது. இதுவும் ஆச்சர்யம் தான். ஊரில் எல்லோரும் தங்களது ஆடு, கோழிகளை அடித்துக் குழம்பு வைத்ததாகக்கூறி, ` மாப்பிள்ளை இந்த கட்டாப்பு தப்பிச்சுட்டா… இனி 2028-ல்தான் வானத்திலிருந்து பெரிய பாறை விழப்போகுதாம். அதுவரைக்கு நாம பொழச்சுருந்தா பார்ப்போம்' என முடித்தார்

Representational Image
Representational Image
STUDIO WEY / Unsplash

சைக்கிள் கிளம்பும்போது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒப்பாரி வைத்து வழியனுப்பினர்.

இதைப்பற்றி எதுவும் கவலைப்படாத குமார் சம்பந்தமில்லாமல் பெல்லை அடிக்கடி இழுத்து மணியடித்துக்கொண்டே வந்தான். ராமசாமிக்குத் திரும்பும்போது சைக்கிள் மிதிப்பது சற்று கடினமாக இருந்தது. அது மகன் உட்கார்ந்த சுமையா இல்லை, மனதில் புகுந்த சுமையா எனத் தெரியவில்லை. மறக்காமல் சீட் விளையாடும் இடத்தை நோட்டமிட்டான். அங்கே ஒரு நாய் படுத்திருந்தது.

இதைப் பின்னால் உட்கார்ந்திருந்து கவனித்த மாராத்தாள்,

சாகும்போது கூட சீட் விளையாட தோணுதா?

ஆமாம்புள்ள…

அப்படியென்னதான் சீட் கட்டுல இருக்கோ…

கவலையை மறைக்கப் பேச்சை மாற்ற நினைத்த ராமசாமி, அந்த சீட்டில… 52 சீட் இருக்கும்…

பையன் மணியடித்தான்…

அது ஏன்… 52 எதாவது கணக்கா?

ஆமாம்… ஒரு வருஷத்து வாரம்புள்ள…

ஓ..

52 வார கணக்குக்கு…. 52 சீட்… ; அதுல மழைக்காலம், வெயில்காலம், இலை உதிர்ற காலம், பூக்கிற காலம் நாலு சீசனுக்கு நாலு அடையாளம் ஸ்பெடு, கிளவரு, ஆர்ட்னு, டைமண்ட்; அப்புறம் ராவையும் பகலையும் சொல்ல இரண்டு கலரு…. சிவப்பு, கறுப்பு…

அவளுக்கு விளங்கவில்லை! இப்படி எதோ எதோ பேசிக்கொண்டே ஊர் வந்து சேர்ந்தார்கள்.

Representational Image
Representational Image
Nirlendu Saha / Unsplash

ராமாத்தாள் கதவைத் திறந்து தனது ஊரிலிருந்து கொடுத்தனுப்பிய கறிக்குழம்பை கிழே இறக்கி வைத்தாள். வழியில் பேய் பிடிக்காமல் இருக்க கூடவே அம்மா அடுப்புக்கரி வைத்திருந்தாள். அதை அடுத்தநாளுக்கு பல் துலக்க எடுத்து வைத்துக்கொண்டாள். பிறகு வைக்கோல் எடுத்துப் போட மாட்டுக்கொட்டகை போனாள்.

ஊருக்குள் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ராக்கெட் விழும் என்ற செய்தி பரவிய நாளிலிருந்து வாய்த்தகராறோ, சண்டைகளோ இல்லாமல் துடைத்து வைத்த மாதிரி தெருக்கள் சுத்தமாக இருந்தன.

ராமசாமி வீட்டில் இரவில் செய்தி கேட்க சிலர் காத்திருந்தனர். இரவு 7.10-க்கு தான் ஆல் இண்டியா ரேடியோ செய்திகள் வாசிப்பது சொர்ணலதா சுப்பிரமணியம் எனக் கம்பீரக் குரல் ஒலிக்கும். இன்று கொஞ்சம் கரகரத்தது.

அதனால், வேறு ரேடியோ ஸ்டேஷன் தெரியும் எனச் சுந்தரம் சொன்னான். ரேடியோவை ராமசாமியைத்தவிர யாரும் தொடக் கூடாது. அவன் ரேடியோவில் கேட்பதை இஷ்டமிருந்தால் உட்கார்ந்து கேட்க வேண்டும். இல்லையென்றால் நடையைக் கட்ட வேண்டியதுதான். வேறொரு சமயமாக இருந்தால் தொட விட்டுருக்க மாட்டான். இப்போது ராக்கெட் விழுந்து சாகப்போகிறோம் என்ற நினைப்பால் ஒலியைப் பெருக்கும் குமிழைத் தொடாமல் அலைவரிசையை மாற்றும் குழிழை மட்டும் திருக வேண்டும் என்ற நிபந்தனையோடு ரேடியோவை தொட அனுமதித்தான். மரப்பெட்டி போல இருந்த ரேடியோ மீது சின்ன துண்டு ஒன்று போட்டு மூடப்பட்டிருந்தது.

அது எங்கே விழப்போகிறது என்ற தகவல் கிடைக்கவில்லை. மற்றவர்கள் கவலையோடு வீட்டுக்குப் போகும்போது சுந்தரம் மட்டும் ரேடியோவைத் தொட்டுத் திருகிய சந்தோசத்தோடு தூங்கப்போனான்

அடுத்த நாள்…

ராக்கெட் விழும் செய்தி தெரியாமல் பறவைகள் இரை எடுக்க பறந்து போயிருந்தன.

ஒருவழியாக சூரியன் வெளிற ஆரம்பித்ததற்குள் எல்லோரும் வந்து விட்டனர். இத்தனை நாள்களாக ராமசாமி வீட்டில் இருந்த ரேடியோ ஒரு மேசையைப்போட்டு பள்ளிக்கூடத்தின் வாராண்டாவில் வைக்கப்பட்டிருந்தது. அதை யாரும் தொட்டுவிடக் கூடாது என ராமசாமி பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தான்.

எல்லோரும் அவ்வப்போது ராக்கெட் விழுகிறதா என வானத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். மேகம் சூரியனை மறைக்கும்போது கூட ராக்கெட் நிழல் தானோ எனப் பயந்தனர்.

மதியம் 12.40-க்கு செய்திகள் ஆரம்பமானது.

Representational Image
Representational Image
vikram / Unsplash

ஆல் இண்டியோ ரேடியோ செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி… தலைப்புச் செய்திகள் `ராக்கெட் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்து மகா சமுத்திரத்தில் விழுந்தது' என்ற வார்த்தைகள் எல்லோரின் காதில் விழுந்தது.

அந்தச் செய்தி அறிக்கை பத்து நிமிடங்கள் வாசிக்கப்பட்டு இறுதியாக இத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன என்பது வரை உற்றுக்கேட்டுக்கொண்டிருந்த ராமசாமி துண்டினை விலக்கி ரேடியோவை ஆப் செய்து விட்டுத் திரும்பிப் பார்க்கும் போது அருகில் ஒரு காக்கைக்குருவி கூட இல்லை.

”மயிராண்டிக சாவு பயத்தில பொத்திட்டு இருந்தானுக…

குடியைக்கெடுக்க எல்லாரும் ஓடிப்போயிட்டானுக…”

என முனகிக்கொண்டே ரேடியோவைத் தூக்க முடியாமல் ஒற்றை ஆளாகத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு