Published:Updated:

ஆக்சிஜன் சிலிண்டர் என்ன கலர்? - வாக்கிங் டாக்கிங் 10 #MyVikatan

Representational Image
Representational Image ( Ketut Subiyanto from Pexels )

எனக்கு நினைவில்லை… நான் கடைசியாக ட்ம்ளரை வைக்கும் போது அதில் ஸ்பூன் இல்லை. கண்டிப்பாக ஸ்பூனை விழுங்க வாய்ப்பில்லை. ஒரு வேளை பேசிக்கொண்டே டீ உறிஞ்சும்போது ஸ்பூன் கண்ணைக் குத்தியிருக்குமோ?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திருமதி வாக்கிங் போக தயாராகி என்னை அழைக்கும் போது நான் மாடியில் டீ குடித்துக்கொண்டே நண்பர் இனியவனோடு பேசிக்கொண்டிருந்தேன்.

ஏங்க… போலாம் வாங்க…


அரைகுறையாக பேச்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்தேன்.

மூச்சு வாங்கியது…


நீ தானே வீட்டுக்குள்ள கத்தி பேசாதீன்னு சொன்ன…அதனால மாடிக்குப் போனேன்…


எல்லொருக்கும் மாடி ஏறினா மூச்சு வாங்கும் உங்களுக்கு கீழே இறங்கும் போது மூச்சு வாங்குது… ஒலிம்பிக்கில டிரையத்லான் ஓடின மாதிரி!


இப்படி டிஸ்கரேஜ் பண்ணினா எப்படி தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்குக்கு போவாங்க…


இந்த தடவை தமிழ்நாட்டிலிருந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அஞ்சு பேர் போறாங்க… உங்களை மாதிரியா?

Walking
Walking
Image by Daniel Reche from Pixabay

நான் வீட்டிக்குள்ள ஓடறேன்… அவங்க வெளியில ஓடறாங்க… அவ்வளவு தான் வித்தியாசம்! இருந்தாலும் அவங்க பதக்கம் வாங்கினா நமக்கு தானே பெருமை… வாழ்த்துவோம்!

இல்லைன்னா மட்டும் நீங்க… டிரையத்லானில் ஓடூவீங்களா?


அதென்ன டிரையத்லான்?

இரண்டு விளையாட்டு ஐஸ் சறுக்கலும் துப்பாக்கி சுடுதலும் சேர்ந்தா பை-எத்லான்; நீச்சல், ஓட்டப்பந்தயம், சைக்கிள் போட்டி சேர்ந்தா டிரையத்லான்…


அஞ்சு சேர்ந்தா…பெண்டத்தலான்… இது கூட எனக்குத் தெரியாதா?


எங்கே விளையாட்டு சொல்லுங்கப் பார்க்கலாம்…?


விளையாட்டுக்குச் சொன்னேன்… நீயே சொல்லிடு!


ஓட்டம், குதித்தல், குத்துச்சண்டை, தட்டு எறிதல், ஜாவ்லின் எறிதல்… போதுமா?


அவசரமா எத்தனை ஸ்டெப் இறங்கி வந்தேன் தெரியுமா?


எத்தனை ஸ்டெப்?

திடீரென திருப்பிக் கேட்டதும் என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.

ஏறும் போது எவ்வளவு ஸ்டெப் இருந்ததோ அவ்வளவு ஸ்டெப்!


சமாளிப்புக்கெல்லாம் குறைச்சலில்லை!

உலகத்தில பாதி பேர் என்னை போல அறிவாளிகள் தான்…


அப்ப நாங்க முட்டாளா?


சரி விடு… உலகத்தில பாதி பேர் முட்டாள்கள் அல்ல! போதுமா?


என்ன சொல்ல வர்றீங்க?

உலகத்தில் எல்லோரும் முட்டாள் அல்ல! சில பேர் பிரமச்சாரிகளாக இருக்காங்கன்னு சொல்ல வரேன்…

பேசியே ஜெயிக்க பார்க்கிறீங்க…

வெற்றியின் முதல்படி தப்பு செய்யும்போது சிக்காமல் இருப்பது தான்…

ஹா ஹா ஹா… அவசரமா வந்தீங்க… மூச்சு வாங்குறீங்க… எதுக்கு கண்ணைத் தேய்க்கிறீங்க?

ஏற்கனவே நான் பொய் பேசும்போது கண்ணைத் துடைப்பது எனது மொனேரிசம் எனத் திருமதி சொன்னது ஞாபகம் வந்தது. சட்டென கண்ணிலிருந்து விரலை எடுதேன். உண்மையிலேயே நான் டீ குடிக்கும்போதிலிருந்து கண் குத்துவது போல இருந்தது. இனியவனோடு மும்முரமாக பேசியதில் அப்போது கவனிக்கவில்லை.

நான் பொய் சொல்லலை… உண்மையாகவே கண் உறுத்தது…

போன் பேசறது பிஸியில நான் சுகர் கலக்க போட்டிருந்த ஸ்பூனை வெளியே எடுத்தீங்களா? இல்லையா?

எனக்கு நினைவில்லை… நான் கடைசியாக ட்ம்ளரை வைக்கும் போது அதில் ஸ்பூன் இல்லை. கண்டிப்பாக ஸ்பூனை விழுங்க வாய்ப்பில்லை. ஒரு வேளை பேசிக்கொண்டே டீ உறிஞ்சும்போது ஸ்பூன் கண்ணைக் குத்தியிருக்குமோ?

பெரிய ஸ்பூனா? சின்ன ஸ்பூனா?

டீ ஸ்பூன் தான் போடுவாங்க… டேபிள் ஸ்பூனா போடுவாங்க..

ஸ்பூனில இரண்டு வகையா?

ஆமாம்..

டீஸ்பூனுக்கு டேபிள் ஸ்பூனுக்கும் ஆறு வித்தியாசம் சொல்லு பார்ப்போம்…

”வகையா திருமதி மாட்டிக்கப் போறாங்க!”ன்னு நினைத்தேன்.

ஐ.ஏ.ஏஸ் கேள்விக்கேட்டது போல ஒரு திருப்தி. சின்ன ஸ்பூன்,பெரிய ஸ்பூன் என்ற வித்தியாசத்தைத் தாண்டி என்ன சொல்லிவிட முடியும்?

நான் நினைத்தது போலவே அமைதியாக நடக்க ஆரம்பித்தார்.

என்னம்மா? பெரிய கேள்விக்கெல்லாம் ஓயாம பதில் சொல்லுவே, டீ ஸ்பூன் விஷயத்தில மாட்டிட்டியே? என்னைப்பத்தி உனக்குத் தெரியாது…

ஆமாம்…தெரியாமத் தான் பதினைச்சு வருசுமா… DUST துடைக்கிறனா?

Representational Image
Representational Image
ANOOP VS from Pixabay

என்னைத் தூசிக்கு சமமுன்னு சொல்றியா?

”ஹலோ சி.ஆர்…தெரியாமத் தான் பதினைச்சு வருசுமா…குப்பைக்கொட்டிறனா?” ன்னு கேட்காம டீசண்டா தூசின்னு சொன்னேன்.


சரி..சரி..


ஒரு விஷயம் தெரியுங்களா?


என்ன?


நான் யாருன்னு தெரியுமா?ன்னு வீறாப்பு பேசுறவங்க… கடைசி வரை


கடைசிவரை வீரமாக இருப்பாங்க தானே?


க்கூம்… நான் யாருன்னு தெரியுமா?ன்னு வீறாப்பு பேசுறவங்க… கடைசி வரை யாருன்னே சொல்ல மாட்டாங்க…


அடப்பாவத்த… கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை?


இந்த பழமொழிக்குன் அர்த்தம் சொல்லுங்க… நான் ஸ்பூனுக்கு ஆறு வித்தியாசம் சொல்றேன்.


கழுதைக்கு வாசனையை கண்டுப்பிடிக்க முடியாது…


ஹலோ… அதுக்கு அது அர்த்தம் கிடையாது…


நான் கழுதையை தானே சொன்னேன்…


யாரைச் சொன்னா என்ன? அர்த்தம் வேற! ”கழு” என்கிறது பாய் தைக்க உதவுற கோரைப்புல். பாய் தைக்க கற்பூரப்புல்லும் பயன்படுத்துவாங்க…கோரைப்புல்லை விடக் கற்பூரப்புல் கொண்டு தைக்கப்படும் பாயின் விலை உயர்ந்தது. இதை தான் இப்படி சொல்றாங்க…தெரியுமா?


ஓ…


இனியாவது சரியான வாசனையை நீங்க கண்டுபிடிங்க…


இதையெல்லாம் சரி… அந்த ஸ்பூன் மேட்டர்…


டீ ஸ்பூன்,டேபிள் ஸ்பூன் ஆறு வித்தியாசங்கள் தானே! எண்ணிக்கோங்க…

1. டேபிள் ஸ்பூன் அகலமா இருக்கும், டீ ஸ்பூன் குறுகலா இருக்கும்

2. டேபிள் ஸ்பூன் கைப்பிடி நீளமா இருக்கும்,அது குட்டையா இருக்கும்

3. டேபிள் ஸ்பூன் வெட்டும் கருவிகளோட வரும், அது தனியா இருக்கும்

4 tbsp இது டேபிள் ஸ்பூன், tsp இது டீ ஸ்பூன்

5 15 மிலி பிடிக்கும் டேபிள் ஸ்பூன், அது 5 மிலி பிடிக்கும்

மூச்சு விடாது சொல்லி முடித்து விட்டு சிறிது இடைவெளி விட்டார் திருமதி.

ஆறாவது என்ன?

ஒன்னு டீ ஸ்பூன்… இன்னொன்னு டேபிள் ஸ்பூன் போதுமா?

நான் கூட நீ மூச்சு விடாம சொன்னதைகேட்டு… உனக்கு ஆக்சிஜன் வைக்க வேண்டியிருக்குமோன்னு பயந்துட்டேன்…

வீட்டில இருக்கிற கேஸ் சிலிண்டரை மாத்தத் தெரியாது இதுல ஆக்சிஜன் சிலிண்டருக்கு போயிட்டீங்க… எங்கே சிலிண்டர் கலர் சொல்லுங்க…

சிவப்பு…

ஆக்சிஜன் சிலிண்டர் கலர் சொல்லுங்க…

ஆக்சிஜன் சிலிண்டர் கலர்..

அறிவாளி! தெரியாது சொன்னா… நான் என்ன செய்யப்போறேன்…

ஆக்சிஜன் சிலிண்டர் என்ன கலர்?

தொழிற்சாலையில ஆக்சிஜன் சிலிண்டர் கருப்பு, இதே ஹாஸ்பிடல் ஆக்சிஜன் சிலிண்டரில உடல் கருப்பு, கழுத்து வெள்ளை…

”ஆமாம்…இது கிடைக்காம போனது பெரிய தொல்லை…” இடையில் புகுந்தேன்.

இருங்க… நைட்ரஜன் சிலிண்டர் கிரே கலர்…ஆர்கான் சிலிண்டர் க்ரீன், ஹைட்ரஜன் ரெட், அசீட்டிலீன் மெரூன் ரெட்,

எனக்கு பிடிச்ச நீலக்கலரில எதுமில்லையா?

இருக்கே… அதைச் சொன்னா வாய் விட்டு நீங்க சிரிச்சுட்டே இருப்பீங்க…

சொல்லு…கல்யாணத்துக்குப்பின்னாடி அந்த பாக்கியம் இன்னிக்காவது கிடைக்கட்டும்…

நைட்ரஸ் ஆக்சைடு தான்… சிரிப்பூட்டும் வாயு!

எனக்குத் தெரியும்…

சொல்லவேண்டியது தானே…

நீ சொல்லிட்டியே…

Walking
Walking
Photo by Frank Busch on Unsplash

ஏண்டா தென்ன மரத்தில ஏறுனன்னா

கன்னுக்குட்டிக்குப் புல்லு புடுங்கங்கிறான்!

தென்ன மரத்தில ஏதுடா புல்லுன்னா

அதான எறங்குறேங்கிறான்

எனத் திருமதி சொல்லவே அதற்கு அர்த்தம் புரியாமல் நடக்க ஆரம்பித்தேன்…

-டாக்கிங் தொடரும்

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு